சின் முத்திரை கூறும் உண்மை

Standard

சின் முத்திரை கூறும் உண்மை


சின்முத்திரை என்னும் சொற்றாெடர் ஞான அடையாளம் எனப் பொருள்படும். சித் ஞானம் முத்திரை அடையாளம், எனவே ஞானப் பொருளின் அடையாளக் குறிப்பாக திகழ்வது சின்முத்திரை எனலாம். தென்முகக் கடவுளாகிய தட்சிணாமூர்த்தி தம் திருக்கையால் சின்முத்திரையைக் காட்டிக் கொண்டிருக்கிறார். வலது கைக் கட்டைவிரல் சுட்டுவிரலுடன் ஒன்றையொன்று வளைந்து சார்ந்து நிற்க, ஏனைய மூன்று விரல்களும் விலகி தனித்து சேர்ந்து நின்று கொண்டிருக்கும் நிலை சின்முத்திரை ஆகும். நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரல் என்னும் மூன்றும் முறையே, ஆணவம், மாயை, கன்மம், என்னும் மும்மலங்களை குறிப்பனவாகும். நடு விரல் நீண்டு, முனைந்து நிற்பதனால் ஆணவ மலத்தைக் குறிப்பதாக உள்ளது. அதற்கு அடுத்த விரல் மாயா மலத்தை குறிப்பது என்பதனை புலப்படுத்தவே மாயா மல சம்பந்தமான பொன் முதலியவற்றால் இயன்ற மோதிரத்தினை அதன்கண் நாம் அணிந்து காெள்கிறோம். ஏனைய மலங்களை காட்டிலும் அநுபவித்து தீர்ப்பதனால் விரைவில் அழிந்தொழிந்து போகும் தன்மையது கன்ம மலமாதலின் அது சுண்டு வரலால் குறிக்கப்படுவதாயிற்று. ஆணவ மலம் நெல்லுக்கு உமியும், செம்பிற் கழிம்பும் போல உயிருள்ள அன்றே தொன்றுதொட்டு இருந்து வருவது ஆதலின் அது சகசமலம் எனப்படும், ஏனைய மாயா கன்ம மலங்கள் உயிருக்கு இடையில்வந்து சேர்வனவாதலின் ஆகந்துக மலம் எனப்படும். இவ்வுண்மையிினையும் இவ்விரல்களின் வரிசை முறை தெரவிப்பதாக உள்ளது.
பெருவிரலின் உதவியின்றி நாம் எதனையும் எடுத்து பிடித்தல் முதலியன செய்தல்இயலாது, ஆதலின் அது சின் முத்திரையில் பதியினைக் குறிக்கிறது. சுட்டு விரல் தன்னியல்பில் ஏனைய மூன்று விரல்களோடு சேராது பெருவிரலை தொட்டு நிற்கிறது. அது பசு எனப்படும்.
திருமூலர் வாக்கின்படி
பதிபசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப்போல் பசுபாசம் அனாதி
பதியினை சென்றானுகா பசுபாசம்
பதியனுகில் பசுபாசம் நி்ல்லாவே
என்றபடி பதியாகிய கட்டிவிரல் வளைந்து பசுவாகிய சுட்டுவிரலை நெருங்காவிடில் சுட்டிவிரலாகிய பசு தானே சென்று சுட்டுவிரலை (பதி) ெதாட முடியாது, என்பதை உணர்த்துவது தான் இந்த சின்முத்திரை இது சைவ சித்தாந்தத்தின் உண்மை
உயிரானது ஆணவ, மாயை கனமம் என்னும் மும் மலங்களின் சேர்க்கையினால் பதியாகிய கடவுளின் தொடர்பை பிறப்பு இறப்பு துன்பத்தை அடைந்து உழலுதலை உணர்த்தும். உயிர் சுட்டறிவு ஒன்றே உடையதாகலின் அதனை குறிக்கும் விரலும் பொருள்களை சுட்டி உணர்த்தும் விரலாக சுட்டு விரல்எனப் பெயர் பெற்றமை பொருந்தமாக உள்ளது.
கட்டை வரலின் அடியில் சுட்டுவிரல் சென்று சேர்ந்து படிந்து நிற்பது முத்தி நிலையில் உயிர்கள் சிவத்தின் திருவடிகளில் சென்று ஒன்றி நிற்றலைப் புலப்படுத்து கின்றது. உயிர்கள் பிறப்பு இறப்புத் துன்பகளிலிருந்து விடுபடுதல் வேண்டுமாயின் மும்மலங்களின் தொடர்பை விட்டு பதிப் பொருளின் திருவடிகளடை அடையப் பெறுதல் வேண்டும் அதனை விளக்கவே சின்முத்திரையில் சுட்டு விரல் தான் சேர்ந்துள்ள ஏனைய மூன்று விரல்களை பிரிந்து கட்டை விரலின் அடியில் சென்று வளைந்து பணிந்து தொட்டுக்கொண்டிருக்கிறது. சின் முத்திரை விளக்கும் இந் நுண்பாெரு்ள் உண்மையினை உணர்த்துகிறது. இந்த உண்மையினை திருநாகை காரோணப்புராணம் வாய்லாக நாம் அறியலாம்
திருச்சிற்றம்பலம்

வினை நீக்கத்திற்கும் மீண்டும் பிறவா நிலைக்கும் ஆரூர் எம்பெருமான்

Standard

வினை நீக்கத்திற்கும் மீண்டும் பிறவா நிலைக்கும் ஆரூர் எம்பெருமான் திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள்

வேதங்களுள் இருக்கு, மந்திரவடிவாக உள்ளது. அதுபோல இப்பதிகமும் மந்திரவடிவாக உள்ளது எனலும் ஆம். மந்திரம் சொற்சுருக்கமுடையது; எண்ணுவார் எண்ணத்தை ஈடேற்றவல்லது. அதுபோல இதுவும் அமைந்திருப்பது காண்க.திருவிருக்குக்குறள் என்பது, வீடு காதலிப்பவரால் விரும்பப்பெறும் பாடல்.
மந்திரவடிவாக உள்ளது. அதுபோல இப்பதிகமும் மந்திரவடிவாக உள்ளது எனலும் ஆம். மந்திரம் சொற்சுருக்கமுடையது; எண்ணுவார் எண்ணத்தை ஈடேற்றவல்லது. அதுபோல இதுவும் அமைந்திருப்பது காண்க. அநாதியே ஆன்மாவைப்பற்றி நிற்கும் பாசத்தால் இருவினைக் கீடாகக் கருவயிற்பிண்டமாய் வளர்ந்து பிறந்து, பரிபாகமுற்ற வினைகள் துன்ப இன்பங்களையூட்டுகின்ற காலத்து வருந்தி மகிழ்ந்து, அலைகின்ற ஒழியாத் துன்பத்தினின்றும் உய்திவேண்டும் உத்தமர்களையழைத்து, அன்போடு மலர் தூவுங்கள்; கைகளால் தொழுங்கள்; எடுத்து வாழ்த்துங்கள்; உங்களுடைய பற்றறும், வினைகள் விண்டுபோம்; இன்பமுத்தி எய்தலாம் எனப் பயனும், வழியும் வகுப்பன இப்பத்துப்பாடல்களும். இம் முதற்பாட்டு முத்தி எய்தலாம் என்பதனைத் தெரிவித்து, அதற்கு உபாயம் உணர்த்துகின்றது. சித்தம் தெளிவீர்காள் – மலமறைப்பாற் கலக்குண்ட சித்தந் தெளியவிரும்புபவர்களே
இரண்டு சீர்களான் யாக்கப்பெற்ற இருக்கு மந்திரம் போன்ற பாடல்.

சித்தந் தெளிவீர்காள் , அத்த னாரூரைப்
பத்தி மலர்தூவ , முத்தி யாகுமே. பாடல் 1

சித்தம் மாசு நீங்கித் தெளிவடைய விரும்புகின்ற வர்களே, அனைவர்க்கும் தலைவனாய் ஆரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பக்தியோடு மலர் தூவி வாழ்த்துங்கள். சித்தத் தெளிவோடு முக்தி கிடைக்கும்.
தியாகேசப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆரூரைப் பத்தியோடு மலர் தூவி வழிபடுங்கள் முத்தியாகும் என்பது போந்தபொருள். தெளிவீர்காள் என்று எதிர்காலத்தாற் கூறியது மலர் தூவல் முதலிய கிரியைத் தொண்டுகள் சித்தந்தெளிதற்கு ஏதுவென்பது தெரித்தற்கு; கிரியையென மருவும் யாவையும் ஞானங் கிடைத்தற்கு நிமித்தம் என்பது ஞானசாத்திரமாகலின். மலர்தூவ என்றது இறைவனும், ஞானாசாரியனும் எழுந்தருளியுள்ள இடங்களை மலர்தூவி வழிபடல் மரபு என்பதை விளக்கி நிற்கின்றது. முத்தியாகும் என முத்தியை வினை முதலாகக் கூறியருளியது திருவருட்பதிவு உற்றகாலத்துத் தாமே வந்தெய்துவதோர் சிவானந்தமாதலின்.

பாவமோ பற்றுள்ளம் காரணமாக எழுவது ஆதலின், காரியமாகிய பிறப்பினை அறுக்க விரும்பு வார்க்குத் துறவியாதலே சிறந்த உபாயம் என்கிறது இரண்டாம் பாடல்.
பாடல் எண் : 2
பிறவி யறுப்பீர்காள் , அறவ னாரூரை
மறவா தேத்துமின் , துறவி யாகுமே.
பிறப்பினை அறுத்துக் கொள்ள விரும்புபவர்களே, அறவடிவினனாகத் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனை மறவாது ஏத்துங்கள் பிறப்பிற்குக் காரணமான ஆசைகள் நீங்கித் துறவு நிலை எய்தலாம்.
துன்பந் துடைப்பீர்காள் , அன்ப னணியாரூர்
நன்பொன் மலர்தூவ , இன்ப மாகுமே. பாடல் எண் : 3

பிறந்தார் உறுவது பெருகிய துன்பமாதலின் அதனைத் துடைக்க வேண்டும் என்பதும், அதற்கு உபாயம் மலர் தூவலே என்பதும் உணர்த்துகின்றது இப்பாடல்
பொன்மலர்தூவ என்பது செம்பொன்னும் வெண்பொன்னுமாகிய இரண்டாலும் பூக்கள் செய்து அவற்றை முல்லைமலரோடு கலந்து தூவுதல் மரபு. இன்பம் ஆகும் – துன்பநீக்கத்திற்குத் தொழுத உங்கட்கு இன்பமும் ஆகும் என்பதாம். இன்பம் என்றது இம்மையின்பத்தையும் நிரதிசயா நந்தப் பேரின்பத்தையும்.

துன்பம் துடைத்து உய்தியை விரும்புவீராயின் கைகளால் தொழுங்கள் பிராரத்த வினை நைந்து போம் என்று நான்காம் பாடல் நவில்கிறது.
பாடல் எண் : 4
உய்ய லுறுவீர்காள் , ஐய னாரூரைக்
கையி னாற்றொழ , நையும் வினைதானே.
உலக வாழ்க்கையிலிருந்து கடைத்தேற விரும்பு கின்றவர்களே, ஆரூரில் எழுந்தருளிய தலைவனாகிய இறைவனைக் கைகளைக் கூப்பி வணங்குங்கள். உங்கள் வினைகள் மெலிவடையும். உய்தி பெறலாம்.
இப்பாடல், துன்பந்துடைத்து உய்தியை விரும்புவீரா யின் கைகளால் தொழுங்கள் என்றருளிச் செய்கின்றது. ஐயன் – தலைவன். வினை தானே நையும் என்றது தொழுவாரிடம் இருப்புக்கொள்ள இடமின்மையால் வல்வினைகள் மெலிந்துபோம் என்பதாம்.
தொழுவாரிடம் வரக்கடவ வினைகளும் விண்டுபோம் என்று ஐந்தாம் பாடல் அறைகிறது
பாடல் எண் : 5
பிண்ட மறுப்பீர்காள் , அண்ட னாரூரைக்
கண்டு மலர்தூவ , விண்டு வினைபோமே.
மீண்டும் பிறவா நிலையைப் பெற விரும்பு கின்றவர்களே, ஆரூரில் எழுந்தருளிய அனைத்துலக நாயகனாகிய இறைவனைச் சென்று கண்டு மலர் தூவி வழிபடுங்கள். பிறப்புக்குக் காரணமான வினைகள் விண்டுபோம். பிறவாநிலை எய்தலாம்.

கீழைத்திருப்பாட்டு வினை நீக்கம் கூறியது. அவ்வினை யோடு ஒருங்கு எண்ணப் பெறுவதாய் அனாதியே பந்தித்துள்ள பாசமும் கெடும்; இறைவன் நேசமாகும் என்று ஆறாம்பாடல் அறிவிக்கிறது.
பாடல் எண் : 6
பாச மறுப்பீர்காள் , ஈச னணியாரூர்
வாச மலர்தூவ நேச மாகுமே.
உயிரோடு பிணைந்துள்ள பாசம் அகல வேண்டுமென விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளியுள்ள ஈசனை மணம் பொருந்திய மலர்களைத் தூவி வழிபடுங்கள். உம்பால் அவனது நேசம் உளதாகும். பாசம் அகலும்.
கீழைத்திருப்பாட்டு வினை நீக்கங் கூறியது. அவ்வினையோடு ஒருங்கு எண்ணப் பெறுவதாய், அநாதியே பந்தித்துள்ள பாசமுங்கெடும்; இறைவன் நேசமாகும் என்று சொல்கிறது இப்பாட்டு. பாசம் – ஆணவம். கட்டி நிற்பதாகலின் அதனையறுக்கவேண்டு மாயிற்று. ஆன்ம அறிவைப் பந்தித்து அடக்கி நிற்றலின் பாசம் எனப்பெற்றது. நேசமாகுமே என்பதையுற்று நோக்குகின்ற எம்போலியர்க்கு, பாசமறுத்த நம்பியாரூரர்க்குத் தோழரானதுபோல நமக்கும் நேசமாவர் என்ற நினைப்பு உண்டாகும். அன்பு முதிரும் என்றுமாம்.

இருவகை வினையும் தீரவேண்டும் என்றும், தீர்ந்தால் உலகம் முழுதும் உடைமையாம் என்றும் ஏழாம்பாடல் இயம்புகிறது.
பாடல் எண் : 7
வெய்ய வினைதீர , ஐய னணியாரூர்
செய்ய மலர்தூவ , வைய முமதாமே.
கொடிய வினைகள் தீர வேண்டுமென விரும்பு கின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளிய அனைத்துயிர்க்கும் தலைவனாகிய இறைவனைச் செம்மையான மலர்களைத்தூவி வழிபடுங்கள். உலகம் உம்முடையதாகும்.
இருவகை வினையும் தீரவேண்டும் என்றும், தீர்ந்தால் உலகமுழுதும் உடைமையாம் என்றும் உணர்த்துகிறது இப்பாடல். வெய்ய வினை – விரும்பத்தக்க நல்வினையும் கொடிய தீவினையும். இரண்டும் பொன்விலங்கும் இருப்பு விலங்கும் போலத் தளைத்து நிற்பவாகலின் நல்வினையும் தீரவேண்டுவதாயிற்று.

செய்யமலர்தூவி வையம் தமதாய காலத்து உண்டாகிய தருக்கையும் களைந்து, திருத்தம் நல்குவர் தியாகேசராதலின், அவர் தலத்தைக் கையினால் தொழ வேண்டும் என்று எட்டாம் பாடல் எடுத்துரைக்கிறது.
பாடல் எண் : 8
அரக்க னாண்மையை , நெருக்கி னானாரூர்
கரத்தி னாற்றொழத் , திருத்த மாகுமே.
அரக்கர் தலைவனாகிய இராவணனின் ஆற்றலைக் கால்விரல் ஒன்றால் நெருக்கி அடர்த்து அழித்து ஆரூரில் எழுந்தருளிய இறைவனைக் கைகளால் தொழுவீர்களாக. உமது மனக்கோணல் நீங்கும், திருத்தம் பெறலாம்.
செய்யமலர் தூவி வையந்தமதாய காலத்து உண்டாகிய தருக்கையும் களைந்து திருத்தம் நல்குவர் தியாகேசராதலின் அவர்தலத்தைக் கையினாற்றொழ வேண்டும் என்கின்றது இப்பாடல். அரக்கன் – சிவபூசையை விதிமுறையியற்றி ஆட்சியும் படையும் பெற்ற இராவணன்.
அருள் பெற்றுச் சிறிது திருந்திப் பதவியில் நிற்பாரும், பதவிமோகத்தால் மயங்குவார், ஆயினும் அவர்கள் மிகைநோக் காதே, அதுதான் ஆன்ம இயல்பு என்று திருவுள்ளம்கொண்டு அருள்செய்யும் கருணையாளன் எழுந்தருளியுள்ள ஆரூரை நினைக்க வேண்டும் என்றும், நினைத்தால் ஆகாமிய சஞ்சித வினைகள் கழியும் என்றும் ஒன்பதாம் பாடல் உரைக்கிறது.
பாடல் எண் : 9
துள்ளு மிருவர்க்கும் , வள்ள லாரூரை
உள்ளு மவர்தம்மேல் , விள்ளும் வினைதானே.
செருக்குற்றுத் துள்ளிய திருமால் பிரமரின் செருக்கு அடக்கி அருள்செய்த, ஆரூரில் எழுந்தருளிய வள்ளற் பெருமானை மனத்தால் நினைத்து வழிபட வல்லவர்களின் வினைகள் நீங்கும்.
அருள்பெற்றுச் சிறிது திருந்திப் பதவிகளின் நிற்பாரும், பதவிமோகத்தான் மயங்குவாராயினும், அவர்கள் மிகைநோக்காதே, அதுதான் ஆன்மவியல்பு என்று திருவுளங்கொண்டு அருள்செய்யும் கருணையாளன் எழுந்தருளியுள்ள ஆரூரை நினைக்க வேண்டும் என்றும், நினைத்தால் ஆகாமிய சஞ்சித வினைகள் அழியும் என்றும் அறிவிக்கின்றது இப்பாடல்.
அதிகார பலத்தால் துள்ளுவாரையும் ஆட்கொள்ளும் இறைவன், ஏனைய விஷத்தன்மை பொருந்திய ஆன்மாக்களையும் அடக்கி ஆளுவன் என்ற கருணையின் மேன்மையைப் பத்தாம்பாடல் பகர்கிறது.
பாடல் எண் : 10
கடுக்கொள் சீவரை , அடக்கி னானாரூர்
எடுத்து வாழ்த்துவார் , விடுப்பர் வேட்கையே.
கடுக்காயைத் தின்று துவர் ஆடை போர்த்துத் திரியும் சமண புத்தர்களை அடக்கியவனாகிய ஆரூர் இறைவனே பரம்பொருள் எனச் சிறப்பித்து வாழ்த்துவார், வேட்கை என்னும் ஆசையை விடுப்பர்.
அதிகாரமலத்தான் துள்ளுவாரையும் ஆட்கொள்ளும் இறைவன், ஏனைய விஷத்தன்மை பொருந்திய ஆன்மாக்களையும் அடக்கியாளுவர் என்ற கருணையின் மேன்மையைக் காட்டுகின்றது இச்செய்யுள்.
முத்தியாகுமே என முதற்பாட்டில் அருளிய பிள்ளையார் அதற்கு இடையூறான பிறவி வினை பாசம் இவைகளையும், இவை களை நீக்கும் உபாயங்களையும் நீங்கியவர் எய்தும் பயனையும் முறையே கூறினார். இத்தகைய பாடல்கள் பத்தையும் பயில்வாரும் அத்தகைய இன்பத்தை எய்துபவர்; பேரார்; நிலையாவர் எனத் திருக்கடைக்காப்புத் தெரிவிக்கிறது.

கீழ்ப்பாடல்களுள் ஆரூரை மலர்தூவ அடையும் பயனை ஐந்து பாடல்களும் தொழுவார் எய்தும் பயனை இரண்டு பாடல்களும், வாழ்த்துவர் எய்தும் பயனை இரண்டு பாடல்களும், இப்பதிகம் ஓதுதற் பயனை ஒருபாடலும் உணர்த்துகின்றன.
பாடல் எண் : 11
சீரூர் சம்பந்தன் , ஆரூ ரைச்சொன்ன
பாரூர் பாடலார் , பேரா ரின்பமே.
சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன் ஆரூர் இறைவன்மீது பாடிய உலகம் முழுதும் பரவிய பாடல்களைப் பாடி வழிபட வல்லவர் இன்பத்தினின்று நீங்கார்.
இத்தகைய பாடல்கள் பத்தையும் பயில்வாரும் அத்தகைய இன்பத்தை எய்துவர்; பேரார்; நிலையாவரெனத் திருக்கடைக்காப்புச் செய்தருள்கின்றார்கள்
திருச்சிற்றம்பலம்

சிவ வழிபாட்டின் பயன்

Standard

சிவ வழிபாட்டின் பயன்​
சரியை நெறியில் நின்று வழிபாடுகள் செய்தவர்கள் சிவலோகத்திற்குச் சென்று அவ்வுலகத்தில் உள்ள போகங்களை அனுபவிப்பர்.

கிரியை நெறியில் நின்றவர்கள் சிவலோக போகத்தை அனுபவிப்பதோடு, சிவபெருமானுக்கு அருகில் இருக்கும் பேற்றைப் பெறுவர்.

யோக நெறியாளர்கள் சிவபெருமான் கொண்டுள்ள திருமேனிகளில் ஒன்றைப் பெற்று சிவலோகத்தில் சிவபோக அனுபவம் உடையவராய் வாழ்வர்.

ஞான நெறியில் நின்றவர்கள் சிவபெருமான் திருவடியில் இரண்டறக் கலந்து நின்று நித்தியானந்தத்தை அனுபவித்து வாழ்வர்.

இந்நான்கு பயன்களையும் முறையே சாலோக, சாமீப, சாரூப, சாயுச்சிய முத்திகள் எனக் கூறுவர்.
சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய சிவபுண்ணிய நெறிகளில் உள்ளன்போடு ஒழுகி வருபவர்கள் இந்தப் பிறப்பிலேயே முத்தியைப் பெற்றுவிட முடியும் என்று சைவசித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு ஒழுகி வருபவர்களின் மும்மல அழுக்கை நீக்கி அவர்களை ஞானசாகரத்தில் மூழ்குவித்துச் சிவானந்தம் மேலிடச் செய்து மேல் வரும் பிறப்பை ஒழித்து இறைவன் முத்தியைத் தந்தருள்வான் என்று சிவாகமங்கள் ஆகிய சித்தாந்தத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.எனவே சிவாகம நெறியின் படி நடப்பவர்கள் இப்பிறப்பிலேயே முத்தியைப் பெறலாம் என்பது தெளிவு.

சரியையில் சரியை, சரியையில் கிரியை முதலிய பதினாறு வகைகளில், ஞானத்தில் சரியை ஞானத்தில் கிரியை முதலிய நான்கு வழிகளில் நின்று ஒழுகினால் இப்பிறப்பிலேயே முத்தி கிட்டும்.

அந் நான்கு வழிகள் வருமாறு :-

‘ஞானத்தில் சரியை’ என்பது, திருமுறைகள் மற்றும் சைவசித்தாந்தப் பொருள்களைப்பற்றித் தக்கவர்களிடம் ‘கேட்டல்’ ஆகும்.

‘ஞானத்தில் கிரியை’ என்பது, அவற்றைக் காரண காரிய இயைபுபடுத்தி எடுத்துக்காட்டுக்களையும் கருத்தில் கொண்டு ‘சிந்தித்தல்’ ஆகும்.

‘ஞானத்தில் யோகம்’ என்பது அவற்றைச் சந்தேகமோ விபரீதமோ இன்றித் தெளிதல் ஆகும்.

‘ஞானத்தில் ஞானம்’ என்பது, அவ்வாறு தெளிவடைந்த பிறகு, சிவபெருமானின் திருவருளையன்றி நமக்கு எந்தவிதச் செயலும் இல்லை; அறிவும் இல்லை; என்று நினைந்த ‘சிவபெருமானையே சதாகாலமும் நினைந்திருத்தல்’ ஆகும். இதனை ‘நிட்டை கூடுதல்’ என்று சாத்திரங்கள் பேசும்.

சாத்திரங்களைக் கற்றலும், பதி, பசு, பாச உண்மைகளை ஆராய்தலும் பர ஞானம் எனப்படும். சரியை முதலிய நான்கனுள் ஈற்றில் உள்ள ஞானத்தை இருவகையாகப் புரிந்து கொள்ளவேண்டும். ஒன்று அபரஞானம்; மற்றொன்று பரஞானம்.

அபர ஞானம், பரஞானத்தைக் கூடுவிக்கும்; சாத்திரங்களைக் கற்பதோடு அமையக் கூடாது; சரியை, கிரியை, யோகங்களுக்கு அங்கமாகத்தான் சாத்திரங்களை ஓத வேண்டும். சரியை, கிரியை, யோகங்களின் மூலமும் சாத்திர ஞானத்தின் மூலமும் நாம் இறைவனிடத்து, பத்தியை (அன்பை) மிகுவித்துக் கொள்ள வேண்டும். அன்பின் முதிர்வில் இறைவன் குருநாதனாக வந்து ‘பரஞானம்’ ஆகிய வியாபக உணர்வை நமக்கு உணர்த்துவான். வியாபக உணர்வின் மூலந்தான், இறைவனோடு இரண்டறக் கலந்து, பேரின்பத்தை அனுபவிக்க முடியும். எனவே பரஞானத்திற்கு பத்தி மிகவும் இன்றியமையாதது என்பதை நாம் நன்றாக உணரவேண்டும்.

இந்நால்வழிகளும் உயிர்கள் முத்தி பெறும்பொருட்டே உள்ளமையால் சைவசித்தாந்த சாத்திரங்களைக் கற்க வேண்டுவது இன்றியமையாததாகும்.

இவ்வுண்மையைத் தெளிவுபடுத்திச் சிவஞானசித்தியாரில்,

“கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை
கிளத்தல் என ஈர் இரண்டாம்; கிளக்கின் ஞானம்
வீட்டை அடைந்திடுவர்” (276)
என்று அருணந்திசிவம் அருளிச் செய்துள்ளார்.
‘ஞானம் கிளக்கின்’ என்பது ஞானத்தில் சரியை என விரித்துக் சுறுமிடத்து என்பது பொருள். ‘நிட்டை கிளத்தல்’ என்பது, ‘நிட்டை கூடுதல்’ ஆகும்.
திருச்சிற்றம்பலம்

திருமுறைகளின் பெருமை

Standard

திருமுறைகளின் பெருமை
சிவபெருமானது திருவருள் கைவரப்பெற்ற முனிசிரேட்டர்கள் ஓதி அருளிய மந்திரங்களும் தோத்திரங்களும் வட மொழியில ” வேதம் ” எனப்பட்டன. அங்ஙனமே சிவபெருமானது அருள் பெற்ற மெய்யடியார்களால் திருவருள் வழிநின்று பாடியருளிய பத்தி பாடல்களாகிய அருட்பாக்கள் ” தமிழ் வேதம்” என அழைக்கப்படுகின்றன.
வேத சாரமே தேவார திருவாசகங்கள் என்பதை சைவ பேரறிஞர் பலரும் அறுதியிட்டு கூறியுள்ளனர்
இத்தமிழ° வேதமாகிய திருமுறைப்பாடல்கள் பக்தி உணர்ச்சி மேலிட்டு பாடியவை, இவற்றை பாராயணம்் செய்பவர்களுக்கு அப்பண்பை உண்டாக்குவன. நாயன்மார்கள் இப்பாடல்களை இறைவன் திருவருள் துணை தூண்டவே பாடினர்.இப்பாடல்கள் பல அற்புதங்களை நிகழச் செய்தமை நாயன்மார் வரலாறுகளால் அறியலாம். உதாரணமாக
அறவம் தீண்டிய பாலகன் உயிர் பெற்றது. அறவம் தீண்டி மணப்பெண் உயிர் பெற்றது. முதலை விழுங்கிய பாலகன் மீண்டும் உயிர்பெற்றது என பல சம்பவங்களை அவர்களின் வரலாற்றில் காணலாம்.
சுருங்கச் சொன்னால் வேத மந்திரங்களை கொண்டு பல சாதனைகளை மாந்திரியர்கள் செய்வது போல, இத்தமிழ் வேதப் பாடல்களை பாராயணஞ் செய்து பல சாதனைகள் புரிகிறார்கள். ஆக்கவும், காக்கவும், அழிக்கவும், வல்லன. தெய்வீக சக்தி உடையன அவற்றை மெய்யன்போடு பொருள் உணர்ந்து பண்ணமைய வழுவின்றி ஓத வேண்டும். அங்ஙணம் இன்றி ஓதுவோர் பூரணமாக பயனை அடையமாட்டார்கள்.
திருமுறை பாடல்கள் இறைவனுடைய பெருமைகளை பேசும், போற்றும், வாழ்த்தும், ஆன்மாவாகிய நம் குறை தீர்க்கும்படி வேண்டும்.
நமக்கு இன்ன இன்ன நற்பேறுகளை தருக எனப்பிரா்த்திக்கும்
நம்மிடமுள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி கண்டிக்கும்.
இப்படி பல விதத்தில் இவை அமைந்திருக்கின்றன. நாமாக ஒரு புதிய முறையில் இறைவனை போற்றி நமது குறைகளை தீர்க்கும்படி வேண்டும்போது, நம்மை அறியாமலேயே நமது சிற்றறிவினால் பல தவறுகளை செய்து, நன்மைக்கு மாறாக தீமைகளை தேடவும் நேரும். ஆதலின் இத்திருமுறை பாடல்களில் நமக்கு உகந்தவற்றை நாம் தெரிந்து அவற்றை பாராயணஞ் செய்து வருவது நமக்கு இம்மை, மறுமை, அம்மையாகிய பேறுகளில் ஒன்றும் குறைவின்றி நன்மையாகவே அமைவதற்கு வழியாகும் என்று ஆன்றோர்கள் கூறுவர். இவற்றைபாராயணஞ் செய்து பயனடைந்தோரும் எண்ணிலாராவர்,
திருச்சிற்றம்பலம்