நகைச்சுவை அன்றும், இன்றும்!

Standard

நகைச்சுவை அன்றும், இன்றும்!

(இன்று, என்.எஸ்.கே., மறைந்த நாள்) நல்வரை, நல்லதை நினைவு கொள்வோம்)

தமிழ் திரைப்படங்கள் வண்ணத்துக்கு மாறாத, கறுப்பு – வெள்ளை காலத்தில் கண்ட நகைச்சுவைக் காட்சிகளை இப்போது நினைத்தாலும் சிரிப்பு தானாக வந்து விடுகிறது. ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இப்போதைய நிலையில், வெளியாகும் வண்ணத்தமிழ் திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகள், கற்பனை வறட்சி கொண்டதாக மட்டுமின்றி, காண்பவருக்கு வெறுப்பையும், அருவருப்பையும் ஏற்படுத்தும் படியாகவே உள்ளன. எனினும், ஒரு சில காட்சிகள் ரசிக்கத்தக்கதாக அமைந்துள்ளன. ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த திரைப்படங்களில், நகைச்சுவைக் காட்சிகள் மிகவும் ரசிக்கத்தக்கதாகவும், சிந்திக்கத் தக்கதாகவும் அமைந்திருந்தன. அவரின் சிலேடை வசனங்கள், இன்றும் நினைவுகூரத்தக்கவை.வைகை நதியில், நீர் இல்லை என்பதை, ‘வை – கை என்று தானே சொன்னாங்க; வை அண்டா, குடம்னா சொன்னாங்க…’ எனக் கூறி, வைகை நதியில் கையளவு தான் தண்ணீர் வரும் எனக் கூறியதை மறக்க முடியவில்லையே. கலைவாணர் நடித்த, அலிபாபா படத்தில், ‘காதரு’ என, இவர் பெயரை கூறி ஒருவர் அழைக்க, ‘கத்தி இல்லையே!’ என்பார்.

நல்லதம்பி என்ற படத்தில், கலைவாணருக்கு பாதுகாப்பாக வருபவர்களை பார்த்து, ‘நீங்க யார், ஏன் என்னுடன் வாரீங்க?’ என்பார். அதற்கு அவர்கள், நாங்கள் உங்கள், ‘பாடிகாட்’ என்பர். ‘உன் பாடியைக் கொண்டு போய், ‘பயில்வான்’ட்டக் காட்டு…’ என்பார்.

ஒரு படத்தில், என்.எஸ்.கிருஷ்ணன், தன் காதலி, டி.ஏ.மதுரத்தை சந்திக்க, அவர் வீடு செல்ல, ஒரு யுக்தி செய்வார். காதலியின் தந்தை அவரின் எருமை மாட்டைக் கயிற்றுடன் பிடித்து வர, பின்னால் வந்த கலைவாணர், மாட்டின் கயிற்றை எடுத்து, தன் கழுத்தில் மாட்டிக்கொண்டு வருவார்; மாடு வேறுபக்கம் சென்று விடும். சற்று நேரத்தில், தன் எருமைக்கு பதிலாக, கழுத்தில் கயிற்றுடன் பின்னால் வரும் என்.எஸ்.கிருஷ்ணனைப் பார்த்து விசாரிக்க, ‘நான் முற்பிறவியில் தேவலோகத்தில் தேவனாக இருந்தேன். ஒரு சாபத்தால் பூலோகத்தில் எருமையாக பிறந்தேன்; இப்போது, சாபம் நீங்கி விட்டதால், மறுபடியும் தேவனாக மாறிவிட்டேன்’ என்பார். இதை நம்பிய அந்த பெரியவர், மகிழ்ச்சியடைந்து, தன் வீட்டிற்கு, என்.எஸ்.கே.,வை அழைத்துச் சென்று உபசரிப்பார்.

அப்போது, மகள் மதுரத்தை அழைத்து, ‘அம்மா இவரு, தேவரு… நம்ம வீட்டிலே, எருமையா இருந்தவரு… சாப விமோசனம் பெற்று மாறிட்டாரு…’ எனக் கூறி, ‘அம்மா இவருக்கு பால், பழம் கொடும்மா…’ என்றதுடன், ‘ஆமா, தேவலோகத்திலே பால், பழத்தை எப்படி சொல்வீங்க?’ எனவும் கேட்பார். சுதாரித்துக்கொண்ட கிருஷ்ணன், ‘பால், பழம் இதை, வினதா – சுதா என்போம்…’ என்பார். ‘அம்மா, இவருக்கு வினதா – சுதா கொடும்மா…’ என்று சொல்லிப் போவார், அந்த பெரியவர்.

தன் தந்தையை ஏமாற்றிய என்.எஸ்.கே.,வுக்கு வைக்கோலை கொண்டு வந்து போட்டு, ‘ம்… ம்… சாப்பாடு…’ என்பார், மதுரம். சற்று நேரத்தில், எருமை, வாசலில் வந்து குரல் கொடுக்க, கிருஷ்ணன் செய்வதறியாது தவிக்க, திரையரங்கமே சிரிப்பால் அதிரும்.

கிருஷ்ண பக்தி என்ற திரைப்படத்தில், கலைவாணர் தன் நண்பர் சரவணனாக நடித்திருக்கும், புளி மூட்டை ராமசாமியை, வீட்டிற்கு சாப்பிட அழைத்து வருவார். மனைவி மதுரத்திடம், விருந்து சமைக்கப் பக்குவமாக கேட்பார். ‘என்ன இருக்கு விருந்து சமைக்க…’ என, மதுரம் கேட்டதும், ‘இதோ வாங்கி வரேன்…’ என, கலைவாணர் வெளியே செல்வார். மனைவி மதுரம், முற்றத்தில் உரலை வைத்து, மிளகாயைப் போட்டு, உலக்கையில் இடிப்பார். மிளகாய் நெடி தாங்காத சரவணன், ‘எதுக்கு இப்படி மிளகாயை இடிக்கிறீங்க…’ என, கேட்பார். அதற்கு மதுரம், ‘யாரோ என் வீட்டுக்காரருக்கு நண்பராம்; அவர் கண்ணிலே, இந்த மிளகாய்ப் பொடியைப் போட்டு, இந்த உலக்கையாலே, தலையில் அடிக்கணும்னார்; அதனால தான் மிளகாயை இடிக்கிறேன்…’ என்பார். அதைக் கேட்ட சரவணன் பயந்து ஓடுவார்.

சாமான்களுடன் வந்த கலைவாணர், சரவணன் ஓடுவதைப் பார்த்து மனைவியிடம், ‘ஏன் சரவணன் ஓடுகிறான்?’ என, கேட்பார். அதற்கு, ‘இந்த மிளகாய்ப் பொடியையும், உலக்கையையும் உங்க நண்பர் கேட்டார்; நான் கொடுக்கலை…’ என்பார். ‘ஐயோ, எதுக்கு கேட்டானோ தெரியலையே?’ என கூறிய படி, ஒரு கையில் மிளகாய்ப் பொடியையும், மற்றொரு கையில் உலக்கையையும் எடுத்துக் கொண்டு சரவணனைத் தேடிப் போய், ‘சரவணா, உலக்கை, மிளகாய்ப் பொடி…’ என்று கூவ, சரவணன் பயந்து ஓட, ரசிகர்கள் சிரித்து, மகிழ்ந்தனர்.

மற்றொரு திரைப்படத்தில், குருகுலத்தில், கலைவாணர் படிப்பார். அங்கே, மேற்கூரையில், ஒரு எலி நுழையும். பாடத்தை கவனிக்காமல், எலி நுழைவதையே பார்த்துக் கொண்டிருந்த கலைவாணரிடம், ‘என்ன நுழைஞ்சதா?’ என, பாடம் பற்றி குரு கேட்பார். அதற்கு, ‘எல்லாம் நுழைஞ்சது; ஆனா, வால் மட்டும் இன்னும் நுழையலை’ என்பார்.

சிவகவி என்ற எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி நடித்த திரைப்படத்தில், தியாகராஜ பாகவதரை தேடி வந்த கலைவாணரை, புலவர் என நினைத்து, வஞ்சி என்ற ராஜ நர்த்தகியான ராஜ

குமாரி, தன் மாளிகைக்கு அழைத்துச் சென்று உபசரித்து, ஒரு பாடல் பாடும் படி, கலைவாணரை வேண்டுவார். கலைவாணரோ,

‘கவலையை தீர்ப்பது நாட்டியக்கலையே’ என்ற பாடலை பாடுவார். பாடலைக் கேட்ட வஞ்சி என்ற ராஜகுமாரி, ‘இது, அரசவையில் சிவகவி பாடிய பாட்டல்லவா’ என்பார். உடனே கலைவாணர், ‘என் பாட்டை இங்கேயும் வந்து பாடிட்டானா அவன். இப்படித்தான் என் பாட்டை எல்லாம் எனக்கு முந்திப் பாடுறான் சிவகவி’ எனக் கூறி, சமாளிப்பார்.

வேறொரு படத்தில் கலைவாணரை சந்திக்கும் நண்பர், வேறொரு நண்பரை பற்றி குறைகளை கூறுவார். ‘அது இருக்கட்டும்… இப்ப உன் சட்டை பாக்கெட்டிலே என்ன இருக்கு?’ என்று கேட்பார். அதற்கு அந்த நண்பர், ‘சில காகிதங்கள், பேனா, கொஞ்சம் சில்லரை இருக்குது…’ என்பார்.

‘ஊஹும்… அப்படி சொல்லக் கூடாது. பாக்கெட்டில் இருக்கும் பேனாவில் இங்க் இருக்கா… பேப்பர்ல என்ன எழுதியிருக்குது; பணம், சில்லரை எவ்வளவு இருக்குதுன்னு பார்க்காம சொல்லணும்’ன்னு கலைவாணர் கேட்க, நண்பர் விழிப்பார். அப்போது,

‘உன் பாக்கெட்டிலே என்ன எவ்வளவு இருக்குதுன்னு உனக்கு தெரியல; நீ மத்தவங்களை பத்தி குறை கூறுகிறாயே…’ என, இடித்துரைப்பார்.

என்.எஸ்.கே., நகைச்சுவை காட்சிகள் போல, கவுண்டமணி – செந்தில் கோஷ்டியினரின், ‘வாழைப்பழ’ காமெடியும், ‘ரொம்ப நல்லவன் இவன்; என்ன அடிச்சாலும் தாங்குவான்டான்னு ஒருத்தன் சொன்னான்னு’ வடிவேலு அழுது கொண்டே சொல்கிற, ஒரு சில நகைச்சுவை காட்சிகளையும் ரசிக்க முடிகிறது.

நகைச்சுவையை ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர் என்பதை மனதில் வைத்து, தரமான நகைச்சுவை காட்சிகளை எதிர்காலத்தில் தமிழ் திரைப்படங்களில் அளிப்பர் என, நம்புவோம்.

(இன்று, என்.எஸ்.கே., மறைந்த நாள்)

நன்றி ; தினமலர்

Advertisements

தமிழ் வேதப் பதிக பாராயணப் பயன்கள்

Standard
தமிழ் வேதப் பதிக பாராயணப் பயன்கள்

கலிகாலத்தில் உலக மக்கள் நலம் பெற வேண்டி சிவபெருமானாரால் இம்மண்ணுலகிற்கு அனுப்பட்டவர்தான் திருஞான சம்பந்த சுவாமிகள். இறைவர் திருஞானசம்பந்தருக்கு முன்மொழிந்தார் அவற்றை வழி மொழிந்தவர் சம்பந்தர். எனவே திருஞான சம்பந்த சுவாமிகள் அருளியுள்ள 384 பதிகங்களும் சிவபெருமானாரே அருளியவை என்பதை ஞான சம்பந்த சுவாமிகளே கூறியுள்ளதை சைவப் பெருமக்கள் மனதில் ஆழமாக கொள்ள வேண்டும்.
” பழுதில் இறை யெழுதுமொழி தமிழ்விரகன்
வழிமொழிகள் மொழிதகையவே ” திருமுறை 3 – பதி, 67, பாடல் 12
முன்பெல்லாம் ஒரு கூட்டம் நடைபெற்றால் அதில் ஒருவர் ” திருஐயா அவர்களை தலைமை யேற்று கூட்டத்தை நடத்தித்தரும்படி முன் மொழிகிறேன் ” என்று சொல்வார், உடனே மற்றொருவர்எழுந்து ” அதனை நான் வழி மொழிகிறேன் ” என்பார். இது வழக்கமாக இருந்தது.
இதைப்போல திருஞானசம்பந்த சுவாமிகள் தான் வழி மொழிந்ததாகவும், பழுதில் இறை முன் மொழிந்ததாகவும் ( பழுதில் இறை எழுது மொழி) கூறியுள்ளதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
வான் புகுவர் வானோர் எதிர் கொளவே
” தமிழ் ஞான சம்பந்தன் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினைபோகி
மண்மதியாது போய் வான்புழுவர் வானோர் எதிர் கொளவே ” —– தமிழ் திருமுறை 3 – பதி – 102 – பாடல் 11
திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிய முதல் மூன்று திருமுறைகளையும் பாராயணம் செய்பவர்கட்கு மண்ணுலக வாழ்வில் வெறுப்பு ஏற்படும் எமன் தூதர் நெருங்கவே மாட்டார்கள்
ஊனசம்பந்தத்து உறுபிணி நீங்கும்
” ஞான சம்பந்தன் நற்றமிழ் மாலை நன்மையால் உரை செய்து நவில்வார்
ஊனசம்பந்தத்து உறுபிணி நீங்கி உள்ளமும் ஒருவழிக் கொண்டு
வாளிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார் மற்று இதற்கு ஆணையும் நமதே ” தமிழ் திருமுறை 3 – பதி 118 – பாடல் 11
திருஞானசம்பந்தர் அருளிய பதிகங்களை பாராயணம் செய்தால்,
1, பிறந்து இறக்கும் நிலை ஒழியும்
2. உள்ளம் ஒருநிலைப்பட்டு அமைதி பெறும்
3. இனி பிறப்பு இல்லையாகும்
4. வானிடை – சிவலோகத்தில் இனிதே வாழலாம்
ஆணையிட்டுக் கூறியுள்ளார் நம்பொருட்டு சம்பந்த சுவாமிகள் பொருட் செலவில்லாத எளிய வழி இதுவாகும். கடவுளைக் கண்டு அம்மயமான நிறைஞானிகளின் மொழிகளே கொள்ளத்தக்கவை, போலி வேடதாரிகளின் சொற்களை நம்பி மோசம் போகத் தேவையில்லை.
திருச்சிற்றம்பலம்
நன்றி : தமிழ்வேதம்

பாதம் புகழும் புண்ணியம்

Standard

பாதம் புகழும் புண்ணியம்

இறைவனைத்  தொழுவதால் ஏற்படுவது எது  என்பதற்கு  ஒரே வார்த்தையில் பதில் சொல்லும்படி கேட்டால் ”  நன்மை ” என்று சொல்லலாம். எப்போது நன்மை ஏற்படும், இந்தப்பிறவியிலா அல்லது இனி வரும் பிறவிகளிலா என்று கேட்டால் இப்பிறவியிலேயே என்று விடை கூறலாம். மதுரையில் உள்ள ஒரு சிவாலயத்தில்  சுவாமிக்கு  இம்மையே நன்மை தருவார்  என்று பெயர். அவ்வாறு நன்மை ஏற்படவேண்டும் என்றால் நாம் என்ன  செய்ய வேண்டும் என்பது அடுத்த கேள்வி. வேறு ஒன்றும் பெரிதாகச் செய்ய முடியாவிட்டாலும் பெருமானது சிவந்த திருப்பாதங்களைச் சிக்கென்று பிடித்துக் கொண்டால் மனதில் தெளிவு பிறக்கும். குழப்பம் நீங்கும். ஞானம் பிறக்கும் அதன் விளைவாகச் சிவ புண்ணியம் பெருகும். இப்படிச் சொல்கிறார் மாணிக்க வாசகர். ” தேற்றம் இல்லாதவர்  சேவடி சிக்கெனச் சேர்மின்களே”  என்பது திருவாசகம்.

தேற்றம் என்ற சொல்லுக்குத் தெளிவு என்று பொருள். தேற்றம் இல்லாவிட்டால் குழப்பமே மிஞ்சும். மாற்று வழிகளில் செல்ல மனம் தூண்டும். ஆகவே அறிவு மேம்பட ஆண்டவனின் அருள் தேவைப்படுவதை நாம் அறிய முடிகிறது. ” அறிவோடு தொழும் அவர் ஆள்வர் நன்மையே”  என்று திருக் கருக்குடித் தேவாரத்தில் ஞானசம்பந்தர் பாடுகிறார். உயிர்களுக்கு நம்மை செய்வதையே கொள்கையாகக் கொண்டவன் இறைவன். ” தொழுவாரவர் துயராயின தீர்த்தல் உன தொழிலே” எனப்பாடுகிறார் சுந்தரர். நன்மை செய்வதையே தொழிலாகக் கொண்ட நமையாளும்        பெருமானுக்கு ” நன்மையினார் ” என்று பெயர் சூட்டுகிறார் நம்பியாரூரர். ” நன்மையினார்க்கு  இடம்  ஆவது  நம்  திருநாவலூரே ” என்பது அவரது வாக்கு.

இறைவனது செய்கைகள் எல்லாம் உலகம் உய்வதற்காகவே என்பதை உணர வேண்டும். அவனது இப்பேரருளைக் கண்டு வியந்து துதிக்கிறார் ஞான சம்பந்தர். நான்கு திசைகளுக்கும் முதல்வனாகவும் மூர்த்தியாகவும் நின்று நன்மை அருள்பவனாகிய  சிவபரம்பொருளை ,

” நால் திசைக்கும்  மூர்த்தியாகி  நின்றது  என்ன நன்மையே !!! ”  என்று மதுரை ஆலவாய்ப் பெருமானைப் பாடுகிறார் அவர்.

மனதில் தெளிவு ஏற்பட்டால் நன்மை விளையும். அதுவே புண்ணியச் செயல்களைச் செய்யத் தூண்டும். நின்ற பாவ வினைகளை நீங்கச் செய்யும். தீவினைச் செயல்களை மேற்கொள்பவர்கள் அப்புண்ணியத்தில் ஈடுபட மாட்டார்கள். இறைவனை ஏசவும் தயங்க மாட்டார்கள். தமது வழியே சிறந்தது என்றும் கூறத் தொடங்கி விடுவார்கள். இவ்வளவுக்கும் மூல காரணம் மனதில் தேற்றம் இல்லாமல் போவதுதான். அவ்வாறு வினைத் தொழில் வழி நின்ற சமணர்களையும் பௌத்தர்களையும் கண்டிப்பதோடு, மனதில் தெளிவு ஏற்பட வழியையும் சொல்லி அறிவுறுத்திகிறார்  சீகாழிப் பிள்ளையார்.

” தேற்றம் இல் வினைத் தொழில் தேரரும் சமணரும்

போற்றி இசைத்து நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொ(ள்)ளார் ”

சிவன் சேவடியைப் பற்றுவதோடு, பாணபத்திரனைப் போல் ஆலவாய் அண்ணலைப் புகழ்ந்து பாடினால் சிவ புண்ணியம் கிடைக்கும் என்பது இதனால் உணர்த்தப்படுகிறது.

அவ்வாறு சேவடி பற்றிய மார்க்கண்டேயன் என்ற பாலனது உயிரைக் கொள்ள வந்த காலனைக் காலால் உதைத்து வீழச் செய்து அச்சிறுவனைக் காப்பாற்றியதுபோல் அடியவர்கள் அனைவரையும்  எம பயமின்றிக் காத்துத் தன்  சீரடிக்கீழ் வைத்தருளுவான் என்றும் சம்பந்தப்பெருமான் அருளுகின்றார்.

” கூற்று  உதைத்த தாளினாய் , கூடல் ஆலவாயிலாய் ”

என்பது அப்பாடலின் அற்புதமான வரிகள் உணர்த்தும் கருத்து.

மதுரைக்குச் சென்று சமணர்களை வென்று பாண்டியனை மீண்டும் சைவனாக்கி அவை யாவும் ஈசன் திருவிளையாடலே என்பதால் பாண்டியனும்,மங்கையர்க்கரசியாரும்,குலச்சிறை  நாயனாரும் உடன் வர, ஆலவாய் ஈசனது ஆலயத்தை அடைந்து பெருமான் முன்பு திருஞானசம்பந்தப்பெருமான்  போற்றி இசைத்த அருமையான திருப்பதிகத்தில் வரும் பாடலே இது.

” தேற்றம் இல் வினைத் தொழில் தேரரும் சமணரும்

போற்றி இசைத்து நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொ(ள்)ளார்

கூற்று  உதைத்த தாளினாய் , கூடல் ஆலவாயிலாய்

நால் திசைக்கும்  மூர்த்தியாகி  நின்றது  என்ன நன்மையே.”

சிவனருள்  துணை நின்றாலொழிய அப்புண்ணியம் கிட்டாது என்ற சைவ சித்தாந்தக் கருத்தும் இங்கே புலப்படுகிறது. இதையே, ” அவன் அருளாலே அவன் தாள்  வணங்கி” என்றார்  மணிவாசகப் பெருமான்.

திருச்சிற்றம்பலம்

விதியை மதியால் வெல்ல முடியுமா?

Standard

விதியை மதியால் வெல்ல முடியுமா?

விதியை மதியால் வெல்ல முடியுமா?’ என்ற கேள்வி பல காலமாகக் கேட்கப்பட்டு வருகிறது. ‘விதிப்படிதான் வாழ்க்கை’ என்று ஒரு சாராரும்,  ‘மதிப்படிதான் வாழ்க்கை; விதியும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது. சோம்பேறிகளின் சௌகரியமான தப்பித்தல், விதி’ என்று ஒருசாராரும் சொல்கிறார்கள்.

மூன்றாவதாக, இன்னொரு கோஷ்டி உண்டு. ‘முயற்சியும் இருக்கணும்; அது பலனளிக்க நல்ல விதியும் இருக்கணும்’னு சொல்வாங்க. ‘விதிச்சது நடக்கும்; விதிக்காதது நடக்காது’என்று  தீர்மானமாக சொல்கிறார் ரமண மகரிஷி. 

‘விதியை மதியால் வெல்ல முடியாது. ஜென்மத்தில் குரு; ராமர் வனவாசம். பத்தில் குரு வந்ததால், பரமசிவனும் பிச்சையெடுத்தார். அவதாரப் புருஷர்களே அப்படியென்றால், நாம் எம்மாத்திரம்?’ என்கின்றனர்  ஜோதிட வல்லுநர்கள். 

‘உங்களிடமிருந்து எடுக்கப்பட வேண்டியவையும், உங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டியவையும் என்றோ நிச்சயிக்கப்பட்டுவிட்டன’ என்கிறது, கிறிஸ்துவத்தின் புனித நூலான பைபிள்.

‘இந்த உலகில், இறைவன் கொடுத்ததை எவராலும் பறிக்க முடியாது; இறைவன் மறுத்ததை எவராலும் கொடுக்க முடியாது’ என்கிறது, இஸ்லாம் மிகத் தெளிவாக.

சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகள் ஜோதிடம் பொய் எனக் கூறி, அண்ணன் செங்குட்டுவனை அரியணையில் அமர்த்துகிறார். அப்படிப்பட்டவரே, சிலப்பதிகாரத்தில், கண்ணகியின் கூற்றாகச் சொல்லும்போது…

‘ஏசா சிறப்பினிசை விளங்கு பெருங்குடி 

மாசாத்து வணிகன் மகனையாகி 

ஊழ்வினை துறத்த சூழ்கலன் மன்னா… 

நின்னகர் புகுந்து இங்கு என் காற்சிலம்பு ஆற்றி நிற்ப…’ 

என்று ஊழ்வினை பற்றிக் குறிப்பிடுகிறார்.

நம் தெய்வப்புலவர் திருவள்ளுவரும்,

‘ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும்’ என்கிறார்.

அதாவது, ‘விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ, வேறு ஒரு வழியிலேயோ அது மீண்டும் நம்முன் வந்து நிற்கும். விதியை விட, வேறு எவை வலிமையானவை?’ என்கிறார் வள்ளுவர்.

‘‘வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி

தொகுத்தார்க்குந் துய்த்த லரிது’’ என்றும் கூறுகிறார். 

அதாவது, கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம் என்பது பொருள்.

விதியும் மதியும் உடலும் உயிருமாகச் செயல்படுகின்றன. விதி வழியே மதி செல்கிறது.    

挿எழுதிச் செல்லும் விதியின் கை

எழுதி எழுதி மேற்செல்லும்

தொழுது கெஞ்சி நின்றாலும்

சூழ்ச்சி பலவும் செய்தாலும்

வழுவிப் பின்னாய் நீங்கியொரு

வார்த்தை யேனும் மாற்றிடுமோ,

அழுத கண்ணீர் ஆறெல்லாம்

அதிலோர் எழுத்தை அழித்திடுமோ ・என்பது உமர்கய்யாம் பாடல்.

சரி… விதிப்படிதான் வாழ்க்கை என்றால் முயற்சி எதற்கு? மதிப்படிதான் வாழ்க்கை என்றால் கடவுள் எதற்கு?

இந்தக் கேள்விகள் பலருக்கும் வரலாம். நியாயமான கேள்விகள்தான் இவை.

இதற்கெல்லாம் பகவான் கிருஷ்ணர் , மகாபாரதத்தில் விடை சொல்கிறார். 

பாரதப்போர்  முடிந்த பிறகு, கிருஷ்ணரைச் சந்திக்கும் அவரின் பால்ய நண்பரான உத்தவன், தனக்கு எழுந்த சந்தேகங்களைக் கேட்கிறார். அது, eஉத்தவ கீதை’ எனத் தனியாகவே தொகுக்கப்பட்டுள்ளது.

அதில்…

உத்தவன்: “சூதாட்டத்தின்போது  தர்மருக்கு நீங்கள் ஏன் உதவவில்லை?”

கிருஷ்ணன்: “தனக்குப் பதிலாக தன் மாமா சகுனி விளையாடுவார் என்று கூறினானே துரியோதன்… அந்த விவேகம் ஏன் தர்மரிடம் இல்லை?”

உத்தவன்: “ ஆனாலும், தர்மர் உன் பக்தன் அல்லவா? அவருக்கு உதவ வேண்டியது உங்கள் கடமை அல்லவா?” 

கிருஷ்ணன்: “பக்தனா விவேகியா என்றால், பக்தனைவிட விவேகிக்குதான் முன்னுரிமை கொடுப்பேன்!”

 ஆகவே, உங்களின்  அனுபவ அறிவாலும், கல்வி கேள்விகளில் சிறந்தவரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்ட  பாடங்களாலும் கிடைத்த ஞானத்தைக் கொண்டு, உங்கள் மதி சொல்கிறபடி வாழ்க்கையை நடத்துவதே சிறந்தது. பக்தி மார்க்கம் என்பது துயரங்களில் துவண்டுவிடாமலும், ஏமாற்றங்களால் சோர்ந்துவிடாமலும், eஏற்றதொரு கருத்தை என் மனம் ஏற்றால், எவர் வரினும் அஞ்சேன் நில்லேன்f  என கவியரசு கண்ணதாசன் சொன்னதுபோல் எதையும் ஏற்று, எதிர்கொள்ளும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும்  தருவது.

மதியால் விதியை வெல்ல முடியுமோ, முடியாதோ… ஆனால், எப்பேர்ப்பட்ட விதியையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும்  சாதுர்யம் மதிக்கு உண்டு.

ஒரு கதை சொல்வார்கள். மிகப் பெரும் தனவந்தனாக இருந்த ஒருவன் அடுத்த சில நாட்களில் அனைத்துச் சொத்துக்களையும் இழந்து, மரம் வெட்டிப் பிழைப்பான் என்று அவனது விதி சொல்லியதாம். முதலில் தளர்ந்துபோனாலும், சாதுர்யமாக அவன் ஒரு முடிவெடுத்தான். அதன்படி, அவன் வழக்கம்போல் தனவந்தனாகவே தொடர்ந்தது மட்டுமல்லாமல், முன்பைவிடவும் அதிக செல்வந்தனானான்.

அப்படி என்ன அவன் செய்தான்? மரம் வெட்டிப் பிழைக்க வேண்டும் என்பதுதானே அவன் விதி? அதனால், காட்டுக்குச் செல்வான். அங்கே கண்ட கண்ட மரங்களையும் வெட்டாமல், சந்தன மரம் இருந்தால் மட்டுமே வெட்டுவான். இல்லையென்றால், அன்றைய தினம் பொழுது சாய்வதற்குள் அவன் கண்களில் எப்படியாவது ஒரு சந்தன மரம் தட்டுப்பட்டுவிடும். ஆமாம், மரம் வெட்டிப் ‘பிழைக்க’ வேண்டும் என்பது அவன் விதியாயிற்றே!

அதுவும் ரொம்பவும் சிரமப்பட்டெல்லாம் உடல் வருத்தி வெட்டமாட்டான். இரண்டு அல்லது மூன்று வெட்டுக்கள் போட்டதுமே, மரம் சாய்ந்துவிடும். எடுத்துப் போய் ஊரில் நல்ல விலைக்கு விற்க அவனுக்கு ஆள் பலம் அம்பு எல்லாம் உண்டு!

அப்புறம், அவன் வளத்துக்குக் கேட்க வேண்டுமா என்ன?

ஆகையால், விதி எழுதிச் செல்கிறபடி செல்லட்டும். அதை எதிர்கொள்கிற பக்குவத்தையும், அதிலிருந்து மீள்கிற புத்தி சாதுர்யத்தையும், மதிநுட்பத்தையும் கடவுள் பக்தி நமக்குத் தரட்டும்

திருச்சிற்றம்பலம்

நன்றி ; விகடன்,காம்

ஓம் நமசிவாயம், 

சேக்கிழார் நாயனார் வரலாறு

Standard

சேக்கிழார் நாயனார் வரலாறு

பன்னிரண்டாம் திருமுறை அருளிச்செய்த 

சேக்கிழார் நாயனார் வரலாறு

” தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த

தொல்லையதாம் திருத்தொண்டத் தொகையடியார் 

ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த

செல்வம்மலி குன்றத்தூர்ச் சேக்கிழார் ” எனப் போற்றப்படுபவர் அருண் மொழித்தேவர்  என்ற சேக்கிழார் பிரான்

சேக்கிழாரின் தோற்றம்:

தொண்டைவள நாட்டில் விளங்கிய இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றான புலியூர்க் கோட்டத்தில் குன்றைவள நாட்டின் தலைநகராக விளங்கியது குன்றத்தூர்.குன்றத்தூரில், சோழ மன்னன் கரிகாலனால் குடியேற்றப்பட்ட கூடல்கிழான், புரிசைகிழான் போன்ற வேளாளர் குடும்பங்களில் சேக் கிழார் குடியும் ஒன்றாகும். சோழமன்னர்களால் நன்கு மதிக்கப்பட்ட இக்குடியில், அருண்மொழித்தேவரும் அவரது தம்பியார் பாலறாவா யரும் தோன்றினார்கள். பெற்றோர் தம்பிள்ளைகட்கு இராஜசோழ னின் இளமைப் பெயராகிய அருண்மொழித்தேவர் என்ற பெயரை யும், ஞானசம்பந்தரின் திருப்பெயராகிய பாலறாவாயர் என்ற பெய ரையும் வைத்துள்ளமை அவர்கட்கு இராஜராஜன் மீதும் ஞானசம்பந் தர் மீதும் கொண்டிருந்த பத்திமையை வெளிப்படுத்தும்.

சேக்கிழாருக்கு அவர்தம் பெற்றோர் வைத்த பெயர் அருண் மொழித்தேவர் என்பதாகும். பிறந்த குடிக்குப் பெருமை சேர்த்த கார ணத்தால் அவர் சேக்கிழார் எனவே வழங்கப்பெற்றார்.

அமைச்சுரிமை ஏற்றல்:

அருண்மொழித்தேவரும் பாலறாவாயரும் இளமையில் கல்வி நலம் பெற்றுச் சிறந்தனர். பக்தி உணர்வுடன் நல்லொழுக்கத்திலும் மேம்பட்டு விளங்கினர். அக்காலத்தில் ஆட்சி புரிந்த சோழமன்னன், அருண்மொழித்தேவரின் சிறப்பியல்புகளால் கவரப்பெற்று அவரைத் தன் அமைச்சர்களின் தலைமை அமைச்சராக நியமித்து, `உத்தம சோழப்பல்லவன்` என்ற பட்டம் வழங்கி ஆட்சி உரிமைகள் பலவற்றை யும் அவருக்கு அளித்தான்.

அமைச்சுரிமை ஏற்ற அருண்மொழித்தேவர் சோழநாட்டில் கும்பகோணத்துக்கு அருகில் தங்கி, அங்கு விளங்கும் திருநாகேச் சரத்து இறைவனிடம் பேரன்புகொண்டவராய் நாடோறும் `மாநாகம் அருச்சித்த மலர்க்கமலத் தாள்வணங்கி` வழிபட்டு வந்தார். நாகேச்சரத்து இறைவர்பால் வைத்த பேரன்பினால் சோழநாட்டுத் திருநாகேச்சரம் திருக்கோயிலைப் போலவே தம்முடைய ஊராகிய குன்றத்தூரிலும் திருநாகேச்சரம் என்ற பெயரால் ஒரு திருக்கோயில் கட்டுவித்து அங்கு நாள் வழிபாடும் சிறப்பு வழிபாடும் இனிதே நடைபெற ஏற்பாடுகள் செய்தார்.

அரசர்க்கு அறவுரை:

அந்நாளில் சைவம் சார்ந்த அன்பர்கள் பலரும் தங்கள் சமய மெய்நூல்களைப் பயிலாது சமணர்கள் புனைந்துரைத்ததும் சிற்றின்பச் சுவை மிகுந்ததும் ஆகிய சீவகசிந்தாமணிக் கதையை மெய்யென நம்பி, அக்காவியச் சுவையில் ஈடுபட்டு, தம் சமயப்பெரியோர்களின் வரலாறுகளை அறியாது, பொழுது கழித்து வந்தனர். சோழமன்னனும் சிந்தாமணிக் கதையைச் சுவைபடக் கேட்டு, மனமகிழ்ந்து பாராட்டிக் களிப்புற்று வந்தான். 

அது கண்ட அருண்மொழித்தேவராம் சேக்கிழார், அரசனை நோக்கி `வேந்தர் பெருமானே, தாங்கள் சைவமெய்ச் சமயத்தைச் சார்ந்தவராயிருந்தும் இம்மை, மறுமை, வீடு என்னும் மும்மை நலங் களையும் தரும் சிவனடியார்களின் மெய்மை வரலாறுகளைக் கேளாது சமணர்கள் புனைந்துரைத்த பொய்க்கதையாகிய சிந்தா மணிக் கதையை மெய்யெனக் கருதிக் கேட்டல் தகுதியுடையதன்று என இடித்துரை கூறினார்.

அமைச்சரின் அறிவுரையைக் கேட்ட மன்னன், `நீவிர் கூறும் சிவகதை யாது? அதனை விளங்க உரைப்பீராக` எனக் கேட்டனன். 

சேக்கிழார் அரசனை நோக்கி, `திருவாரூரில் விளங்கும் தியாகேசப் பெருமான் தம்முடைய அடியார்களின் பெருமைகளை விரித்துரைத்துப் போற்றுக எனக் கூறி, `தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்` எனத் தாமே அடியெடுத்துக் கொடுக்க, சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை என்னும் திருப் பதிகத்தால் சிவனடியார்களின் பெருமைகளைப் புகழ்ந்துப் போற்றி னார். அத் திருத்தொண்டத் தொகைக்குத் திருநாரையூரில் விளங்கும் பொல்லாப் பிள்ளையார் அருள்பெற்று அவர் உணர்த்திய வகையில் அத்திருத்தொண்டத் தொகையில் குறிப்பால் உணர்த்திய வரலாறு களைச் சிறிது விரித்து நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதி என்றதொரு நூலை அருளிச் செய்துள்ளார். 

இவ்வரலாறு களைக் கேட்ட இராஜராஜமன்னர், சிவாலய தேவர் முதலாகவுள்ள அனைவரும் கேட்டு மகிழ்ந்து இவைகளே மெய்நூல்கள் எனப் பாராட்டியுள்ளார்கள்` எனக் கூறினார்.

திருத்தொண்டர் புராணம் அருளல்:

மன்னன் வேண்டுகோளை ஏற்ற சேக்கிழார், நடராசப் பெரு மான் அருள்துணையோடு அதனை நிறைவேற்ற முற்பட்டு தில்லை யம்பதியை அடைந்து. சிவகங்கையில் நீராடி, அம்பலவாணரைத் தொழுது, சிவபெருமான்பால் அன்புமிக்க அடியவர் வரலாறுகளை விரித்துரைக்க அடியெடுத்துக் கொடுத்தருளுமாறு நடராசப் பெரு மானை வேண்டி நின்றார். அந்நிலையில் அங்குள்ளார் யாவரும் கேட்க, `உலகெலாம்` என்றொரு வானொலி எழுந்தது. சேக்கிழார் நடராசப் பெருமானின் தடங்கருணையை வியந்து நின்றார்.

தில்லை வாழந்தணர்கள் நடராசப் பெருமானின் பிரசாதமாகத் திருநீறு, திருமாலை, பரிவட்டம் அளித்தனர். 

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரை யும் சேக்கிழார் வணங்கிப் போற்றி, ஆயிரங் கால் மண்டபத்தை அடைந்து, ஆங்கே அமர்ந்து, தில்லைப் பெருமான் அருளிய `உலகெ லாம்` என்ற சொல்லையே முதன் மொழியாகக் கொண்டு திருத்தொண் டர் புராணம் என்னும் தெய்வத் தமிழ்ப் பெருங்காவியத்தைப் பாடத் தொடங்கினார். இறைவன் அருளிய அவ்வருள்வாக்கு நூலின் முதலி லும் இடையிலும் முடிவிலும் அமையுமாறு அப்புராணத்தை இலக் கியச் சுவையும் பக்திச் சுவையும் இனிதே அமையப் பாடி முடித்தார்.

புராணம் எந்த அளவில் பாடப்பெற்றுள்ளது என்பதை அடிக்கடி விசாரித்து அறிந்துவந்த சோழமன்னன் திருத்தொண்டர் புராணம் பாடி முடிக்கப்பட்ட செய்தியை அறிந்து, மிக்க மனமகிழ் வெய்தி தில்லைப்பதியை அடைந்தான். சேக்கிழாரும் தில்லைவாழந் தணர்களும் எதிர் கொண்டழைத்தனர். மன்னன் தில்லையம்பலவனை யும், சிவவேடப் பொலிவுடன் விளங்கிய சேக்கிழாரையும் வணங்கி வலம்வந்து, தில்லையம்பல முன்றிலில் நின்றான். அந்நிலையில் `வளவனே! நாமே உலகெலாம் என அடியெடுத்துக்கொடுக்க, அன்பன் சேக்கிழான் அடியவர் திறத்தை விரித்து நூலாகச் செய்துள் ளான். 

திருவாதிரைத் திருநாள்:

நடராசப்பெருமானுக்கு உகந்ததும், திருஞானசம்பந்தர் திருவ வதாரம் செய்ததும், அவருக்கு உமையம்மை ஞானப்பால் அளித்ததும் ஆகிய பெருமைகளை உடையது திருவாதிரை. இது கருதியே சேக்கிழார் பெருமான் தில்லையில் சித்திரைத் திருவாதிரையில் தொடங்கிச் சித்திரைத் திருவாதிரையிலேயே திருத்தொண்டர் புராணத்தை முற்றுவித்தார். 

ஆதலின் திருக்கயிலையில் தொடங்கி, திருக்கயிலையில் நிறை வெய்துமாறு, திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றைத் தொகை, வகை நூல்களாகக் கொண்டு பதின்மூன்று சருக்கங்களோடு 4286 பாடல்களாக அமைக்கப்பெற்ற திருத்தொண்டர் புராண விரிவுரையும் சித்திரைத் திருவாதிரையிலேயே தொடங்கப் பெற்றுச் சித்திரைத் திருவாதிரையிலேயே முற்றுவிக்கப்பட்டது. இருந்து கேட்ட மன்னரும் மக்களும் இன்பக்கடலில் திளைத்தனர். பெரியபுராணம் தில்லையில் அரங்கேற்றிய நாள் 20. 4. 1140 என்பர் ஆய்வறிஞர் குடந்தை நா. சேதுராமன்.

முத்திப் பேறு:

தொண்டர்சீர் பரவுவாராகிய சேக்கிழார் பெருமான் தில்லை நகரிலேயே தங்கியிருந்து, திருத்தொண்டர் பெருமைகளை உணர்ந்து போற்றியவராய்ச் சிவனடியார்களோடுகூடித் தவநிலையிலமர்ந்து வைகாசிப் பூச நாளில் தில்லைப்பெருமான் திருவடி நீழலை அடைந்து முத்தி பெற்றார்.

திருச்சிற்றம்பலம்

தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

சிவமஹிமை

Standard

சிவமஹிமை

சிவம் என்ற சொல்லுக்கு ஸர்வமங்களரூபியாய் இருக்கும் பரம் பொருள் என்பது பொருள். “சிவஸ்தாணு மஹேச்வர.” என்பது உபநிஷத்வாக்கியம். “சிவம் மங்களம் பரம்” என்பதும் எப்போதும் ஸர்வமங்களரூபியாய் ஸர்வஜகத்திலும் வியாபித்து அருள்பாலிக்கும் பரம்பொருள் என்பது ஆன்றோர் வாக்கு. “சிவ ஏகோத்யேய: சிவம் கர: ஸர்வமன்யத் பரித்யாஜ” என்பது அதர்வசிகோபநிஷத்வாக்கு. அதாவது மற்ற தேவதைகளை வழிபடுவதைவிட்டு பரனேச்வரன் ஒருவரே எல்லோராலும் பூஜிக்கத் தக்கவர் என்று வேதம் முடிவு செய்கிறது. இவற்றையெல்லாம் ஆராய்ந்து பாதர்க்கும் போது அத்வைத ஸித்தாந்தமும் ஏகநாயகன் ஒருவனே என்றும், “ஒன்றுகண்டீர் உலகுகொரு தெய்வம்” என்று திருமூலரும், “ஏக ஏவ ருத்ரோ நத்விதீயாய தஸ்தே” “ஈசான: ஸர்வவித்யானாம் ஈச்வர: ஸர்வ பூதானாம்” என்ற வேதவாக்கியங்களும் சிவ மஹிமையைக் கூறுகின்றன. சகல உலகங்களுக்கும், ஸர்வோத்க்ருஷ்டமானவரும், எல்லோராலும் பூஜிக்கத்தக்கவருமான ஈச்வரன் ஒருவனே என்றும், அவருக்குச் சமமாவோ அவரைத்தவிர இரண்டாவதான தெய்வசக்தியோ கிடையாது என்றும் ஸகல வேத இதிஹாஸ புராணங்களும் கூறுகின்றன.

அத்வைத சித்தாந்த ரீதியாக ஆராய்ந்து பார்ப்போமானாலும் இதே பொருளைத்தான் கூறுகிறது. எங்கும் வ்யாபித்துக் கொண்டு நிற்கும் உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்று சக்திக்கும் அப்பாற்பட்ட துரீய நிலையாய் நிற்கும் பரப்ரம்மம் ஒன்று தான் வேதங்களாலும், உபநிஷத்துகளாலும், மற்ற இதிஹாஸங்களாலும் அறியப்பட்டு பல பெரியோர்களாலும் கூறப்படும் மஹாவாக்கியங்கள் பின்வருமாறு. “தமீச்வராணாம் பரமம் மஹேச்வரம்” என்றும், “அசிந்த்யமவ்யக்தமனந்த ரூபம், சிவம் ப்ரசாந்தம் அம்ருதம் ப்ரம்ம யோனிம்! தமாதிமத்யாந்த விஹீனமேகம் விபும் சிதானந்தமரூபம் அத்புதம்|| என்று கைவல்யோபநிஷத்தும், “சேர்ந்தறியாக் கையானை” என்று ஶ்ரீமணிவாசகரின் திருவாசகமும் கூறுகிறது. பரமேச்வரன் யாரையும் கை கூப்பி வணங்கவில்லை என்றும், ஆனால் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலான மற்ற எல்லாத் தேவர்களும் சிவலிங்க வடிவில் ஸாக்ஷத் பரமேச்வரனை அவரவருக்கு ஏற்ற பதவிகளையடைய ஸதாஸர்வ காலமும் பூஜித்துக் கொண்டிருப்பதாக வேதம் இதிஹாஸ புராணங்களும் கூறுவதைப் பார்க்கலாம்.

ருக்வேதம்:- தவச்சியே மருதோ மர்ஜயத்த ருத்ரயத்தே ஜனிமசாகு சித்ரம் || என்றும்,

ப்ரும்மண: ஸ்ருஷ்டி கர்த்ருத்வம் விஷ்ணோர்தானவ மர்த்தனம், ஸ்வர்க்காதிபத்யம் இந்த்ரஸ்ய சிவபூஜாவிதே: பலம் என்று மஹாபாரதமும் கூறுகிறது. இதிலிருந்து சிவபெருமானுடைய மஹிமையை நாம் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம்.

தவிர, சிவபிரானுடைய மங்களமூர்த்தியின் மஹிமையையும், அவனுடைய திவ்ய நாமாவையும் புகழாதவர்கள் இந்த உலகத்தில் கிடையாது எல்லா மஹாமந்திரங்களைக் காட்டிலும் அதிக உத்க்ருஷ்டமாயும், ஸகல உலகங்களிலும் மஹாராஜ மந்த்ரமாயும் பாளித்து வருகிற, ‘சிவ’ என்ற இரண்டு எழுத்துக்களும், அதே போல சிவபெருமான் அணியும் விபூதி, ருத்ராக்ஷம் என்ற இரண்டு சிவசின்னங்களும், அந்த பரமேச்வரனைப் போலவே எல்லாத் தேவர்களாலும் போற்றப்பட்டும், அவரவர்கள் தாம் சிவபூஜை செய்யும்போது விபூதி, ருத்ராக்ஷத்தைப் பரம பக்தியோடு அணிந்து கொண்டு ஸதா மாலைப் பூஜிக்கிறார்கள் என்ற ரகஸியத்தை பிரம்மாவானவர் நாரதருக்கு கோடிருத்ர ஸம்ஹிதையில் உபதேசிக்கின்றார்.

தவிர, ஶ்ரீ உமாபதிசிவாசாரியார் இயற்றிய ஶ்ரீகுஞ்சிதாங்க்ரிஸ்தவம் 91-வது ச்லோகத்தில் இந்த தத்துவத்தை நன்கு விளக்கியுள்ளார்கள். (ச்லோகம்) “யல்லிங்கே பிரமம் விஷ்ணுப்ரமுக ஸுரவரா பஸ்மருத்ராக்ஷ்ஹபாஜ: ஸஸ்த்ரீகாஸ் ஸாம்பமூர்த்திம் ஸகலததுப்ருதாம் ஸர்வதம் ஸர்வரூபம் | —— குஞ்சிதாங்க்ரிம் பஜே (அ) ஹம் ||” அதாவது எந்த சிவலிங்க்ரூபத்தில் பிரமம் விஷ்ணு முதலிய தேவர்கள் பஸ்ம ருத்ராக்ஷதாரிகளாகவும், தங்கள் தேவிமார்களுடன் கூடிபூஜை செய்கிறார்களோ, அந்த ஸகல பிராணிகளுக்கு ஸர்வத்தையும் அளிப்பவரும், எல்லா உருவமும் உள்ளவருமான பரமேசுவரனுடைய குஞ்சிதபதத்தை நமஸ்கரிக்கிறேன் என்று ஸ்தோத்திரம் செய்கிறார்.

“வித்யாஸு” ச்ருதிருத்க்ருஷ்டா ருத்ரைகாதசினி ச்ருதெள | தத்ர பஞ்சாக்ஷரி தஸ்யாம் சிவ இத்யக்ஷரத்வயம் ||” என்று கூறப்படுகிறது. ஸகல வித்யைகளுக்குள் வேதம் சிறந்தது. அதற்குள் ஶ்ரீருத்ரம் சிறந்தது. அதற்குள் நம: சிவாய என்ற பஞ்சாக்ஷர மஹா மந்த்ரம் சிறந்தது. அந்த பஞ்சாக்ஷரத்திற்குள் ‘சிவ’ என்ற இரு அக்ஷரங்கள் மிகச் சிறந்தவை என்பது பெரியோர்களின் வாக்கு. “சிவநாம விநாச்யாதாம் பாதகாநாமபாவத” என்று சிவநாமாவை ஜபித்தால் அதனால் போக்கக் கூடிய பாபங்களை உலகில் யாராலும் செய்ய முடியாது என்பதாகும். தவிர, “சிவ” என்று வரும் மஹாபஞ்சாக்ஷர ஜபத்தை எவன் நியமத்தோடு நித்தம் தவறாமல் ஜபித்துக் கொண்டு வருகிறானோ அவன் நோயாளியையோ அல்லது தரித்ர தசையிலுள்ளவனையோ கண்ணால் பார்த்தாலே அந்த குறை அவர்களுக்கு உடனே நீங்கி சகல செளகர்யங்களையும் அடைகிறான் என்று மந்த்ரோபநிஷத் கூறுகிறது. “பஞ்சாக்ஷர மஹாமந்த்ரம் மஹாபாதக நாசநம் … நதஸ்ய பாபகந்தோபி தர்சனாத்பாப ஹாரிண:” என்பது மந்த்ரம்.

அந்த சிவநாமாவுக்கே இப்படிப்பட்ட அபரிமிதமான சக்தியும் மஹிமையும் இருக்கும் போது இதற்கு மூலமாயுள்ள சிவபிரானுக்கு உள்ள மஹிமையை யார் தான் அறியமுடியும். தேவர்களாலும் அறிய முடியாது என்பது திண்ணம். இதைச் சேந்தனார் 9-ம் திருமுறையில் திருப்பல்லாண்டு கூறும்போது “ஒப்பமரர் பாவிக்கும் பாவகத்திற்கு அப்புறத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே” என்று போற்றியிருக்கிறார். இப்படிப்பட்ட மஹாமஹிமை தங்கிய பரமேசுவரனுக்கு எந்தத் தெய்வத்துக்கும் இல்லாத சிறப்பு என்னவென்றால் இவருக்கு “ஆசுதோஷி” என்ற பெயர் உண்மையாம். யார் யார் எந்தெந்த முறையில் தம்தம் சக்திக்கேற்றவாறு உபாசிக்கின்றனரோ அவர்களுக்கு யாரும் பெறமுடியாத அபரிமிதமான அனுக்கிரஹத்தைச் செய்வதால் இப்பெயர் பெற்றார் என்பது மஹான்களின் வாக்கு. இதற்கு நம் சிவனடியார்களின் வாக்கே தக்க சான்றாகும்.

ரிக், யஜுஸ், ஸாமம் என்னும் மூன்று வேதங்களிலும் பரமேசுவரன் ஸர்வோத்க்குஷ்டமாகப் போற்றப்படுகிறார். எனினும் மூன்று வேதங்களிலும் நடுவிலுள்ள யஜுர்வேதத்தில் வரும் “சதருத்ரீயம்” அல்லது “ஶ்ரீருத்ரம்” என்று எந்த மந்திரத்தால் சிவபிரானை எல்லாத் தேவர்களும் ஸ்தோத்ரம் செய்கிறார்களோ அந்த ஶ்ரீருத்ரத்தின் அர்த்தத்தை கொஞ்சம் நாம் ஆராய்ந்து பாதர்க்கும் போது சிவபெருமானைத் தவிர வேறு எந்த தெய்வத்துக்கும் இவ்வளவு சிறப்பும் அபரிமிதமான மஹிமையும் இல்லையென்றும், சிவபெருமானே எல்லாத் தெய்வத்த்க்கும் மேம்பட்ட தெய்வம் என்றும், அவரே பரம்பொருள் என்றும் அறியலாம்.

ஸகலோகங்களிலும் உள்ள ஈ எறும்பு முதல் ஹரிப்ரம்மேந்தராதி தேவர்கள் உள்பட ஸகல ஆன்மகோடிகளிடத்து உள்ள அபரிதமான கருணையால் சிவபெருமான் ‘க்ருபா சமுத்திரன்’ என்று வடமொழியிலும், ‘கரையில் கருணைக்கடல்’ என்று தமிழிலும், பல அடியார்களாலும் ஸ்தோத்ரம் செய்யப்பட்டுள்ளார். உதாரணமாக சிவபிரானது உடை, ஆபரணம், இருப்பிடம், வாஹனம், ஆஹாரம், பக்தர்களுக்குச் செய்த அனுக்ரஹம் இவைகளையெல்லாம் நோக்கும் பொழுது, இப்பெருமானது அபரிமிதமான கருணையையும், எல்லையற்ற மஹிமையையும் உணர முடிகிறது.

சுருக்கமாகச் சொன்னால் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலிய தேவர்கள் தத்தம் பதவியைப் பெறுவதற்காகச் சிவபிரானைப் பூஜித்தலும், பூலோகத்தில் ஒரு நாள் தேவலோகத்திலிருந்து கங்கையை பூவுலகிற்குக் கொண்டு வந்ததும், அருச்சுனனுக்காக வேடனாக வந்து பாசுபதாஸ்த்ரம் கொடுத்ததும் குருதல்பசுமனம் செய்த மஹா பாபியாகிய சந்திரனை தலையில் தூக்கிவைத்துக் கொண்டதும், திருவிளையாடற்புராணத்தில் வரும் கேவலம் ஒரு பக்ஷியாகிய நாரைக்கு முக்தி கொடுத்து அதற்கு அடையாளமாக அதன் சிறகைத் தன் தலையிலே தாங்கிக் கொண்டதும், மார்க்கண்டேயர்க்காக இயமனையே காலால் உதைத்துக் கொன்று மறுபடியும் பூமிதேவிக்காகவும், மற்ற தேவர்களுக்காகவும், அவனைப் பிழைக்க வைத்ததையும், மஹாவிஷ்ணுவின் அவதாரமாகிய மத்ஸயம், கூர்மம், வராஹம், நரசிம்மம், வாமநம் இத்யாதி ரூபங்களினால் அந்தந்த அசுரர்களை ஸம்ஹரித்துவிட்டு விஷ்ணு தன் அஹங்காரத்தினால் மற்ற தேவர்களுக்கும் ஸகல உலகங்களுக்கும் செய்த துஷ்க்ருத்தியத்தை அடக்கும்பொருட்டு, மத்ஸ்யாவதாரத்திலிருந்து கண்களையும், கூர்மாவதாரத்திலிருந்து ஆமை ஒட்டையும், வராஹ அவதாரத்திலிருந்து தத்திப் பல்லஒயும், நரஸிம்மாவதாரத்திலிருந்து இரத்தம் தோய்ந்த தோலையும், வாமநராக வந்த திருவிக்கிரமாவதாரத்திலிருந்து முதுகெலும்பையும் அபகரித்துத் தன் திருமேனியில் ஆபரணாமாக அணிந்து கொண்டு சகல உலகங்களையும் ரக்ஷித்து அருள்பாலித்த அபரிமிதமானஅவரது (சிவபெருமானது) கருணையை நோக்கும் பொழுது ஆதியந்தம் இல்லாத மஹாகைலாஸத்திற்கு அதிபதியான ஸாக்ஷாத் பரமேச்வரனுடைய முப்பத்து முக்கோடி தேவர்களாலும் அறியமுடியாத சிவபரத்துவமும், அளவு கடந்த மஹிமையும் நன்கு தெரியவருகிறது.

மஹாமஹிமை தங்கிய சிவபரம் பொருள் எல்லா ஜீவ கோடிகளும் உய்யும் பொருட்டு, தான் சிவலிங்கவடிவில் பாஸித்து வருகிறார் என்பது சிவபுராணத்தில் உள்ள கோடிருத்ர ஸம்ஹிதையில் விஸ்தாரமாகக் கூறப்பட்டிருக்கிறது. அதாவது:-

“ஸர்வ லிங்கமயீம் பூமிம், ஸர்வம் லிங்கமயம் ஜகத், லிங்கமயான் தீர்த்தானி ஸர்வம் லிங்கே ப்ரதிஷ்டிதம், பாதாளேசாபி வர்த்தந்தே ஸ்வர்கேசாபி ததா புவி ஸர்வத்ர பூஜ்யதே சம்பு: ஸந்தேவாசுரமானுஷை: அனுக்ரஹாய லோகானாம் லிங்காதிச மஹேச்வர:”

ஸகல பூமி, ஸகலதீர்த்தம், ஸர்வமும் லிங்கஸ்வரூமாகவே பாஸித்து வருகின்றன. காணப்படும் எல்லா வஸ்துக்களும் லிங்கஸ்வரூபமாகவே காணப்படுகின்றன. ஆதலால் பரமேச்வரன் ஸகல உலகங்களிலும் ஸகல ஆன்மாக்களுக்கும் அனுக்ரஹம் செய்வதற்காகவே எல்லா மூர்த்தங்கட்கும் அப்பாற்பட்ட சிவலிங்கரூபமாகப் பிரகாசித்து வகுகிறார் எனறு பொருள்படுகின்றது. தவிர ஸகல உலகங்களுக்கு மஹா மஹிமையுள்ள ஈச்வரன் தான் முழு முதற்கடவுள் என்பதும் தெளிவாக விளங்குகிறது.

தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து அம்ருதம் அடைய வேண்டிப் பாற்கடலைக் கடையுபோது வாசுகி என்ற பாம்பினால் உமிழப்பட்ட விஷமும் கடலினின்றும் தோன்றிய விஷமும் கலந்து ஆலாலவிஷம் என்ற கொடிய விஷமாகி எல்லா உலகங்களிலும் பரவி அழித்துக் கொண்டு வரும்போது,

“நாலம் வா பரமோபகாரகமிதம் த்வேகம் பசூனாம் பதே

பச்யன் குஷிகதாம்ஸ்சராசர கணான் பாஹ்யஸ்திதான் ரக்ஷிதம் |

ஸர்வாமர்த்ய பலாயறெளஷதமதி ஜ்வாலாகரம் பீகரம்

நிக்ஷிப்தம் கரலம் கலே ந கலிதம் நோத்கீர்ணமேவ த்வயா ||”

என்பது அந்த சுலோகம்.

ஸகல உலகங்களையும் ரக்ஷிக்கும் பொருட்டு அந்த கொடிய விஷத்தை ஒரு நாவற்பழம் போல் தன்வாயில் போட்டு தன் கழுத்தில் நீலமணி போல் காட்சியளிக்குமாறு நிறுத்திவைத்து கொண்ட மஹாதேவனுடைய அபரிமிதமான் மஹிமையை யாரால் தான் முழுமையாக வகுணிக்க இயலும்? இதிலிருந்து பரமேச்வரனுடைய மேலான் கருணையையும் அன்பையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம். ஆதலால் பரமசிவனுடைய அளவுகடந்த மஹிமையையும் அவருக்கு ஜீவகோடிகளிடமிருக்கும் அபாரமான கருணையையும் அறிவதற்கு இந்த விஷமுண்டு ரக்ஷித்த அனுக்கிரஹம் ஒன்றே போதாதா என்று ஆதிசங்கர பகவத்பாதர்கள் தாம் அருளிய சிவானந்தலஹரீ 31-வது சுலோகத்தில் குறிப்பிடுகிறார்கள்.

இன்னும் விரிவாக எழுதாமல் இத்துடன் நிறுத்திக் கொண்டு நம்மவர்களாகிய சைவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பரமேச்வரனைப் பக்தி சிரத்தையுடன் பூஜித்து ஸர்வேச்வரனது அனுக்கிரஹத்துக்குப் பாத்திரர்களாக விளங்கி பல்லாண்டு பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல ஈச்வரனைப் பிரார்த்தித்துக் கொண்டு இச்சிறு கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.

திருச்சிற்றம்பலம்
நன்றி சைவம் டாட் காம்

திருவாலவாயுடையார்,

Standard

திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் 

திருவாலவாயுடையார்,

திருமுறையில் 11ம் திருமுறைகளில்  பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள்

பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபிலதேவர், பரணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்து அடிகள் நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய பன்னிருவராவர்.

இவர்களுள் திருவாலவாயுடையார் மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் ஆவார். ஏனையோருள் காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகிய மூவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில் போற்றப்பெற்ற நாயன்மார்கள் ஆவர். இவர்கள் வரலாறு பெரிய புராணத்தில் விரி வாகக் கூறப்பட்டுள்ளது.

தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி வள நாட்டின் தலை நகராகிய மதுரையில் விளங்கும் `திருஆலவாய்` என்னும் திருக் கோயிலில் எளிவந்த கருணையோடு எழுந்தருளி அன்பர்கட்கு நல்லருள் வழங்கும் இறைவர் திருஆலவாயுடையார் எனப் பெறுவார்.

கொங்குதேர் வாழ்க்கை

அப்பெருமான் தம்மைப் பூசிக்கும் பெருவிருப்புடைய தருமி என்னும் வறிய ஆதிசைவ இளைஞர்க்கு அவர் விரும்பியவாறு பாடல் ஒன்றை எழுதி அளித்தருளிய வரலாறு திருவிளையாடற் புராணத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சண்பகமாறன் என்னும் பாண்டிய மன்னன் தன் மனத்தில் எழுந்த ஐயத்தைத் தெளிவு செய்வோர்க்கு ஆயிரம் பொன் பரிசு அளிக்கிறேன் என அறிவித்து நிறுத்திய பொற்கிழியை அத்தருமி பெறுமாறு `கொங்குதேர் வாழ்க்கை` என்னும் அகப்பாட்டொன்றை எழுதி அளித்து உத்தம மகளிர் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டு எனத் தெரிவித்து நக்கீரரோடு வாதிட்டு நிகழ்த்திய வரலாறு திருவிளையாடற் புராணத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இவ் வரலாற்றை அப்பர் பெருமான் `நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன்` எனப் பாராட்டிப் போற்றுகின்றார்.

சீட்டுக்கவி

இவ்வாறே தில்லைப்பெருமானும் உமாபதி சிவாசாரியார் திருமடத்துக்கு விறகு அளித்துப் பணி செய்த பெத்தான் சாம்பானுக்கு முத்தி அளிக்குமாறு அவர்க்கு, 

அடியார்க் கெளியன்சிற் றம்பலவன் கொற்றங்

குடியார்க் கெழுதிய கைச்சீட்டு – படியின்மிசைப்

பெற்றான்சாம் பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து

முத்தி அளிக்க முறை

என்னும் சீட்டுக்கவி அளித்தருளிய வரலாறு சந்தானாசாரியர் புராணத்துள் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழறியும் பெருமானாக அம் மொழியோடு பிணைந்து செந்தமிழ்த்திறம் வல்லவராய் விளங்கிய ஆலவாய் இறைவன் தம் சந்நிதியில் இசைப் பாடல் பாடிப் போற்றிய பாண பத்திரரின் வறுமையைப் போக்க அவருக்கு திருமுகப் பாசுரம் அளித்து சேரமான் பெருமாள் நாயனாரிடம் போக்கிய வரலாறும், சேரர்கோ பாணபத்திரரைப் போற்றிப் பரிசில்கள் வழங்கிய வரலாறும் தமிழ் மொழியில் அப்பெருமானுக்கு இருந்த ஆராக்காதலை வெளிப் படுத்துவன ஆகும்.

திருமுகப்பாசுரம்

பாணபத்திரர் திருவாலவாய் இறைவரிடம் திருமுகப் பாசுரம் பெற்றுச் சேரமான் பெருமாள் நாயனாரிடம் பரிசில் பெற்ற வரலாற்றைப் பெரிய புராணத்தில் சேக்கிழார் கழறிற்றறிவார் புராணத்தில் பன்னிரண்டு செய்யுட்களில் விரித்துரைத்துள்ளார்.

சேரமான் பெருமாள் நாயனார் கொடுங்கோளூராகிய வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரியுங் காலத்தில் மதுரை யம்பதியில் பாண்டிய மன்னரால் நன்கு மதிக்கப் பெற்ற இசைப்பாணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். ஆலவாய் இறைவற்கு இசைத் தொண்டு புரியும் கடமை பூண்ட அப் பாணபத்திரர் வறுமையுற்றார். 

பாடுவார் பசி தீர்ப்பவராகிய பரமர் அவரது வறுமை நிலையை நீக்கத் திருவளம் கொண்டார். தாமே பெருஞ்செல்வம் வழங்க வல்லவராயினும் தம்பால் பேரன்பினரான சேரமான் பெருமாளைக் கொண்டு பாண பத்திரரின் வறுமையைப் போக்கத் திருவுளத்தெண்ணினார். பாண பத்திரர் கனவில் தோன்றி `அன்பனே என்பால் நிலை பெற்ற பேரன் புடைய சேரமான் பெருமாள் என்னும் வேந்தன் பொன், பட்டாடை, நவ மணிகள் பதித்த அணிகலன் முதலியவை எல்லாம் உனக்குக் குறைவறக் கொடுப்பான், அதன் பொருட்டு ஒரு திருமுகம் எழுதித் தருகின்றோம், நீ அதனைக் கொண்டு விரைந்து மலைநாடு அடைந்து பொருள் பெற்று வருக` எனப் பணித்து இத்திருமுகப் பாசுரத்தைக் கொடுத்தருளினார்.

பாணபத்திரர் அத் திருமுகத்தைத் தலைமேற் கொண்டு போற்றியவராய் மலைநாடு அடைந்து அரண்மனை வாயிற் காவலர் மூலம் தம் வருகையைச் சேரமான் பெருமாள் நாயனாருக்குத் தெரி வித்தார். பரமனையே பாடுவாராகிய பாணபத்திரரின் வருகையை அறிந்த மன்னர் விரைந்து வந்து அவரை வணங்கித் `தாங்கள் இங்கு எழுந்தருளியது யான் செய்த தவப்பேறேயாகும்` என முகமன் கூறி அவரை அன்போடு அழைத்துச் சென்று இருக்கை நல்கி உபசரித்தார்.

பாணபத்திரர் தாம் கொணர்ந்த திருமுகத்தை வேந்தர் கையில் கொடுத்த அளவில் அம்மன்னர் ஆர்வமுற வாங்கி முடிமேல் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார். மொழி குழறக் கண்ணீர் வாரப் பலமுறை நிலமுறப் பணிந்து எழுந்து மீண்டும் மீண்டும் அத்திருமுகத்தைப் படித்து உளம் உருகி அப்பாசுரத்தைப் படி எடுத்துக் கொள்ளுமாறு செய்து தம் உரிமைச் சுற்றத்தினர் முதலானோரை அழைத்துத் தமது நிதி அறையிலிருந்து பல்வகைப் பொருள்களையும் பொதி செய்து வருமாறு கட்டளையிட்டார். அவ்வாறு அவர்கள் கொண்டு வந்த பொருள்களின் பரப்பையெல்லாம் பாணபத்திரர்க்குக் காட்டி இப்பொருள்களோடு யானை குதிரை முதலிய சேனைகளையும் இந்நாட்டு ஆட்சி உரிமையையும் ஏற்றருள வேண்டும் என வேண்டி நின்றார்.

சேரமன்னரின் கொடைத்திறத்தைக் கண்டு வியந்த பாண பத்திரர் `வேந்தர்பிரானே என்னுடைய சுற்றத்தவரைப் பேணுதற்குப் போதுமான பொருள்களை மட்டுமே அடியேன் தங்கள்பால் பெற்றுக் கொள்ள வேண்டும்` என்பது இறைவன் ஆணை ஆதலின் ஆட்சி உரிமை யையும் அதற்கு வேண்டுவனவாய படைகளையும் தாங்களே கைக்கொண்டருள வேண்டும் என்று கூறிச் சேரர் கோவை வணங்கி நின்றார்.

சேரமானும் அவ்வாணையை மறுத்தற்கு அஞ்சி அவரது வேண்டுகோளுக்கு உடன்பட்டுப் பாணபத்திரரைப் பெரும் பொரு ளுடன் யானை மேல் ஏற்றி வழியனுப்பி வைத்தார். பாணபத்திரர் அப்பெருஞ் செல்வத்துடன் மதுரையை அடைந்து ஆலவாய் இறைவனைப் போற்றி இன்னிசையால் பரவும் திருத்தொண்டினைச் செய்து கொண்டு இனிதே வாழ்ந்து வந்தார்.

இவ் வரலாறு பெரிய புராணத்துட் காணப்பெறுவதாகும்.

பாணபத்திரர் வரலாறு சிற்சில வேறுபாடுகளுடன் பெரும் பற்றப் புலியூர் நம்பி, பரஞ்சோதி முனிவர் ஆகியோர் பாடிய திரு விளையாடற் புராணங்களில் புனைந்து கூறப்பட்டுள்ளது.

பாணபத்திரர் பொருட்டு இறைவனே விறகு வெட்டியாகச் சென்று சாதாரி பாடி வடபுலத்து ஏமநாதன் என்னும் பாணனைத் தோற் றோடச் செய்தார் என்றும், ஒருநாள் இரவு பெய்த பெருமழையில் நனைந்து கொண்டு யாழ்மீட்டித் தன்னைப் பாடிய பாணபத்திரரின் யாழ் நரம்பு நனைந்து கட்டழியாதபடி அவருக்குப் பொற்பலகை அளித்தனன் என்றும், பாணபத்திரரின் மனைவியாகிய பாடினி யார்க்கும் மன்னன் ஆதரவு பெற்ற பாடினி ஒருத்திக்கும் நிகழ்ந்த இசை வாதில் தானே இசைநலம் தெரிந்த ஒருவராக இருந்து உண்மை உரைத் தருளினார் எனவும் கூறுவதோடு பாணபத்திரர் தொடர்புடைய பிற வரலாறுகளையும் திருவிளையாடற் புராணங்கள் விரித்துரைக்கின்றன.

திருமுகம் என்பது பெரியோர் எழுதியனுப்பும் செய்தி தாங்கிய மடலாகும். இதனை மடாலயங்களில் குருமகா சந்நிதானங்கள் தம் சீடர்கட்கு எழுதியனுப்பும் செய்தி பொருந்திய இதழைத் திருமுகம் என வழங்கும் வழக்கால் நாம் நன்கு அறியலாம். இத் திருமுகப் பாசுரம் எழுந்த காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டாகும்.

திருச்சிற்றம்பலம்

தொகுப்பு ; வை, பூமாலை, சுந்தரபாண்டியம்