அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர்

Standard
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்,தென்பொன்பரப்பி, விழுப்புரம் மாவட்டம்.


ஆத்தூர் டூ சின்னசேலம் தேசிய நெடுஞ்சாலையில் சின்ன சேலத்தில் இருந்து 3 கி.மீ தொலைவிலும் உள்ளது தென் பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் ஆலயம்.

ஸ்தல வரலாறு :-
1300 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களின் தலைமை குருவாக கருதப்படும் காகபுஜண்டர் சித்தர், 16 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான தவத்தின் பயனாக 16முகங்களுடன் கூடிய சிவலிங்க தரிசனம் பெற்றார்.

அதே போல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பக்தர்களும் எதிர்காலத்தில் வணங்க வேண்டும் என கருதினார். அப்போது, தென் பொன்பரப்பி பகுதியை ஆட்சி செய்த வானகோவராயன் என்ற மன்னன் மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்புகளுடன் இந்த லிங்கத்தை உருவாக்கினார் என்பது வரலாறு.

மூலவர் – சொர்ணபுரீஸ்வரர்

அம்மன் – உமையாள்,சொர்ணாம்பிகை

தல விருட்சம் – அரசமரம்

பழமை – 1500-1000 வருடங்களுக்கு முன்

ஊர் – தென்பொன்பரப்பி

மாவட்டம் – விழுப்புரம்

சூரியகாந்த லிங்கம் :-

நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட சிவலிங்கம் இது.

சுமார் 5.5அடி உயரத்திற்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்கள் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் இவ்வாறு ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும்.

இந்த கல்லை கையால் தட்டிபார்த்தால், வெண்கலச் சத்தம் எழுவது பிரத்யேக சிறப்பிற்கு சான்று.

காகபுஜண்டர் இந்த கோயிலின் அருகில் சமாதி அடைந்ததை ஒட்டி சமாதி பீடம் அமைக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றப்பட்டு வருகிறது.
பால நந்தி:-

எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்திருப்பதைக் காணலாம்.

ஆனால்,இக்கோயிலில் பால நந்தியாக வீற்றிருப்பதுதால், கொம்புகளின் இடையூறின்றி பிரதோஷ காலங்களில் நேரடியாக சிவதரிசனம் கிடைக்கிறது.

ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30மணிக்குள் பாலநந்தியின் இரு கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவதைக் காணலாம். (பாலந்நதிக்கும் கருவறைக்கும் உள்ள தூரம் 70அடியாகும்).

கோவில் சிறப்பு:-

இக்கோயிலானது வாயு ஸ்தலத்திற்கும், பஞ்சபூத ஸ்தலத்திற்கும் இணையாக இருப்பதால் இதன் கருவறையானது மிகவும் உக்கிரமானதாக இருக்கும்.

இதன் கருவறையில் ஏற்படும் தீபமானது துடித்துக்கொண்டே இருக்கும் என்று “காகபுஜண்டர் நாடி” சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருவறையின் மையத்தில் அமைந்த தீபம் மட்டும் இன்றும் துடிப்புடன் எரிந்து கொண்டிருப்பது நாடி சுவடியின் பூரணத்துவத்தை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.

மேலும் இராகு கால வேளையில்,தேன், பால், தயிர், பன்னீர், இளநீர்,மஞ்சள், விபூதி, சந்தனம், திருமஞ்சனம்,
கரும்புச்சாறு, எலுமிச்சம்பழச் சாறு, பஞ்சாமிர்தம், நெய், அரிசிமாவு, நல்லெண்ணெய், புண்ணிய நீர் தீர்த்தம் போன்ற 16 வகை அபிஷேகம் நடக்கும்.

அப்போது, சிவலிங்கத்தின் உச்சியில் அபிஷேகம் ஆரம்பித்ததும் அவைகள் தானாகவே சிறிது பிசிறு கூட இல்லாமல் தனித்தனியாக 16 கோடுகளாக லிங்கத்தின் அடிபாகம் வரை வந்து லிங்கத்தின் பீடத்தில் ஐக்கியமாவதைக் காணலாம்.

மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை:-

இத்தலத்து அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இவள் கிழக்கு பார்த்து நின்றிருந்தாலும், இவளது முகம் சிவன் இருக்கும் திசை நோக்கி சற்று திரும்பியுள்ளது.

காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின் ஜீவசமாதி இவளது பார்வையில் படும்படி உள்ளது.

காகபுஜண்டர் சித்தர்:-

காகபுஜண்டர் சித்தர், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலையிலிருந்து தோன்றியவர். நினைத்த நேரத்தில் காக வடிவம் எடுக்கும் தன்மை கொண்டவர்.எனவே சந்திர தோஷம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.

இத்தலத்தில் உள்ள நந்தி குட்டியாக இருக்கிறது. “பால நந்தி” என்பது இதன் திருநாமம். ராகு தோஷ நிவர்த்திக்காக இந்த நந்திக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது அபிஷேகப்பால் நீல நிறமாக மாறுகிறது.சிவனுக்கு பின்னால் மகாவிஷ்ணு உருத்ராட்சம் அணிந்து காட்சி தருகிறார்.சிவனும் தானும் ஒன்றே என்பதை காகபுஜண்டருக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு காட்சி தருகிறார்.

இந்த கோயிலில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ஆறுமுகமாக காட்சியளிக்கும் முருகன், 12திருக்கரங்களுடனும், வள்ளி தெய்வானையுடன் பறக்கும் மயிலில் ஆசனமிட்டு, சுமார் 8 அடி உயரத்திற்கு பிரமாண்டமாக அமைந்திருப்பது மிகவும் விசேஷமானது.

முருகனுக்கு வலது பக்கம் உள்ள வள்ளி தலை சாய்த்து நிற்கிறாள். கருவறை வாசலில் துவாரபாலகர்களுக்கு பதிலாக,இரு இலிங்கங்கள் உள்ளன.மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

குருபகவான் சன்னதியும் துர்க்கை சன்னதியும் ஆடம்பரமின்றி காட்சி தருகிறது.இக்கோயிலின் சுற்றுச் சுவரில் ஏராளமாக கல்வெட்டுக்கள் செதுக்கப்பட்டுள்ளது.எழுத்து வடிவம் ஆதி கிரந்த எழுத்துக்களிலும், தமிழ் எழுத்துக்களிலும் உள்ளது.

கோரிக்கைகள்:

விவசாயம் செழிக்கவும், கடன் தொல்லை நீங்கவும், திருமணத்தடை நீங்கவும், இராகு கேது உள்ளவர்கள், களத்திரதோஷம்,கால சர்ப்பதோஷம் உள்ளவர்கள்,செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று இராகு கால வேளையில் பாலநந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்கின்றனர். அப்போது,அபிஷேகம் செய்த பால், சந்தனம், தேன் ஆகியவை இளம் நீலநிறமாக மாறுவதை காணலாம்.

மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க இங்குள்ள பாணலிங்கத்திற்கு, பாலில் மிளகை அரைத்து கலந்து தடவி வழிபாடு செய்கின்றனர். அவிட்டம் நட்சத்திரத்திற்குரியவர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று, சிவனுக்கு தேனபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

ஆலய முகவரி:-

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்,தென்பொன்பரப்பி, விழுப்புரம் மாவட்டம்

Advertisements

‎பஞ்சகுண_சிவமூர்த்திகள்‬

Standard

‎பஞ்சகுண_சிவமூர்த்திகள்‬
‪#‎பஞ்சகுணம்‬ –
சாந்தம், ஆனந்தம், ருத்திரம், வசீகரம், கருணை என ஐந்து குணங்களையும் பஞ்ச குணம் என்கிறோம். மனிதர்களுக்கு இருப்பதைப் போல இந்தக் குணங்களை இறைவனுக்கும் பொருத்திப் பார்த்து மகிழந்தார்கள் சைவர்கள். நாமும் அந்த பஞ்ச வடிவ குண மூர்த்திகளை ரசிப்போம்.
‪#‎ஆனந்தமூர்த்தி‬ –
ஆனந்தம். உலகில் வாழுகின்ற எல்லா உயிர்களுக்கும் உரியது. சிவன் தன்னுடைய ஆனந்தத்தினை வெளிபடுத்த நடனமாடும் வடவம் நடராஜர். எல்லையில்லா பெருமைகளை உடைய இந்த வடிவத்தில், சிவ ஆனந்தத்தையும், சிவ தத்துவத்தையும் ஒரு சேர உணர முடியும்.
‪#‎காலமூர்த்தி‬ –
மக்களைக் காக்கும் பொறுப்பு கடவுடையது. அந்த மக்களைக் காக்கும் பொருட்டு ஈசன் எடுத்த வடிவமே கால பைரவர். அழகிய கோலத்துடன் காவலுக்கான மிருகம் நாயை வாகணமாகக் கொண்ட அற்புதக் கோலம். முழு சிவ வடிவத்தினை கால பைரவர் என்று வாழ்த்தி வணங்குகின்றனர்.
‪#‎வசீகரமூர்த்தி‬ –
பிச்சாண்டவர் கோலம் வசீகரத்தின் சிகரம். தருகாவனத்தில் இருந்த முனிவர்களின் ஆணவம் அடக்க, அழகே உருவாய் முனிபத்தினிகளை பித்துபிடிக்க வைத்த வடிவம். பிக்ஷாடணர், பிச்சாண்டவர், பிச்சாண்டி, பிச்சை தேவன் என்றெல்லாம் அழைக்கப்படும் வடிவம் இது.
‪#‎கருணாமூர்த்தி‬ –
உமையோடும், கந்தனோடும் இறைவன் குடும்ப சமேதராய்க் காட்சி அளிக்கும் திருவுருவே சோமாஸ்கந்த மூர்த்தி. இறைவன் ஒரு இனிய அன்பான கணவனாய், பாசமிக்க தந்தையாய் இருக்கும் உருவம். குடும்ப உறவுகளின் மேன்மையை உலகிற்கு உணர்த்துவதற்கான ஈசன் எடுத்த வடிவம்.
‪#‎சாந்தமூர்த்தி‬ –
தட்சணாமூர்த்தி வடிவத்தை குரு என்று சைவர்கள் வணங்குகிறார்கள். தென் திசையை நோக்கி ஞான வடிவினில் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருப்பது இந்த வடிவின் சிறப்பு. முனிவர்களுக்கும், மக்களுக்கும் ஞான அறிவை போதிக்கும் போதகராக ஈசன் இருக்கிறார்.
எல்லாம் சிவன் செயல்!

நம்மை ஆளும் பசுபதி

Standard

நம்மை ஆளும் பசுபதி

பசு என்ற வடமொழிச் சொல் பொதுச் சொல்லாக மனிதர்களையும் பிராணிகளையும் குறிப்பது.எல்லா உயிர்களையும் பசுக்களாகவும் சிவபெருமானைப் பதியாகவும் கூறுவது வழக்கம். ஆகவே,” பசூனாம் பதிம்” என்று இறைவன் புகழப்படுகிறான்.  ” அம்பிகாபதயே, உமாபதயே , பசுபதயே” என்று அவனைத் துதிக்கிறோம். அப்படி அப்பெயரிட்டு துதிக்கச் சொல்லித் தருவது வேதம்.நான்கு வேதங்களுக்கும் நடுவிலுள்ள ஸ்ரீ ருத்ர மகாமந்திரத்தில் பஞ்சாக்ஷரம் வருகிறது. அதே அனுவாகத்தில் ” நம: சங்காய ச பசுபதயே ச ”  என்று வருகிறது. ஆகவேதான் சுவாமிக்குப் பல ஊர்களில் பசுபதீசுவரர் என்று பெயர் இருக்கக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக , ஆவூர், கரூர்,திருக்கொண்டீசுவரம், பந்தநல்லூர் ஆகிய தலங்களைக் குறிப்பிடலாம். கும்பகோணத்திற்கும் தஞ்சாவூருக்கும் இடையில் பசுபதி கோயில் என்ற ஊரே இருக்கிறது.

பசு என்ற சொல் விசேஷமாகப் பசு மாட்டைக் குறிப்பதாக இருக்கிறது. இதற்கு வடமொழியில் கோ என்ற மற்றொரு சொல்லும் உண்டு. கோகுலம்,கோகுலம்,கோவிந்தன் ஆகியவை அதிலிருந்து வந்தவை தான். அதை அப்படியே தாங்கி நிற்கும் ஊர்ப் பெயர்களும் உண்டு. அரியலூர் மாவட்டத்திலுள்ள கோவந்தபுத்தூரில் உள்ள சிவாலயம், தேவாரத்தில்    ,     ” கொள்ளிடக்கரைக் கோவந்தபுத்தூர் ” என்றே அழைக்கப்படுகிறது. தூய தமிழில் பசுவை ” ஆ”என்ற ஒரே எழுத்து குறித்து விடும். வடமொழியில் கோ என்ற ஒரே  எழுத்து குறிப்பது போலத் தமிழிலும் ஆ என்ற ஒரே எழுத்து பசுவைக் குறிக்கும். ஆன்  என்ற ஈரேழுத்தாலும் குறிப்பர். கரூர் சிவாலயம் ஆனிலை என்றும் விழுப்புரத்தருகில் உள்ள சிவாலயம் ஆமாத்தூர் என்றும் வழங்கப்படுகின்றன. பசுக்கூட்டத்தை  ” ஆக்கள் ” என்றும் ஆநிரைகள் என்றும் கூறுவர்..பசுக்களிளிருந்து பெருமானுக்கு அபிஷேகத் திரவியங்களாக ஆன்  ஐந்தும்  கிடைக்கின்றன.

அப்பர் தேவாரத்தில் பசுபதித் திருவிருத்தம் என்ற ஒரு பதிகமே இருக்கிறது. இதில் பாடல் தோறும் மகுடமாக “எம்மை ஆளும் பசுபதியே ” என்று அமைத்துப் பாடி இருக்கிறார் அவர். அதில் வரும் ஒவ்வொரு பாடலும் பிறவித் துன்பத்திலிருந்து காக்கும்படிப் பெருமானை வேண்டுவதாக அமைவன. பசுக்களுக்கெல்லாம் பதியான பரமேசுவரனிடம் பசுபதியே என்று அவனைப் பெயரிட்டு அழைப்பதால் புகலிடம் வேறு எவரும் இல்லை என்பது உட்குறிப்பு. பிறரைத் தஞ்சம் என அடையாமல் உன் பாதமே மனம் பாவித்த அடியேனை உய்யக்கொள்வாய் என்பது இப்பதிகத்தின் திரண்ட கருத்து.

கடல் நஞ்சு எல்லா உலகங்களையும் அழிக்குமாறு வெளிப்பட்டபோது தஞ்சமென அடைந்த தேவர்களையும் மற்று எல்லா உயிர்களையும் கலங்காமல் காத்தருளி அதனை உண்டருளி நீலகண்டன் ஆன முழுமுதற்கடவுள் தான் தஞ்சம் என அடையத் தக்கவன் என்பதால்,அனைவரும் உன் பாதத்தை இறைஞ்சுகின்றார்கள். அப்படிப்பட்டவர்களது பந்த பாசங்களை அகற்றிப்  பிறப்பிறப்பு இல்லாத பேரின்ப நிலையைத்  தருவாயாக என்று வேண்டுகிறார் நாவுக்கரசர்.

” ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார்

அருவினைச் சுற்றம் அகல்வி கண்டாய்  ”  என்பன அவ்வரிகள்.
” அண்டமே அணவும் பெருவரைக் குன்றம் பிளிறப் பிளந்து வேய்த்தோளி அஞ்சப் பருவரைத் தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே”தவவலிமையால் இறைவனைத் துதியாமல் தாங்களே எல்லாம் சாதித்து விட முடியும் என்ற இறுமாப்புடன்  இருந்த தாருகாவத்து முனிவர்களது அறியாமையை அகற்ற வேண்டி பிக்ஷாடனக்  கோலம் பூண்டு எழுந்தருளிய  பரமன் மீது அம்முநிவர்கள் ஆபிசார வேள்வி மூலம் எழுந்த யானையை ஏவினர். தனது கைச்சூலத்தை  அந்த யானையின் மத்தகத்தின் மீது பெருமான் செலுத்தியவுடன் தன்னை ஏவிய முனிவர்கள் மீதே அந்த யானை சீறிப் பாய ஆரம்பித்தது. வேறு புகலிடம் இல்லாததால் முனிவர்கள் பெருமானையே தஞ்சம் என அடைந்தனர். அவர்களுக்கு அடைக்கலம் தந்த இறைவன் , வானளாவிய மலை போல எழுந்த அந்த யானையை உரித்துப் போர்வையாக்கிக் கொண்டான். யானையால் சற்று மறைக்கப்பட்டபோது எல்லா உலகங்களும் இருள் சூழ்ந்தன. காரணம் சூரிய சந்திரர்கள் பெருமானது திருக்கண்களாக விளங்குவதுதான். அப்போது பெருமானைக் காணாமையால் உமாதேவியே அஞ்சினாளாம். அதனைக் கண்டவுடன்  புன்னகைத்தானாம் பரமன்.          ” சிரித்து அருள் செய்தார்” என்பது தேவாரம். அதன்  பின்னர் அம்முநிவர்களுக்குக் க்ருத்திவாசனான ஈசுவரன் ஞானோபதேசம் செய்தான். இவ்வாறு அடைக்கலம் என்று அடைந்தோரைக் காக்கும் காரணம் பற்றியே அப்பரும் மேற்கண்டவாறு விண்ணப்பித்தார்.

” பெருவரைக்குன்றம் பிளிறப் பிளந்து” என்றது  மலை போல் திரண்டு வந்த யானை ஓலமிட்டுப் பிளிற அதனைப்  பிளந்து என்று  பொருள் படும்.

எம்மை என்றதால் நம் எல்லோரையும் பசுபதி ஒருவனே ஆளுபவன் என்பது தெளிவாகிறது.

சிவ நாமங்கள் ஆயிரமாயிரம் இருந்தாலும் நீலகண்டன்,சந்திரசேகரன், கங்காதரன்,பசுபதி போன்றவை தனித்தன்மை வாய்ந்தவை சிவபரத்துவத்தை விளக்குபவை. நிகரற்றவனாகவும் மிக்கார் எவரும் இல்லாதவனாகவும் இறைவன் விளங்குவதைப் பறை சாற்றுபவை. இந்த   நாமங்களால் துதிப்போரை என்றென்றும்  காப்பவை. ஆகவே இறைவனைச் சரணடைந்தபோது அப்பரும் பசுபதியே என்று பெருமானைப் பாடல் தோறும் அழைக்கிறார்.

” ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார்

அருவினைச் சுற்றம் அகல்வி கண்டாய் அண்டமே அணவும்

பெருவரைக் குன்றம் பிளிறப் பிளந்து வேய்த்தோளி அஞ்சப்

பருவரைத் தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே.

மாசு நீக்கும் மகா மகம்

Standard

மாசு நீக்கும் மகா மகம்

மகாமகத் திருக்குளம்

புண்ணிய தீர்த்தங்களிலும் ,நதிகளிலும், கடலிலும் நீராடுவது புண்ணியச் செயலாகப் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. புண்ணிய மூர்த்தி,புண்ணியத் தலம் , புண்ணிய தீர்த்தம் ஆகிய மூன்றையும்  பிறவி ஈடேறுவதற்காக  தீர்த்த யாத்திரை செய்பவர்கள் அத்தியாவசியமாகக் கருதுவர். காசி- ராமேசுவர யாத்திரை போன்றவை இதில் அடங்கும். புண்ணிய நதிகள் சங்கமம் ஆவதால் கடல் நீராடுதலை விசேஷ நாட்களில் மேற்கொள்வர். மகோதய புண்ணிய காலங்களில் சமுத்திர ஸ்நானம் செய்வதும்,பித்ருக்களை வழிபடுவதும் மிகுந்த பலன்களை அளிக்கும்.

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மாசி மாத மகம் கூடிய நன்னாளில் மகா மக விழாவாகக் கொண்டாடப்படுவது எத்தனையோ நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. நதி தேவதைகளும் தங்களிடம் மக்கள் நீராடுவதால் ஏற்பட்ட பாவங்கள்  தீருவதற்காக  இந்த நாளில் கும்பகோணத்திற்கு வந்து இறைவனருளால் புனிதம் பெற்றதாகப் தல புராணம் கூறும். மகா மகக் கரையில் உள்ள காசி விசுவநாதர் ஆலயத்தில் இந்நதி தேவதைகளுக்கென்று தனி சன்னதி உள்ளது. எனவே அன்றைய தினத்தில் கங்கை ,யமுனை போன்ற புனித நதிகள் இத் திருக்குளத்தில் வந்தடைவதால் அது மேலும் புனிதம் பெறுகிறது.

…”  தாவி முதல் காவிரி நல்  யமுனை  கங்கை
சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ் குடந்தை ..”
என்பது தேவாரம்.

பல நேரங்களில் புனித நீராடுவதன் நோக்கத்தை நாம் மறந்து விடுகிறோம். அது உடல் அழுக்கைக் களைவதற்காக மேற்கொள்வது அல்ல. உள்ளத்து அழுக்கு நீங்குவதே அதன் தனிச் சிறப்பு என்பதை நீராடுபவர் ஒவ்வொருவரும் உணர வேண்டும். நான் மகாமகத்திற்குச் சென்று வந்தேன் என்று சொல்லிக் கொள்வதைக் காட்டிலும் அப்படிச் சென்றதால் ஏற்பட்ட ஆன்மலாப அனுபவத்தையே ஒவ்வொருவரும் சிந்தித்து மகிழ வேண்டும். நாம் அங்கு செல்வது கூட்டத்தை வேடிக்கை பார்ப்பதற்கோ, கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கோ நிச்சயமாக இல்லை.

ஒவ்வொரு நாளும் பாசிக் குளம் போல மீண்டும் மீண்டும் அழுக்குப் படியும் மனம் நமக்கு உண்டு. அப்பாசியை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அகற்றினால் போதாது. அன்றாடம் மேற்கொள்ளும் சிவ பூஜை,சிவ சிந்தனை ஆகியவை அவ்வப்போது மனத்தைத் தூய்மைப்  படுத்தி விடும். அப்படியானால் மகா மகம் எந்தவகையில் தூய்மை செய்யும் எனக் கேட்கலாம். அது பன்னிரண்டாண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும் கும்பாபிஷேகம் போன்றது. மனமானது  மேன் மேலும் தூய்மை ஆகி இறைவன் அமரும் பெருங்கோயிலாக ஆக வேண்டும் என்பதே இதன் நோக்கம். அனுதினமும் இறைவனை எண்ணாதும்,மலரிட்டு வணங்காமலும் ஈசன் எங்கும் நிறைந்துள்ள அருமையை உணராமலும் இருந்து விட்டு கங்கை,காவிரி போன்ற நதிகளில் நீராடுவதால் ஏற்படப்போகும் பயன் தான் என்ன  என்று கேட்கிறார் திருநாவுக்கரசர்

கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என்
கொங்கு தண் குமரித் துறை ஆடில் என்
ஓங்கு மாகடல் ஓத நீர் ஆடில் என்
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.

இதனால்  எங்கும் நீக்கமற நிறைந்துள்ள ஈசனை  நாள்தோறும் நினையாமலும்,வழிபடாமலும் நாட்களைக் கழித்து விட்டு, ஏனையோர் சொன்னார்கள், செய்தார்கள் என்பதற்காகப் புனித நீர் ஆடி விட்டு மீண்டும் பழையபடி தெய்வ பக்தி இல்லாமலே காலம் தள்ளுபவர்களுக்கு என்ன சொல்வது?

கும்பேசப்பெருமானைப் பாடும்போது நாவுக்கரசர் அருளிய நற்செய்தி ஒன்றை நாம் இங்கு நினைவு கொள்ளலாம்:

“சிரமம் செய்து சிவனுக்குப் பத்தராய்ப்
பரமனைப் பல நாளும் பயிற்றுமின் …”
என்பதே அந்த நல்லுபதேசம்.

காசிக்குப் போனால் நமக்குப் பிடித்த காய் கறிகளில் ஒன்றை நீக்க ஆரம்பிக்கும்போது, குடந்தைக்கு மகா மக நீராடச் சென்றால் மன  அழுக்கை நீக்கி நற்குணங்களைப் பெற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால்தான் தீர்த்தமாடியது அர்த்தமுள்ளதாகிறது. அப்போதுதான் அந்த உண்மை இறை அருளால் புரிய வரும்

மன அமைதி

Standard

மன அமைதி
(ஸ்ரீ சுவாமி சிவானந்தர்)
நல்லாரோக்கியமும் பொருளாதாரப் பாதுகாப்பும் மன அமைதிக்கு மிகவும் இன்றியமையாதவை என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் இவை இரண்டும் இருப்பினும் பலரும் தொடர்ந்து மன அமைதி இன்றியே அல்லல் படுகின்றனர். நீங்கள் பிறர் விசங்களில் தலையிடுகிறீர்களா? அவர்கள் தவறாக இருக்கலாம், ஆனால் அதை முன்னிட்டு நீங்கள் அல்லல் உறுவானனேன்?, யாரையும் எதையும் குறை கூறாதீர்கள். பிறருக்கு தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் உங்களுக்கு கொடுக்க வில்லை. எல்லோரும் அவரவர் விருப்பப்படியே நடக்கின்றனர். ஏனனெனில் அவர்ககளுக்குள்ளே இயங்கும் கடவுள் அவர்களை அப்படிச் செய்யத் தூண்டுகிறார். உங்கள் அமைதியைப் பாதுகாக்க நீங்கள் உங்கள் சொந்த வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்பது ஒரு நல்ல விதியாகும்.
உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் எவரையும் எதையும் குறை கூறாதீர்கள், குறை கூறுவது என்பது திட்டுவதற்கு நிகர். எது நடந்தாலும் அது கடவுளின் இச்சையால் நடக்கிறது அது கடவுளின் அனுக்கிரகம் இன்றி எதுவுமே நிகழ்வதில்லை ஏதாவது நிகழ்ந்தது என்றால் அதற்கு கடவுளின் அனுமதி இருக்கிறது என்று பொருள். அது கடவுளின் செயலாலேயே நடந்தது என கொள்ளுங்கள் அப்போதுதான் உங்களுக்கு அமைதி கிட்டும். எல்லாமே கடவுனின் பார்வையிலேயே நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களை கடவுளின் ஸ்தானத்தில் வைத்து பாருங்கள். எல்லாம் உங்கள் விருப்பத்திலேயே நடைபெறுகிறது என்று உணருங்கள். உடனே உங்களுக்குள் அபரிதமான அமைதியும் ஆற்றலும் ஊற்றெடுப்பதை உணர்வீர்கள்.

பிறர் உங்களை காரணமின்றி திட்டுவதாகவும், காரணமின்றி துன்புறுத்துவதாகவும் நினைத்தால், அது உண்மையாகவே இருந்தாலும், அதற்காக அலட்டிக் கொள்ளாதீர்கள். நிலைமையை பொறுமையுடன் சமாளியுங்கள். இந்நிலையில் அமைதி ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் என்பதை நீங்கள் காண்பீர்கள். பிறர் உங்களை திட்டினால் கண்களை மூடிக்கொண்டு பொறுமையாக இருங்கள். அவர்கள் விரும்புவதை சொல்லட்டும். இந்தக் காலம் முட்டாள்கள் நிறைந்தது. எல்லோர் முன்னிலையிலும் பணிவுடன் இருங்கள். நீங்கள் நினைக்கும் தீய – வேண்டாத செயல் நடந்தது குறித்து வாழ்நாள் முழுவதும் எண்ணி எண்ணி வாழ் நாளை வீணாடிக்க வேண்டாம். ஏனெனில் மனித வாழ்வு மிகவும் சுருங்கியது. இதனை மறக்க உங்களுக்கு வருப்பமான வேலை ஒன்றி பூரணமாக மனத்தை லயிக்க செய்யவும். நான் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணத்தை விடுத்து அனைவரிடமும் கடவுளைக் காண கற்றுக்கொண்டால் இது சாத்தியமாகும். கடவுள் இதைத்தான்விரும்புகிறார் என்பதைக் சொல்லிக் கொண்டு பிறர் நிந்திக்கையில் நீங்கள் மெளனமாக இருங்கள். கலக்கம் அடையாதீர்கள். பழிச் சொற்களை ஏற்றுக் கொண்டால் அடக்கத்திலும் தூய்மையிலும் நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள். ஆன்மீகத்தில் நீங்கள்ள உயர்வடைவீர்கள் என்பது தின்னம்.

பொது மக்களின் கருத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்காதீர்கள். ஒழுக்க நியதிகள், நன்னெறிகள் மறைநூல் வாக்கியங்கள் பணிவாளர்கள், மற்றும் மகான்களது கருத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள், நீங்கள் தவறவே மாட்டீர்கள். பொறாமை அடிக்கடி அமைதியைக் குலைக்கிறது. பொறாமை ஒரு வியாதி. உங்களது முன்னேற்றத்தை யாராலும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது. நீங்கள் முன்னேற வேண்டும் என்று இருந்தால் உலகம் முழுவதும் ஒன்று திரண்டு தடுத்தாலும் நிறுத்த முடியாது. அதற்கு மாறாக நடக்க வேண்டுமெனில் அப்போதும் உலகம் ஒன்றும் செய்ய இயலாது. ஒவ்வொரு மனிதனும் அவனது விதியினாலேயே ஆழப்படுகிறான். இதை நினைவு கொள்ளுங்கள். எனவே ஒரு பொழுதும் பிறர் மீது பொறாமை கொள்ளாதீர்கள். உங்கள் துன்பத்திற்கு பிறரைப் பழிக்காதீர்கள்.
உங்கள் அமைதியைக் குலைக்கும் உங்களது சூழ்நிலை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம், சூழ்நிலையை மாற்றுவதற்கு பதிலாக உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் இப்போதைக்கு இது ஒத்துப்போகாதாக இருந்தாலும் உங்களை மாற்றத்திற்கு கொண்டுவருவதை படிப்படியாக நீங்கள் உணர்வீர்கள். முயன்று பாருங்கள். வெற்றி உண்டு.
எது நடந்தாலும் அதைப் பொறுத்துக் கொள்ளுங்கள். எல்லா தொல்லைகள் துன்பங்களையும் பொறுத்து வாழ கற்றுக்கொள்ளுங்கள். பொறுமை, உள்பலம் மற்றும் இச்சாசக்தி உங்களிடம் அதிகரிக்கும். உங்களின் அடிப்படை தேவைகளுக்கு கூட பிறரை எதிர் கொள்ளாதீர்கள். முடிந்த மட்டும் முயலுங்கள். உங்களால் தன் காலில் நிற்க முடியும் என்று தன்னம்பிக்கைை ய வளர்த்துக் கொள்ளுங்கள்.இதுவே உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆனாலும் பொறுப்புகளை தட்டிக்கழிக்காதீர்கள். உங்களால் முடிந்தமட்டும் திறமையுடன் உங்ளது பொறுப்புகளை நிறைவேற்றப் பாருங்கள். ஆனால் ஒன்றை மட்டும்மனதில் கொள்ளுங்கள், நான் செய்கிறேன், என்ற ஆணவத்துடன் தினமும் மேலும் மேலும் புதிய பொறுப்புக்களை கூட்டிக்கொண்டே போகக் கூடாது. இதுவே நடைமுறை பாசையில் வம்பை விலைக்கு வாங்குவது என்பதாகும். உங்களது பொறுப்பு களுக்கு ஏற்ப உங்களது புற வேலைகளை குறைத்துக் கொள்ளுங்கள். அதிகமதிகம் நேரத்தை பிராத்தனை, சிந்தனை மற்றும் தியானத்தில் செலவிட விருப்பம் கொள்ளுங்கள். மனமே இல்லாதாகும் பொழுதுதான் பூரண அமைதி கிட்டுகிறது. மனம் என்பது எண்ணங்களே, எண்ணங்கள் என்றால் சலனம், செயல் குறையக் குறைய எண்ணங்களும் குறையும். எவ்வளவுக்கெவ்வளவு எண்ணங்கள் குறைகின்றனவோ, அந்த அளவு மன அமைதி அதிகரிக்கும். எண்ணமின்மை தான் பூரண அமைதி நிலவும் மிக உயர்ந்த நிலையாகும்.
ஒழுங்காக தியான நேரத்தை கடைபிடியுங்கள், தியானம் மனதை அமைதிப்படுத்துகிறது. மனதில் நிஸ்சலத்தன்மையை அது உருவாக்கிறது. இதனால் மனம் அலைந்து திரியாது. படிப்படியாக தியான நேரத்தை கூட்டுங்கள். இது உங்கள் அன்றாட வேலையுடன் குறுக்கிடாது. ஏனனெனில் தியானம் உங்களது பல்வேறு திறமைகளை குறைந்த நேரத்தில் வேலைகளை செய்வதற்கான ஆற்றலை உங்களுக்கு அளிக்கிறது. நீங்கள உடலளவில் ஓய்வெடுத்தாலும் மனதை வெறுமையாக வைத்திருக்காதீர்கள். ஜபம், மானசீக பிராத்தனை மற்றும் ஏதாவது நூல்கள் படிப்பதில் ஈடுபடுங்கள். எல்லாத் தொல்லையும் மனதில் தான் ஆரம்பிக்கிறது. கடும் சொற்களும் தீய செயல்களும் மனதில் தான் உதிக்கின்றன.எனவே ஆரம்ப ஸ்தானத்தில் மனதை சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் வாழ்வாகிய நதி ஸ்படிகம் போல தூய்மையாக பாயும்.
நீங்கள் சில நல்ல காரியங்களை செய்யும் போது பல இடையுறுகள் வராலாம். அதறகாக மனம் தொய்வு அடையக்கூடாது.இடர்களை களைவது நமக்கு ஒரு பாடமாகக் கூட இருக்கலாம், இதனால் மனம் தளரக் கூடாது. இடுக்கண் எதிர் கொள்ள நீங்கள் தயங்கினால் உங்களால் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாது. வாழ்க்கைப் போராட்டத்தை வீரத்துடன் எதிர் கொள்ள வேண்டும். எதற்கும் வருத்தப்பட வேண்டாம், உங்களுடைய கடந்த கால அனுபவங்களிலிருந்து நீங்கள் பாடங்களாக கறறுக் கொள்ளுங்கள்.நான் அப்படி செய்திருந்தால் இப்படி ஆகியிருப்பேன் என்று எண்ணுவதெல்லாம் வீணான சிந்தனையாகும். நேரம் வீண். ஏனனெனில் கவலை சக்தியை கரைத்து விடுகிறது. உண்மை எதுவெனில் எது நடந்ததோ அது அப்படித்தான் நடக்க வேண்டும் என்பது ஆண்டவனின் திட்டம். அதற்கு மாறாக அது நடந்திருக்க முடியாது, ஒரு சிறு துகளின் அசைவு முதல் பிரபஞ்சத்தில் பிரமாண்டமான இயக்கம் வரை கடந்த கால, நிகழ்கால எதிர்காலத்தின் ஒவ்வொரு காரண காரியமும் எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த பரம்பொருளின் இச்சையால் இப்படித்தான் நிகழ வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. நிகழ்ச்சிகள் எவ்வாறு நிகழ வேண்டும் என்று விதிக்கப்ட்டிருக்கின்றனவோ அவ்வாறே நிகழ்கின்றன. அதன்படி இச்சைப்படியே அனைத்தும் நிகழ்கின்றன. கடவுளின் விருப்பத்தை மாற்ற எந்த மனித சக்தியாலும் இயலாது. நிகழ்வது நிகழ்ந்தே தீரும் என்ற பிரபஞ்சமெங்கும் உள்ள உண்மையாகும். கவலைப்படுவது வருந்துவது என்பது மன அமைதியைக் குலைக்கும். இதனை உணர்ந்து உலகத்துடன் அமைதியாக வாழ்வதுதான் அறிவுடைமையாகும்.

நீங்கள் சுயநல வாதியாக இருக்காது,தன்னால் இயன்ற அளவு பிரதிபலனும் எதிர்நோக்காது பிறருக்கு தொண்டு புரியுங்கள் இது உங்களுக்கு மனதில் அமைதியையும் ஆனந்தத்தையும் அளிக்கும். மன அமைதியும்,பொருள்களில் போராசையும் ஒன்றுக்கொன்று முரணானவை. அவை இரண்டும் ஒத்துப் போகா. உங்களுக்கு எது தேவையோ அதைத் தேர்ந்தெடுங்கள். ஆசைகளும் தேவைகளும் மிக மிகக் குறையுமளவு மன அமைதி மிகவும் அதிகரிக்கும். உங்களுக்கு மன அமைதி வேண்டுமென்றால் நீங்கள் செய்யக்கூடாது என்று எதை எல்லாம் நினைக்கின்றீர்களோ அந்த காரியங்களை செய்யாமல் நிறுத்துங்கள். நம்பிக்கை தேவை. அன்பு காட்டப்பட வேண்டும். தன்னலமற்ற பண்பை கடைபிடிக்க வேண்டும். வைராக்கியத்தை கடைபிடிக்க வேண்டும். பக்தியை வளர்க்க வேண்டும். இந்த குணஙகள் எல்லாம் திடீரென்னு ஒரே நாளில் வந்துவிடாது. இதை பயிற்சியின் வாயிலாகத்தான் படிப்படியாக கொண்டுவரவேண்டும். நீங்கள் மற்றவர்களிடம், அதாவது உங்கள் உறவு உள்ளவர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியவர்களிடம் நீங்கள் நடந்து கொள்ளும் அன்பு, பாச, நேச, வறன்முறை நெறிகளின்படி நடந்து கொள்வது போன்றே உங்களுக்கும் அது எதிரொலிக்கும்.

ஆன்மீக முன்னேற்றத்தால் மன அமைதி ஏற்படுகிறது.ஆன்மீக முன்னேற்றம் என்பது அகமுக மார்க்கம். ஆன்மீக வாழ்வு என்பது அகமுக வாழ்வு . இந்த அகமுக வளர்ச்சியானது புற ஆதரவுடன் பெரிதும் சீரழிக்கப்படுகிறது.எனவே தான் சாத்வீக படிப்பு,சாத்வீக சேர்க்கை, சாத்வீக சூழ்நிலை, சாத்வீக பழக்க வழக்கங்கள் தேவை என்று சொல்கிறார்கள். எனவே தான் பிராத்தனை, யாத்திரை, சுவாத்யாயம்,சத்சங்கமம் விரதங்கள்,மற்றும் விழாக்கள் போன்றவைகளை வலியுறுத்துகிறார்கள். இந்த சக்தி வாய்ந்த புற உதவிச் சாதனங்களை விட்டு விடாதீர்கள்.நீங்கள் முன்னேறி விட்டால் அவை தானவே கழன்று விடும்.

நீங்கள் முற்றிலும் மனம் தளர்ந்து நம்பிக்கை இழந்து இருக்கும் பொழுது நமது மறைநூல்களின் பால் உங்கள் கவனத்தை திருப்புங்கள். அல்லது மகான்களின் நூல்களைப் படியுங்கள், அல்லது தீர்த்த யாத்திரை மேற்கொள்ளுங்கள். அங்கு மாறுபட்ட நோக்கில் நாளை கழியுங்கள், பிராத்தனை,ஜபம், தியானம், கீர்த்தனை ஆகியவற்றில் மனதை செலுத்துங்கள். சிதறுண்ட மனம் புது தெம்பு பெறும். அனைத்து லெளகிய ஆவல்களையும் விடுங்கள்.
ஒரு முறை இலட்சியத்தை உங்கள்முன் வைத்துக் கொண்டால், அதன்பின் உங்களுக்கு நீங்களே உண்மையாக இருக்க ஆரம்பித்து விடுவிர்கள். சொல் , செயல்களிடைய ஒற்றுமையை உண்டாக்கி, சொல்வதையே செய்யுங்கள்.எல்லா போலித்தனத்திலிருந்து விடுபடுங்கள். மன அமைதியின் முக்கிய பகைவன் போலித்தனமே ஆகும்.
லெளகிய அளவில் உங்களைவிட கீழான நிலையில் இருப்போரையும், ஆன்மீக அளவில் உங்களைவிடமேல் நிலையில் உள்ளோருடன் ஒப்பு நோக்குங்கள்.இது உங்களிடம் லெளகியதிருப்தியையும் ஆன்மீகஅதிருப்தியையும் தூண்டம். அதில் தான் முன்னேற்றமும் அமைதியும் அடங்கியுள்ளது. ஆனால் அதற்கு மாறாக நீங்கள் ஒப்பு நோக்காதீர்கள். இது பயங்கர விளைவுகளை உண்டுபண்ணும், நல்லவர்களுடன் மட்டுமே நட்பு வைத்துக் கொள்ளுங்கள்.
காரணத்துடன் மட்டுமே பேசுங்கள், எல்லா விதமான தேவை அற்ற பேச்சையும் தவிருங்கள், அளந்தே பேசுங்கள், களங்கமற்ற நல்நோக்கம் கொண்ட வார்த்தைகளே சில வேளைகளில் பிரிவை உண்டாக்கிறது. எதிலும் எவருக்கும் புத்திமதி சொல்லப் போகாதீர்கள். நீங்கள் கேட்கப்பட்டாலன்றி உங்கள் வேலையை பாருங்கள். விவாதம் செய்யாதீர்கள், விவாதத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம், அது உங்கள் ஆணவத்தைப் பெருக்கும். எதையும் எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால்எதிர்பார்ப்பு பரபரப்பையும் பரப்பு ஏமாற்றத்தையும் அளிக்கிறது,எதிர்பார்ப்பு இல்லையேல் ஏமாற்றமும் இல்லை. நீங்கள் எதை அனுபவிக்க வேண்டும் அல்லது எதில் துன்படப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதை அனுபவித்தோ, அல்லது துன்பப் பட்டோ ஆகவேண்டும், ஸ்ரீபகவத் கீதையில் கூறியது போன்று எது எப்படி நடக்கவேண்டுமோ? அது அப்படியே நடந்தே விடும். என்பதை சிந்தியுங்கள், உங்கள் பொறுப்புக்களை நீங்கள் செயல் படுத்துங்கள், பலன்களை கவனிக்க கடவுள் இருக்கிறார் ,
உங்களைப் பற்றி எவரும் நாட்டம் கொள்வதில்லை இந்த விசயத்தை நன்கு நினவில் கொள்ளுங்கள், உங்களது ஒவ்வொரு மோசமான நிலையிலும், உங்களது உதவிக்கு உலகம் ஒடிவரும் என்று எதிர்பார்க்காதீர்கள், கடவுளிடம் நம்பிக்கைகொண்டு தொடர்ந்து முயற்சியில் ஈடு படுங்கள். உங்களுக்கு கடவுள் துணை இருந்தால் உலகமெல்லாம் எதிர்த்தாலும் நீங்கள் வெற்றியடைவீர்கள். உலகின் உதவியை எல்லாம் பெற்றாலும் நீங்கள் தோல்வியே அடைவீர்கள் கடவுளின் நட்பை பெறுங்கள் அதுவே மிகச் சிறந்த செல்வம். அதைப் பெற்றுவிட்டால் மன அமைதி உங்களுடையதே. பயம் ஒடிவிட்டது பரபரப்பு மறைந்து விட்டது. அனைத்திலும் ஆண்டவனைக் காணுங்கள்.அனைவரிடமும் ஆன்மீக அளவில் ஒருமைப்பாட்டை உணருங்கள்,கடவுளுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில்சிந்தியுங்கள்,பேசுங்கள்,நடவுங்கள், நேரிய பாதையில் உங்கள் வாழ்வை செல்லத் தொடங்கும்.உங்கன் ஆன்மிக முன்னேற்றம் விரைவாயிருக்கும். நீங்கள் விரும்பும் அனைத்தும் மன அமைதியை அடைவீர்கள்.
தினமும் காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது இரண்டு நிமிடம் கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள், உங்களைப் படைத்தவருக்கு இந்த நேரத்தை நீங்கள் ஒதுக்கலாம் இல்லையா? இறைவா ! இன்று உமது விருப்பத்தை நிறைவேற்ற எவ்விதம் நீர் விரும்பு கிறீரோ அவ்விதம் என்னை பயன் படுத்துவீராக. நான் என்னை உங்களிடம்விட்டு விடுகிறேன் , ( என் வாழ்க்கை உமக்கு நான் செய்யும் ஆரத்தியாக அமையட்டும்) என்று பிராத்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் இறைவனது விருப்பமாக ஏற்றுக் கொள்ளுங்கள், உங்களை அவரது பொறுப்பில் விட்டுவிடுங்கள். அனித்யம், அஸகம், லோகம்,அசாஸ்வதம், துக்காலயம் உங்கள் மறை நூல்களை பத்தியுடன் படியுங்கள்,அவற்றின் போதனைகளை யாண்டும் நினையுங்கள், அதன்படி வாழுங்கள் இதைத் தவிர மன அமைதிக்கு வேறு மார்க்கமே கிடையாது.
இறுதியாக இந்தஉலகம் முழுக்கவும்பொய்யானது என்பதை நம்புங்கள், அனைத்து மகன்களும் ஒரே குரலில் திட்டவட்டமாக இந்த பிரபஞ்ச உலகம் வெறும் கனவுலகமே, கசப்பான அனுபவங்களை நீங்கள் அனுபவிக்கும் போது கூட இதனைத்தும் பொய்யே என்பதை உணர்வீர்கள்,
உங்களுக்கு இறைவன் எல்லா நலன்களையும் அருள்வாராக.

வழங்கியது

ஸ்ரீசுவாமி சிவானந்தர்
திருச்சிற்றம்பலம்,
தொகுப்பு . வை.பூமாலை
மேலும் பல ஆன்மிகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

மாணிக்கவாசகர் திருவாசக சிந்தனைகள் 2

Standard

மாணிக்கவாசகர் திருவாசக சிந்தனைகள் 2

அண்டப்பகுதியின் உயிர்நாடியாகவுள்ள ஒன்றை பாடலில் காணப்பெறும் முன்னும் பின்னுமாகிய சில அடிகளைக் ‘கொணடுகூட்டுச்‘ செய்தவன் மூலம் ஓரளவு விளங்கிக்கொள்ள முடியும். இறைவன்,
மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்
மின்ஒளி கொண்ட பொன்ஒளி திகழ (124-125)
ஒளிவடிவாக விளங்குகின்றான். ஆனால் இந்த ஒளிவடிவம் திசைமுகன் தேடி முயன்றபொழுது ஒளித்துக் கொண்டது. (126). அம்மட்டோடு இல்லை, முயன்றவர்க்கு ஒளித்தும் (127), உறைப்பவர்க்கு ஒளித்தும் (129), வருந்தினர்க்கு ஒளித்தும் (130), அவ்வயின் ஒளித்தும் (132), வாள் நுதல் பெண் என ஒளித்தும் (138), உண்டு இல்லை என்ற அறிவு ஒளித்தும் (139), பற்றுமுற்று ஒளித்தும் (145) விளையாடி ஒளிக்கும் சோரன், மேலே கூறிய அத்தனை பேருக்கும் ஏன் ஒளித்துக் கொண்டான்?
ஒளிந்திருப்பவனைத் தேடிச் செல்பவரிடம் விளக்கு ஒன்று இருத்தல் இன்றியமையாதது. இத்தனைபேரிடமும், ஒளித்து நிற்கும் சோரணைக் காண ஒரு குறிப்பிட்ட ஒளி பொருந்திய விளக்குத் தேவை. அந்த விளக்கு இருந்தால், அவனை எளிதாகக் கண்டுவிடலாம். அந்த ஒளி விளக்கிற்குப் ‘பக்தி‘ என்று வடமொழியிலும் ‘இறை அன்பு‘ என்று தமிழிலும் பெயருண்டு. மேலே கூறப்பெற்றவர் அனைவரும் எத்தனையோ பெரு முயற்சிகைளைச் செய்து அவனைத் தேடமுயன்றார்களே தவிர, இந்த ஒளிவிளக்கைக் கையில் ஏந்தவில்லை. அதனாலேயே அவன் ஒளித்துக் கொண்டான்.
இத்தகையவனைப் பிடித்துக்கொள்ள ஓர் அருமையான வழியை அடிகளார் கூறியுள்ளார். நம்மால் தேடப்படும் பொருள், சித்தமும் செல்லாத தூரத்தில் (41) உள்ளது. அவனை எப்படிப் பற்றுவது? சித்தமும் செல்லாத் தூரத்தில் இருப்பவனைச் சென்று பற்றுவது என்பது இயலாத காரியம். அப்படியானால், வேறு வழியென்ன? அடுத்த அடியில் அடிகளார் தம் அனுபவத்தாற் கண்ட வழியை மிக அழகாக எடுத்து உரைக்கின்றார். நீ தேடிச் சென்றால் அவன் ஒளித்துக்கொள்வான், அன்றியும் சித்தமும் செல்லாத் தூரத்தில் உள்ளான். அவனைத் தேடிச் செல்லும் முயற்சியை விட்டுவிட்டு இருந்த இடத்திலேயே ஒரு வலையை விரிப்பாயாக. அந்த வலை ‘பக்தி‘ என்னும் ஒளிமயமான வலையாகும். அந்த ஒளி வலையை விரித்துவிட்டு அமைதியாக இருப்பாயாக. மேலே கூறிய அத்தனை பேருக்கும் ஒளித்து நின்றவன், தானே வந்து உன்னுடைய பக்தி வலைக்குள் அகப்பட்டுக் கொள்வான் (படுவோன்–42) என்று முடிக்கின்றார்.

திருச்சிற்றம்பலம்

மாணிக்கவாசகர் திருவாசக சிந்தனைகள்

Standard

மாணிக்கவாசகர் திருவாசக சிந்தனைகள்

வளர்ச்சியடைந்த மனிதன் கற்காலத்தில் தொடங்கிய தன் நிலையையும், பின்னர் பல நூற்றாண்டுகளில் தானடைந்த வளர்ச்சியையும் திரும்பிப் பார்க்கின்றான். நெருப்பை உண்டாக்குதல், உருளுகின்ற சக்கரங்கள் செய்தல், வேளாண்மை செய்தல், கூர்மையான ஆயுதங்களைச் செய்து போரிடுதல் ஆகிய பலதுறைகளில் மாபெரும் வளர்ச்சி அடைந்துவிட்டமையின், அவனுள் ஓர் அகங்காரம் தோன்றுவது இயல்பு. ஆக்கல், அழித்தல் சக்திகள் தன்பால் உள்ளன என்றும், தான் நினைத்ததைச் செய்யமுடியும் என்றும் இறுமாப்புக்கொள்ளத் தொடங்கி விட்டான். கல்வி, செல்வம் ஆகிய இரண்டும் வளர்ச்சி அடைந்தமையால், தான் முழு நிறைவு பெற்றுவிட்டதாகக் கனவு காணத் தொடங்கினான்.
மனிதனின் இந்த நிலை தொடரும்பொழுதே அவனுள் ஓர் ஐயம் தோன்றலாயிற்று. புறப்பொருள்களைக் கட்டுப்படுத்தித் தன் அதிகாரத்தின் கீழ்க் கொண்டுவரக் கற்றுக்கொண்ட அவன், தன்னுள் இருக்கும் பொறி, புலன்களையும், அவை தொழிற்படுவதற்கு ஏதுவான மனத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை அறிந்தான். எத்துணை முயன்றும் இவை அவன் அதிகாரத்தின் கீழ் வரமறுத்தன. மனத்தைக் ‘கட்டுப் படுத்தும் அக வளர்ச்சி இல்லையானால், இந்தப் புற வளர்ச்சி எந்தப் பயனையும் தாராது என்பதை நாளாவட்டத்தில் அறியத் தொடங்கினான்.
மனம் மட்டுமன்றி ஐம்பெரும் பூதங்களும் அவற்றின் ஆற்றலும் தன் அதிகார எல்லைக்குள் வரவில்லை என்பதை உணர்ந்த மனிதன், மற்றொன்றையும் கண்டு கொண்டான். தன்னுடைய புற வாழ்வை வளப்படுத்தும் இந்த ஐம்பெரும் பூதங்களும் ஒரு குறிப்பிட்ட நிலையில் அடங்கிப் பணிபுரிவதையும், வாழ்வை வளப்படுத்தும் இந்த ஐம்பெரும் பூதங்களும் ஒரு குறிப்பிட்ட நிலையில் அடங்கிப் பணிபுரிவதையும், வாழ்வை வளப்படுத்தும் இதே பூதங்கள் திடீரென்று தம் எல்லைகளை மீறிப் பேரழிவை உண்டாக்குவதையும், அவற்றின் எதிரே, தான் ஒன்றும் செய்ய இயலாது இருப்பதையும் கண்ட மனிதனுக்குப் புதிய ஆராய்ச்சி பிறந்தது.
தன் அதிகாரத்திற்கு அப்பால் புறத்தே நிற்கும் ஐம்பெரும் பூதங்களும், அகத்தே நிற்கும் ஐம்பொறிகள், புலன்கள், மனம் ஆகியனவும் தன் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டுமானால் யாருடைய துணையை நாடுவது என்ற நீண்டகாலச் சிந்தனைக்குப் பின் மனிதன் ஒரு தெளிவை அடைந்தான். அதனைத்தான் அடிகளார், ‘தெய்வம் என்போர் சித்தம் உண்டாகி முனிவிலாது ஓர் பொருளது கருதலும்’ என்று பேசுகின்றார்.
இந்த உண்மையை உணர்ந்தவுடன் அந்தத் தெய்வத்தைத் திருப்திபடுத்தித் தனக்கு உதவுமாறு செய்வதற்காக யாகங்களைச் செய்தான்; கோயில்களைக் கட்டினான்; பெரிய பெரிய நித்திய, நைமித்திய பூசைகளை நிறுவினான். பலகாலம் இதனைச் செய்தும் ஏனோ அவன் மனம் அமைதி அடையவில்லை. அப்படியானால் இத் தெய்வம் தனக்கு உதவுவதற்கு மேலும் என்ன செய்யவேண்டும் என்ற ஆராய்ச்சியில் புகுந்தான். ஐம்பெரும் பூதங்களும் இறைவனுடைய பல்வேறு வடிவங்கள் என்பதை உணரத் தொடங்கினான். அதனையே அடிகளார், ‘பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், வெளியிடை ஒன்றாய் விளைந்தாய்‘ என்று பேசுகின்றார்.
இவற்றை எல்லாம் நன்கு அறிந்த பின்னரும், மனிதனின் அறிவு வளர்ந்ததே தவிர மனத்தில் அமைதி ஏற்படவில்லை. தெய்வத்தை எப்பொழுதும் அவன் தொழத் தொடங்கினாலும் ‘தான்‘ என்ற அகங்காரமும், இத் திருக்கோயில் முதலியவை ‘தனது‘ என்ற மமகாரமும் அவனைவிட்டு நீங்கவில்லை. அவன் தொழுகை, பூசனை முதலிய அனைத்திலும் ‘நான், எனது‘ என்ற இரண்டும் தலைதூக்கி நிற்பதை உணர்ந்தான். இறைவன் திருவடிகளில் சரணமடைய வேண்டும் என்று நினைக்கும் அதே நேரத்தில், அவனுடைய மனமும் பொறிகளும் எங்கோ செல்வதைக் கண்டான்.
ஒரு தருமசங்கட நிலை ஏற்பட்டுவிட்டது. மனமும் பொறிகளும் அடங்கவேண்டுமானால் இறைவனிடம் சரணம் அடைவது தவிர வேறு வழியில்லை. அவனிடம் சரணம் அடைய வேண்டுமானால் மனம், பெறி, புலன்கள் அடங்க வேண்டும். இந்தப் போராட்டநிலை பல காலம் நீடித்த பின்னர் இறைவனைத் தொழுவதற்குக் கூட அவன் அருள் தேவை என்ற பேருண்மையை உணரத் தலைப்பட்டான். அதனையே, அடிகளார், ‘அவன் அருளாலே அவன்தான் வணங்கி‘ என்று கூறுகின்றார்.
‘இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்‘ என்றும் தில்லை மூதூர் ஆடிய திருவடி, பல்லுயிர் எல்லாம் பயின்றனன் ஆகி, என்றும் அடிகளார் குறித்து உள்ளாரே. அஃது உண்மையானால், அதாவது அவன் என்னுள் இருப்பது உண்மையானால் இந்தப் போராட்டம் ஏன் நிகழ்கின்றது? அவனும் உள்ளே இருக்கிறான்; இந்த மனமும் உள்ளேதான் இருக்கின்றது. அப்படி இருக்க மனம் ஏன் அவன்பால் செல்லவில்லை? மனத்தைச் செலுத்த வேண்டுமென்று நினைத்தாற்கூட அது முடியாமற் போவது ஏன் என்ற வினாத் தோன்றியவுடன், பலகாலம் சிந்தித்த மனிதன் ஓர் உண்மையைக் கண்டான். தன் உள்ளே ஒளிவடிவாய் நிற்கும் இறைவனை சித்தத்தின் மேற்பகுதி அடிப்பகுதி ஆகியவற்றைக் கடந்து, பஞ்ச லோகங்களையும் கடந்து, ஆன்மாவோடு ஒன்றி அதன் உள்ளே இருக்கின்றான். ஆதலால், இவற்றுக்கெல்லாம் வெளியே நிற்கும் மனம் எளிதாக அவனைப் பற்றிவிட முடியாது. அப்படியே அந்த மனம் முயன்றாலும் இவற்றை எல்லாம் கடந்து இறைவனை அடைய முடியாது. அப்படி அடையும் ஆற்றல் தன் மனத்திடம் இல்லை என்பதைக் கண்ட மனிதனுக்கு இறுதியாக ஒரு வழி கிடைத்தது. குறைந்த ஆற்றலுடைய தன் மனத்தை உள்ளே இருக்கும் இறைவனிடம் செலுத்துவதைவிட, அந்த இறைவனை வணங்கி, அவனே வெளியே வந்து, தன் மனத்தை அவன் எடுத்துக்கொள்ள வேண்டும். என்பதை மனிதன் கண்டான்; சுருங்கக் கூறினால் மனம் அவனை வணங்கக்கூட அவன்தான் அருள்செய்ய வேண்டும். என்பதைக் கண்டான். இதனைத்தான் அடிகளார் இரத்தினச் சுருக்கமாக, உபநிடத வாக்கியம்போல, திருக்குறளைப்போல ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி‘ என்று கூறிவிடுகிறார்.
இறைவன் திருப்பெயரை ஓயாமற் சொல்வதன் நோக்கம் என்ன? ஐந்தெழுத்தே ஆயினும் அதற்கு எவ்வாறு இவ்வளவு சக்தி வந்தது என்ற வினாவை மனிதன் கேட்கத் தொடங்கினான். இந்த நிலையில் ஒலிகளைப்பற்றியும் அவற்றின் ஆற்றல்களைப்பற்றியும் அவன் அறிந்திருந்த பல செய்திகள் அவனுக்கு உதவி புரிந்தன. ஒலிகள் பேராற்றல் வாய்ந்தவை. ஒவ்வொரு தனி எழுத்திற்கும் ஓர் ஒலி உண்டு. இரண்டு எழுத்துக்கள் சேரும்பொழுது ஒவ்வொரு எழுத்துக்கும் உள்ள அதிர்வுகள் (frequency) ஒன்று கூடுகின்றன. இதிலிருந்து மூன்றாவதாக ஓர் அதிர்வு தோன்றுகிறது. அந்த மூன்றாவது அதிர்வு, இரண்டு எழுத்துக்களின் தனித்தனி அதிர்வுகளைவிட அதிகச் சக்தி வாய்ந்தது. அதேபோல, ஐந்தெழுத்தின் சேர்க்கையில் தோன்றும் ஒலி அலைகள், மாபெரும் சக்தி வாய்ந்தவைகளாக உள்ளன என்பதை நம்முன்னோர் கண்டனர். எழுத்துக்களின் வைப்பு முறையை மாற்றுவதால் புதிய புதிய ஆற்றலைப் பெற முடியும் என்ற நுணுக்கத்தையும் நம் முன்னோர் என்றோ அறிந்திருந்தனர். ‘நமசிவாய‘ என்ற எழுத்துக்களின் சேர்க்கையை ஸ்தூல பஞ்சாட்சரம் என்றும்,. ‘சிவாயநம‘ என்று கூறுவதைச் சூக்கும பஞ்சாட்சரம் என்றும், ‘சிவாயசிவ‘ என்பதை அதிசூக்கும பஞ்சாட்சரம் என்றும், பிரித்துக் கூறியுள்ளனர். இவ்வாறு செய்வதால் இவை ஒன்றைவிட ஒன்று ஆற்றல் மிகுந்து விளங்குகின்றன என்பதையும் அவர்கள் கண்டனர். என்றாலும் அவரவர்கள் பக்குவநிலைக்கு ஏற்ப, படிப்படியாக இந்த முறையைக் கையாளவேண்டுவதே தவிரத் திடீரென்று இரண்டாவது மூன்றாவது நிலைகளுக்குப் போவது சரியில்லை என்றும் பெரியோர் கூறியுள்ளனர். எட்டெழுத்து மந்திரம், ஆறெழுத்து மந்திரம் ஆகியவற்றிற்கும் இதுபோன்ற ஆற்றல் உண்டு என்பதை அறிதல் வேண்டும். எனவே, இம்மந்திரங்களை ஓயாது திரும்பத் திரும்பச் சொல்வதால் அவற்றில் தோன்றும் அதிர்வுகள் ஒன்றுதிரண்டு நம் வினையை அழிக்கின்றன. இதனையே அடிகளார் ‘சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை, முந்தை வினைமுழுவதும் ஓய உரைப்பன் யான்‘ என்று பேசுகின்றார். இங்குச் சிவபுராணம் என்றது இறைவனுடைய பல்வேறு பெயர்களையே ஆகும்

திருச்சிற்றம்பலம்