சிவ பூசை பலன்கள்

Standard

சிவ பூசை பலன்கள்

இச்சிவ பூஜனத்திற்கு சிரத்தையும் பக்தியும் மிக மிக அவசியமாகும். சிவனிடத்தில் பக்தி ஏற்பட வேண்டுமெனில் கோடி ஜன்மங்களில் புண்யம் செய்து இருந்தால்தான் கிடைக்கும். சிவன் ஒருவரைப் பூஜை செய்துவிட்டால் மற்றேனைய தேவதைகள் யாவரும் பூஜை செய்யப்பட்டவர்களாகக் கருதி மகிழ்ச்சியே அடைகின்றனர். எவ்வாறு மரத்தின் அடியில் நீர் விடுவதால் மரங்கள் திருப்தி அடைந்து மலர்களையும் பழங்களையும் தருகின்றனவோ, அவ்வாறு மகிழ்ந்து வரமளிக்கின்றனர்

சிவனுடைய வழிபாட்டால் மோக்ஷம் கிடைக்கும். போகத்தை விரும்புகிறவர்களுக்கு பெரும் சுகமும் கிடைக்கும். சிவபூஜையினுடைய விசேஷத்தால் அவனுக்கு பெரிய அரண்மனையும், பெரும் யானைகளும், வாயுவேகமாகச் செல்லக்கூடிய குதிரைகளும், சந்திரன் போன்ற முகம் அமைந்த சுந்திரகளும் பெரும் செல்வமும் அவனுக்குக் கிடைக்கும் என்பது புராண வசனம், மேலும் சிவன்தான் சிறந்தவர் என்பதற்கு மற்றும் சில காரணங்களைப் பார்ப்போம்.

1. மந்திரங்களுள் சிறந்த காயத்திரி தேவிக்குக் கணவர்.

2. இராமரால் இராவணனை அழிக்க வேண்டி தனுஷ்கோடியில் சிவலிங்கத்தை நிறுவி “ராமேச்வரம்” என்னும் தன் பெயரையே சூட்டி வழிபட்டு இராவணனைவென்று வெற்றி பெறச் செய்தவர்.

3. கண்ணன் கைலாச யாத்திரை சென்று சிவனை வழிபட்டமையால் உலகிலேயே சிறந்த அழகான மன்மதனைப் போன்ற மகனைப் பெறும் பாக்கியத்தை அவனுக்கு அளித்தவர்.

4. அதே மன்மதனை தன் பார்வையாலேயே அழித்தவர்.

5. உலகை அழிக்கத் தோன்றிய காலகூட விஷத்தை விழுங்கியவர்.

6. தனது பக்தன் மார்க்கண்டேயனைக் காக்க யமனின் திமிரை அடக்கியவர்.

7. திரிபுர அசுரர்களை அழித்தவர்.

8. தட்ச யாகத்தை நாசம் செய்தவர்.

9. அர்ச்சுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்கியவர்.

10. நரஸிம்மருடைய கர்வத்தை அடக்க சரப அவதாரம் எடுத்தவர்.

11. காசியில் வேத வியாசர் விஷ்ணு தான் சிறந்தவர் என்று கையை மேலே தூக்கியதை மடங்காமலே ஆக்கச் செய்தவர்.

12. பிரம்மாவினுடைய சிறு அபராதத்தால் தலையைக் கொய்து மாலையாக அணிந்தவர்.

13. வாமனாவதாரம் எடுத்த விஷ்ணுவின் கர்வத்தை அடக்க வாமனரின் தோலை உரித்து சட்டையாக அணிந்து கொண்டவர். சீகாழியில் இன்றும் சட்டைநாதரைக் காணலாம். இன்னும் பல உயர்வுகள் உள்ளன, விரிவஞ்சி இத்துடன் விடுத்தனம்.

மேலும் சிவனே உயர்வு என்பதற்கு பிருங்கிரிஷி ஸம்ஹிதை, சிவோத்கர்ஷப் பிரகரணத்தில் உள்ள ஒரு கதையைக் கூறி முடிப்போம். மாளவ தேசத்தில் மகேந்திரவர்மன் என்னும் அரசனின் அவைக்கு வந்த ஒரு அதிசய வழக்கில் வைஷ்ணவர்களாலும் சைவர்களாலும் தன் தன் தெய்வமே உயர்ந்தது என்று வாதாடப்பட்டது. அதற்கு தீர்ப்பு வழங்க வேண்டி வந்து. அதற்கு மந்திரிகளின் அவையைக் கூட்டி அரசன் ஒரு யுக்தியைக் கையாண்டான். நீங்கள் இரு தரப்பினரும் ஒரு மாத காலத்திற்குப் பின் உங்களது தெய்வத்தை எமது முன் கொண்டு வாருங்கள் அதைக் கண்டு தீர்ப்பு வழங்குகின்றேன் என்று கூறி அனுப்பிவைத்தான். இரு தரப்பினரும் மகிழ்ச்சியுடன் சென்றனர். வைணவர்கள் அவ்வொரு மாத காலத்திற்குள் சேஷசாயியாக ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக, விஷ்ணு, உருவை அரண்மனைக்குள் புக முடியாத அளவிற்கு நீளமாகவும் அகலமாகவும், பெருத்ததாகவும் தயார் செய்து அவ்வுருவிற்கு மிகச்சிறந்த முறையில் அணிகளாலும் ஆடைகளாலும் மலர்களாலும் மிக அழகாக அலங்காரம் செய்து முடித்தனர். சைவர்களோ எனில் என்ன செய்வது என அறியாமல் கஷ்டத்துடன் இருக்குங்களால் ஒரு பெரியார் அவர்கள் முன் தோன்றி ஒரு சிறு பெட்டியைக் கொடுத்து இதைத் திறவாமல் அன்று அரசவைக்குச் சென்று அரசன் கையில் கொடுங்கள், பயமுற்று இருங்கள். உங்களுக்கே வெற்றி கிட்டும் என்று கூறிச் சென்று விட்டார். அப்பெரியாரின் வாக்கில் நம்பிக்கை இருந்தும், மனத்தில் கலக்கத்துடனேயே முப்பது நாட்களையும் கழித்தனர். வைணவர்களோ எனில் சந்தோஷத்துடன் நமது தெய்வம் தான் பெரிது என்பதற்கு எவ்வித ஆட்சேபனையும் இராது என்று வாளாவிருந்தனர். 31-வது நாள் பலசக்கரங்கள் பூட்டிய வண்டியில் பெட்டியில் வைத்து மூடிய திருமாலை வைத்து அரசவைக்கு முன் கொண்டு வந்து நிறுத்தினர். சைவர்களோ எனில் கையில் பெரியார் கொடுத்த பெட்டியை சிரமமின்றி எடுத்துக் கொண்டு அரசவைக்கு உள்ளேயே சென்று விட்டனர். வைணவர்கள் வாயிலில் பாதுகாப்பாக நின்று ஒருவரை மட்டும் உள்ளே அனுப்பி, தங்களது தெய்வத்தைக் காண அரசனை அழைத்து வர அனுப்பினர். அரசனும் அவர்கள் அழைப்பை ஏற்று வாசலில் வர வைணவர்கள் எல்லோருடைய முன்னிலையிலும் அப்பெட்டியடித் திறந்து, உலகையே மயக்கும் அழகு வாய்ந்த விஷ்ணுவை அரசனுக்குக் காண்பித்தனர். அரசனும் அவ்வழக்கைக் கண்டு மயங்கிவிட்டான். உடனே அருகில் உள்ள மந்திரியை அழைத்து விஷ்ணுவே பெரியவர் என்று எழுத ஆணையிட்டான். ஆனால் மந்திரிகள் ஒரு தரப்பு தீர்ப்பு நியாய விரோதம். மறுதரப்பாரையும் விசாரித்து அறிந்த பின் எழுதலாம் எனக் கூறிய பின் வேண்டா வெறுப்பாக அரசவை ஏகினான். சைவர்களைப் பார்த்து உங்கள் தெய்வம் எங்கே என்று கேட்க அப்பெரியவர் அளித்தா பெட்டியை அரசன் கையில் கொடுத்தனர். அரசனும் அப்பெட்டியை ஒன்றன் பின் ஒன்றாக 15 பெட்டிகள் திறந்த பின் 16-வது பெட்டி தங்கத்தால் ஆனதாயும் நவரத்தினங்கள் இழைக்கப்பட்டதாயும் மிகச்சிறிதாயும் அழகு வாய்ந்து ஒளி வீசுகின்றதாயுமிருந்தது. அதைத் திறந்தான். அதனுள் ஒரு தங்கச் சுருள் இருந்தது. அதைப் பிரித்தான். அதில் “சர்வம் சிவமயம் ஜகத்” (உலகம் யாவும் சிவன் உருக் கொண்டது) என்று எழுதியிருந்தது. அதைக் கண்ட உடனேயே அரசனுக்கு எங்கும் சிவன் உரு தோற்றமளித்தது. வெளியேயுள்ள விஷ்ணு வடிவத்திலும் சிவனுடைய உருவமே தோற்றமளித்தது. இதைக் கண்டு பயந்த அரசன் மந்திரிகளை அழைத்து நான் முதலில் கூறியது மிக மிகத் தவறு. உங்களுடைய அறிவுரையை கேளாதிருப்பின் நான் மகா பாவியாவேன். என்னைக் காப்பாற்றினீர்கள். சிவனைக் காட்டிலும் உயரிய தெய்வம் வேறு எதுவும் இல்லை. “எல்லாம் சிவமயம்” என்று தீர்ப்பளித்து சைவர்களை விசேஷ மரியாதைகளுடன் அனுப்பி வைத்து தன் அபராதம் நீங்க அன்று சிவனுக்கு விசேஷ பூஜைகள் செய்து கெளரவித்தான். இதன் கருத்தையே தான் ஶ்ரீமத் நீலகண்ட தீக்ஷிதர், சிவோத்கர்ஷ மஞ்சரியில் சிவன்தான் உலகத்தலைவன், அவரே தான் எனது வழிபாட்டு தெய்வம். அவரையன்றி வேறு எந்த தெய்வத்தின் பெயரையும் நான் கூற மாட்டேன் என்று 51 ச்லோகங்களால் மிக அழகாகப் போற்றியிருக்கிறார். இதையே தான் “சிவபத மணிமாலா” என்னும் நூலிலும் ஆதிசங்கரர் சிவபதத்தைக் காட்டிலும் வேறு உயர்ந்தது யாதும் இல்லை. உலகம் சிவமயம், அவ்வாறு நினைப்பவர்களுக்கு மங்களமே ஏற்படும் என்று உறுதியாக கூறுகிறார். எனவே சைவர்களுக்கு சிவனைத் தவிர எந்த தெய்வமும் உரித்தது அல்ல, உயர்ந்தது அல்ல என்னும் எண்ணம் ஏற்பட இது போன்ற சிவஞான பூஜா மலர்கள் மிக மிக அவசியமானதாகும்.

சிவனுக்கே பூஜை செய்யுங்கள், மீண்டும் உங்களுக்கு பிறவி கிடையாது என்று கூறியுள்ளார். சிவனுடைய அடிமுடி காணாது தவித்த பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் கர்வத்தை அடக்கி பெண்ணாயிருக்கும் தன்மையைக் கொடுத்து லிங்கோத்பவராகக் காட்சி அளித்ததை இன்றும் எல்லா சிவாலயங்களிலும் காணலாம். அத்தகைய சிவார்ச்சனத்தை விபூதியையும், ருத்திராட்சங்களையும் அணிந்து கொண்டு செய்ய வேண்டும். தனக்குச் செய்யக் கூடிய உடல் வலிமையோ அறிவு வலிமையோ இல்லாவிடில் மற்றவரைக் கொண்டு செய்வதும் தவறல்ல. அவரவருடைய இயல்புக்குத் தக்கவாறு பூஜா சாமன்களை வைத்துக்கொண்டு செய்ய வேண்டும். அதில் பஞ்சாயதன பூஜை என்பது மிகச்சிறந்தது.

சிவபிரானுடைய உயர்வைத் தெளிவுற உலகமக்களுக்கு வெளியிட அமைந்துள்ள ஹிந்து மத சங்கர மடங்களும் தமது ஶ்ரீமுகத்தில் ஶ்ரீ நாராயண ஸ்ம்ருதி என்றே குறிப்பிடுகின்றன.

திருச்சிற்றம்பலம்

நன்றி சைவம் டாட் காம்

Advertisements

ஆங்கிலமாதுக்கு அருள்புரிந்த அண்ணல் சிவபெருமான்

Standard

ஆங்கிலமாதுக்கு அருள்புரிந்த அண்ணல் சிவபெருமான்

உஜ்ஜயினி நகருக்குப் பக்கத்திலுள்ள ஆகர் என்னும் நகருக்குப் பக்கத்தில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலுக்குப் பக்கத்திலுள்ள கண்டோன்மெண்டில் தான் ஆங்கிலத் துருப்புகளின் வீடுகள் இருந்தன.

1879-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் இந்திய – ஆப்கானிய யுத்தம் ஆரம்பித்தது. அப்பொழுது நம் நாட்டில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இருந்தது. பிரிட்டிஷார் இந்தியப் படைகளின் உதவி கொண்டு ஆப்கானியரை எதிர்த்து நின்றனர். ஆனால் ஆப்கானியர் வெகு வேகமாக முன்னேறவே, பிரிட்டிஷ் துப்புக்கள் உஜ்ஜயினிக்குப் பக்கத்தில் இருந்த கண்டோன்மென்ட் துருப்புக்களையும் போர்முனைக்கு அனுப்பவேண்டி வந்து. அப்பொழுது துருப்புகளுக்குத் தலைவராக அங்கிருந்த லெப்டினன்ட் மார்ட்டின் என்னும் ஆங்கிலேயரும் செல்லவேண்டி வந்து. அவருடைய மனைவி ஶ்ரீமதி மார்ட்டின் கண்டோன்மெண்டிலேயே தங்கினார்.

சில நாட்களுக்கு ஶ்ரீமதி மார்ட்டினுக்குத் தம் கணவரிடமிருந்து கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. திடீரென்று கடிதங்கள் நின்றுபோகவே அவருக்குக் கவலையாகி விட்டது. அத்துடன் அந்தச்சமயத்தில் ஆப்கன் துருப்புகள் வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன என்றும், அவை பிரிட்டிஷ் துருப்புக்களை வெகு கொடூரமாக நடத்துகின்றன என்றும் செய்திகள் கிடைத்தன. தம் கணவருக்கு என்ன ஆபத்தோ என்னவோ என்று ஶ்ரீமதி மார்ட்டின் கவலைப் பட்டார்.

ஒரு நாள் அவர் தம் குதிரையின் மீதேறிச் சென்று கொண்டு இருந்த போது அந்தச் சிவன் கோவிலைக் கண்டார். மக்கள் உள்ளே செல்வதையும், உள்ளே சென்று வழிபட்டுத் திரும்புவதையும் கண்டார்.

அவர் தம் குதிரையை அங்கிருந்த ஒரு மரத்தோடு கட்டி விட்டு, கோவிலுக்குள்ளே சென்றார்.

ஒரு ஆங்கில மாது கோவிலுக்குள் வந்ததைக் கண்டு பூஜாரி அவரைத் தேடிக்கொண்டு வந்தார்.

“இது என்ன கோவில்? இங்கு வந்து மக்கள் என்ன செய்கிறார்கள்? என்று ஶ்ரீமதி மார்ட்டின் பூஜாரியிடம் கேட்டார்.

“இது பைஜநாத் சுவாமியின் கோவி, அதாவது சிவன் கோவில். இங்கு மக்களுக்கு என்ன குறை உண்டோ அதைப் போக்க வேண்டும் என்று பகவானிடம் பூஜை செய்வார்கள். பகவானும் அவர்களுடைய குறைகளை நீக்குவார்” என்று சொன்னார் பூஜாரி.

“அப்படியானால் நான் சுவாமிக்குப் பூஜை செய்தால் அவர் என் மனக்கலையைப் போக்குவாரா?” என்று ஶ்ரீமதி மார்ட்டின் கேட்டார்.

“யார் பகவானிடம் பக்தி செய்கிறார்களோ அவர்கள் மனக்கவலையை அவர் நிச்சயமாகப் போக்குவார்.”

“என் கணவர் போர்முனைக்குச் சென்றிருக்கிறார். அவர் பத்திரமாகத் திரும்ப வேண்டுமே என்று எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. இந்த் சுவாமி என் கணவரைக் காப்பாற்றுவாரா?”

நீங்கள் ‘நமசிவாய’ என்ற மந்திரத்தை ஜபித்துக் கொண்டே இருங்கள். பகவானுக்கு ருத்ராபிஷேகம் செய்து வையுங்கள். பகவான் கட்டாயம் உங்கள் கணவரைக் காப்பாற்றுவார்” என்றார் பூஜாரி.

ஶ்ரீமதி மாட்டினுக்குச் சிவன் பேரில் பக்தி உண்டாகி விட்டது. பதினோரு உத்தமர்களைக் கொண்டு இந்த அபிஷேகம் பதினோரு நாள் நடந்தது. தினம் விடியற் காலையில் ஸ்நானம் செய்து விட்டு, ஶ்ரீமதி மார்ட்டின் இந்தப் பூஜையில் கலந்து கொண்டார்.

பதினோராம் நாள், பூஜையில் கலந்து கொண்டவர்கட்கெல்லாம் அவர் அன்னமும், தட்சிணையும் கொடுத்து விட்டு, வீடு திரும்பினது தான் தாமதம், “அம்மா! போர் முனையிலிருந்து உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது” என்று வேலைக்காரன் ஒரு கடிதத்தைக் கொடுத்தான்.

ஶ்ரீமதி மார்ட்டின் அதை வெகு ஆவலாகப் பிரித்துப் பார்த்தார். அது அவர் கணவர் எழுதியிருந்த கடிதம் “சிவ பெருமானே! உன் கருணையே கருணை! என் கணவரை உயிரோடு வைத்திருக்கிறாயே!” என்று நினைத்துக் கொண்டு ஶ்ரீமதி மார்ட்டின் கடிதத்தைப் பார்த்தார்.

அவருடைய கணவர் எழுதியிருந்தார்:

“நான் செளக்கியமாக இருக்கிறேன். ஆகவே என்னைப் பற்றிக் கவலைப்படாதே! எத்தனையோ ஆபத்துக்களில் சிக்கியும் எனக்கு ஒன்றும் நிகழ்வில்லை. பதினோரு நாட்களுக்கு எங்களை நாலாபுறமும் எதிரி சேனை சூழ்ந்து கொண்டது. அன்று நான் நிச்சயமாக எதிரிகளின் கையில் சிக்கி கொல்லபடுவேன் என்ற நிலை இருந்தது. அப்பொழுது ஆச்சரியமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. யாரோ தாடியும் ஜடையும் உள்ள ஒரு சந்நியாசி, கையில் திரிசூலம் ஏந்தியவர் என்னை காப்பாற்றினார். அவர் அடிக்கடி இந்த மாதிரி ஆபத்துச் சமயங்களில் என்னை எத்தனையோ தடவை காப்பாற்றினார். நாங்கள் வெற்றி கொண்டோம்; நான் சீக்கிரம் வீடு திரும்புவேன்!”

சில நாட்களில் லெப்டினன்ட் மார்ட்டின் ஊர் திரும்பினார். திருமதி மார்ட்டின் நடந்த விஷயங்களைச் சொன்னபோது, காப்பாற்றிய அந்தச் சந்நியாசி சிவ பெருமான் தான் என்பதை மார்ட்டின் உண்ர்ந்தார்.

தம்பதிகள் இருவரும் சிவ பக்தர்களாயினர். தினம் கோவிலுக்குபோவதை வழக்கமாக வைத்துக் கொண்டார்கள். ஒரு நாள், கோவில் ஒரு பக்கம் ஜீரணமாக இருப்பதைக் கண்ட மார்ட்டின் அதற்குப் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து, ஜீரணோத்தாரணம் செய்யச் சொன்னார்.

இது லெப்டினன்ட் மார்ட்டின் என்ற தலைப்பில் ஶ்ரீ ராமகிருஷ்ண விஜயம் 1981 வது ஆண்டு மணிவிழா மலரில் வெளியான விஷயம்
சிவபிரானின் அவ்யாஜமான கருணைக்கு அனைவரும் பாத்திரரே என்பதை அறிந்து அப்பெருமானிடம் திடமான பக்தியும் நம்பிக்கையும் கொள்வோமாக.

ஆக்கியோன் நாடோடி
நன்றி ; சைவம் டாட் காம்

ஊழி முதல்வன்/  ஏகன் அநேகன் இறைவன் / சிவபெருமான்

Standard

ஊழி முதல்வன்/  ஏகன் அநேகன் இறைவன் / சிவபெருமான்

சிவமகிமை

சிவம் என்ற சொல்லுக்கு ஸர்வமங்களரூபியாய் இருக்கும் பரம் பொருள் என்பது பொருள். “சிவஸ்தாணு மஹேச்வர.” என்பது உபநிஷத்வாக்கியம். “சிவம் மங்களம் பரம்” என்பதும் எப்போதும் ஸர்வமங்களரூபியாய் ஸர்வஜகத்திலும் வியாபித்து அருள்பாலிக்கும் பரம்பொருள் என்பது ஆன்றோர் வாக்கு. “சிவ ஏகோத்யேய: சிவம் கர: ஸர்வமன்யத் பரித்யாஜ” என்பது அதர்வ சிகோபநிஷத்வாக்கு. அதாவது மற்ற தேவதைகளை வழிபடு வதைவிட்டு பரனேச்வரன் ஒருவரே எல்லோராலும் பூஜிக்கத் தக்கவர் என்று வேதம் முடிவு செய்கிறது. இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் போது அத்வைத ஸித்தாந்தமும் ஏகநாயகன் ஒருவனே என்றும், “ஒன்றுகண்டீர் உலகுகொரு தெய்வம்” என்று திருமூலரும்,  வேதவாக்கியங்களும் சிவ மஹிமையைக் கூறுகின்றன. சகல உலகங்களுக்கும்,  எல்லோராலும் பூஜிக்கத்தக்கவருமான ஈச்வரன் ஒருவனே என்றும், அவருக்குச் சமமாவோ அவரைத்தவிர இரண்டாவதான தெய்வசக்தியோ கிடையாது என்றும் ஸகல வேத இதிஹாஸ புராணங்களும் கூறுகின்றன.

 

அத்வைத சித்தாந்த ரீதியாக ஆராய்ந்து பார்ப்போமானாலும் இதே பொருளைத்தான் கூறுகிறது. எங்கும் வியாபித்துக் கொண்டு நிற்கும் உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்று சக்திக்கும் அப்பாற்பட்ட துரீய நிலையாய் நிற்கும் பரப்பிரம்ப்பிரம்மம் ஒன்று தான் வேதங்களாலும், உபநிஷத்துகளாலும், மற்ற இதிஹாஸங்க ளாலும் அறியப்பட்டு பல பெரியோர்களாலும் கூறப்படும் “ஆனந்த ரூபம், சிவம் ப்ரசாந்தம் அம்ருதம் ப்ரம்ம யோனிம்!  சிதானந்தமரூபம் அத்புதம்|| என்று “சேர்ந்தறியாக் கையானை” என்று ஶ்ரீமணிவாசகரின் திருவாசகமும் கூறுகிறது. பரமேச்வரன் யாரையும் கை கூப்பி வணங்கவில்லை என்றும், ஆனால் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலான மற்ற எல்லாத் தேவர்களும் சிவலிங்க வடிவில் ஸாக்ஷத் பரமேச்வரனை அவரவருக்கு ஏற்ற பதவிகளையடைய ஸதாஸர்வ காலமும் பூஜித்துக் கொண்டிருப்பதாக வேதம் இதிஹாஸ புராணங்களும் கூறுவதைப் பார்க்கலாம்.

சிவபிரானுடைய மங்களமூர்த்தியின் மஹிமையையும், அவனுடைய திவ்ய நாமாவையும் புகழாதவர்கள் இந்த உலகத்தில் கிடையாது எல்லா மஹாமந்திரங்களைக் காட்டிலும் அதிக உத்க்ருஷ்டமாயும், ஸகல உலகங்களிலும் மஹாராஜ மந்திரமாகவும் பாளித்து வருகிற, ‘சிவ’ என்ற இரண்டு எழுத்துக்களும், அதே போல சிவபெருமான் அணியும் விபூதி, ருத்ராக்ஷம் என்ற இரண்டு சிவசின்னங்களும், அந்த பரமேச்வரனைப் போலவே எல்லாத் தேவர்களாலும் போற்ற பட்டும், அவரவர்கள் தாம் சிவபூஜை செய்யும்போது விபூதி, ருத்ராக்ஷத்தைப் பரம பக்தியோடு அணிந்து கொண்டு ஸதா மாலைப் பூஜிக்கிறார்கள் என்ற ரகஸியத்தை பிரம்மா வானவர் நாரதருக்கு  உபதேசிக்கின்றார்.

தவிர, ஶ்ரீ உமாபதிசிவாசாரியார் இயற்றிய ஶ்ரீகுஞ்சிதாங்க்ரிஸ்தவம் 91-வது ச்லோகத்தில் இந்த தத்துவத்தை நன்கு விளக்கியுள்ளார்கள். (ச்லோகம்) “யல்லிங்கே பிரமம் விஷ்ணுப்ரமுக ஸுரவரா பஸ்மருத்ராக்ஷ்ஹபாஜ: ஸஸ்த்ரீகாஸ் ஸாம்பமூர்த்திம் ஸகலததுப்ருதாம் ஸர்வதம் ஸர்வரூபம் | —— குஞ்சிதாங்க்ரிம் பஜே (அ) ஹம் ||” அதாவது எந்த சிவலிங்க்ரூபத்தில் பிரமம் விஷ்ணு முதலிய தேவர்கள் பஸ்ம ருத்ராக்ஷ தாரிகளாகவும், தங்கள் தேவிமார்களுடன் கூடிபூஜை செய்கிறார்களோ, அந்த ஸகல பிராணிகளுக்கு ஸர்வத்தையும் அளிப்பவரும், எல்லா உருவமும் உள்ளவருமான பரமேசு வரனுடைய குஞ்சிதபதத்தை நமஸ்கரிக்கிறேன் என்று ஸ்தோத்திரம் செய்கிறார்.

ஸகல வித்யைகளுக்குள் வேதம் சிறந்தது. அதற்குள் ஶ்ரீருத்ரம் சிறந்தது. அதற்குள் நம: சிவாய என்ற பஞ்சாக்ஷர மஹா மந்த்ரம் சிறந்தது. அந்த பஞ்சாக்ஷரத்திற்குள் ‘சிவ’ என்ற இரு அக்ஷரங்கள் மிகச் சிறந்தவை என்பது பெரியோர்களின் வாக்கு. “சிவநாம விநாச்யாதாம் பாதகாநாமபாவத” என்று சிவநாமாவை ஜபித்தால் அதனால் போக்கக் கூடிய பாபங்களை உலகில் யாராலும் செய்ய முடியாது என்பதாகும். தவிர, “சிவ” என்று வரும் மஹாபஞ்சாக்ஷர ஜபத்தை எவன் நியமத்தோடு நித்தம் தவறாமல் ஜபித்துக் கொண்டு வருகிறானோ அவன் நோயாளியையோ அல்லது தரித்ர தசையிலுள்ளவனையோ கண்ணால் பார்த்தாலே அந்த குறை அவர்களுக்கு உடனே நீங்கி சகல செளகர்யங்களையும் அடைகிறான் என்று மந்த்ரோபநிஷத் கூறுகிறது.

அந்த சிவநாமாவுக்கே இப்படிப்பட்ட அபரிமிதமான சக்தியும் மஹிமையும் இருக்கும் போது இதற்கு மூலமாயுள்ள சிவபிரானுக்கு உள்ள மஹிமையை யார் தான் அறியமுடியும். தேவர்களாலும் அறிய முடியாது என்பது திண்ணம். இதைச் சேந்தனார் 9-ம் திருமுறையில் திருப்பல்லாண்டு கூறும்போது “ஒப்பமரர் பாவிக்கும் பாவகத்திற்கு அப்புறத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே” என்று போற்றியிருக்கிறார். இப்படிப்பட்ட மஹா மஹிமை தங்கிய பரமேசுவரனுக்கு எந்தத் தெய்வத்துக்கும் இல்லாத சிறப்பு என்னவென்றால் இவருக்கு “ஆசுதோஷி” என்ற பெயர் உண்மையாம். யார் யார் எந்தெந்த முறையில் தம்தம் சக்திக்கேற்றவாறு உபாசிக்கின்றனரோ அவர்களுக்கு யாரும் பெறமுடியாத அபரிமிதமான அனுக்கிரஹத்தைச் செய்வதால் இப்பெயர் பெற்றார் என்பது மஹான்களின் வாக்கு. இதற்கு நம் சிவனடியார்களின் வாக்கே தக்க சான்றாகும்

ஸகலோகங்களிலும் உள்ள ஈ எறும்பு முதல்  தேவர்கள் உள்பட ஸகல ஆன்மகோடிகளிடத்து உள்ள அபரிதமான கருணையால் சிவபெருமான் ‘க்ருபா சமுத்திரன்’ என்று வடமொழியிலும், ‘கரையில் கருணைக்கடல்’ என்று தமிழிலும், பல அடியார்களாலும் ஸ்தோத்ரம் செய்யப்பட்டுள்ளார். உதாரணமாக சிவபிரானது உடை, ஆபரணம், இருப்பிடம், வாஹனம், ஆஹாரம், பக்தர்களுக்குச் செய்த அனுக்ரஹம் இவைகளை யெல்லாம் நோக்கும் பொழுது, இப்பெருமானது அபரிமிதமான கருணையையும், எல்லையற்ற மஹிமையையும் உணர முடிகிறது.

Image result for neelakanta sivan

சுருக்கமாகச் சொன்னால் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலிய தேவர்கள் தத்தம் பதவியைப் பெறுவதற்காகச் சிவபிரானைப் பூஜித்தலும், பூலோகத்தில் ஒரு நாள் தேவலோக த்திலிருந்து கங்கையை பூவுலகிற்குக் கொண்டு வந்ததும், அருச்சுனனுக்காக வேடனாக வந்து பாசுபதாஸ்த்ரம் கொடுத்ததும் குருதல்பசுமனம் செய்த மஹா பாபியாகிய சந்திரனை தலையில் தூக்கிவைத்துக் கொண்டதும், திருவிளையாடற்புராணத்தில் வரும் கேவலம் ஒரு பக்ஷியாகிய நாரைக்கு முக்தி கொடுத்து அதற்கு அடையாளமாக அதன் சிறகைத் தன் தலையிலே தாங்கிக் கொண்டதும், மார்க்கண்டேயர்க்காக இயமனையே காலால் உதைத்துக் கொன்று மறுபடியும் பூமிதேவிக்காகவும், மற்ற தேவர்களுக்காகவும், அவனைப் பிழைக்க வைத்ததையும், மஹாவிஷ்ணுவின் அவதாரமாகிய மத்ஸயம், கூர்மம், வராஹம், நரசிம்மம், வாமநம் இத்யாதி ரூபங்களினால் அந்தந்த அசுரர்களை ஸம்ஹரித்துவிட்டு விஷ்ணு தன் அஹங்காரத்தினால் மற்ற தேவர்களுக்கும் ஸகல உலகங்களுக்கும் செய்த துஷ்க்ருத்தியத்தை அடக்கும்பொருட்டு, மத்ஸ்யாவதாரத்திலிருந்து கண்களையும், கூர்மாவதாரத்தி லிருந்து ஆமை ஒட்டையும், வராஹ அவதாரத்திலிருந்து தத்திப் பல்லயும், நரஸிம்மாவதாரத்திலிருந்து இரத்தம் தோய்ந்த தோலையும், வாமநராக வந்த திருவிக்கிரமாவதாரத்திலிருந்து முதுகெலும்பையும் அபகரித்துத் தன் திருமேனியில் ஆபரணாமாக அணிந்து கொண்டு சகல உலகங்களையும் ரக்ஷித்து அருள்பாலித்த அபரிமிதமான அவரது (சிவபெருமானது) கருணையை நோக்கும் பொழுது ஆதியந்தம் இல்லாத மஹா கைலாஸத்திற்கு அதிபதியான ஸாக்ஷாத் பரமேச்வரனுடைய முப்பத்து முக்கோடி தேவர்களாலும் அறியமுடியாத சிவ பரத்துவமும், அளவு கடந்த மஹிமையும்நன்கு தெரியவருகிறது.

பரமேச்வரன் ஸகல உலகங்களிலும் ஸகல ஆன்மாக்களுக்கும் அனுக்ரஹம் செய்வதற்காகவே எல்லா மூர்த்தங்கட்கும் அப்பாற்பட்ட சிவலிங்கரூபமாகப் பிரகாசித்து வகுகிறார் எனறு பொருள்படுகின்றது. தவிர ஸகல உலகங்களுக்கு மஹா மஹிமையுள்ள ஈச்வரன் தான் முழு முதற்கடவுள் என்பதும் தெளிவாக விளங்குகிறது.

Related image

தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து அம்ருதம் அடைய வேண்டிப் பாற்கடலைக் கடையும்போது வாசுகி என்ற பாம்பினால் உமிழப்பட்ட விஷமும் கடலினின்றும் தோன்றிய விஷமும் கலந்து ஆலகால விஷம் என்ற கொடிய விஷமாகி எல்லா உலகங்களிலும் பரவி அழித்துக் கொண்டு வரும்போது,

ஸகல உலகங்களையும் ரக்ஷிக்கும் பொருட்டு அந்த கொடிய விஷத்தை ஒரு நாவற்பழம் போல் தன்வாயில் போட்டு தன் கழுத்தில் நீலமணி போல் காட்சியளிக்குமாறு நிறுத்திவைத்து கொண்ட மஹாதேவனுடைய அபரிமிதமான் மஹிமையை யாரால் தான் முழுமையாக வகுணிக்க இயலும்? இதிலிருந்து பரமேச்வரனுடைய மேலான் கருணையையும் அன்பையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம். ஆதலால் பரமசிவனுடைய அளவுகடந்த மஹிமையையும் அவருக்கு ஜீவகோடி களிடமிருக்கும் அபாரமான கருணையையும் அறிவதற்கு இந்த விஷமுண்டு ரக்ஷித்த அனுக்கிரஹம் ஒன்றே போதாதா

எனவே பரமேச்வரனைப் பக்தி சிரத்தையுடன் பூஜித்து ஸர்வேச்வரனது அனுக்கிரஹத்துக்குப் பாத்திரர்களாக விளங்கி பல்லாண்டு பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல ஈச்வரனைப் பிரார்த்தித்துக் கொண்டு அவன் திருவருள் பெற்றுய்ய அன்புடன் வேண்டி சமர்பி்த்துக்கொள்கிறேன்

திருச்சிற்றம்பலம்

நன்றி ; சைவம் டாட் காம்

சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே

Standard

சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே

 

து நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்று தொடங்குகிற கீதா சாரத்தின் சொற்றொடர்களைப் பலரும் மனப்பாடமாக அறிவார்கள். அதில் ஒரு வரி, ‘எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு’ என்பது. படித்து அறிந்த அந்த வரியைப் பகுத்து அறியவில்லை என்பதன் விளைவுதான் இன்னும் தொடர்கிற இழப்பு அச்சம் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

எது எதற்குத் துணை பெறுவது என்ற கேள்வியையே ஒதுக்கிவிடுவோம். ‘மைத்துனன் துணை உண்டானால் மலை ஏறிக்கூடப் பிழைக்கலாம்’ என்று ஒரு சொலவடை உண்டல்லவா? அறிந்த களமோ அறியாத களமோ யாரேனும் ஒருவரைத் துணையாகப் பெறுவது நல்லது; பாதுகாப்பானது. ஆகவே, துணை பெற வேண்டும். சரி. யாரைத் துணையாகப் பெறுவது? நாம் இறங்கப்போகும் களத்தில் நம்மைவிடத் தெளிவான அறிவும் தேர்ச்சியும் பெற்ற ஒருவரைத்தானே துணையாகப் பெற வேண்டும்? அதுதானே பயன்தரும்?

நமக்குப் பார்வையில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். நாமோ ஓரிடத்திலிருந்து புதிதாக மற்றோர் இடத்துக்குப் போகவேண்டியிருக்கிறது. என்ன செய்யலாம்? யாரேனும் ஒருவரைத் துணையாகக் கொண்டு, அவருடைய வழிகாட்டுதலில் போகலாம். ஆனால், வழிகாட்டுவதற்காகத் துணை வருகிறவர் பார்வை உடையவராகவும் வழி தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

ஒளி தரும் குரு

வழிகாட்டுவதற்காக நாம் தேர்வு செய்துகொண்டவரும் நம்மைப் போலவே பார்வையற்றவராக, வழி தெரியாதவராக இருந்தார் என்றால், நாம் போக வேண்டிய புதிய இடத்துக்குப் போய்ச்சேர முடியுமா? போகிற வழியில் ஏதேனும் ஒரு குழியில் தடுமாறித் தலைகுப்புற உருள வேண்டியதுதான். எனவே, சரியான வழிகாட்டியைத் தேர்வு செய்வதென்பது மிகவும் இன்றியமையாதது—உலகியல் பாதையில் வழிகாட்டுவதற்கு மட்டுமன்று, உயிரியல் பாதையில் வழிகாட்டுவதற்கும். திருமூலர் சொல்கிறார்:

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்;

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்;

குருடும் குருடும் குருட்டுஆட்டம் ஆடிக்

குருடும் குருடும் குழிவீழு மாறே

(திருமந்.1680)

குரு என்பது தொல்காப்பியர் காலந்தொட்டு வழக்கில் இருந்துவரும் நற்றமிழ்ச் சொல். குரு என்றால் ஒளி; செம்மை; முளைப்பு. வெள்ளை வெளேரென்ற நிறமுடைய பறவையாகிய நாரையைக் ‘குருகு’ என்று சொல்வது அதன் ஒளிர் வெண்மையை வைத்துத்தான். இரத்தத்தைக் ‘குருதி’ என்று சொல்வது அதன் செம்மையை வைத்துத்தான். வாழையின் அடியில் கிளைத்துவரும் இளங்கன்றைக் ‘குருத்து’ என்று சொல்வது அதன் முளைப்பை வைத்துத்தான். எது ஒளியுடையதோ எது செம்மையுடையதோ எது முளைத்துப் பெருகக்கூடியதோ அது குரு. அந்த அடிப்படையில் ஒளியையும் செம்மையையும் முளைப்பையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று தன்னிலிருந்து பிறருக்குக் கடத்துகிற ஆசிரியர் ‘குரு’ ஆகிறார்.

ஒள்ளிய மலர்களுடன் செழிப்பாக வளர்ந்திருக்கும் மரம் குருந்த மரம். அதன் கீழ் இருந்து தனக்கு அறிவு விளக்கம் செய்த குருவைப் பாடுகிறார் மாணிக்கவாசகர்:

சோதியே, சுடரே, சூழ்ஒளி விளக்கே…

நீதியே, செல்வத் திருப்பெருந்துறையில்

நிறைமலர்க் குருந்தம் மேவியசீர்

ஆதியே… (திருவாசகம், அருட்பத்து, 1)

நல்லது. குரு என்பவர் ஒளி ஊட்டுகிறவர், செம்மைப்படுத்துகிறவர், முளைக்கச் செய்கிறவர். குருடு என்பவரோ ஒளி வேண்டுகிறவர்; செம்மை வேண்டுகிறவர்; முளைத்துப் பெருக வேண்டுகிறவர். இந்த வேண்டுதல்கள் நிறைவேறச் சரியான குருவைத் தேர்ந்துகொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லையா?

உண்மை ஞானி யார்?

காசு கொடு, கடவுளைக் காட்டுகிறேன் என்று பேசுகிற குரு, ஒளி உடைய உண்மைக் குருவா? ஆசிரமத்துக்கு வா, அமைதி பெறுவாய் என்று திருவாய்மொழிகிற குரு செம்மைக் குருவா? கடவுளைத் தேடிக் கண்டடைந்தவர் நம்மிடம் காசு கேட்பாரா? நோகாமல் நோன்பிருக்க ஆசிரமம் அமைப்பாரா? இத்தகைய குருக்கள் பின்னால் போனால் நாம் ஒளி பெறுவோமா அன்றித் திருமூலர் சொன்னதுபோலக் குழி பெறுவோமா?

உயிர் இருந்தது எவ்விடம் உடம்பு எடுப்பதன்முனம்?

உயிர் அதாவது ஏதடா? உடம்பு அதாவது ஏதடா?

உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதுடா?

உயிரினால் உடம்பு எடுத்த உண்மைஞானி சொல்லடா! (சிவவாக்கியர் பாடல்)

உடம்புக்குள் வருவதற்கு முன்னால் உயிர் எங்கே இருந்தது? உயிர் என்றால் என்ன? உடம்பு என்றால் என்ன? உயிர் ஏன் உடம்புக்குள் வந்தது? உயிரை உடம்புக்குள் இட்டது எது என்று சிவவாக்கியர் கேட்கிற கேள்விகள் நமக்கும் இருக்கின்றன. ஆசிரமத்துக்கு வா, நன்கொடை அளி, என் விடை கிடைக்கும் என்று கணக்கிட்டுப் பேசாமல் நேரடியாக விடை சொல்லி வழிநடத்துகிறவர்தான் உண்மைஞானி.

அழகாக இருக்கிறவரையும் அலங்காரமாகப் பேசுகிறவரையும் அமைதியான சூழலில் ஆசிரமம் வைத்திருப்பவரையும் குருவாகக் கொண்டுவிட முடியாது. ஏனென்றால், குருவிடம் நாம் எதிர்பார்ப்பது அழகையும் அலங்காரப் பேச்சையும் ஆசிரமத்தையும் அல்லவே, அறிவையே அல்லவா!

குருவுக்குத் தேர்வு வையுங்கள்; தேங்காயை முற்றிய தேங்காய்தானா என்று சுண்டிப் பார்த்து வாங்குவதைப் போலக் குருவையும் முற்றிய குருதானா என்று சுண்டிப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள் என்கிறார் விவேகானந்தர்.

ஒளி உடையவர்களைத் தேர்ந்தெடுங்கள். வாக்குக் கேட்டு வருகிறவரைத் தேர்ந்தெடுப்பதுபோலக் கண்டவர்களைத் தேர்ந்தெடுத்துவிட வேண்டாம் என்கிறார் திருமூலர்
திருச்சிற்றம்பலம்
நன்றி தி இந்து நாளிதழ்

ஆணவம் அழித்த அண்ணாமலை!

Standard

இறை நாமம் ஒலிக்கட்டு்ம்
திருநாமம் ஐந்தெழுத்ததை செப்பாராகில்
தீவண்ணர் திறம் ஒருநாளும் பேசாராகில்
அருநோய்கள் கெட வெண்ணீர் அணியராகில்
……..
பெருநோய்கள் மிக நலிய பெயர்த்தும் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே
என்று அப்பர் பெருமான் கூற்றுக்கிணங்க தீவண்ணர் திறத்தை போற்றி அவர் நாமம் அனுதினமும் கூறிக்கொண்டே இருக்க வேண்டும்.அவ்வாறு செய்யாதவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பேடுத்து ஊழ்வினையில் ஊழ்ந்து பிறப்பற்ற முத்தி பேறு அடையமுடியாது என்கிறார்
எனவே தினமும் காலையில் எழுந்தவுடன் சிவ சிவ என்று சொல்லியே எழ வேண்டும். வெட்கப்படாமல் இறைவனுடைய போற்றிகளை, ” தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!! ” எனவும்,
“அண்ணாமலை என் அண்ணா போற்றி!
கண்ஆர் அமுதக் கடலே போற்றி !! என பல்வேறு திருநாமப் பெயர்களை கூறி போற்றி துதித்து பாடவோ அல்லது துதிக்கவோ கூறவோ வேண்டும்.
யார் யாருக்கோ ” வாழ்க ! ஓழிக!! என்று சொல்லவதற்கு நாம் தயங்குவதில்லை. ஆனால் நம்மைப் படைத்த சிவனுக்கு ” போற்றி என்று சொல்வதற்கு வாய் மூடலாமா?
இது பற்றி அகத்திய முனி வாக்கு°
தானாய் அடக்கும் வண்ணம்தான்தவித்து வந்த காலையில் வாய் திறந்து சொல்லலுற்றால் அப்பா,
வாலுலகம் வரை கேட்குமே ! தன்னை அடுத்து தூண்டலுற்றல் அப்பா இரண்டாம்முறை கேட்குமே ” என்கிறார்.
நாம் எப்போதும்ஒரு விஷயத்தை ஒரு முறைசொன்னால் கேட்பதில்ைல. ஒரு முறைக்கு இரண்டு முறை யாவது சொன்னால் தான் கேட்கின்ற மனநிலை யே நமக்கு வருகின்றது.
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவருக்கும் இறைவ போற்றி !!
என்று இரவும் பகலும் ஈசனை தியானம் செய்ய வேண்டும்,அப்போது தான் ஒரு முறை கேட்டவுடனேநமது மனம் கேட்கும்.
எந்நாட்டவருக்கும் இறைவன் சிவன் ஒருவன்தான்.சிவன் ஒருவனே அனைவருக்கும் தெய்வமாக விளங்குகிறான். ேவறு எந்த தெய்வத்திற்கும் எத்தகைய பூசைகளும் வழிபாடுகளும் செய்தாலும் சரி, அவை அனைத்தும் சிவனையே சாரும்.
எனவே நேரத்தை வீணாக்காமல் சிவனையே தெய்வம் என்று உருகினால் அவன் நம்முள் புகுந்து ஆனந்த கண்ணீரை ஏற்படுத்து கின்றான்.
திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க!!
நன்றி ; ஸ்ரீலஸ்ரீ வேங்கட்ராம சுவாமகள் திருவெம்பாவை விளக்கம்
***************************************

ஆணவம் அழித்த அண்ணாமலை!

திருவண்ணாமலை எனும் மலைக்க வைக்கும் அதிசயங்கள் கொண்ட க்ஷேத்திரம், மக்களிடையே மெல்ல மெல்லப் பரவியது. மலையும் மலைக்குக் கீழே அண்ணாமலையார் கோயிலும் அந்தக் கோயிலைச் சுற்றியுள்ள ஊரும் என அழகிய கட்டமைப்புக் கொண்ட எல்லோருக்கும் பிடித்த ஊராகிப் போனது திருவண்ணாமலை

சூட்சுமத்தை சூட்சுமத்தால் மட்டுமே அறிய முடியும். சூட்சும சக்திகள் கொண்ட மலையை, அண்ணாமலையை, திருவண்ணாமலை பூமியை, சூட்சுமங்களை ஞானக்கண்ணால் பார்த்தறியும் சித்தபுருஷர்கள், உணர்ந்தார்கள். சிலிர்த்தார்கள். அந்த சக்தியின் உன்னதத்தை, ஊருக்கு வந்து, திருவண்ணாமலையில் இறங்கி தெரிந்து கொள்ளவில்லை. இருந்த இடத்தில் இருந்தே, உணர்ந்து கொண்டார்கள். உள்ளம் சிலிர்க்க மலைத்துப் போனார்கள். ஊரையே பார்க்காமல், ஊருக்கே வராமல், திருவண்ணாமலையின் பிரமாண்டம், அந்த பிரபஞ்ச சக்தியின் பிரமாண்டம் உணர்ந்தார்கள். சித்தமெல்லாம் இறைவனையே நினைத்துக் கொண்டிருக்கும் சித்தபுருஷர்களுக்கு இதெல்லாம் கைவந்தக் கலை. மெய் வந்தக் கலை.
திருவண்ணாமலை மலையா. ஆமாம். சக்தி மிக்க மாமலையா. ஆமாம். அந்த மலைதான் சிவமா. சர்வ நிச்சயமாக! ஆணவம் வந்துவிட்டால் எதையும் அறிய முடியாது. ஆணவம்தான் சத்ரு. ஆணவம்தான் அழிவுக்கு ஆரம்பம். கர்வம் இருக்கும் இடத்தில், கடவுள் ஒருபோதும் வரமாட்டார். அருளமாட்டார்.

திருவண்ணாமலை என்றில்லை. இன்றைக்குக் கோயில்கள் இருக்கும் இடமெல்லாம், ஒருகாலத்தில் சித்தர்கள் அறிந்து தபஸ் செய்த க்ஷேத்திரங்களே என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அவர்கள் அந்த இடத்தின் வல்லமையை, எல்லாம் வல்ல இறைச் சக்தியை உணர்ந்துதான் அந்த இடத்தில் ஆஸ்ரமம் அமைத்தோ, பர்ணசாலை அமைத்தோ தவத்தில் ஈடுபட்டார்கள். அப்படி தவமிருந்த இடத்துக்கு இன்னும் சாந்நித்தியம் கூடியது.

சக்தி மிக்க ஆலயத்து இன்னும் இன்னும் சக்தியூட்டத்தான் கும்பாபிஷேகம் முதலான வைபவங்கள் நடைபெறுகின்றன. சடங்கு சாங்கியங்கள் நிகழ்கின்றன. வேத மந்திரங்கள், யாக ஹோமங்களும் அந்தச் சக்தியைக் கூட்டுவதற்காகத்தான் நடத்தப்படுகின்றன. சித்தபுருஷர்களால் அறிந்துணரப்பட்ட அந்தத் தலம், சித்தபுருஷர்களின் வருகையால், கடும் தவத்தால், இன்னும் இன்னும் சக்தியைக் கூட்டிக் கொண்டே போனது. சாந்நித்தியத்தைப் பெருக்கிக் கொண்டே போனது.

இந்த கர்வம் என்பது, ஆணவம் என்பது, செருக்கு என்பது மனிதர்களாகிய நமக்கு இருக்கக் கூடாது என்பதல்ல. அந்த ஆண்டவனுக்கும் இருக்கக் கூடாது என்பதே தர்மசாஸ்திரமும் ஞானநூல்களும் போதிக்கின்ற இயற்கை விதி. புராணங்கள் அனைத்திலும் ஏதோவொரு இடத்தில், ஆணவம் அழித்ததும் ஆணவத்தால் அழிந்ததுமே அதிகமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

அப்படிக் கடவுளரின் ஆணவத்தையே அழித்த தலம்… அழித்துத் திருத்திய தலம்… திருவண்ணாமலை. ‘நான்’ எனும் கர்வம் அழிப்பதே ஆன்மிகத்தின் முதல் படி. எதற்கெடுத்தாலும் ‘நான்… நான்’ என்று அலட்டிக் கொள்பவர்கள், ஆண்டவனின் அருள் பெற்றதாகச் சரித்திரமே இல்லை.

சித்த புருஷர்கள் அனைவரும் ‘நான்’ எண்ணத்தைத் தொலைத்தவர்கள். ‘நான்’ எனும் செருக்கினை அழிக்கவே, போக்கிக் கொள்ளவே சித்தபுருஷர்களானார்கள். ‘நான் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா’ என்று கேட்டவர்களும் அவர்களின் ராஜ்ஜியங்களும் மண்ணோடு மண்ணாகியிருக்கின்றன. ஆணவத்தையும் கர்வத்தையும் துறந்தாலே, ஆசைகள் அற்ற நிலை வந்துவிடும். அதைத்தான் மகான்கள் உணர்ந்து வாழ்ந்தார்கள்.நமக்கும் போதித்து அருளினார்கள்.

மலையே சிவமென இருந்து சக்தி மிக்க ஆட்சியைச் செலுத்தும் அருள்பூமி… சித்தபுருஷர்கள் பலரின் தவத்தால், இன்னும் இன்னும் சாந்நித்தியை வெளிப்படுத்திய, வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் அந்தப் புண்ணிய பூமி… யோகி ராம்சுரத்குமார் எனும் யோகியை, ஞானியை, மகானை, தன்னுள் ஆட்கொண்டது. இப்போதைக்கு அவர் ராம்சுரத் குன்வராகவே இருந்தார். அவரின் தேடல் இன்னும் வீரியம் அடைந்தது.

பிரம்மாவின் கர்வத்தையும் மகாவிஷ்ணுவின் ஆணவத்தையும் அழித்தெடுத்த பூமி அது.

அந்தப் புராணத்துக்குள் செல்வோம். மலையே சிவமென விஸ்வரூபமெடுத்த சிவனின் மகாசக்தி வெளிப்பட்ட சரிதம் அது!
திருச்சிற்றம்பலம்
நன்றி ; தி இந்து

பக்தி நெறியும் முத்தி நெறியும்

Standard

பக்தி நெறியும் முத்தி நெறியும்

முத்திநெறி அறியாத மூர்க்கராெடு முயன்வேனைப்
பத்திநெறி அறிவித்து பழவினைகள் பாறும் வண்ணம்
சித்தமலம் அறிவித்து சிவமாக்கி எனையாண்ட
அத்தன் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே
தி,மு. 8 மணிவாசகர் / அச்சோவே பதிகம்

எளிமையான இப்பாடல் மூலம் அரிய கருத்துக்களை நாம் பெறலாம் எல்லா பிறப்பிலிருந்தும் தப்பி மானிடப்பிறப்பு எடுத்ததன் நோக்கமே இனிப் பிறவாமையை பெறுவதற்கே ஆகும். இதைத்தான் முத்தி அடைதல் என்கிறோம்.
நம்மமில் அனேகம் பேர் பிறவியின் இத்தகைய உயர்ந்த நோக்கத்தை அறியாமல் தான் வாழ்கின்றனர். அவர்கட்குதெரிந்த தெல்லாம்் அழியக்கூடிய பொன்னையும் பொருளையும் தேடிச் சேர்த்து வைப்பதுதான். இவர்களை தான் மூடர்கள் என்றும் மூர்க்கர்கள் என்றும் மாணிக்க வாசகர் கூறுகிறார்.
இன்னொன்றும் இங்கு நாம் அறிய வேண்டிய து்ள்ளது. சிவவழிபாடு ஒன்று தான் முத்தியை தரும் என்பதாகும். மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமுலர் ” அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேன் ” என்கிறார். சிவபெருமான் ஒருவர்தான் முத்தி அளிக்கும் திறம் உடையவர். அவரைத்தவிர வேறு யாரும் முத்தி அளிக்க முடியாது. முத்திக் கடவுள் என்றே சிவ பெருமானாருக்கு பெயர் உண்டு.
முத்திக்குரிய வழிகளை அறியத மூர்க்கர்களுடன் கூடித்திரிந்து எனக்கு பத்த நெறியை / சிவ வழிபாட்டினை அறியச் செய்தீர். சிவ வழிபாட்டிற்கு வந்த உடனே மூர்க்ககர்களுடன் கூடித்திிவது ஒழிந்தது. இதனால் துன்பம் தீர்ந்தது. சிவவழிபாட்டினால் இன்பம் வந்தது. இதனால் முத்தி பேறு வாய்த்தது. துன்பம் நீக்கத்திற்கு வேண்டாதவர்களின் நட்பு நீங்க வேண்டும். இதற்கு வழி சிவவழிபாடு ஒன்றே இதனால் சான்றோர்களின் தொடர்பு கிட்டும். விளக்க ஏற்றியவுடன் இருள் தானே விலகிவது போல் சான்றோர் நட்பு கிடைத்தவுடன் மூர்க்கர்களின் தொடர்பு நீங்கும்.
சிவவழிபாட்டினால் மனங்களில் உள்ள மலம் நீங்கியும் ,ஆணவம் அகன்றும் பழ வினைகள் அகழ்வது உறுதி.பேராசை, புறங்கூறல் தான் என்ற செருக்கு பொய், சூது, வாது கஞ்சத்தனம் இப்படி மாசுபடுத்தும் தீய குணங்கள் நீங்கும் என்கிறார் மணிவாசகர். பத்தி நெறியினால் வேண்டாதவர்களின் தொடர்பு நீங்கி, மனத்தில் தீய குணங்கள் விலகும்.
இப்படி மனத்தில் உள்ள மாசு நீங்குவதை தான் சித்தமலம்அறுவித்து என்கிறார். சித்தம் தூய்மையான உடனே பிறவிக்கு காரணமாக அமையும்பழைய வினைகள் அகன்று விடும்.இவ்வாறு பழவினைகள் நீங்கினால் முத்தியடைதல் என்கிறோம். பத்தி நெறியினால் சித்தமலம் அறும்.இதனால் பிறவா நிலை அடையலாம் என்கிறார்.
பத்தி நெறி என்பது தற்போது மக்களிடம் வியாபாரமாகிவிட்டது. இறைவரிடமே எனக்கு இன்னது கொடுத்தல் இதனைஉனக்கு காணிக்கையாக செலுத்துகிறேன். என்கிறாம்.
பத்தி என்பது மக்களை விலங்கிலிருந்து வேறுபடுத்துவதாகும்.
பத்தி என்பது மனத்தில் உள்ள பொறாமை, பேராசை, கோபம், சூது, புறங்கூறல், பாெய், களவு, கஞ்சத்தனம் போன்ற தீய குணங்களை நீக்குவதாகும்.
பக்தி என்பது மக்களிடம் அன்பு, கருணை, ஈகை, பொறுமை, சாந்தம், உண்மை, மரியாதை முதலிய நற்குணங்களை வளர்ப்பதாகும்.
பத்தி என்பது மறந்தும் பிறருக்கு தீங்கு செய்யாமையாகும்
பக்தி என்பது எல்லா உயிர்களிடத்தும் சிவம் இருப்பதாக அறிந்து அன்பு செலுத்தும் தன்மை உடையது.
பத்தி என்பது கடவுள் ஒருவரே நிலையானபொருள் என்று நினைத்து வாழ்வதாகும்
பத்தி என்பது ஆணவத்தை அழித்து அன்பை உயர்த்துவதாகும்
முடிவாக நம்மிடம் உள்ள வேண்டாத தீய குணங்களை அகற்றி, நற்குணங்கள் மட்டுமே அமைவதுதான் பத்தி என்பதாகும்.
தற்போது இறைவழிபாடு பெருகியிருந்தாலும் சமுதாயத்தில் நினைத்து பார்க்க முடியாத வன்முறைகள் நாளுக்கு நாள் பெருகி விட்டது. இதனால் உண்மையான பத்தியின்மையை இது காட்டுகிறது.
அருளைப் பொழியும் ஆலயங்கள், வியாபார கூடங்களாக மாற்றப்பட்டுவிட்டன. பொருளற்ற சடங்குகட்கு எல்லாம் தெய்வீக நியாயம் கற்பித்து விட்டார்கள் சுயநலவாதிகள். உண்மையான பத்தியினால் முத்தியடைவது எளிதாகும்.
திருச்சிற்றம்பலம்
நன்றி ! தமிழ் வேதம்

புருவத்தை திருத்த (சிரைக்க) கூடாது

Standard

புருவத்தை திருத்த (சிரைக்க) கூடாது

வாள்தடங்கண் / கண்ணும் புருவமும் இயற்கை அளித்த வரம்

புருவத்தை திருத்த (சிரைக்க) கூடாது

ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே / மாணிக்க வாசகர் திருவெம்பாவையில் அருளியது

ஐம்புலங்களைபற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்

அவை மெய், வாய்,கண்,மூக்கு, செவி ஆகியன. இவற்றால் உணர்வதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது, அதனால்தான் ” செப்புதற்கு அரிய செழுஞ்சுடர்மூர்த்தி, செல்வமே சிவபெருமானே என்கிறார்.

ஈசன் இப்படித்தான் இருப்பார் என்று யாரும் வர்ணித்து கூற முடியாது அதனால்தான் ” ஆதியும் அந்தமும் ஆகி நின்ற அருட்பெருஞ்சோதி” என்கிறார். அடுத்த தாக  ” ஆதியும் அந்தமும் இலலாத அருட்பெரும்சோதயை  யாம் பாடக் கேட்டேயும்  “வாழ்தடங்கண்” மாதே !”

(ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே /)

முகத்தில்உள்ள முக்கியமான ஐந்து உறுப்புகள் புருவம்,கண்,காது,மூக்கு, வாய் ஆகும். இந்த ஐந்திலும் முக்கியமானது கண், ஒருவரது க்ண் அசைவினால் அவர் செய்யும் காரியங்களை தெரிந்து கொள்ளலாம். “அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். கண்களைக் கொண்டு ஒருவர் உள்ளத்தில் என்ன நினைக்கிறார் என்பதை அவர் முகமே காட்டிக் கொடுத்துவிடும். கண் அசைவு பல கருத்துக்களை தெரிவிக்கும் ஆனால் கண்களுக்கு மேலே இருக்கும் புருவம்பண் அசைவின் கருத்தையே மாற்றி விடும். ஆகவே ஒரு முகத்திற்கு பருவம் தான் முக்கியம். ஆனால் புருவங்களில் பல வகை உண்டு. புரை புருவம்,வாள் புருவம், வில் புருவம் கோதை புருவம், புல்புருவம் கதை புருவம் வேல்புருவம் என்று 108 வகைகள் உண்டு. புருவத்தைக்கொண்டுதான் அவள் கயல்விழி,வேல்விழி என்று கவிஞர்கள் பெயரிட்டுள்ளனர்.

 

புருவத்தின் முக்கியத்துவம்

புருவங்களில் இத்தனை விதங்கள் உள்ளன. எக்காரம் கொண்டும் புருவத்தை சிரைக்க கூடாது.இதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் புருவத்தை சிரைக்கக் கூடாது. என்கிறார் அகத்திய முனி

“அகமது குளிர்ந்து தானாய் ஆகும்.ஆக்ஞையில் நின்றிருக்கும் நரம்பு ரகசியங்கள் எல்லாம் புருவத்தின் தீட்சண்யத்தால் தான் தடுத்து ஒளி அடக்குதே ” என்கிறார் அகத்தியர்

இது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆகவே புருவத்தை கோடு மாதிரி அழகான புருவமாக ஆக்க வேண்டாம். பெண்கள் இவ்வாறு திருத்தினால் அவர்களுடைய கணவர்களுக்கு ஆயுள் குறையும். அதனால் துன்பம் தான் வரும்.ஆண்கள் புருவத்தை திருத்தினால் அவர்களின்தாயின்ஆயுள் குறையும். மேலும் புருவத்தை திருத்துகின்ற பெண்கள் காது, மூக்கு போன்ற இடங்களில் வைரக்கற்கள் அணியக் கூடாது. இது தெய்வீக சட்டம். மற்றும் சித்த ரகசியம் ஆகும். புருவத்தை சிரைத்து வைரத் தோடு போடுகின்ற பெண்களின் கண் பார்வை பாதிக்கப்படும் என்கிறார் மகா முனிவர்

நம்முடைய புருவம் அவரவர் முன்வினைப்படி அளிக்கப்பட்டு ள்ளது. ஏனென்றால் ஆக்ஞா தீட்சை கொடுக்கின்ற சுடரின் தன்மை புருவத்தினால் நம் கண்களால் தாங்கும் அளவிற்கு நிலை செய்யப்படடு வெளி வரும் எனவே வில் போன்று இருக்க வேண்டம்என்று புருவத்தை சிரைத்து அழகு தீட்டாதீர்கள். இயற்கையாய் கொடுத்த விஷயங்களை செயற்கையால் மாற்றாதீர்கள். அழகாக ஆவதற்கு பதில் விகாரமாக ஆகி விடுவீர்கள்.இயற்கை அளித்த வரபிரசாதம் செயற்கையாக்கி துன்பப்படாதீர்கள். இது பலருக்கு தெரியும் தெரியாதவர்கள் அவசியம் தெரிந்து கொண்டதோடு மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

திருச்சிற்றம்பலம்

படித்ததில் பிடித்தது நன்றி; ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சுவாமிகள் அவர்களின் சித்தர்கள் அருளிய திருவெம்பாவை விளக்கம்

தொகுப்பு வை.பூமாலை, சுந்தரபாண்டியம்