ஆனி திருமஞ்சனம்.

Standard

நாளை (24.06.15) – ஆனி திருமஞ்சனம்.

கோடையின் கடும் வெப்பம் தணிந்து இதமான தட்பவெப்பம் துவங்குவது ஆனி மாதம் தான். ஆகவே அகில உலக நாயகனாகிய சிவபெருமானை குளிர்விக்கும் பொருட்டு, வெம்மையின் நாயகனாகிய சூரிய பகவானின் ஆதிக்கம் பொருதிய உத்திர நட்சத்திரத்தன்று அவருக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

மேலும், பெருமானின் திருமேனி குளிர்ந்தால் அண்ட, சராசரமும் குளிர்ந்து, காலம் தவறாமல் மழை பொழிந்து, பயிர்கள் நல்ல முறையில் விளைந்து உலகை வாழ்விக்கும் என்பது ஐதீகம்.

சிவ பெருமான் கோவில்களில் 6 கால பூசைகள் நடப்பது முறை. ஆனால் இங்கே சிதம்பரத்தில் நடராஜராக இருக்கும் பெருமானுக்கு தினமும் அபிஷேகம் இல்லை. வருடத்திற்கு 6 முறை மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.

மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள். ஒரு நாளிலே வைகறை, காலை, உச்சி, மாலை,இரவு, அர்த்தஜாமம் ஆகிய ஆறு பொழுதுகள் உண்டு. இந்த வகையில் தேவர்களுக்கு :

• வைகறை – மார்கழி மாதம்.
• காலை – மாசி மாதம்
• உச்சி காலம் – சித்திரை மாதம்
• மாலை – ஆனி மாதம்
• இரவு – ஆவணி மாதம்
• அர்த்த ஜாமம் – புரட்டாசி மாதம்

இந்த ஆறு அபிஷேகங்களையும் குறிக்கும் விதமாகத்தான், கோவில்களில் தினமும் இறைவனுக்கு ஆறுகால பூஜைகள் நடத்தப்படுகின்றன. சில சிவன் கோவில்களில் மட்டுமே ஆறுகால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

ஆண்டுக்கு ஆறுமுறை நடைபெறும் இந்தசிறப்பு அபிஷேகங்களில், மார்கழி மாத திருவாதிரை அபிஷேகமும், அடுத்ததாக ஆனிமாத திருமஞ்சன அபிஷேகமும் சிறப்பு மிக்கதாக உள்ளது.

சிதம்பரத்தில் நடராஜ பெருமானும், சிவகாமி அம்மையும், ஆண்டிற்கு இருமுறை மட்டுமே சிற்சபையை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். மார்கழி, ஆனி மாத மகோற்சவ புண்ணிய காலங்களில் நடைபெறும் ரத உற்சவத்தன்றும், மறுநாள் தரிசனத்தன்றும் மட்டுமே அம்மையப்பன் இருவரும் சிற்சபையை விட்டு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.

ஆலய விசேஷங்கள் :

ஆனி திருமஞ்சன தினத்தன்று, தில்லை நடராஜப் பெருமானின் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறும். அதன் பிறகு, இறை மூர்த்தங்களை திருக்கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்வார்கள்.

100 தீட்சிதர் பெருமக்களால் ஏக கால லட்சார்ச்சனை நடைபெற்று அதன் பின்பு, சுமார் 2 மணி நேரத்திற்கு பெருமளவிலான பொருட்களால் மகா அபிஷேகம் விசேஷமாக நடைபெறும். அதன் பின்னர் நிறைவாக, பலவித மலர்களால்
புஷ்பாபிஷேகமும் நடத்தபெறும்.

அதன் பின்னர், மகா தீபாராதனை ஆன பின், அம்மையும், அப்பனும் ஆனந்த நடனம் புரிந்தவாறே, சித்சபைக்கு எழுந்தருள்வதை காணக் கண் கோடி வேண்டும்.

சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் வழிபடப்படுகிறார். அருவம் என்பது உருவமற்றநிலை, உருவம் என்பது கண்ணுக்குத் தெரியும் வடிவநிலை, அருவுருவம் என்பது உருவமும் அருவமும் கலந்த நிலை.

இம்மூன்று நிலைகளும் உள்ள தலமாக சிதம்பரம் உள்ளது. அருவநிலைக்கு சிதம்பர ரகசியமும், உருவநிலைக்கு நடராஜரும், அருவுருவ நிலைக்கு மூலவர் மூலட்டானேஸ்வர் லிங்க வடிவிலும் இங்கு அமைந்துள்ளனர்.

இதனை தரிசிப்பவர் வேண்டும் வரங்களையும், பிறவி பயன்களையும், பெரும் புண்ணியங்களையும் அடைவர் என்று பல்வேறு புராண நூல்கள் தெரிவிக்கின்றன.

பூஜை முறை :

புனிதமும், மகத்துவமும் நிறைந்த இந்த புண்ணிய தினத்தில், சிவன் கோவிலுக்கு சென்று இறைவனையும்,இறைவியையும் வழிபடுவது வாழ்வை சிறப்பாக்க வழிவகுக்கும்.

அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். இறையை வேண்டி நோன்பு இருப்பதும் நற்கதியை வழங்கும். கோவிலுக்கு செல்லமுடியாதவர்கள், வீட்டில் இருந்தபடியே, தங்கள் பூஜை அறையில் வைத்து இறைவனை வணங்கி, அவனது நாமத்தை போற்றியும் பாடலாம்.

இந்த தரிசனத்தை தில்லையில் காண இயலாதோர், தம் சித்தத்தையே சிவமாக்கி, மனமுருகி துதித்து வணங்கினாலும் ஈசனின் அருட்பேராறு நம்மை வந்தடையும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.

தில்லை அம்பல நடராஜா போற்றி !! போற்றி !!

ஓம் நமசிவாய

Advertisements

இறைவழிபாட்டில் தோத்திரங்களால் துதிப்பது

Standard

இறைவழிபாட்டில் தோத்திரங்களால் துதிப்பது
இறைவழிபாட்டில் வேதங்களில் கூறும் மந்திரங்களால் ஜெபித்தாலும், அபிசேக ஆராதனைகள் செய்தாலும், இறைவரை புகழ்ந்து பாடி தேவாரப் பதிகங்களால் பாடி வழிபாடு செய்வது போல் ஆகாது. இதன் தன்மை உணர்ந்து தான் சமயக்குறவர்கள் மற்றும்சமய ஆர்வர்களால் தோத்திரப்பாடல்கள் தோன்றியது . இதன் கருத்தைக் கொண்டே நாவுக்கரசர் சுவாமிகள் ” சலம்பூவோடு தூபம் மறந்தறியேன் தமிழோடு இசை பாட மறந்தறியேன் ” என்கிறார். இதுபோன்று ஞான சம்பந்தரும் தோத்திரங்கள் பல சொல்லி வழிபாடு செய்வதை தனது பதிகங்களின் பாடல்களில் தன் பாடல்களை தோத்திரங்களாக பாடுவதால் பயன் விளைவிக்கும் நோக்கமாக அடியார்களுக்கு பயன் படவும் நல் அருள் வழங்கவும் இறைவனிடமே அன்புடன் வேண்டி வார். அடியார்களுக்காக நால்வர்களால் தோற்றுவித்ததே தேவாரப்பாடல்கள். இந்த தேவாரப்பாடல்களை நமக்காக வேண்டுதல்களாக முன் வைத்து அருள் செய்யுமாறு ஆனையிடுவார் நம் ஞானசம்பந்தர் பெருமான்
நம் துன்பத்திற்கு காரணமானவை நாம் செய்த முன் வினையே என்று அறிந்து நாம் அதிலிருந்து விடுபட முயற்சிக்காது நம் குற்றமே. அன்போடு மலர் பறித்திட்டு தொண்டு செய்து சிவபெருமான் திருவடியை போற்றி வதன் மூலம் முன் வினை நீங்குவதோடு செய்வினையும் தீண்டாது என்பது உண்மை. நம்முடைய திருமுறை தேவாரப்பாடல்களில் பெரும் பாலான பதிகங்களில் வினை நீக்கம் பற்றியே அருளப்பட்டவை. வினை கழிப்பதற்கு என்ன செய்வது என்று அருளாளர்கள் குறிப்பிட்டுள்ளார், அது கைவினை செய்து கழல் போற்றுவதாகும், கைவினை என்பது திருக்கோவில்களில் அலகிடுதல், மெழுகுதல், பூப்பறித்து மாலையாக்குதல், தேவாரப்பாடல்கள் பாடி மனமுருக வேண்டுதல்,

நாம் செய்த தீவினைப்பயன்களால் நவக்கோள்கள் நம் தீவினைப்பயன்கள் நம்மை கெடு விடுவிளைவிக்கும், இதன் பொருட்டு திருஞானசம்பந்தர் ” வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் ” என்று கோளாறு பதிகத்தில்
” ,,,,,, தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியா வண்ணம் உரைசெய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆனை நமதே ” என்கிறார்,
கோளாறு பதிகம் பாடும் அடியார்கள் செய்த எந்த தீவனையானலும் அவர்களுக்கு எந்த வித கெடுதலும் நேரக்கூடாது என்று இறைவன் மீது ஆணை என்கிறார்,
இது போல் திருக்கோளிலி பதிகத்தில் நவக் கோள்களால் ஏற்படும் துன்பம் நீங்க,
” …… சம்பந்தன் வண்தமிழ் கொண்டு
இன்பமர வல்லார்கள் எய்துவர்கள் ஈசனையே ” என்கிறார்

சனிக்கிரக தோசம் – சனி தாக்கத்தில் விடுபட பச்சைப் பதிகம் திருநள்ளாறு ஈசனிடம் வேண்டும் சம்பந்தர்
” ………. ஞான சம்பந்தன் நல்ல
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார்
உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே ” என்கிறார்.

இடர் நீங்கி இன்பம் பெற,
“…… ஞான சம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே” என்கிறார்.

செய்வினை தீவினை நீங்க.
திரு நீலகண்டப் பதிகம் தீக்குழித் தீவினை
” … ஞான சம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடு ம் கூடுவாரே” என்கிறார்

நோய் நீங்கி, நல்லவராய் வாழ.
” …. ஞான சம்பந்தன் சொன்ன தமிழ்மாலை
கோலத்தாற் பாட வல்லார் நல்லாரே ” என்கிறார்

” நீரார் சடையானை நித்தர் ஏத்துவார்
தீரா நோயெல்லாந் தீர்தல் திண்ணமே”

” ……. சிற்றம்பலம் ஏத்த மாணா நோயெல்லாம் வாளா மாயுமே “. எனவும் இதனால்

” … சிற்றம்பலம் மேய நட்டப் பெருமானை நாளும் தொழவோமே” என்கிறார்.
திருச்சிற்றம்பலம்

நற்றுணையாவர் நமசிவாயர்

Standard

நற்றுணையாவர் நமசிவாயர்
சிவபெருமானார் நல்துணைவராய் இருந்து நம்மைக் காத்தருளுவார் என்கிறார் திருநாவுக்கரசர் சுவாமிகள். இதற்கு நாம் செய்ய வேண்டியவை யாவை என்பதைச் சிந்திப்போம்.
“உற்றுணர்ந்து உருகி யூறி உள்கசிவுடையவர்க்கு
நற்றுணை யாவர் போலும் நனிபள்ளி அடிகளாரே ” திருமுறை 4 பதிகம் 70

இறைமையை உணர்வது என்பது அனுபவம் எனலாம். நாம் பேருந்தில் பயணம் செய்வதற்கு செல்கிறோம், அந்த குறிப்பிட்ட வண்டி சற்று முன்தான் புறப்பட்டுச் சென்றுவிட்டது என அறிகிறோம், உடனே வருத்தமும் அடைகிறோம், மறுநாள் செய்தித்தாள் மூலம் அக்குறிப்பிட்ட வண்டி விபத்திற்குள்ளாகியது என்பதை அறிகிறோம். இப்போது இறைவருடைய கருணைதான் நம்மைத் தடுத்து நிறுத்தியது என்று உணர்கிறோம, உணர வேண்டும்.
இதைப்போல நம்வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் இறையருளை உணர வேண்டும். இப்படி உணர்ந்து உணர்ந்து உள்ளத்தில் ஒரு நெகிழ்வு ஏற்பட வேண்டும். உள்ளம் உருகுதல் என்கிறார் நாவரசர், உள்ளம் மென்மையாக வேண்டும். இப்படி பல நாட்கள் பழகிப்பழகி இறைவருடைய அளப்பருங்கருணையை நினைத்து நம்மையும் அறியாமல் கண்ணிகளில் நீர் பெருகுவதை ” கசிதல்” எனலாம், இத்தகைய உள்ளம் உடையவர்கட்கு நல்லதுணையாய் இருந்து இறைவர் காப்பார், இதே கருத்தினைத் திருவாலங்காட்டு பதிகத்தின் முதல் பாடலிலும் கூறியுள்ளதைக் காணலாம்.
” உள்ளுளே உருகி நின்று அங்கு உவப்பர்க்கு அன்பர் போலும்” த.வே, 4, பதிகம் 68 பாடல் 1
உள்ளம் உருகுதல் என்பது தான் என்ன? உலோகங்கள் போல உருக்க முடியாது. பேராசை, காத்தல் (மறைத்தல்) பொய், புறங்கூறல், ஏமாற்றுவது (வஞ்சனை) கடுங்கோபம், உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுதல் களவு முதலிய குணங்கள் நிறைந்த உள்ளம் கடினமாக இருக்கும். இத்தகைய உள்ளம் உடையவர்கட்கு இறையருள் கிடைக்காது என்கிறார் நாவுக்கரசர் .

” வஞ்சகர்க்கு அரியர் போலும் மருவினோர்க்கு எளியர் போலும் ………. 4- 66- 7
” வஞ்சர் சிந்தையுட் சேர்விலாதார்” 4- 71 – 8
“கரவாடும் வன்நெஞ்சர்க்கு அரியானை ” 4-71 – 1
“பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி 6-56-5

இத்தகைய வேண்டாக் குணங்கள் அத்தனையும் விட்டோழிக்க வேண்டும். இதற்கு அப்பர் சான்றோர்களுடன் மட்டுமே சேர வேண்டும் என்கிறார்
” வென்றிலேன் புலன்கள் ஐந்தும்
வென்றவர் வளாகம் தன்னுள்
சென்றிலேன் ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன்” 4-78-1

சான்றோர்களுடன் சேரவில்லை அல்லது அவர்களுடைய தொடர்பு இல்லை என்றால் நேர்மையான வாழ்க்கை வாழ்வது என்பது கடினம்தான்
இரண்டு பேர் சேர்ந்தால் பிறரைப் பற்றி புறங்கூறுவது என்பது உலகில் இயல்பாக உள்ளது. என்கிறார் அப்பர்.
“பேச்சொடு பேச்சு கெல்லாம்
பிறர்தமைப் புறமே பேசக்
கூச்சிலேன் ஆத லாலே
கொடுமையை விடுமாறு ஓரேன்
நாச்சொல்லி நாளும் மூர்த்தி
நன்மையை யுணர மாட்டேன்” 4-76-6
பிறர் இல்லாத சமயத்தில் அவரைப் பற்றி அவதூறு பேசுவது என்னும் கொடிய செயலை விட்டுவிட்டு சிவபெருமானாருடைய பெருமைகளை சொல்லி நலம் பெறலாம். என்று மாற்று வழியையும் கூறியுள்ளதை கண்டு இன்புறலாம். அவனே அவனே என்பதை விட்டுவிட்டு சிவனே சிவனே என்று சொல்லுங்கள் நன்மைகள் பல பெறலாம். நற்றுணையாவர் நனிபள்ளி அடிகளார்.
திருச்சிற்றம்பலம்

ஆதி சித்தர்கள்

Standard

ஆதி சித்தர்கள்
பதினென் சித்தர்கள்வரலாற்றில் சித்தர்களுக்கெல்லாம் ஆதியாய், தீட்சை பெறாத சித்தர்களுக்கெல்லாம் மூலகாரணமாக காரணமானவர்கள் குரு தட்சணாமூர்த்தி, சுப்பிரமணிய சித்தர், நந்தி தேவர் ஆகிய மூவர்கள், இவர்கள் சித்தர் பரம்பரையனர் அல்லர், சித்தர்கள் தோன்றுவதற்கு மூல காரணமானவர்கள். இவர்கள் பதினென் சித்தர்கள் எண்ணிக்கையில் சேராதவர்கள்.
1. குருதட்சணாமூர்த்தி : இவர் ஆதியும் அந்தமும் ,அருவமும், உருவமும், அருவுருவமும் அல்லாத ஞான மயமான மூலப்பொருளின் வெளிப்பாடே ஆவர், இவர் குரு தட்சணாமூர்த்தி வடிவத்தில் முதல் ஞானாசிரியராக வெளிப்பட்டு சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் கல்லால மரத்தடியில் மோன நிலையில் இருந்து சூன்ய மயமான சுத்த பரஞானத்தை சொல்லாமல் சொல்லி புரிய வைத்தே பிரபஞ்சத்தின் முதல் உபதேசமாகும். இவர் சித்தர் பரம்பரை தோன்றுவதற்கே முதல் வித்திட்டவர் ஆவார்.
சிவபரம்பொருளின் முதல் அவதாரமே குருதட்சணாமூர்த்தி, இவர் எட்டு சீடர்களுக்கு ஆன்மீக ஞானத்தை உபதேசம் செய்திருக்கிறார், நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரம பாதர், திருமூலர் என்று திருமந்திர பாடல் வாயிலாக நாம் அறிய திருமூலரே கூறியுள்ளார், பாடல் 68,
நந்தி அருள் பெற்ற நாதரை நாடின் …………. என்னோடு எண்பருமே ”

2, சுப்பிரமணிய சித்தர்: சிவனாரின் தவஞான நிலையில் ஆக்ஞை பீடமான அவருடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப பொறிகளாக வெளிப்பட்ட ஞான ஒளி விளக்கே சுப்பிரமணிய சித்து. பஞ்ச முக சிவத்தின் ஆக்ஞை மையத்திலிருந்து பிரபஞ்ச ஆற்றலின் உன்னத நிலையான ஆறுமுக சிவமாக இந்த சித்து வெளிப்பட்டது. இந்த சித்து மனித இதயமான அகத்திற்கு உணர்த்திய உன்னத ஞானமே சுப்பிரமணியஞானம். ஒரு உண்மை குரு முகமாக இந்த ஞானத்தை ெபெறுபவர்கள் யாவருமே அகத்தியர்கள்தான். அகத்தியம் என்ற சொல் ஒரு காரணப் பெயர், அதை அகம் – தீ – அர் என பிரித்தால் அது ஞானத்தீயையே இதயமாக கொண்டவர் என்று பொருள் படும். இந்த அகத்தீயை தன்மயமாக கொண்டவர் சுப்பிரமணிய சித்து. இந்த காரணப் பெயர் சு – பிரம்ம – மணி – அர் என பிரிந்து ” தூய பரவெளி முழுவதும் ஊடுருவி நிறைந்துள்ள இரத்தின மயமான ஞானப் பேரொளியாக உள்ளவர் என்று பொருள் படும். இவரது அகத்தீயை முழுவதுமாக உள்வாங்கி எங்கும் பிரதிபலித்து வரும் பண்பின் உருவமாக வெளிப்பாடே அகத்தியர். அகத்தியம் என்பது ஒவ்வொரு மனிதனின் உண்மையான ஆன்ம தரிசனமே ஆகும். இதுவே மகா நட்சித்திரமாக ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. ஆகவே அகத்தியர் என்ற முனிவர் – சித்தர் சுப்பிரமணிய ஞானத்தை முழுமையாக தெரிய வைப்பதே இந்த அகத்தியர் வரலாறு என்பதையும் உணரலாம்.

3, நந்தி தேவர் : சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு நேர் எதிரில் லிங்கத்திற்கு சம உயரத்தில் லிங்கத்தையே பார்த்த வண்ணம் நந்தி தேவர் அமர்ந்திருப்பார். நந்தியின் அனுமதி பெற்றுத்தான் சிவதரிசனம் செய்யவேண்டும் என்பதும், நந்திக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் நந்திதேவனை மறைத்து நின்று சுவாமி தரிசனம் செய்யக் கூடாது என்பதும் சைவ மரபு. காரணம் நந்தி சிவத்திடமிருந்து பிரிக்க முடியாத ஓர் அங்கம் என்பதே. இடைவிடாது வாசி ஓட்டம் (உள் சுவாசம், வெளிச் சுவாசம் ) நடைப் பெற்றுக் கொண்டுள்ளது. சிவமும் நந்தியும் பிரிக்க முடியாத ஒன்று என்று காண்க.
ஆதிகுரு தட்சணாமூர்த்தியான பரம்பொருளிடம் முதலில் தீட்சை பெற்றவர்கள் எண்மர், அவர்களில் நந்திகள் நால்வர் என திருமூலர் குறிப்பிடுகிறார். அந்த நால்வர் முறையே சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர் என்பவராவர். இந்த நந்திகள் நாலவரும் குருதட்சணாமூர்த்தியிடம் மோகன தீட்சை பெற்றவர்கள். இவர்கள் நால்வரில் நந்திதேவர் ஒருவரல்லர் , என்பதை உணரவேண்டும். இவர் திருக்கயிலாய பரம்பரையை சேர்ந்தவர், சிவனாருக்கு வாயில் காப்பவராகவும், வாகனமாகவும் இருந்தவர் இந்த நந்தியம் பெருமான்.
தோற்றம்: தஞ்சையிலுள்ள திருவையாறு தலத்தில் சிலாத முனிவர் என்பவர் நந்தியம் பெருமானின் தந்தையாவார். அவருடைய மனைவி சாருட்சன என்ற சித்ரவதி என்ற அம்மையார் . இந்ந தம்பதியருக்கு நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லை. இத்தருணத்தில் சப்தரிஷிகள் இவருடைய ஆசரமத்திற்கு உணவருந்த வந்தனர், அப்போது சிலாத முனிவருக்கு மகப்பேறு இல்லாததை அறிந்து குழந்தைச் செல்வம் இல்லாத ஆசரமத்தில நாங்கள் உணவருந்துவதில்லை என கூறி உணவருந்தாமலே திரும்பிவிட்டனர் இது கண்டு தம்பதியர் மிக மனம் வருந்தி தங்களுக்கு மகப்பேறு வேண்டி சிலாத முனிவர் கடும் தவம் மேற்கொண்டார், இவரின் தவத்தினை கண்டு மனம்இரங்கிய சிவனார் ” முனிவரே உங்களுக்கு கருவில் இருந்து பிறவாத திருமகன் ஒருவன் கிடைப்பான் அவன் எனக்கு சமமானவன் மரணமில்லாதவன் என்னை வழிபடுகிறவர்கள் அவனையும் வழிபடுவார்கள் “என்று கூறி மறைந்தார். அதன்படி சிலாத முனிவர் ஒருநாள் பூமியை தோண்டும் போது ஒளிவடிமான பிரகாசிக்கும் பேழையில் நந்தி தேவர் கிடைத்தார், நந்தி தேவருக்கு எட்டு வயது ஆகும் போது மரணமில்லாத வாழ்வு பெற எட்டு கோடி ஜபம் செய்து அழிவில்லா வாழ்நாளை பெற்றதுடன் கயிலையில் சிவத்தொண்டு செய்யவும் காவலனாகவும் இறைவருக்கு வாகனமாகவும் இருக்கும் வாய்ப்பு பெற்றார், இவரே சிவனாரின் நேர் மெய் காவலனாகவும் இறைவரின் சம அந்தஸ்து பெற்று சிவனடியார்களுக்கு இன்றும் அருள்பாலித்து வருகிறார்.
திருச்சிற்றம்பலம்
நன்றி : பதினென் சித்தர்கள் வரலாறு
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

இந்து மதம் கூறும் வழிபாடும் , வழிமுறைகளும்

Standard

இந்து மதம் கூறும் வழிபாடும் , வழிமுறைகளும் ( way to successful prayer)

பகவானின் அருள் பெற நமக்கு தேவையான தகுதிகள்
அ, பகவானிடத்தே மனதை வைத்தல்
ஆ. பகவானின் அருள் பெற மந்திரம் கூறி தியானித்தல்
இ. பகவானையே அடைக்கலம் அடைதல்
ஈ. இந்துமதம் கூறும் சின்னங்கள் தறித்தல்

கீதை கூறும் புண்ணிய செயல்கள்
1, வழிபாடு. 2. தானம். 3. தவம் ஆகிய இம்மூன்றும் புண்ணிய செயல்களும் மனித வாழ்க்கையை உயர்வடையச் செய்யும்

வாழ்க்கையில் வெற்றி பெற நமக்கு பிடித்த கோயிலை மனதில் நினைத்து அனுதினமும் கூற வேண்டிய மந்திரங்கள்
” ஓம் நமசிவாய வாழ்க ! ஓம் சச்சிதானந்தம் வாழ்க ! ஓம் சிவசிவ ஓம் ! ” மற்றும் சக்தியை போற்றும் காயத்திரி மந்திரங்கள்

இறை மந்திரத்தின் மகிமை

இந்து மதம் ” ஸநாதன தர்மம் ” என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் பொருள் அழிவில்லாத அறம் என்பதாகும். இது மட்டுமல்லாது இந்து மதம் சன்மார்க்கம், தவநெறி, மெய் நெறி, அருள் நெறி, திருநெறி என்ற பெயர்களாலும் சிறப்புடன் அழைக்கப்படுகின்றது.

அகங்காரம், காமம்., பேராசை, பற்று இவற்றை விலக்கி சுகதுக்கங்களை நீக்கி ஆத்ம ஞானத்தில் தியானித்து ஆன்மாவின் உண்மைத் தோற்றத்தை அறிந்து முக்தி பெற இந்து மதம் உதவுகிறது.

மந்திரம் கூறி துவங்கும் வேலை வெற்றியாகும், அத்துடன் தொடர்ந்து மந்திரம் கூறி வந்தால் பிரச்சனைக்ள நீங்கும். அற்புதங்கள் நடக்கும். எனவே தோத்திரங்கள் இன்றி வழிபாடு சிறக்காது.

இந்து மதம் கூறும் மூன்று விதமான வழிபாடுகள்
1. சகுண நிராகரம் – உருவ வழிபாடு
2. நிர்குண நிராகரம் – ஏகத்துவ வழிபாடு ( எங்கும், எதிலும் இறைவனைக் காண்பது )
3. சகுண சாக்காரம் – அவதார பருசர்களை வழிபடுவது

உலகில் உள்ள நான்கு வித பக்தர்கள் யார்?
1. முக்தியை லட்சியமாக கொண்ட ஞானி
2. குடும்ப வாழ்க்கை உயர தியானிக்கின்ற பக்தன்
3. நோய்கள் நீங்க பிராத்தனை செய்பவர்கள்
4. வசதி வாய்ப்புகளுக்காக யாசிப்பவர்கள்

மனிதர்களில் சிறந்தவர்கள் யார்?
நல்ல கருத்துக்க் நல்லவர் வாயிலாக வரும் பொழுது இழந்த பொருள் மீண்டும் வந்து விட்டதாக நினைத்து மூளையில் பதிவு செய்து பின் பற்றுபவர், நமது ஐம்புலங்கள் வழியாக வரும் இன்பம் மற்றும் துன்பங்களை நீக்க , ஐம்புலங்களின் கதவை மூடிக்கொண்டு உள்ளத்தில் இறைவனை பார்க்கும் தன்மையவன்.

இறைவனிடம் இருந்து ஆறு விதமான நன்மைகளை பெறும் முறை
சிவன் என்பவன் இறைவன் . இறைவனுக்கு ஆறு குணங்களை உடையவர் என்று பொருள் உண்டு. இறைவனாகிய பகவானை உள்ளத்தில் வைத்து அடிக்கடி பூசிப்பவர்களுக்கு அவரின் ஆறு குணங்களாகிய ஞானம், ஐஸ்வரியம், சக்தி. பலம், வீரியம், தேஜஸ் என்பன சேர்ந்து விடும்.

சிவ தர்மம் என்பது யாது?
1, கொல்லாமை. 2. பழிக்கு அஞ்சுதல். 3. பொறுமை. 4. நலம்புரிதல். 5. உள்ளன்புடன் இருத்தல்.
6. இயன்றவரை ஈதல் பண்புடமை. 7, சிவனாகிய சச்திதானந்த்தை அர்ச்சனை செய்தல். 8. புண்ணிய காரியங்கள் செய்தல். 9. சிவனை தியானித்தல்,

ஞானம்
” உடம்பினை பெற்ற பயனாவதெல்லாம்
உடம்பினுள் உத்தமனைக் காண்” என்று ஒளவையார் கூறுகிறார். அதாவது இந்த பூமியில் பிறந்ததே உடம்புக்குள் உள்ளத்தில் இருக்கும் ஆனந்த சபையில் உத்தமராகிய இறைவனை தியானத்தால் கண்டு உயர்வதற்கே ஆகும்.
” நெருப்பை புகை மூடுவது போல
கண்ணாடியை அழுக்கு மூடுவது போல
கருவை கருப்பை மூடுவது போல
ஞானத்தை காமம் மூடியிருக்கிறது ” பகவத் கீதை

இந்த காமத்திரையை விலக்குவதற்கு மனதில் மூலமந்திரத்தை உச்சரித்து அனுதினமும் பகவான் மேல் பக்தி செலுத்தி வந்தால் , காமம் அழிந்து ஞானம் பிறக்கும்.

இந்து மக்களின் கடமைகள்

1, தினம் காலையில் மந்திரம் கூறி தியானப் பயிற்சி செய்து அன்றாட வேலைகளை கவனித்தல்
2. யோகாசன பயிற்சி செய்தல்
3. காரம், புளிப்பு. எண்ணெய் குறைவான உணவை அளவோடு உட்கொளல்
4. ஓய்வு நேரங்களில் சிறிது ஆன்மிக நூல்கள் படித்தல், அல்லது ஆன்மிக சொற்பொழிவு கள் கேட்டல்
5. அடிக்கடி மந்திரம் கூறி பகவானை தியானித்தல்
6. தன் குற்றம் கண்டு பகவானிடம் மன்னிப்பு கேட்டல்
7. சமயத் தொண்டில் தன்மை ஈடுபடுத்தி உழவாரப் பணிகள் மேற்கொண்டு புண்ணியம் சேர்த்தல்

இறைவனை அறிவதையும் அடைவதையும் யார் லட்சயிமாக கொண்டிருக்கிறாரோ, அவரை ஒருபோதும் இறைவர் கைவிட மாட்டார். நமது லட்சியத்தில் காட்டுமு உறுதியே, வெற்றியின் ரகசியம். பகல் பொழுதை பகவானை நினைக்கும் பயனுள்ள பொழுதாக நாம் மாற்றிக் கொண்டால், இரவு பொழுது இனிமையாகத்தான் இருக்கும்.

இடைப்பட்ட வாழ்க்கையில் கிடைத்திட்ட பொருட்கள் எல்லாம் செல்வமாகி விடாது. ஆனால் உள்ளத்தில் இறை நினைப்போடு இருப்பதே பெரும் செல்வம் என்பதை ஒருபோதும் மறவாதீர்

திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு

http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.