சுந்தரர் பெருமானார்

Standard

சுந்தரர் பெருமானார், குருபூஜை

சேக்கிழாரின் பெரியபுராணத்தில் சமயக்குறவர் நால்வர்களில் பெரியபுராணத்தின் கதாநாயகன் என்றும் இளைஞர் என்றும் வர்ணிக்கப்பட்ட சுந்தரர் ஒரு சிவலோகத்தில் சிவத்தொண்டராக இருந்து அவதார பருசராக இப்பூலகில் அவதரித்து இைறவனை அடையும் மார்க்கமான சகமார்க்கமாக சிவனை நண்பனாகக் கொண்டு அவரிடம் தான் வேண்டும் போதெல்லாம் வேண்டியவன பெற்று சிவனருள் பெற்றதை யாரும் அறிேவாம், ஆனாலும் அவரை குருவாகவும் அவருக்கு நண்பனாகவும் அடியாராகவும், இருந்து அவருடனே முக்தி பெற்ற இரண்டு நாயன்மார்களின் சிறு குறிப்பும் இத்துடன் விவரித்துள்ளேன்.

பெருமிழலைக்குறும்ப நாயனார்,
*****************************
மிழலைநாட்டிலே பெருமிழலை என்னும் ஊரிலே, சிவபத்தி அடியார் பத்திகளிற் சிறந்த பெருமிழலைக்குறும்ப நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்களைக் காணுந்தோறும் விரைந்தெதீர்கொண்டு வணங்கி, அவர்களுக்குக் குறிப்பறிந்து தொண்டு செய்பவர். அவர்களை நாடோறுந் திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டுந்திரவியங்களைக் கொடுப்பவர். அவர் சுந்தரமூர்த்தி நாயனாருடைய பெருமையை அறிந்து அவருடைய திருவடிகளை மனம் வாக்குக் காயங்களினாலே சிந்தித்துத் துதித்து வணங்குதலே பரமசிவனுடைய திருவடிகளை அடைதற்கு உரிய நெறியென்று அப்படிச் செய்து வந்தார். அதனால் அவர் அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமகாசித்திகளையும் அடைந்தார். அடைந்து ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஜபித்து வந்தார்.

இப்படி நிகழுங்காலத்திலே, திருவஞ்சைக்களத்திற் சென்று திருப்பதிகம்பாடுஞ் சுந்தரமூர்த்திநாயனாருக்குப் பரமசிவனுடைய திருவருளினாலே உத்தரகைலாசத்தை அடையும் வாழ்வு கிடைப்பதைத் தம்முடைய ஊரிலிருந்து கொண்டே யோகப் பிரத்தியக்ஷத்தால் அறிந்து; “சுந்தரமூர்த்திநாயனார் உத்தர கைலாசத்தை நாளைக்கு அடைய நான் பிரிந்து இங்கே வாழ மாட்டேன்” என்று நினைந்து, “இன்றைக்கு யோகத்தினாலே சிவபிரானுடைய திருவடியை அடைவேன்” என்று துணிந்து, யோகமுயற்சியினாலே பிரமரந்திரந்திறப்ப உடலினின்றும் பிரிந்து, திருக்கைலாசத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானுடைய திருவடியை அடைந்தார்.

கழறிற்று அறிவார் (சேரமான் பெருமான்) நாயனார்
**********************************************
மலைநாட்டிலே, கொடுங்கோளூரிலே, சேரர்குடியிலே பெருமாக் கோதையாரென்றும் பெயரையுடைய ஒரு சற்புத்திரர் சைவநெறி வாழும்படி அவதரித்தார். , சிவபெருமானுடைய திருவடியை அடைதல் வேண்டுமெனக்கருதி, இராஜபுத்திரருக்குரிய தொழில்களைச் செய்தலின்றி, திருவஞ்சைக்களமென்னுஞ் சிவஸ்தலத்தை அடைந்து, “பரமசிவன் சுவதந்திரர், நாம் பரதந்திரர்” என்று உணர்ந்து, சிவாதீனமாய் நின்று, தினந்தோறும் பிராம முகூர்த்தத்தில் எழுந்து, ஸ்நானம்பண்ணி அநுட்டானஞ் செய்து கொண்டு, திருநந்தனவனம் வைத்தல், பூக்கள் பறித்தல், திருமாலை கட்டல், திருவலகிடல், திருமெழுக்கிடல், திருப்பாட்டுப்பாடல் முதலிய த் திருத்தொண்டுகளைச் செய்வாராயினார்.

இப்படி நிகழுங் காலத்திலே, செங்கோற்பொறையன் என்னுஞ் சேரமகாராஜனுக்கு இது நித்தியம் இது அநித்தியம் என்கின்ற பகுத்தறிவும், அநித்தியமாகிய இம்மை மறுமை யின்பங்களின் வெறுப்பும், பிறவித்துன்பங்களும், அவன் செய்த புண்ணிய பலத்தினாலே தோன்றின. அவை தோன்றவே, நித்தியமாகிய மோக்ஷத்திலே ஆசை உண்டாயிற்று. அதனால் அவன் பிறவிக்குக் காரணமாகிய வீண் முயற்சிகளை விட்டு, கோக்ஷத்திற்குக் காரணமாகிய யோக முயற்சியைச் செய்யவேண்டுமென்று தெளிந்து, அரசியற்றுதலினின்று நீங்கி, தவஞ்செய்யும் பொருட்டுத் தபோவனத்தை அடைந்தான்.

மந்திரிமார்கள் சிலநாள் ஆலோசித்துத் தெளிந்து, திருவஞ்சைக்களத்திலே திருத்தொண்டுசெய்து கொண்டிருக்கின்ற அச்சேரர் மரபிற்கு முதல்வராகிய பெருமாக்கோதை யாரிடத்திலேபோய், அவரை வணங்கி நின்று, “இம்மலைநாட்டை நீரே முடிசூடி அரசியற்றல்வேண்டும்” என்று விண்ணப்பஞ்செய்ய; பெருமாக்கோதையார் “இவர்கள் வார்த்தை இன்பமயாகிய திருத்தொண்டுக்கு இடையூறாயிருக்கின்றது. சிவபத்தியிலே சிறிதும் வழுவாது அரசியற்றுதற்குத் திருவருள் உளதாயின், இதனை எம்பெருமானுக்கு விண்ணப்பஞ்செய்து அறிவேன்” என்று ஆலயத்தினுள்ளே பிரவேசித்து, சிவபெருமானை வணங்கி விண்ணப்பஞ்செய்து, அவருடைய திருவருளினாலே அவரிடத்தே வைத்த பத்திவழுவாது அரசியற்றுஞ் சத்தியையும், யாரும் யாவும் கழறினவைகளனைத்தையும் அறியும் அறிவையும், பாசமில்லாத மகாபராகிரமத்தையும் பெருங் கொடையையும், அரசருக்கு உரியபடை வாகனமுதலிய வெல்லாவற்றையும் கைவரப் பெற்று, நமஸ்கரித்துக்கொண்டு, புறத்தணைந்து, மந்திரிமார்களுடைய வேண்டுகோளுக்கு உடன்பட்டார். மந்திரிமார்கள் பெருங்களிப்புடையர்களாகி, அவரை நமஸ்கரித்தார்கள்.

கழறிற்றறிவாராகிய அப்பெருமாக்கோதையார், ஆன்மார்க்களெல்லாம் உய்யும் பொருட்டுச் சுபதினத்திலே சுபமுகூர்த்தத்திலே முடி சூடி, சிவாலயத்தை வலஞ்செய்து, சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து, யானை மேற்கொண்டு, கொற்றக்குடையும் வெண்சாமரமும் உரியவர்கள் தாங்க, மகா அலங்காரத்தோடு நகரிவலஞ் செய்தார். செய்யும்பொழுது, ஒருவண்ணான் தோளிலே உவர்ப்பொதி சுமந்துகொண்டு தமக்கு முன்னே வரக்கண்டு, அவனுடைய சரீரம் மழையினாலே கரைந்த உவர் ஊறப்பெற்று வெளுத்திருத்தலால், விபூதியை உத்தூளனஞ் செய்த சிவனடியாரது திருவேடம்போலுதலை உணர்ந்து, அந்த க்ஷணத்திலேதானே யானையினின்றும் இறங்கி பேராசையோடு விரைந்துசென்று, கைதொழுதார். அது கண்டவுடனே அவ்வண்ணான் மனங்கலங்கி, அவரை விழுந்து நமஸ்கரித்து, “அடியேனை யார் என்றுகொண்டது? அடியேன் அடிவண்ணான்” என்று சொல்ல; சேரமான் பெருமாணாயனாரும் “அடியேன் அடிச்சேரன். தேவரீர் திருநீற்றுவேடத்தை நினைப்பித்தீர். வருந்தாதே போம்” என்று சொல்லியருளினார். மந்திரிமார்கண் முதலாயினோரெல்லாரும் சேரமான்பெருமாணாயனாருடைய சங்கமபத்தி மிகுதியைக் கண்டு, ஆச்சரியமடைந்து, சிரசின்மேலே அஞ்சலி செய்து தோத்திரம் பண்ணினார்கள். சேரமான் பெருமாணாயனார் யானைமேலேறி, நகரியை வலங்கொண்டு மாளிகை வாயிலிலே புகுந்து, யானையினின்றும் இறங்கி மண்டபத்தை அடைந்து, இரத்தினசிங்காசனத்திலேறி, வெண்கொற்றக் குடைநிழற்ற, வெண்சாமரம் வீச, அரசர்கள் மலர்தூவி வணங்கித் துதிக்க, வீற்றிருந்தருளினார். இங்ஙனமிருந்து, மனுநீதிநெறியை நடத்தி, எண்ணிறந்த அரசர்கள் திறைகொணர அகத்தும் புறத்தும் பகையை அறுத்து, சைவ சமயம் அபிவிருத்தி யாகும்படி அரசியற்றுவாராயினார்.

இப்படி நிகழுங்காலத்திலே, பாண்டிநாட்டிலே மதுரையில் எழுந்தருளியிருக்குஞ் சோமசுந்தரக்கடவுள் தம்மை அன்பினோடும் இசைப்பாட்டினாலே துதிக்கின்ற பாணபத்திரருக்குப் பெருஞ் செல்வத்தைக் கொடுத்தருளுதற்குத் திருவுளங்கொண்டு, இரவில் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, “உனக்குப்பொன் இரத்தினம் பட்டாடை முதலியவைகளெல்லாவற்றையும் நீ வேண்டியபடி குறைவின்றித் தரும்பொருட்டு, நம்மேல் எப்பொழுதும் அன்புடையனாகிய சேரனுக்கு ஓலை தருவோம் தாழ்க்காமற்போய் வா” என்று அருளிச் செய்து,

“மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பானிற வரிச்சிற
கன்னம் பயில்பொழி லால வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்முப் படியெனப் பாவலர்க்
குரிமையி னுரிமையி னுதவி யொளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க
பண்பா லியாழ்பயில் பாண பத்திரன்
றன்போ லென்பா லன்பன் றன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே”

என்னுந் திருப்பாசுரத்தை வரைந்த திருமுகத்தைக் கொடுத்தருளினார்.

பாணபத்திரர் அத்திருமுகத்தைத் தலைமேற்கொண்டு, அப்பொழுதே புறப்பட்டு, மலைநாட்டிற்சென்று, கொடுங்கோளுரை அடைந்து, மாளிகைக்கு முன்வந்து, சேரமான் பெருமாணாயனாருக்கு அறிவித்தார். உடனே அவர் சிரசின் மேலே கைகுவித்து, மிகுந்த அன்பினோடுங் கண்ணீர் சொரிய எழுந்து மாளிகைக்குப் புறத்தில் வந்து, பாணபத்திரரைப் பல முறை வணங்கி, “சுவாமி! தேவரீர் அடியேனை ஒருபொருளென மதித்துத் திருமுகங் கொண்டு வந்தீரே” என்றார். அப்பொழுது பாணபத்திரர் சிவபிரானுடைய திருமுகத்தைக் கையிலே கொடுத்து வணங்க, சேரமான்பெருமாணாயனார் அதனை முடிமேற்கொண்டு கூத்தாடி, மொழி குழற, ஆன்ந்தவருவி சொரிய, பரவசராய்ப் பூமியிலே பலமுறை விழுந்தார். திருமுகத்தைப் பலதரம் வணங்கி, அதனை வாசித்து, திருவருளைத் துதித்து; மாளிகையினுள்ளே புகுந்து, மந்திரிமார்களை நோக்கி, “நம்முடைய குல மாளிகையில் இருக்கின்ற பண்டாரமுழுதையும் பொதி செய்து ஆளின்மேல் ஏற்றிக் கொண்டு வாருங்கள்” என்று ஆஞ்ஞாபிக்க; அவர்கள் ஏற்றிக் கொண்டுவந்து வணங்கினார்கள். சேரமான்பெருமாணாயனார் பாணபத்திரருக்கு அந்தத் தனங்களை வெவ்வேறாகக் காட்டி, “சுவாமீ! தேவரீர் இவைகளையும் யானை குதிரை தேர் காலாள் என்னுஞ் சதுரங்கங்களையும் அடியேனுடைய அரசையுங் கைக்கொண்டருளும்” என்று சொல்ல, பாணபத்திரர் தமக்குச் சேரமான்பெருமாணாயனார் தந்த தனங்களெல்லாவற்றையுங் கண்டு, மனமகிழ்ந்து, அதிசயித்து, அவரைநோக்கி, “சுவாமீ! அடியேன் எனக்கு வேண்டுவனவற்றை மாத்திரங்கொள்ளும் பொருட்டே சிவாஞ்ஞை அரசையும் அரசுறுப்பையும் தேவரீரே கைக்கொண்டருளும்” என்று சொல்லி வணங்கினார். சேரமான்பெருமாணாயனாரும் சிவாஞ்ஞையை மறுத்தற்கு அஞ்சி, அதற்கு உடன்பட்டார் பாணபத்திரர்தனங்களெல்லாவற்றையும் யானை குதிரை உள்ளிட்டனவற்றுள் வேண்டுவனவற்றையுங்கொண்டு, ஓர் யானைமேல் ஏறிக்கொண்டுபோனார். சேரமான்பெருமாணாயனார் பாணபத்திரருக்குப் பின் கண்ணீர் சொரிய, கைதொழுது கொண்டு செல்ல, பாணபத்திரர் நகர்ப்புறத்தில் அவரிடத்திலே விடைபெற்றுக்கொண்டு போய், மதுரையை அடைந்தார்.

சேரமான்பெருமாணாயனார், ஒருநாள் முன்போலப் பூஜாந்தத்திலே சபாநாயகருடைய திருச்சிலம்பொலி தமக்குக் கேளாதொழிய, மனமயங்கி, ‘அடியேன் யாது பிழை செய்தேனோ” என்று பொருமி “இனி இந்தத் தேகத்தினால் அடையும் பேரின்பம் யாது” என்று உடைவாளை உருவித் தமது மார்பிலே நாட்ட, சபாநாயகர் விரைந்து திருச்சிலம்பொலியைக் கேட்பித்தார். உடனே நாயனார் உடைவாளை அகற்றி நமஸ்காரம் பண்ணித் தோத்திரஞ்செய்து, “எம்பெருமானே! அத்திருவருளை முன் செய்யாதொழிந்தது என்னை” என்றார். அப்பொழுது சபாநாயகர் சைவசமயாசாரியராகிய சுந்தரமூர்த்தி நாயனாரை நினைப்பிக்கும் பொருட்டு, எதிர் நின்றருளாது, “வன்றொண்டனாகிய சுந்தரன் கனகசபையின் கண்ணே நமது ஆனந்த நிருத்தத்தை வந்து வணங்கிப் பதிகம் பாடுதலால், நாம் நின்று அதனைக் கேட்டு வரத்தாழ்த்தோம்” என்னுந்திருவாக்கை அருளிச் செய்தார். சேரமான்பெருமாணாயனார் “அடியார்களுக்கு இவர் அருளுங்கருணை இருந்தவாறு என்னை” என்று வியந்து கனகசபையை வணங்கி வன்றொண்டரையும் தரிசித்தல் வேண்டும் என்று விரும்பி, சுபதினத்திலே திருவஞ்சைக்களத்தில் எழுந்தருளியிருக்கும் கடவுளை வணங்கிக் கொண்டு, சேனைகளோடு புறப்பட்டுப்போய்ச் சிதம்பரத்தை அடைந்து, கனகசபையிலே திருநிருத்தஞ்செய்தருளும் சபாநாயகரை வணங்கி, சிவானந்தக்கடலுள் அமிழ்த்தி, பொன்வண்ணத்தந்தாதி பாடியருளினார். சபாநாயகர் அதற்குப் பரிசிலாகத் தமது குஞ்சிதபாதத்தினது திருச்சிலம்பின் ஓசையை எதிரே கேட்பித்தார். சேரமான்பெருமாணாயனார் காலந்தோறும் சபாநாயகரைத் தரிசனஞ் செய்து கொண்டு அத்திருப்பதியில் இருந்தார்.

சிலநாளாயினபின், சுந்தரமூர்த்திநாயனாரைத் தரிசித்து வணங்குதற்கு விரும்பிப் புறப்பட்டு, இடையில் உள்ள சிவஸ்தலங்களை வணங்கிக்கொண்டு, திருவாரூரை அடைந்து, தம்மை எதிர்கொண்ட சுந்தரமூர்த்திநாயனாரை நமஸ்கரித்து, அவரோடு திருக்கோயிற்சென்று, வன்மீகநாதரை வணங்கி, திருமும்மணிக்கோவைபாடி, பரவையார் வீட்டிலே போய், சுந்தரமூர்த்திநாயனாரோடும் இருந்தார். சிலதினஞ் சென்றபின், சுந்தரமூர்த்திநாயனாரோடும் திருவாரூரை அகன்று, வேதாரணியத்தை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து, திருவந்தாதி பாடினார். அதன்பின் பாண்டிநாட்டிற் சென்று, அங்குள்ள மதுரை முதலாகிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டு, சுந்தரமூர்த்திநாயனாரோடுந் திருவாரூருக்குத் திரும்பிவந்து, அவரோடுஞ் சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்தார். பலநாட்சென்றபின், சுந்தரமூர்த்திநாயனாரைத் தம்முடைய ஊருக்கு வரும்படி பிரார்த்தித்து, அழைத்துக் கொண்டு சென்று, தம்முடைய கொடுங்கோளுரை அடைந்து, அவரோடும் இருந்தார். ஒருநாள் சுந்தரமூர்த்திநாயனார் வன்மீகநாதரை நினைத்து உருகி, திருவாருருக்குப் போம்படி எழுந்துசெல்ல; சேரமான்பெருமாணாயனார் பிரிவாற்றாதவராகி, எழுந்து அவரைப் பின்றொடர்ந்து, போகாதபடி தடுத்து, அதற்கு அவர் உடன்படாமை கண்டு, மந்திரிகளைக் கொண்டு தம்முடைய திருமாளிகையில் உள்ள பண்டாரமுழுதையும் பொதிசெய்து ஆட்களின்மேலே ஏற்றுவித்து, சுந்தரமூர்த்திநாயனாருக்கு முன் செல்லும்படி அனுப்பி, அந்நாயனாரை விழுந்து நமஸ்கரித்தார். சுந்தரமூர்த்திநாயனார் சேரமான்பெருமாணாயனாரைத் தழுவி, விடைகொடுத்துச் சென்று, திருவாரூரை அடைந்தார். சுந்தரமூர்த்திநாயனாரிடத்திலே விடைபெற்ற சேரமான்பெருமாணாயனார் சுந்தரமூர்த்திநாயனார் மறவாத சிந்தையோடு, கொடுங்கோளுரிலே அரசு செய்து கொண்டிருந்தார்.

நெடுநாளாயினபின், சுந்தரமூர்த்திநாயனார் பின்னுங் கொடுங்கோளூருக்கு வந்து, சேரமான்பெருமாணாயனாரோடும் எழுந்தருளியிருந்தார். பலநாளாயினபின், ஒருநாள் சேரமான்பெருமாணாயனாரோடும் எழுந்தருளியிருந்தார். பலநாளாயினபின், ஒருநாள் சேரமான்பெருமாணாயனார் ஸ்நானம் பண்ணும்பொழுது, சுந்தரமூர்த்திநாயனார் திருக்கைலாசத்துக்குப் போய், சுவாமிதரிசனஞ்செய்து, திருக்கைலாசத்தினின்றும் சிவபெருமானால் அனுப்பப்பட்ட வெள்ளையானையின்மேல் ஏறி, தம்முடைய தோழராகிய சேரமான்பெருமாணாயனாரை நினைத்துக்கொண்டு சென்றார். சேரமான்பெருமாணாயனார் சுந்தரமூர்த்திநாயனாருடைய செயலை அறிந்து, அந்தக்ஷணத்தில் அருகிலே நின்ற ஓர் குதிரையில் ஏறிக்கொண்டு திருவஞ்சைக்களத்துக்குப்போய் வெள்ளையானையின் மேற்கொண்டு ஆகாயத்திற் செல்லுஞ் சுந்தரமூர்த்திநாயனாரை கண்டு, தாம் ஏறிய குதிரையின் செவியிலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதியருளினார். உடனே அந்தக் குதிரையானது ஆகாயத்திலே பாய்ந்து சுந்தரமூர்த்திநாயனாருடைய வெள்ளையானையை அடைந்து, அதனை வலஞ்செய்து அதற்கு முன்னாகச் சென்றது. சேரமான்பெருமாணாயனாருடைய படைவீரர்கள் குதிரையிற்செல்லும் அந்நாயனாரைத் தங்கள் கண்ணுக்குப் புலப்படும் எல்லை வரைக்கும் ஆகாயத்திலே கண்டு, பின் காணாமையால், மிகுந்த திடபத்தியினாலே உருவிய உடைவாட்களினால் தங்கள் தங்கள் தேகத்தை வீழ்த்தி, வீரயாக்கையைப் பெற்றுப்போய், சேரமான்பெருமாணாயனாருக்கு முற்பட்டு, அவரைச் சேவித்துக் கொண்டு சென்றார்கள். சேரமான்பெருமாணாயனாரும் சுந்தரமூர்த்திநாயனாரும், திருக்கைலாசத்தின் தெற்குவாயிலுக்கு முன் போனவுடனே, குதிரையினின்றும் யானையினின்றும் இறங்கி, பலவாயில்களையும் கடந்து, திருவணுக்கன்றிரு வாயிலை அடைந்தார்கள். அங்கே சேரமான்பெருமாணாயனார் தடைப்பட்டு நிற்க; சுந்தரமூர்த்திநாயனார் உள்ளே போய்ச் சிவசந்நிதானத்திலே விழுந்துநமஸ்கரித்து எழுந்து, ஸ்தோத்திரம்பண்ணி, “சுவாமீ! தேவரீருடைய திருவடிகளை அடையும் பொருட்டுச் சேரமான்பெருமான் திருவணுக்கன்றிருவாயிலின் புறத்திலே வந்து நிற்கின்றார்” என்று விண்ணப்பஞ்செய்தார். பரமசிவன் சேரமான்பெருமாணாயனாரை உள்ளே அழைப்பிக்க; அவர் விரைந்து வந்து சந்நிதானத்திலே நமஸ்கரித்துத் தோத்திரம்பண்ணினார். பரமசிவன் திருமுறுவல்செய்து, “இங்கே நாம் அழையாதிருக்க, நீ வந்ததென்னன” என்று அருளி செய்ய, சேரமான்பெருமாணாயனார் அஞ்சலி செய்து நின்று, “சுவாமீ! சுந்தரமூர்த்தி நாயனாருடைய திருவடிகளைத் துதித்து அவர் ஏறிய வெள்ளையானைக்குமுன் அவரைச் சேவித்துக்கொண்டு வந்தேன். தேவரீர் பொழிகின்ற பெருங்கருணைவெள்ளம் முன்கொண்டு புகுதலால், திருமுன்பு வரப்பெற்றேன். இனி ஒரு விண்ணப்பம் உண்டு, அரிபிரமேந்திராதிதேவர்களாலும் முனிவர்களாலும் வேதங்களாலும் துதிக்கப்படுதற்கு அரிய பெருமையையுடைய தேவரீர்மேல் அன்பினாலே தேவரீரது திருவருள்கொண்டு திருவுலாப்பாடினேன். அதனைத் தேவரீர் திருச்செவி சாத்தல்வேண்டும்” என்று விண்ணப்பஞ்செய்தார். அப்பொழுது சிவபெருமான் “சேரனே! அவ்வுலாவைச் சொல்லு” என்று திருவாய்மலர்ந்தருள; சேரமான்பெருமாணாயனாரும் அதனைக் கேட்பித்தார். சிவபெருமான் அதற்கு அருள்செய்து, “நம்முடைய கணங்களுக்கு நாதனாய் இரு” என்று திருவாய்மலர்ந்தருளினார். சேரமான்பெருமாணாயனார் சிவகணநாதராகிச் சுவாமியைச் சேவிப்பாராயினார். அவர் அருளிச்செய்த திருக்கைலாயஞானவுலாவைத் திருக்கைலாசகிரியிலே அன்று கேட்ட மாசாத்தரானவர் அதனைத்தரித்து, தமிழ்நாட்டிலே உள்ள திருப்பிடவூரிலே, வெளிப்படச்சொல்லி, பூமியிலே விளங்கும் பொருட்டு நாட்டியருளினார்.

திருச்சிற்றம்பலம்

Advertisements

திருப்புகழ் தோன்றிய வரலாறு

Standard

திருப்புகழ் தோன்றிய வரலாறு
அருணகிரிநாதர் உலகை வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்வதற்காகத் திருவண்ணாமலைக் கோபுர உச்சியிலிருந்து
குதித்தபோது அவரைத் தன்செங்கையில் ஏந்தித் தன் கருணைத் திருப்பாதங்களைக் காட்டி ஆட்கொண்டான் முருகன்.
நினைக்க முத்தி அருளும் திருவண்ணாமலையில் அருணகிரிநாத சுவாமிகள்முருகப்பெருமானிடம் “சும்மா இரு சொல்லற” என்ற மௌன மந்திரோபதேசம் பெற்று நிர்விகற்ப சமாதியில் வீற்றிருக்க, முருகன் மயில் மிசைத்தோன்றி, “உலகம் உய்யத் திருப்புகழ் பாடுதி” என்றருள் புரிய அருணகிரியார் மறைகளாலும் சாற்றுதற்கரிய தேவரீரது புகழை “ஏடெழுதா முழு ஏழையாகிய” சிறியேன் எங்ஙனம் பாடுவேன் என்றும், “நாக்கைநீட்டு” என்று வேலின் நுனியால் “ஓம்” எனும் மந்திரத்தை எழுதினார்.சேந்தமிழ்ப் பரமாசாரியனாம் செவ்சேட்பெருமான தனது “ஞானமூறு செங்கனிவாய்” மலர்ந்து செந்தமிழால் “முத்தைத்தரு” என்று அடியெடுத்துக் கொடுக்கவே கடல் மடைதிறந்த வெள்ளம் போலத் திருப்புகழைப் பாடினார். முருகவேள் “வயலூருக்குவா” என்றருள் புரிய அருணகிரியார் வயலூர்சென்று பொய்யாக்கணபதி சந்நிதியில் நின்று “கைத்தலம் நிறைகனி” என்ற திருப்புகழைப்பாடினார். முருகன் கனவிலும் நனவிலும் அடிக்கடி தரிசனந்தந்தருள் புரிந்ததும் தெய்வீகம் பொருந்திய திருத்தலமானபடியாலும் வயலூரையும் திருப்புகழில் இடையிடையே பாடினார்.முருகன் திருவடிபட்டு அனுக்கிரகம் பெற்ற ஒப்பற்ற பாமாலைதான் தித்திக்கும் திருப்புகழ்.
கந்தவேளின் திருவடிகள் மூன்று இடங்களிற்பட்டன.மயில்மீது, தேவர்தலைமீது, மூன்றாவது திருப்புகழ் ஏட்டில் எத்தனையோ சிறப்புக்கள் மிக்கதிருப்புகழை இடையறாது அன்புடன் ஓதினால் முருகன் நம் வயப்படுவான். திருப்புகழை ஓத ஆசைப்பட்டாலே போதும் எத்துணைப் பாவங்கள் புரிந்தாரேனும் பாவநாசகனாகிய குமரக்கடவுள் தரிசனையுண்டாகுமேல் பாவங்கள் முழுவதும் நீங்கித் தூயவராவார். திருப்புகழின் சந்தத்திற்கு இணையான ஒன்று எந்த மொழிஇலக்கியத்திலுமில்லை. விந்தையான சந்தம் கொண்டு சிந்தைகவர்வது.சங்கத்தமிழின் தலைமைப்புலவனாம் குமரவேளைச் சந்தத்தமிழிற் பாடித் திருப்புகழ் ஆக்கியவர் அருணகிரிநாதர். நம் பிறவிப் பந்தம்களைய வல்ல சங்கத்தமிழ்நூல் “திருப்புகழ்”
பேரின்பப் பெருவெள்ளம் அது. படிப்போரைப் பக்தி வெள்ளத்தில் திக்குமுக்காடச் செய்யும் தெய்வீகத்தேனே அருணகிரியின் இலக்கியம். முருகன் திருவருளை வேண்டிச் “சந்தக்கடல் என்று கூறுமளவில் பல ஆயிரம் பாமாலைகளை முருகன் திருவடிகளிற் சூட்டி மகிழ்ந்தார் அருணகிரிநாதர். இன்று நமக்குக் கிடைப்பவை 1328 திருப்புகழ்ப் பாடல்களே.ஆறுபடைவீடுகள் கதிர்காமம் மற்றும் அநேக தலங்களிற் கோயில் கொண்டிருக்கும் எம் பெருமானைப் பாடியுள்ளார். உலகமெலாம் உய்வுபெறும் பொருட்டு ஞானப்பெருவெளியில் அருவரதம் தாண்டவஞ்செய்யும் நடனசபாபதிகளிக்க அவர்முன் குழந்தைக் குமரவேள் திருநடனம் புரிவர். தண்டையும் அழகிய வெண்டையும், கிண்கிணியும், சதங்கையும் இனிய ஒலியுடைய வீரக்கழலும், சிலம்பும் இனிது ஒலிக்கச் சிவபிரானது திருமுன் அன்பான இனிய நடனம் புரிந்து மிக்க மகிழ்ச்சியடைந்து நின்ற அன்புபோல, அடியேனும் அத்திரு நடனத்தைக் கண்டு மகிழ்ச்சியடையுமாறு கடப்பமலர்மாலையும் அழகிய மணிமகுடங்களும் தாமரைமலர் போன்ற சிவந்த திருக்கரங்களும் ஒளிவீசும் வேலாயுதமும், கருணைபுரிகின்ற திருக்கண்களும், ஆறு திருமுகங்களும், சந்திரகிரணம் போன்ற குளிர்ந்த ஒளியும் அடியேனது கண்கள் குளிரத்தோன்றி அருள்புரியாயோ என அருணகிரியார் வேண்ட அவருக்குக் கந்தவேளின் திரு நடன தரினம் கிடைத்தது.
திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா, உன் வேல் தடுக்கும்
முருகா…… உன் வேல் தடுக்கும்!
பூவை செங்குட்டுவன் எழுதிய அற்புதமான பாடல் வரிகள் இவை. கௌரி கல்யாணம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது.
திருப்புகழின் திருப்புகழை இதை விட எளிமையாகச் சொல்ல முடியுமா என்று நம்மையும் சிந்திக்க வைக்கும் வரிகள் இவை.
திருப்புகழுக்கு அப்படி என்ன பெருமை? அதைப் புரிந்து கொள்ள சிலபல தகவல்களை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழுக்குக் கிடைத்த அற்புத மாமணி அருணகிரிநாதர். முருகன் திருவருளால் அருணகிரியின் வாக்கில் வந்த பாடல்கள்தான் திருப்புகழ் என்று தொகுக்கப்பட்டன. திருப்புகழ் என்ற பெயரைப் பின்னால் யாரும் வைக்கவில்லை. அருணகிரியே ஒரு பாடலில் திருப்புகழ் என்று குறிப்பிடுகிறார்.
பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
பட்சியெனும் உக்ர துரகமும் நீபப்
பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றிய பனிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே
குற்றமற்ற மணிகள் பொருந்திய பொன்னணிகளை அணிந்து கொண்டு அழகு நடை போடும் மாமயிலையும்,
கடம்ப மலர் மாலையையும்,
கிரவுஞ்ச மலையானது மறைந்து போகும் படி திருக்கையால் ஏவித் துளைத்த வேலையும்,
எட்டுத் திசையும் கிடுகிடுக்க வரும் சேவலையும்,
அருள் தருகின்ற சிற்றடிகளையும்,
பன்னிரண்டு தோள்களையும்,
இருந்து அருள் செய்யும் ஒவ்வொரு திருப்பதிகளையும் வைத்து உயர்ந்த வகையில்திருப்புகழை உள்ளம் விரும்பிப் பாடு என்று அருள் சொன்ன கருணையை நான் என்றும் மறவேனே!
ஆக.. இந்தப் பாட்டில் இருந்து தெரிவது என்ன? திருப்புகழ் என்ற பெயரை அருணகிரிநாதர் வைக்கவில்லை. முத்தமிழ்த் தெய்வமான முருகப் பெருமானின் திருவாயால் பெயரிடப்பட்ட நூல் திருப்புகழ் என்ற சிறப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.
திருப்புகழைப் பாடிய அருணகிரி அந்தப் பாடல்களை ஓலையில் எழுதி வைக்கவில்லை. அவர் பாடிய கோயில்களில் இருக்கும் அன்பர்கள் அந்தப் பாடல்களை ரசித்து எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த பாடல்கள்தான் இன்று தப்பிப் பிழைத்து நமக்குக் கிடைத்திருக்கின்றன.
திருப்புகழை அருணகிரி அறிவால் பாடவில்லை. முருகன் அருளால் பாடினார். அதாவது முருகன் அருணகிரியைப் பாட வைத்தான். அந்தப் பாடல்களில் எத்தனையெத்தனை சந்தநயம்! எத்தனை தாள வகைகள் உண்டோ அத்தனையும் திருப்புகழ் பாடல்களில் உள்ளனவாம். அத்தோடு அளவிட முடியாத கவிச்சுவை வேறு.
அப்படிப்பட்ட திருப்புகழ் பாடல்களை அருணகிரியே ரசித்திருக்கிறார். கேட்டவர்கள் ரசித்ததையும் கண்டிருக்கிறார்.
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பட்சிந டத்திய குகபூர்வ
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத மெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக மறவேனே
அடியவர்களுக்கு அருளும் இறைவனே
ஆடும் மயில் ஏறி விளையாடும் குகனே
கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
ஆகிய திசைகளில் உள்ள அன்பர்கள் எல்லாரும்
அற்புதம் அற்புதம் என்று ரசித்து ஓதுகின்ற
அழகு கவிநயமும் சந்தநயமும் மிகுந்து இருக்கும்
திருப்புகழை கொஞ்சமாவது நானும்
சொல்லும் படி செய்து உலகில் பரவுவதற்கு
வகை செய்த உன்னருளை மறக்க மாட்டேன் முருகனே!
இந்த வரிகளிலும் அருணகிரி முருகனுக்கு நன்றி கூறுகிறார். திருப்புகழ் என்ற பெயர் நிலைபெறும் வகையில் இந்தப் பாடலிலும் இடம் பெறுகிறது.
சரி. திருப்புகழ் பாடல்களிலேயே முதலில் பாடப்பட்டது எந்தப் பாடல் என்று தெரியுமா? எங்கு பாடப்பட்டது என்று தெரியுமா?
”முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற பாடல்தான் முதலில் பாடப்பட்டது. பாடப்பட்ட இடம் திருவண்ணாமலை கோயில்.
திருப்புகழ் பாடு என்று முருகன் பணித்த பின் “என்ன பாடுவது எப்படிப் பாடுவது” என்று புரியாமல் தவித்த அருணகிரிக்கு “முத்து முத்தாகப் பாடு” என்று முருகனே எடுத்துக் கொடுக்க பாடப்பட்டதுதான் “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழ்.
இதில் முத்து என்பது அருணகிரியைப் பெற்ற அன்னை என்றொரு கருத்தும் உண்டு.
திரைப்படங்களிலும் திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன. குறிப்பாக அருணகிரிநாதர் திரைப்படத்தில் மூன்று திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன.
1. முத்தைத் தரு பத்தித் திருநகை
2. பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
3. தண்டையணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும்
அதற்குப் பல ஆண்டுகள் கழித்து இறையருட் கலைச்செல்வர் இயக்கத்தில் வெளிவந்த “யாமிருக்க பயமேன்” என்ற திரைப்படத்தில் ”பாதிமதி நதி போது மணிசடை” என்ற திருவேரகத்(சுவாமிமலை) திருப்புகழ் மெல்லிசை மன்னர் இசையமைப்பில் வெளிவந்தது. அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில் “ஏறுமயில் ஏறிவிளையாடும்” என்ற திருப்புகழ் ”தம்பி பொண்டாட்டி” என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது.
நாமும் திருப்புகழை ஓதி முருகனருளால் நல்லறிவும் நல்லருளும் பெற்று வளமோடு வாழ்வோம்

திருமூலரும் திருமந்திரமும் / உபதேசம் 30 பசு

Standard

திருமூலரும் திருமந்திரமும் / உபதேசம் 30 பசு

ஏழாம் தந்திரம் – 30. பசு

கற்ற பசுக்கள் கதறித் திரியினும்
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்
உற்ற பசுக்கள் ஒருகுடம் பால் போதும்;
மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே.

கருவுறும் பருவம் வாய்க்காத இளம் பசுக்கள் இனச் சார்பால் கதற மட்டும் தெரிந்து கொண்டு, கன்றை ஈன்ற பசுக்கள் தம் கன்றினை அழைக்கக் கதறுவதுபோலத் தாமும் கதறித் திரியும். கன்றை ஈனாது கருவுற்று மட்டும் உள்ள பசுக்கள் தமக்குரிய புல்லை விடுத்து மனிதர்க்கு உரிய பயிரில் சென்று மேயாதபடி அதன் தலைவன் புல்வெளியில் ஓரிடத்தில் முளையடித்து நீண்ட கயிற்றால் கட்டி வைக்க, அக்கயிற்றின் அளவிற்கு அவை கட்டில்லாதது போலத் தம் விருப்பப்படி சென்று புல்லை மேயும். எனினும் கன்றை ஈன்று தாய்மையை எய்திய பசுக்களே ஒன்று ஒரு குடம்போல நிரம்பப் பால் பொழியும் பசுக்களாகும். அவை தவிர மேற்சொன்ன மற்ற இருவகைப் பசுக்களும் பயன்படாத பசுக்களாகவே இருக்கும். இது போல

“கற்ற பசுக்கள்“ என்பதனால், நூலை மட்டும் கற்றுப் பரிபாகம் இன்மையால் அந்நூலை மட்டும் இளஞ் சிறார் காதற் பாட்டுக்களைப் பாடி அவற்றிற்கேற்ப நடித்தல் போலப் படித்துப் பொருள் விரிக்கின்றவர் .
“கதறித் திரி யினும்“ எனப்பின்னர் வருதலால், “கற்ற“ என்றது, கதறக் கற்றதனையே குறித்தது. பசுக்கள் வாயொலி செய்தலை, `கதறல்` என்றல் மரபு.
ஞானிகளின் அருள்மொழியைக் கேட்டுச் சிந்திக்கும் நிலையில் உள்ளவர் கன்றையீன்ற பசுக்களை போன்றோர். அவரைப் பொய்ந்நெறியில் சென்று இரண்டும் கெட்டவர் ஆகாதபடி ஆசிரியர் தம் ஆணைவழி நிற்பித்தலே, `குறி கட்டி மேய்தல்` என்பதனஆல் குறிக்கப்பட்டது. எனவே “கொற்றம்“ என்றது ஆசிரியரால் ஆட்கொள்ளப் பட்டமையைக் குறித்ததாம்.
“உற்ற“ என்பதற்கு, `கன்றை` என்பது வருவித்து, `கன்றை உற்ற பசுக்கள் என்க. `தாய்மை எய்துதல்` என்பதனால், ஆசிரியரது அருள்மொழியைக் கேட்டுச் சிந்தித்த பின்பு தெளிதலையும், நிட்டை கூடுதலையும் உடையராதலைக் குறித்தது.
“பால்“ என்றதனால், பரஞானம், அஃதாவது அனுபவஞானம் குறிக்கப்பட்டது. “ஒருகுடம் பால்“ என்றதனால் `நிறைந்த ஞானம்` என்பது குறிக்கப்பட்டது.
போதுதல் – வெளிவருதல்; பொழிதல் எனவே தெளிவும், நிட்டையும் உடையவரது ஞான நிலை அயலார்க்கும் இனிது விளங்குதல் பெறப்பட்டது.
வறள் – வறட்சி; பால் சிறிதும் சுரவாமை. மலட்டுப் பசுக்களும் கதறித் திரிவனவற்றுள் அடங்கின.
இதனால், `சீவர்கட்குப் பசுத்துவம் மலபரிபாகம் காரணமாக இருவினை யொப்புச் சத்தி நிபாதமும் வாய்க்கப்பெற்று, ஆசிரியரது அருள்மொழியைக் கேட்டுச் சிந்தித்தலேயன்றித் தெளிவும், நிட்டையும் எய்துதலானே நீங்கும்` என்பது கூறப்பட்டது.

கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதென்
எல்லை கடப்பித் திறைவ னடிகூட்டி
வல்லசெய்(து) ஆற்ற மதித்தபின் அல்லது
கொல்லைசெய் நெஞ்சம் குறிப்பறி யாதே.

காப்பாருமின்றி, மேய்ப்பாருமின்றி, கறப்பாரு மின்றித் தம் விருப்பம்போல் காட்டில் மேய்ந்து கொண்டிருக்கும் காட்டுப் பசுப்போன்ற மக்களை எப்படித் திருத்த முடியும். (அவர் யாருக்கும் அடங்குபவரல்லர்.) அவர் தாமே தமது இழிநிலையை உணர்ந்து ஆசிரியரை அடைக்கலமாக அடைவாராயின் அவரை ஆசிரியர் கல்லில் நார் உரிப்பதுபோலவும், கல்லைப் பிசைந்து கனியாக்குதல் போலவும்* தமது திருவருள் திறத்தால் அவரது நிலையினின்றும் நீக்கிச் சீர்செய்து, அவர் சீர்ப்பட்டமையை நன்குணர்ந்து சிவமாக்கிய பின்பல்லது அதற்கு முன் காடும், மேடும், கல்லும், முள்ளுமாய்க் கிடக்கின்ற நிலம் போன்றுள்ள அவரது மனம் உணர வேண்டியவற்றை உணராது.
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
https://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com

திருநாவுக்கரசர்[அப்பர் சுவாமிகள்] திரு கைலாய யாத்திரை

Standard

திருநாவுக்கரசர்[அப்பர் சுவாமிகள்] திரு கைலாய யாத்திரை

திருநாவுக்கரசர்[அப்பர் சுவாமிகள்] தொண்டில் பழுத்த சைவர்…வெறுமனே வாயால் மட்டுமே பாடிக் கொண்டு இருக்காமல், கைகளாலும் உழவாரத் தொண்டு செய்தவர்….. தன்னுடைய இறுதிக் காலத்தில், திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் ஈசனைக் காண, ஆவல் வந்து விட்டது! கிளம்பி விட்டார் வடநாட்டுக்கு! அவருக்கு முன்பே காரைக்கால் அம்மையார் பட்ட கஷ்டங்கள், பாவம் தெரியலையா என்ன? சென்னையில் திருமயிலை, திருவான்மியூர், திருக்காளத்தி, திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) எல்லாம் கடந்து ஒரேயடியாக, வடக்கே காசி வரை வந்து விட்டார்! கூட வந்தவர்களால் முடியவில்லை! அப்பரின் மனமோ ஒடியவில்லை! அனைவருக்கும் விடைகொடுத்து விட்டு, தான் மட்டும் தனியாகக் கயிலை யாத்திரைக்கு நடக்கத் தொடங்கி விட்டார்!

“பங்கயம் புரை தாள் பரட்டளவும், பசைத் தசை தேயவும் கைகளும் மணி பந்து அசைந்துறவே, கரைந்து சிதைந்து அருகவும், மார்பமும் தசை நைந்து, சிந்தி வரிந்த என்பு முரிந்திடவும், உடம்பு அடங்கவும், ஊன் கெடவும், சேர்வரும் பழுவம் புரண்டு புரண்டு செல்லவும்…”

என்று ஓடாய்த் தேய்ந்தார் நாவுக்கரசர்!.. பாவம்! நால்வரில், நாவுக்கரசர் மட்டுமே உடலால் அதிகம் வருந்த வேண்டி இருந்தது! மற்ற மூவருக்கும் இப்படி இல்லை! வயிற்று வலி, அதன் பின், சுண்ணாம்புக் காளவாய், விஷம் இட்டது, கடலில் போட்டது….உழவாரப் பணி என்று இவருக்கு மட்டும் உடலால் பாடுபடுதல் …. கால்களால் நடக்க முடியாது, கைகளால் தவழ்ந்தார்! அதுவும் முடியாது, தலையால், உடலால் ஊர்ந்தார்! அதுவும் முடியாது, என்ன செய்வதென்றே தெரியவில்லை! கயிலை நாதனே முனிவனாய் அப்பரை ஆற்றுப்படுத்த வந்து விட்டான்!

“மானிடர்கள் உடலோடு திருக்கயிலாயம் சென்று ஈசனைக் காண்பது மிகவும் அரிது அப்பரே! உங்கள் தொண்டே போதும்! யாத்திரையைக் கைவிட்டு விடுங்கள்! – நாவுக்கு அரசர்! இப்போது செவிக்கும் அரசர் ஆகி விட்டார் போலும்! செவி மடுத்தாரில்லை! “அப்பரே, இப்படி ஒரு உறுதியா? கயிலை அடிவாரத்தில் வாழும் முனிவன் நான்! எனக்கே ஈசன் தரிசனம் அவ்வளவாகக் கிடைப்பதில்லை!” “அப்பர் என்ற அடியேனின் பெயர், என் அப்பனை அல்லால், உமக்கு எப்படித் தெரியும்?” வாக்கு ஈசரிடம் வகையாகச் சிக்கிக் கொண்டார் சிவபெருமான்! சிக்கெனப் பிடித்தேன் அல்லவா? சிக்கினான் சிவன்!
“அப்பரே, நான் திரிகால ஞானி! ஈசனே எம்மை உம்மிடம் அனுப்பி வைத்தார்! இதோ சூல-ரிஷப முத்திரை! இப்போதாவது நான் சொல்வதைக் கேட்பீர்களா? இதோ, இந்தத் தூய ஏரியில் மூழ்குங்கள்! பஞ்ச நதி க்ஷேத்திரம் என்னும் திரு-ஐ-ஆற்றில் (திருவையாறு) எழுவீர்கள்! அது தட்சிண கைலாசம்! அங்கு இறைவனைத் திருச்சபை சூழக் காண்பீர்கள்”..அப்பர் மானசரோவரத்தில் மூழ்கினார்! ஊன உடற் புண்கள் எல்லாம் மறைந்தன!

உடல் சிவ மங்களமாய் மின்னியது! வட மலையில் மூழ்கியவர், தென் வயலில் எழுந்தார்! காயங்கள் உடலில் ஆறின! கானங்கள் வாயில் ஊறின! “மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன்! யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்! கண்டேன் அவர் திருப்பாதம்! கண்டறியாதன கண்டேன்!!” மும்மூர்த்திகளும் சூழ்ந்திருக்க, தேவரும், மூவரும், ஏவரும் துதிக்க, நடன மாதர் நடங்கள் புரிய, கங்கை முதலான ஆறுகள் வணங்க, நந்தி தேவர் திருக்கடைக்காப்பில் நிற்க, மின்னிடும் வெள்ளிப் பனி மலையாய் அம்மையும் அப்பனும்…அப்பருக்குத் திருக்கைலாயம் காட்சி ஆகிறது!

புகுவார் பின் புகுந்தால், அடியார் பின் புகுந்தால், அன்பினால் புகுந்தால், அந்த அன்பே சிவமாகும்! அன்பர் கூடுமிடம் கயிலையாகும்!….அப்பர் திருவையாறில் கண்ட திருக்கைலாயம் தரிசனம் நாம் காண ஆடி அமாவாசை அன்று திருவையாறு வாருங்கள் ….

தென்னாடு உடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாற போற்றி! போற்றி!!

Standard

கழுகுமலை ஆடி அமாவாசை கிரிவலம்
(26,7,2014)
ஆன்மீக கடல், ஆன்மீகஅரசு வாசகவர் வட்டம் மூலம் இந்த கழுகுமலை கிரிவலம் ஒரு ஆன்மீகப் பயிற்சிக்காக ஆன்மீகஅரசு வலதைள நம் குருநாதர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு 26,7,2014 அன்று சுமார் 200 ஆன்மீக அடியாளர்கள் கலந்து கொண்டனர் இந்த சச்சங்கம நிகழ்வு மிக சிறப்பாகவே நடைபெற்றது,
பொதுவாக அமாவாசை என்றால் எல்லாம் வல்ல பரம்பொருளான , அருட்பெரும் ஜோதியின் வடிவான லிங்கேஸ்வரயை நினைவும், நம் மூதாதையர்களான பித்திருக்களை நினைந்து வணங்கி, அவர்களுக்கு விரதம் இருந்து ஆண்டுக்கொரு முறை திதி கொடுப்பது என்பது இந்து சமய மறபாக தொன்று தொட்டு இருந்துவருகிறது, அதிலும் வருடாந்திர பித்திரு திதி இந்த ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும், புரட்டாசி மாதத்தில்வரும் மகளாய அமாவாசை, மற்றும் தைமாதம் வரும் தை அமாவாசை ஆகிய தினங்கள் மிகவும் சிறப்பு பெற்றதாகும், இந்த நாட்களில் எல்லா சிவாலங்களிலும் சிற்ப்பு பெற்றதாயினும், ஆடி அமாவாசை என்றால் நமக்கு நினைக்கு வருவது சதுரகிரியும், மகளாய அமாவாசை என்றால், அம்பை பாபநாசமும், தை அமாவாசை என்றால் ராமேஸ்வரமும் முக்கியத்துவம் பெற்ற தலங்களாகவும், இந்த நாட்களில் இந்த தலங்களில் பக்தர்கள் கூட்டம் கணக்கில் அடங்காது என்பது சிவபக்தர்கள் யாவரும்அறிவர்.
இந்த முக்கியத்துவம் பெற்ற மேற்கண்ட அமாவாசை நாட்களில் நம்முன்னோர்களாகிய – பித்திருக்களுக்கு ஆண்டுக்கொரு முறை திதி கொடுப்பது என்பது யாவரும் அறிந்ததே,இந்துக்களின் ஒரு மறக்க முடியாத – மறக்கக் கூடாத செயலாக இது கருதப்பட்டு வருகிறது, இதனை ஒவ்வொரும் தனித்தனியாக புரோகிதர்கள் கொண்டு செய்ய முடியாதவர்களுக்கு, புண்ணிய தீர்த்த முள்ள சிவாலங்கள், புண்ணிய நதிக்கரைகள், மற்றும் புண்ணிய ஸ்தல கடற்கரைகள் ஆகிய இடங்களில் கூட்டம் கூட்டமாக செய்வதை நாம் காணலாம், இந்நிகழ்வின் தொடர்பாக நம் ஆன்மீக கடல், மற்றும், ஆன்மீக அரசு வலைத்தள நம் குருநாதர் அவர்களின் நல்லெண்ண முயற்சியால் , ஆன்மீககடல், ஆன்மீகஅரசு வலைத்தள வாசகர்வட்டார ஆன்மீ தொண்டர்களுக்காக இந்த சித்தர்கள் வாழும் கழுகமலையில் ஒரு ஆன்மீக சச்சங்க நிகழ்ச்சியும், சித்தர் ஈஸ்வரபட்டர் அவர்கள் நினைவாக அன்னதான நிகழ்வும் நடத்துவதென நோக்கில் கழுகுமலை ஊராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது, இதில் நம் குருநாதர், பித்திருக்களுக்கு திதி கொடுப்பதன் அவசியத்தையும், அதனால் விளையும், நன்மையும, செய்யமுடியாத பட்சத்தில் ஏற்படும் தீங்குகளையும் தெளிபட விளக்கினார்,
இல்லங்களில் மங்கையர் திருவிளக்கு தீபம் ஏற்றுவது பற்றிய ஆன்மீக விளக்கங்களை அருளினார், அன்னார் விளக்கிய தெளிவுரைகள்
விளக்கின் அமைப்பு:
1, 8 அடுக்கு கொண்ட சுமார் 3 அடி உயரம் உள்ள விளக்கு – தாம் உட்கார்ந்து விளக்கு ஏற்றி வழிபடும் போது அவர்களி கண்இமைக்கு சமமாக தீபம் ஒளி அமைய வேண்டும்
2, ஐந்து முகம் கொண்டது மிகச்சிறப்பு – 4 முகம் கொண்ட விளக்குதான் இருந்தாலும் பயன்படுத்தலாம்,
3, தீபம் கிழக்கு திசையை நோக்கி எறிய விட வேண்டும்
4, தீபம் ஏற்றும் நேரம் : சூரிய உதயத்திற்கு முன் காலை 6 மணிக்குள் அல்லது சூரியன் அஸ்தமத்திற்கு பின் அதாவது மாலை 6 மணிக்கு பின்
5, குத்து விளக்கின் அடி குமிழ் பாகத்தில் காந்தம் பிடிக்காத சில்லவர் குங்கும் இட்ட குங்கும பாத்திரம்
6, குத்து விளக்கின் அடியில் மாம் பலகை தான் வைக்க வேண்டும் தாம்பூலத்தட்டு அல்லது வேறு தட்டு வைக்கக் கூடாது கூடிய வரை மாம்பலகையில் தான் விள்க்கு வைக்க வேண்டும்,
7, குத்து விளக்கை கழட்டி சுத்தம் செய்தல் வெள்ளிக்கிழமை கூடாது – ஒவ்வொரு வியாழக்கிழமையன்றே செய்து விடுவது சிறந்தது
8, தீப எண்ணெய் நல்ல எண்ணெய் பயன்படுத்தலாம், இருப்பினும் தீப வழிபாடு சிறக்க உங்கள் இல்லம் தெய்வீக மனம் பெற தங்களின் வேண்டுதல் நிறைவேற குருநாதரின் ஆராட்சியால் தயார்செய்த மூலிகை எண்ணெய் மிகமிக ஏற்படுடையது, தங்கள் எண்ண வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேறும்
இவ்வாறு குத்து விளக்கு தங்கள் தங்கள் இல்லங்களில் மங்கையர் தீபவழிபாடு செய்து சுத்தம செய்யும் நாளில் நாம் குத்துவிளக்கிற்கு அடியில் வைத்திருந்த குங்குமத்தை எடுத்து திலகமிட்டுக் கொண்டால் அஸ்ட லட்சுமியின் கடாச்சகம் இந்த இல்லத்திற்கே கிடைக்கும் என்றார்
பின் சச்சங்க நிகழ்வு முடிந்தவுடன் ” ஓம் சிவசிவ ஓம், ஓம் சிவசக்தி ஓம் ” என்ற சிவ கோசத்துடன் கழுகுமலை கிரிவலம் புறப்பட்டது, கிரிவலப்பாதையில் உள்ள அருள்மிகு மிளகாய் வத்தல் சித்தர் ஜீவசமாதியில் குருபூசையும், அச் சித்தரிடம் அவரவர்கள் வேண்டுதல் வேண்டி கூட்டு பிராத்தனையும் நடந்தது. பின் கிரிவலப்பாதையில் ஈசான முலையான ஓர் இடத்தில் குருநாதர் ஏற்பாட்டின் படி பித்திருக்களுக்கான திதி கொடுப்பதற்கு ஓம் சிவசிவ ஓம் என்று கூறி எள்ளும் தண்ணீர் இறைத்து திதி எல்லோராலும் செய்யப்பட்டது,, பின் கிரிவலம் முடித்து, அருள்மிகு கழுகாசல மூர்த்தியின் வழிபாடும், பின் ஈஸ்வர பட்டர் நினைவாக அன்னதானமும் சிறப்புடன் நடந்து முடிவுற்றது, இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து ஏராளமான ஆன்மீக அடியார்கள், தொண்டர்கள் குருநாதரின் வலைதள வாசக அன்பர்கள் (followers) கலந்து கொண்டனர்
திருச்சிற்றம்பலம் – ஓம் சிவசிவ ஓம்
மேலும் சில ஆன்மீக தகவல்கள் தேடலுக்கு
https://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com

தமிழ் வேதங்களில் வாழ்வியல்- முதற் பணி ( காலைக்கடன்)

Standard

தமிழ் வேதங்களில் வாழ்வியல்- முதற் பணி ( காலைக்கடன்)
உலகில் எண்ணாயிரம் கோடி சீவராசிக்ள உள்ளன என்கிறார்கள், அவற்றுள் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் உள்ளவன் மனிதன். இறைவர் நமக்கு இந்த அருமையான உடல், நல்ல மனம், புத்தி, முதலிய கரணங்களை அளித்துள்ளார், அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது, என அவ்வையார் அன்றே பாடியுள்ளார், எனவே பிறத்ததற்கரிய பிறப்பு மானிட பிறப்பு.
பார்ப்பதற்குக் கண்களையும், கேட்பதற்கு செவிகளையும், உழைப்பதற்கு கை,கால் உடம்பையும், பேசுவதற்கு வாய், நல்ல அறிவு ஆகியவற்றை அளித்துள்ளார், இத்துடன் அமையாது, குடிப்பதற்கு தண்ணீர், சுவாசிக்க காற்று, உண்பதற்கு கனிகள், காய்கள், ஒளிக்கு சூரியன், சந்திரன், ஆகியவற்றையும் நமக்காக படைத்துள்ளார்,
ஒரு பொருளைப் பார்க்கும் போது அப்பொருளை செய்தவர் ஒருவர் இருக்க வேண்டும், இதைப்போல இந்த உலகைப் பார்க்கும் போது அந்த உலகம் நியதியாக இயங்குவதை காணும் பொழுதும் இதற்கு மூலகாரணமாக ஒருவர் இருக்க வேண்டும், என்ற நினைக்க வேண்டும்.
சூரியன் காலை 6 மணிக்கு உதிக்கிறான், மாலை 6 மணிக்கு மறைகிறான்,தாவரங்கள் குறிப்பிட்ட காலத்தில் பூக்கின்றன, மனிதனுக்காக உணவைத்தருகின்றன, நாம் விடும் அசுத்தக்காற்றை அது சுவாசித்து நமக்கு வேண்டிய பிராண காற்றை அவை வெளியிடுகின்றன, குறிப்பிட்ட காலங்களில் காய்கனிகள் உண்டாகின்றன, இந்த நிகழ்வுகளை எந்த அரசாங்கமோ எந்த வரன்முறையே பின்பற்றப்படுவதில்லை, உலகம் ஒரு நியதியில் இயங்குவதிலிருந்தே ஒரு மாபெரும் சக்தி உள்ளது என்பதை அறிவுடையர் உணர்வர்.
அந்த பேராற்றல் உடையவரைத்தான் கடவுள் என்கிறோம், இவ்வளவு நலன்கள் நமக்கு அளித்துள்ள இறைவன் வணங்கவேண்டிய கடன் – கடமை – நமக்குள்ளது, இதைத்தான் காலைக்கடன் – முதற்கடமை என்கிறார்கள் சான்றோர், வடமொழியில் சந்தியா வந்தனம் என்றார்கள்.
காலையில் எழும் பொழுதே மனம் மொழி மெய்களால் இறைவனை வழிபாடு செய்வது தான் நம் கடனை தீர்க்கும் வழியாகும், தற்காலத்தில் காலக்கடன் என்பதற்கு பொருள் தவறாக கொண்டுள்ளார்கள்.
மேலை விதியே விளையின் பயனே விரவார் பரமூன்று எரிசெய்தாய்
காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக்கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே. தமிழ் வேதம் -7
காலையில் ஒவ்வொருவரும் நாளும் தவறாது செய்ய வேண்டியது சிவவழிபாடு ஆகும், இந்த காலைக்கடனை நம் முன்னோர்கள் தவறாது செய்து வந்துள்ளார்கள்.
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சம்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனை
சூழ்ந்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடங்காலமே. – நாவுக்கரசர்

முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின்
அந்தி வாயொளி யான்தன் அண்ணாமலை
சிந்தியா எழுவார் வினை தீர்ந்திடும்
கந்த மாமலர் சூடும் கருத்தனே. திருநாவுக்கரசர் தமிழ் வேதம் 5
காலையில் எழும் பொழுதே கடவுளை வணங்குவது தான் நம்முடைய கடனைத் தீர்க்கும் வழியாகும்,இந்தக் கடனை தீர்ப்பவர்க்கு வினைகள் யாவும் தீர்ந்து ஒழியும் என்கிறார் கடவுளைக்கண்ட நாவுக்கரசர்
உலகியல் வாழ்விற்கு தெய்வ வழிபாடு வேண்டாம் என்பது, முள் நிறைந்த காட்டிலே நடந்து போகும் ஒருவன் சூரியனின் வெளிச்சம் வேண்டாம் என்பது போலாகும்,
தண்ணீர் படகை செலுத்துபவனுக்கு துடுப்பு அவசியமாகும், துடுப்பு இல்லாமல் படகை ஓட்ட முடியாது, துடுப்பு இல்லாமல் படகில் பயணம் செய்வது என்பது அறியாமையே ஆகும், இதைப்போல இறைவன் வழிபாடு இல்லாதவன் வாழ்க்கைத் துடுப்பு இல்லாத படகிற்கு ஒப்பாகும்,
நன்று நாள்தொறும் நம்வினை போயறும்
என்றம் இன்பம் தழைக்க இருக்கலாம்
சென்றுநீர் திருவேட்களத் துள்ளுறை
துன்று பொற்சடை யானைத் தொழுமினே. அப்பர்
நாள்தோறும் இறைவரை வழிபட்டால் வாழ்வில் இன்பம் தழைக்க இனிதே வாழலாம், என்பது அப்பர்பெருமான் அனுபவ அறிவுரையாகும், எனவே காலையில் எழுந்தவுடன் சிவனை வழிபட்டு சிவானந்தம் பெறுவோம்,
திருசிற்றம்பலம் – ஓம் நமசிவாயம்
நன்றி தமிழ் வேதம்
மேலும் ஆன்மீக தேடலுக்கு
https://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com

திருமூலரும் திருமந்திரமும் – உபதேசம் 30 யாதுமாகி நின்றவன்

Standard

திருமூலரும் திருமந்திரமும் – உபதேசம் 30
யாதுமாகி நின்றவன்
சிவன்எங்கும் இருக்கிறான், அவனை நாம் காணவில்லை , எதிலும் இருக்கிறான் நாம் அறிவதில்லை. அவன் எப்போதும் இருக்கிறான் ஆனாலும் அவனை உணரும் முயற்சி நம்மிடம் இல்லை.திருமூலர் கூறுவார்: மனமென்றும் தேரேறிச் சென்று அந்த மாயனைப் பாருங்கள், அவன் புறக்கண்ணுக்கு புல்படுவதில்லை. உங்கள் சரீரத்திற்கண் அவன் விளங்குகின்றான். அடியார்கள் உள்ளந்தோறம் விளங்கி நிற்கும் அந்த பேரறிவாளனை நான் போற்றி வழிபடுகிறேன், என்று அவனது திருநாமத்தை சிந்தித்திருக்கும் மனம் ஆசைகளை விட்டு விலகிவிடும்,
நாமமோ ராயிரம் ஓதுமின் நாதனை
ஏமமோ ராயிரத் துள்ளே இசைவீர்கள்
ஓமமோ ராயிரம் ஓதவல் லாரவர்
காமமோ ராயிரம் கண்டொழிந் தாரே. என்கிறது திருமந்திரம்
ஆயிரம் திருநாமங்களால் சிவனை போற்றி வழிபடுங்கள், அதனால் ஒராயிரம் வகை சுகங்கள் அடையலாம், நீங்கள் சிரசின்மீது மனதை நிறுத்தி, ஞானசாதனையில் ஈடுபட்டால் ஆயிரமாயிரம் ஆசைகளும் நீங்கிப்போகும், இது பாடலின் கருத்து.
நீரின் தன்மையை அது தெளிவாக இருக்கம் நிலையில் தான் அறியமுடியும், கலங்கிய நீரில் சேறு கலந்திருக்கும், உங்கள் மனம் சரீரமயமான எண்ணத்தில் கலங்கியிருக்கும் போது உங்களால் எப்படி இறைவனின் இயல்வை அறிய முடியும்? குளத்து நீரை முகந்து குடத்தில் வைத்து தெளியச் செய்வதால் குடித்தற்காகும், சிந்தை தெளிவுற்றால் சீவனும் சிவனாகலாம், என்கிறது மந்திரம் பாடல்: மண்ணில் கலங்கிய நீர்போல் மனிதர்கள்………….
உள்ளங்கை நெல்லிக்கனி என்பார்கள் பிரத்யடச உண்மைக்கு நிருபணம் தேவைப்படாது. உண்மைத் தவமுடையாரின் உள்ளத்தில் சிவன் விளங்குவான், அவன் தூயவன் தூயநெறியை நமக்கு காட்டுவிப்பான், எனவேதான் அந்த தேவதேவனை நான் விரும்பினேன் அவனிடம் பொருந்தி உலகின் ஆசாபாசங்களைக் கடந்து சென்றேன் என்கிறார் சித்தர்.
தன்னை வழிபடுகிறவரின் தீயகுணத்தையும், தீய செயல்களையும் அவன் ஒழித்து கட்டுகிறான். அவனுடைய திருவடிகளே வீரர்கள் போய் சேரும் சொர்க்கம். சிவன் வாழ்வளிக்கும் ஐந்தெழுத்தில் விளங்கியிருப்பவன், அவனே உலகத்து உயிராகவும், நிலமாகவும், நீள்விசும்பிடை காற்றாகவும், கதிராகவும், மதியாகவும், ஆதியாகவும் அக்னியாகவும் உள்ளான். தன்னை புகலிடமாய் கொண்டவரை அவன் தாங்கி நிற்கிறான். உலகின் தனிப்பெருந் தலைவனாகிய பெருமான் ஆன்மாக்களின் பக்குவகத்திற்கேற்ப ஆட்கொள்கிறான்.
உலகம் ஏழுமம் அவனால் படைக்கப்பட்டது, அவற்றை கடந்து நிற்கும் பெருமையும் அவனுக்குண்டு தன் அடியார்கள் செல்லும் நெறியில் தானும் உடன் செல்வான். தூலத்திலும், சூக்குமத்திலும், சிவன் நிறைந்து விளங்குகின்றான், அவன் ஆதாரமாகிய உடலாகவும், அவன் ஆதாரம் கடந்த நாதமாகவும், நாத்தின் முடிவாகவும் (நாதாந்தம்) இருக்கிறான். அவனே உயிராகவும், உயிருக்கு வேறான அகண்ட வடிவமாகவும், இருக்கிறான், அவன்தான் தூலத்தையும் சூக்குமத்தையும் பொருத்தி இணைக்கும் பிராணசக்தி. ஆக்கப்பட்ட யாவும் அவனிடமிருந்தே தோன்றின, அவன் எல்லாமாகி நிற்பினும் உலகத்தாரால் காணப்ட தோன்றுபவன் அல்லன். அவன் தத்துவங்களின் தலைவன் அத்தனை தத்துவங்களும் தத்துவ விருத்தியேயாகும்.
அவன் புறக்கண்ணுக்கு புலப்படாதவன், என்பதால் இல்லை என்றாகி விடாது. நெகிழ்ந்துருகும் அன்பரிடம் அவன் விளங்கித் தோன்றுவான். அவன் மிகப் பழைமையானவன், பரிசுத்தன், நடுக்கமோ, குற்றமோ இல்லாதவன். உள்ளப்பண்போடு அவன்பால் அன்பு கொண்டவர்க்கு அவன் வெளிப்பட்டு அருள் புரிகிறான். அவனே ஆனந்தமாகவும், ஆனந்தத்தை அளிப்பவனாகவும், ஆனந்தில் திளைப்பவனாகவும் இருக்கிறான்,
அவன் எல்லப் புவனங்களிலும் நிறைந்த புண்ணியமூர்த்தி, பாமரிடத்தே அறியாமை என்கிற இருளிலும், ஞானியரிடத்தே ஞானக் கதிரொளியாகவும் அவன் உறைகின்றான். ” எம்பெருமான் ஏழு உலகங்களையும் ( (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், கனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம் ) தாங்கி நிற்கும் வல்லமை கொண்டவன், அணுவை காட்டிலும் நுட்பமான தன்மையும், அவனுக்குண்டு, எட்டு திக்கிலும் உள்ள மலைகளுக்கெல்லாம் ஒப்பானது அவனுடைய வலிமை .அகன்ற கடலினும் பெரிது அவன் கொண்ட ஆற்றல். அவரவரின் தவத்திற்கேகற்ப அவன் அறியப்படுகிறான். துன்பக்கடலில் அழுந்தித் துயர்படுவோர்கள் உள்ளொளியாம் சிவத்தை கண்டு கரைசேரலாம்,
சிவஞானயரின் உணர்வும், உயிரும் சிவன், பொருட்களால் உண்டாகிற அறிவும், அறியப்படுகிற பொருளும் அவன் , எங்கும் பரவியிருப்பவன் இதயத்தில் இருப்பதும் உண்மை, ஆனால் எண்ணத்தில் அவனை அகப்படுத்தமுடியாது.
விண்ண வனாய் உலகேழுக்கும் மேல்உளன்
மண்ண வனாய் வலம சூழ்கடல் ஏழுக்கும்
தணண வனாய் அதுதன்மையின் நிற்பதோர்
கணணவன் ஆகிக் கலந்து நின்றானே. என்கிறது திருமந்திரம்
அவனே வானம, அவனே பூமி, மேலும் கீழும் வியாபித்திருப்பவன் அவன், ஏழு உலகங்களுக்கும் அப்பால் உள்ளவன், கடல்களுக்குக் குளிர்ச்சியை தருபவன், வானின் இயல்பும் நிலத்ததின் இயல்பும் அவனுடையது,
அவனே உயிர்க் கூட்டம், அவனே உயிரினங்களைச் செலுத்துவமு, அவனைத் தலைவன் என்று சிவஞானியர் போற்றுவதில் என்ன வியப்பு
சீவரின் உடம்பில் உயிர்
அண்ட ஆகாயத்தில் பிராணசக்தி
விரிந்த கதிர்களை உடைதிங்கள்
விழிகளில் விளங்கும் சிவம்…… என்று யாதும் அவனே.
அண்ட பாதாளங்களள் அவனுடையவை
எட்டுதிக்கிலும் இருப்பது அவன்தான்
அவனே அறிவின் வடிவம்
தொலைவில் இருப்பதும், அண்மையில் இருப்பதும் அவனே
அவன் மாறுபாடற்றவன்
உயிர்களுக்கு இன்பம் செய்பவன்
தத்துவங்களாகவும், தத்துவங்கள் கடந்தும் காணப்படுபவன்
எங்கும் அவனே அவனே சிவம்,
அன்பே சிவமாகவும் சிவமே அன்பாகவும் அமைந்தவன்,
அவனே ஞானத்தலைவனாகவும், ஓமத்தலைவனாகவும் ஒளித்தலைவனாகவும் அமைந்தவன்
திருச்சிற்றம்பலம் …. ஓம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
https://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com