Standard

மாணிக்க வாசகர் பாடிய
திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
பாடல் 1

நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே
வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என்
ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. 15

பொருள் ; நான் உன்னிடத்து அன்பு இல்லாதவனாய் இருந்தும் உன் அன்பர் போல் நடித்து முத்தி உலகத்தில் புகும் பொருட்டு விழைகின்றேன். ஆதலால் இனியாயினும் உன்னிடத்து அன்பு செய்யும்படி எனக்கு அருள் செய்யவேண்டும்.
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என கடவேன் வான் ஏயும் பெறல் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன் தேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான்எம் மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே. 16

பொருள் ;
நான் பிறவித் துன்பத்துக்கு அஞ்ச மாட்டேன். இறப்புத் துன்பத்துக்கு அஞ்சுகின்றிலேன். மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும் ஆளவிரும்பேன். உன் திருவருளுக்கு உரியே னாகுங் காலம், எக்காலமோ என்று வருந்துவேன். ஆதலால் என் பிறவியை ஒழித்தருள வேண்டும்.

வருந்துவன்நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாய்அடியேன் இருந்து நலம் மலர் புனையேன் ஏத்தேன் நாத்தழும்பு ஏறப் பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல் வருந்துவன் அத்தமியேன் மற்று என்னேநான் ஆமாறே. 17

ஆம்ஆறுஉன் திருவடிக்கே அகம்குழையேன் அன்பு உருகேன் பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்க் கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன் சாம் ஆறே விரைக்கின்றேன் சதுராலே சார்வோனே. 18

வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. 19

பொருள்;
ஆகாயம், மண், காற்று, ஒளி, ஊன், உயிர் முதலாகிய எல்லாப் பொருள்களாகியும், அவற்றின் உண்மை இன்மை களாகியும் அவற்றை இயங்குவிப்போன் ஆகியும் யான், எனது என்று அவரவர்களையும் கூத்தாட்டுவானாகியும் இருக்கின்ற உன்னை என்ன சொல்லிப் புகழ்வேன்?

வாழ்த்துவதும் வானவர்கள் தாம்
வாழ்வான் மனம் நின்பால்
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து
தம்மை எல்லாம் தொழ வேண்டிக்
சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன்
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே. 20

பொருள் ;தேவர் உன்னைத் துதிப்பது, தாம் உயர்வடைந்து தம்மை எல்லாரும் தொழ விரும்பியேயாம். வண்டுகள் மொய்த்து ஒலிக்கின்ற கொன்றை மாலையை அணிந்தவனே! நான் அப்படி யின்றி என் பிறவித் தளையை அறுத்துக் கொள்ள விரும்பியே உன்னைத் துதிக்கின்றேன்.
பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்
குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம்
விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன்
அரவுவார் கழல் இணைகள் காண்பாரோ அரியானே. 21

பொருள் ;
கடவுளே! உன் அருமை நோக்கித் தேவர் உன்னைப் பரவுகின்றனர். வேதங்கள் ஓதி மகிழ்கின்றன. உமாதேவி ஒரு பாகத்தை நீங்காது இருக்கின்றனள். மெய்யடியார்கள் கூடிக் காண்கின்றனர். நான் ஒன்றும் செய்திலேன். ஆயினும் என்னை உன் பெருங் கருணையால் ஆட்கொள்ள வேண்டும்.

அரியானே யாவரக்கும் அம்பரவா அம்பலத்து எம்
பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல் கீழ்
விரைஆர்ந்த மலர்தூவேன் வியந்து அலறேன் நயந்துஉருகேன்
தரியேன் நான் ஆம்ஆறுஎன் சாவேன் நான் சாவேனே. 22

பொருள் ;
கடவுளே! சிறியேனை ஆட்கொண்டருளின உன் திருவடியைப் பாடுதல், மலர் தூவி மகிழ்தல், வியந்து அலறல், நயந்து உருகுதல் முதலியவற்றைச் செய்து உய்யும் வகை அறியாமல் உயிர் வாழ்கின்றேன். எனவே நான் இறப்பதே தகுதியாகும்.
வேனில் வேள் மலர்க்கணைக்கும் வெள் நகை செவ்வாய்க்கரிய
பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே
ஊன் எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான் இன்றுபோய்
வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே. 23
பொருள் ;நெஞ்சமே! மலர்க்கணைக்கும் மாதர்க்கும் பதைத்து உருகி நின்ற நீ, இறைவனது பிரிவுக்கு ஆற்றாது உருகியிறந்து படுவாய் அல்லை; ஆதலால் நீ பயன் அடையாது ஒழிகின்றனை.
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே

ெபாருள் ;
நெஞ்சமே! வாழ்வது போல் நினைத்து வாழாது இருக்கின்றாயே! நான் வற்புறுத்திச் சொல்லியும் இறைவனை வழி படுதல் இல்லாமல், உனக்கு நீயே கேடு சூழ்ந்து துன்பக் கடலில் விழுந்து அழுந்துகின்றாய். உன் அறியாமைக்கு நான் என் செய்வேன்?

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை

Advertisements
Standard

தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்

நீற்றையில் இடப்பட்ட போது, பாடிய பதிகம் ” மாசில் வீணையும் மாலை மதியமும்”

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்

நமச்சிவாயவே நானறி விச்சையும்

நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே

நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே

விளக்கம்

திருநாவுக்கரசர் தமிழ் மொழியில் நல்ல புலமை பெற்றிருந்தது மட்டுமல்லாமல், வடமொழி, பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். அத்தகைய புலமை பெற்றிருந்த காரணத்தால் தான் சமண கொள்கைகளை, ஐயம் திரிபறக் கற்று, புத்தர்களுடன் வாது செய்து அவர்களை வெல்லும் திறம் கொண்டிருந்தார். அப்படி இருந்தும், நமச்சிவாய மந்திரம் தான் கற்ற கல்வி என்று கூறுவதிலிருந்து நமச்சிவாய மந்திரத்தினை எவ்வளவு உயர்வாக அவர் மதித்தார் என்பது நமக்கு இங்கே புலனாகின்றது.

பொழிப்புரை

நமச்சிவாய மந்திரமே நான் அறிந்த கல்வியாகும். நமச்சிவாய மந்திரமே அந்த கல்வியால் நான் பெற்ற ஞானமுமாகும். நமச்சிவாய மந்திரம் தான் நான் அறிந்த வித்தையாகும். நமச்சிவாய மந்திரத்தை எனது நா இடைவிடாது சொல்லும். இந்த நமச்சிவாய மந்திரம் தான் வீடுபேற்றை அடையும் வழியாகும்.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை

Standard

தினம் ஒரு தேவாரம்
திருநாவுக்கரசர் பாடியது திருமுறை 6 பதிகம் திருவையாறு

பாடல் எண் : 1
ஓசை யொலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ

திருவையாற்றை விடுத்து நீங்காத செம்பொன் போன்ற ஒளியை உடையவனே! பொருளில்லாத வெற்று ஓசையாகவும் பொருளுடைய எழுத்து சொல் என்பனவாக உள்ள ஒலியாகவும் நீ உள்ளாய். இவ்வுலகுக்குத் தன்னிகரில்லாத் தலைவனாக உள்ளாய். மலரில் மணம் போல உலகமெங்கும் பரவியுள்ளாய். இமவான் மருமகனாய் உள்ளாய். உன் பெருமையைப் பேசுதற்கு இனியனாய் உள்ளாய். எனக்குத் தலைவனாய் உன் திருவடிகளை என் தலைமீது வைத்தாய். உலகில் உள்ள ஞாயிறு திங்கள், கோள்கள், விண்மீன்கள் முதலிய யாவுமாகியுள்ளாய்.
குறிப்புரை:
ஒசை, ஒலி ` என்பன, ` சத்தம், நாதம் ` என்னும் பொருளுடையன. ` வெற்றோசையும் பொருளோசையும் ` என ஒசை இருவகைப்படும். அவற்றுள், வெற்றோசையை ` ஒசை ` என்றும், பொருளோசையை ` ஒலி ` என்றும் அருளிச்செய்தார். பொருளோசை, எழுத்தும் சொல்லுமாக அறியப்படும், ` எழுத்து ` என்பதும், ` சொல் ` என்பதும் உண்மையில் முறையே பொருள் உணர்வாகிய ஆற்றலும், அவ்வாற்றலின், கூட்டமுமேயாகும். ஆயினும், அவ்வாற்றலை எழுப்புகின்ற அளவுபட்ட ஓசையும் , அவற்றது கூட்டமும் ஆகுபெயரால், ` எழுத்து ` என்றும், சொல் என்றும் சொல்லப்படுகின்றன. இதுவே, ` எழுத்துக்களின் தன்மை ` எனப்படுவது. `
தேச விளக்கு – உலகில் உள்ள ஒளிப்பொருள்கள் ; அவை ஞாயிறு, திங்கள், தீ முதலியன. செம்பொற்சோதீ – செம்பொன்னினது ` ஒளிபோன்றுள்ளவனே ; சோதி, உவமையாகுபெயர். ` ஆனாய் ` முதலிய பலவும் வினைப்பெயர்கள். அவை எழுவாயாய் நின்று நீயே என்னும் பெயர்கொண்டு முடிந்தன ;

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை

Standard

திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
மாசில் வீணையும் – பாடல் 1

(பொதுப் பதிகம் – குறுந்தொகை)

பின்னணி

அப்பர் பிரானின் வாழ்க்கையின் திருப்பு முனையாக இருந்த சூலை நோயினை அவருக்கு அளித்து சிவபெருமான் அவரை ஆட்கொண்டதையும், கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடிய பின்னர் அவரது சூலை நோய் தீர்க்கப்பட்டதையும், இறைவனின் அருளால் தீராததாக கருதப்பட்ட தனது நோய் தீர்ந்த பின்னர், புது மனிதனாக மாறிய அப்பர் பிரான், நாமார்க்கும் குடி அல்லோம் என்று வீரமுழக்கம் இட்டதையும் நாம் சென்ற சில நாட்களாக சிந்தித்து வந்தோம். அதன் பின்னர் அவரது வாழ்வில் நடந்த நிகழ்ச்சியுடன் தொடர்பு கொண்ட மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தினை இன்று முதல் நாம் சிந்திக்க இருக்கின்றோம்.

தங்களுக்கு குருவாக இருந்த தருமசேனர், மீளவும் சைவ சமயம் சார்ந்ததையும், தங்களால் தீர்க்க முடியாத கடுமையான சூலை நோய் சிவபிரான் அருளால் தீர்க்கப் பட்டதையும், அவருக்கு திருநாவுக்கரசர் என்ற நாமம் சிவபிரான் அளித்ததையும், அவருக்கு மக்கள் அளித்த வரவேற்பினையும் அறிந்த சமண குருமார்கள், நடந்ததை உள்ளவாறு பல்லவ மன்னன் அறிந்தால் தங்களது செல்வாக்கு குறையும் என்பதை உணர்ந்தனர். எனவே மன்னனிடம் நடந்ததை திரித்துச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர். தனது தமக்கையார் பின்பற்றும் சைவ சமயத்தைச் சார வேண்டும் என்பதற்காக தருமசேனர், சூலை நோய் வந்தது போல் நடித்து அனைவரையும் ஏமாற்றியதாகவும், சைவ சமயம் சார்ந்ததன் பின்னர் சமண மதத்தை இழிவாக பேசுவதாகவும் மன்னனிடம் முறையிட்ட குருமார்கள், அவரை அழைத்து மன்னன் விசாரணை செய்யவேண்டும் என்று கோரினார்கள். மன்னனும் தனது மந்திரியையும் காவலர்களையும் திருநாவுக்கரசரை விசாரணை செய்ய அழைத்து வர அனுப்பினான்.

திருவதிகை சென்ற அமைச்சர் திருநாவுக்கரசரை சந்தித்தபோது, அவர் நாமார்க்கும் குடியல்லோம் என்று முழங்கினார். தான் துறவி என்பதால் எந்த அரசரின் ஆணையும் தன்னைக் கட்டுப்படுத்தாது என்றும், தான் எவருக்கும் குடிமகன் அல்ல என்பதையும் தெரிவித்த திருநாவுக்கரசர் முதலில் மன்னனைக் காண மறுத்தார். அவரை அழைத்துச் செல்லாவிடின் தங்களுக்கு ஆபத்து நேரிடும் என்று அவரிடம் தெரிவித்த அமைச்சர், தனது உயிரினைக் காப்பாற்றும் பொருட்டு நாவுக்கரசு பெருமானை தங்களுடன் வருமாறு வேண்டவே, தன்னால் மற்றவர்களுக்குத் துன்பம் ஏற்படக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன், தனக்கு ஏற்படும் இடர்களுக்கு சிவபெருமான் துணையாக இருப்பார் என்ற நம்பிக்கையுடன் நாவுக்கரசர் அவர்களுடன் மன்னனை சந்திக்கச் சென்றார். இதனிடையில் சமண குருமார்கள் நாவுக்கரசரை நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாய்) இடுவதே அவர் செய்த குற்றத்திற்கு உரிய தண்டனை என்று மன்னனிடம் கூறவே, மன்னனும் அந்த தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டான். நீற்றறையின் உள்ளே அடிகளாரை இருத்தி, வெளியே தாளிட்டு காவலுக்கு ஆட்களையும் மன்னன் நியமித்தான். நாயனார் ஈசன் அடியவருக்கு துன்பங்களும் வருமோ என்ற நம்பிக்கையில், நீற்றறையின் உள்ளே அமர்ந்தபடியே இந்தப் பதிகத்தை பாடினார்,

பாடல் 1

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே

விளக்கம்

வீங்கு = பெருகிய

இளவேனில் = சித்திரை, வைகாசி மாதங்கள்

மூசு வண்டு = மொய்க்கும் வண்டு

அறை = ஒலிக்கின்ற.

வெப்பத்தைத் தரும் நீற்றறையின் உள்ளே அமர்ந்திருக்கும் எவருக்கும் வெப்பத்தை அளிக்கும் பொருட்களே நினைவுக்கு வரும். ஆனால் சிவபிரானது அருளால் வெப்பத்தைக் கொடுக்கும் நீற்றறையும் குளிர்ந்த காரணத்தால் நாவுக்கரசருக்கு நீற்றறை உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தனது ஐந்து புலன்களும் இன்பமான சூழ்நிலையினை உணர்ந்த தன்மையை, ஐம்புலன்களுக்கும் இன்பம் கொடுக்கும் பொருட்களை இங்கே குறிப்பிட்டு நமக்கு நாவுக்கரசர் இங்கே உணர்த்துகின்றார். அத்தகைய சூழ்நிலைக்கு இறைவனது திருவடிகளே காரணம் என்பதையும் அந்த சூழ்நிலை எவ்வாறு இருந்தது என்பதையும் இங்கே நமக்கு தெரிவிக்கின்றார்.

திருநாவுக்கரசர் நீற்றறையில் அனுபவித்த சூழ்நிலையை குறிப்பிடும் சேக்கிழார் இறைவன் அருளால் குளிர்ந்த அந்த சூழ்நிலை ஐம்புலன்களுக்கும் இன்பம் அளிப்பதாக இருந்தது என்று கூறுகின்றார். இந்தப் பாடலில் சேக்கிழார், நாவுக்கரசுப் பெருமான் தனது பதிகத்தில் பயன்படுத்திய சொற்களைக் கையாண்டுள்ளது நாம் உணர்ந்து ரசிக்கத்தக்கது.

வெய்ய நீற்றறை அது தான் வீங்கிள வேனில் பருவந்

தைவரு தண் தென்றல் அணை தண்கழுநீர் தடம் போன்று

மெய்யொளி வெண்ணிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய்

ஐயர் திருவடி நீழல் அருளாகிக் குளிர்ந்ததே

பொழிப்புரை

எனது தந்தையாகிய இறைவனின் திருவடி நீழல் செவிக்கு மிகவும் இனிமையான வீணையின் குற்றமற்ற நாதம் போலவும், மாலை நேரத்தில் ஒளி வீசி உடலுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சி தரும் நிலவொளி போலவும், நாசிக்கு புத்துணர்ச்சி தரும் தென்றல் காற்றினைப் போலவும், உடலுக்கு மிதமான வெப்பம் தரும் இளவேனில் காலம் போன்றும், வண்டுகள் மொய்க்கும் மலர்கள் கொண்ட குளத்தின் குளிர்ந்த நீரினைப் போல் வாய்க்கு இனிமையாகவும் இருக்கின்றது.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு. வை.பூமாலை. சுந்தரபாண்டியம்

ஆலய வழிபாட்டின் முடிவில் விண்ணப்பம் செய்யவேண்டிய அருந்தமிழ் பாடல்

Standard

ஆலய வழிபாட்டின் முடிவில் விண்ணப்பம் செய்யவேண்டிய அருந்தமிழ் பாடல்

“வரமாவ தெல்லாம் வடகயிலை மண்ணும்
பரமா உன்பாதார விந்தம் …. சிரம் ஆர
ஏத்திடும் போதாக வந்து என்மனத்தில் எப்பொழுதும்
வைத்திடுநீ வேண்டேன்யான மற்று ” நக்கீர தேவ நாயனார்
கயிலை பாதி காளத்தி பாதி பாடல் 99

திருக்கயிலையில் எழுந்தருளியுள்ள பெருமானாரே ! யான் தங்களை வேண்டுவதெல்லாம் தேவரீருடைய திருவடித் தாமரையே ஆகும். எளியேன் வணங்கும் பொழுது தங்களின் திருவடிகளை என் மனத்தில் நீங்காமல் வைத்திருங்கள். இது தவர வேறு வரங்கள் ஏதும் நான் வேண்டேன்.

பேரரசனிடம் சென்று பிடி அரிசி கேட்பது போலவும், கற்பக மரத்திடம் சென்று களியை வேண்டுவது போலவும் போன்றது பரம் பொருளிடம் ( இறைவரிடம் ) பொன்னையும் பொருளையும் கேட்பது.

காலனை உதைத்த கடவுளிடம் மூவரும் தேவரும் காண முடியாத திருவடிப் பேற்றை கேட்க வேண்டும். அவ்வாறு அமைந்த அரிய பாடல் இப்பாடல், அன்றாடம் இறைவரிடம் விண்ணப்பித்து மேலான நலம் பெறலாம்.

திருச்சிற்றம்பலம்
நன்றி ; தமிழ் வேதம்

திருமூலதேவ நாயனார்

Standard

திருமூலதேவ நாயனார்

இன்று (27.10.2015) திரு மூலநாயனாரின் குருபூசை தினமானதால் இன்று அவரின் வரலாற்றை சற்று நினைவு கூறுவோம்.

திருக்கைலாசத்திலே, சிவபெருமானது ஆலயத்துக்கு முதற்பெருநாயகராகிய திருநந்திதேவருடைய திருவருளைப் பெற்ற மாணாக்கர்களாகிய சிவயோகிகளுள் ஒருவர், அகத்திய மகாமுனிவரிடத்தே பொருந்திய நண்பினாலே அவருடன் சிலநாள் இருத்தற்கு, அவர் எழுந்தருளியிருக்கும் பொதியமலையை அடைதற்பொருட்டு, திருக்கைலாசத்தை அகன்று வழிக்கொண்டு, திருக்கேதாரம், பசுபதிநேபாளம், காசி, ஸ்ரீசைலம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சீபுரம், திருவதிகை, சிதம்பரம் என்னுந் தலங்களை வணங்கிக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்து, அங்கே சுவாமி தரிசனஞ்செய்து கொண்டிருந்தார்.

ஒருநாள் அந்தத்தலத்தை அகன்று செல்லும்பொழுது, காவிரியாற்றங்கரையிலுள்ள வனத்திலே பசுக்கூட்டங்கள அழுதலை எதிரே கண்டார். சாத்தனூரில் இருக்கின்ற இடையனாகிய மூலனென்பவன் ஒருவன் அவைகளை மேய்க்கின்றவன். அவன் அத்தினத்திலே அவ்விடத்தில் இறந்து கிடந்தான். அப்பசுக் கூட்டங்கள் அவனுடைய சரீரத்தை வந்தணைந்து, சுற்றி மிகக் கதறிச் சுழன்று மோப்பனவாக; சிவயோகியார் கண்டு, “பரமசிவனது திருவருளினாலே இப்பசுக்களுடைய துயரத்தை நீக்கல் வேண்டும்” என்று ஆலோசித்து, “இவ்விடையன் உயிர் பெற்றெழுந்தாலன்றிப் பசுக்கள் துயரநீங்கா” என்று திருவுளங் கொண்டு தம்முடைய திருமேனிக்குக் காவல்செய்து, தாம் அவ்விடையனுடைய சரீரத்தினுள்ளே பிரவேசித்து, திருமூலராய் எழுதார். எழுதலும், பசுக்களெல்லாம் நாத்தழும்ப நக்கி மோந்து, கனைத்து, மிகுந்த களிப்பினாலே வாலெடுத்துத் துள்ளி, பின்புபோய் மேய்ந்தன. திருமூலநாயனார் அது கண்டு திருவுளமகிழ்ந்து, அவைகள் மேயுமிடத்திற்சென்று, அவைகளை நன்றாக மேய்த்தார். சூரியன் அஸ்தமயனமாக, பசுக்கள் தத்தங் கன்றுகளை நினைந்து, தாமே முன் பைய நடந்து, சாத்தனூரை அடைந்தன சிவயோகியார் அப்பசுக்களுக்குப் பின்சென்று, அவைகளெல்லாம் வீடுகடோறும் போகத் தாம் வெளியிலே நின்றார்.

மூலனுடைய மனைவி “நாயகர் இன்றைக்கு மிகத் தாழ்த்தார்” என்று பயங்கொண்டு சென்று, சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்து, “இவருக்கு ஈனம் அடுத்தது போலும்” என்று. அவருடைய திருமேனியைத் தீண்ட; அவர் அதற்கு இசையாராயினார். அவள் அச்சுற்று மயங்கி, “என்செய்தீர்” என்று, தளர, திருமூலநாயனார் “உனக்கு என்னோடு யாதொரு சம்பந்தமும் இல்லை” என்று மறுத்து, ஒரு பொதும்டத்தினுள்ளே புகுந்து, சிவயோகத்தில் இருந்தார். மனைவி அவ்விரவு முழுதிலும் நித்திரை செய்யாது கவலை கொண்டிருந்து, மற்ற நாள் அதனை விவேகிகள் பலருக்குத் தெரிவிக்க; அவர்கள் வந்து பார்த்து, அவளை நோக்கி, “இது பைத்தியமன்று, வேறு சார்புள்ளதுமன்று. இவர் கருத்துச் சிவயோகத்தினிடத்தேயாம். இனி இவர் உங்கள் சுற்றவியல்போடு கூடார்” என்றார்கள். அவள் அது கேட்டுத் துயரம் எய்தி மயங்க; அவர்கள் அவளைக் கொண்டு போய்விட்டார்கள்.

சிவயோகத்தில் இருந்து திருமூலநாயனார் எழுந்து, முதனாளிலே பசுக்கள் வந்த வழியே சென்று தாஞ்சேமித்த சரீரத்தைக்காணாது, மெய்ஞ்ஞானத்தையுடைய சிந்தையினால் ஆராய்ந்து, “சிவபெருமான் ஆதிகாலத்திலே தம்முடைய பஞ்சவத்திரத்தினின்றும் தோற்றுவித்த காமிக முதலிய சைவாகமங்களிலே பேசப்பட்ட மெய்ப்பொருளைத் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு உபயோகமாகும் பொருட்டுத் தமியேனைக்கொண்டு தமிழினாலே ஒரு நூல் செய்வித்தற் பொருட்டு இச்சரீரத்தை மறைத்தருளினார்” என்று தெளிந்து, திருவருளைத் துதித்து, திருவாவடுதுறையை அடைந்து, அங்குள்ள சிவாலயத்திலே பிரவேசித்து; சிவபெருமானை வணங்கி, அதற்கு மேற்குப்பக்கத்தில் இருக்கின்ற அரசின் கீழே போய், சிவயோகத்தில் இருந்தார். அவர் மூவாயிரம் வருஷமளவு அங்ஙனம் இருந்து, ஒவ்வொரு வருஷத்திற்கு ஒவ்வொரு திருப்பாட்டாக மூவாயிரம் திருப்பாட்டினால் சைவாகமங்களின் உணர்த்தப்பட்ட ஞானம் யோகம் கிரியை சரியை என்னும் நான்கு பாதங்களையும் பேசுகின்ற திருமந்திரமென்னுந் தமிழ்நூலைப் பாடியருளி, பின் திருக்கைலாசத்தை அடைந்தார். திருப்பெருமங்கலத்திலே, வேளாளர் குலத்திலே, சோழராஜாக்களிடத்திலே பரம்பரையாகச் சேனாதிபதித் தொழில்பூண்ட ஏயர்குடியிலே, கலிக்காமநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் குருலிங்க சங்கமபத்தியிலே சிறந்தவர். திருப்புன்கூரிலுள்ள சிவாலயத்திலே அளவில்லாத திருப்பணிகள் செய்தவர்.

திருச்சிற்றம்பலம்.

திரு அருணகிரி நாதர் * திருக்கழுக்குன்றத்தில் பாடிய

Standard

திரு அருணகிரி நாதர் * திருக்கழுக்குன்றத்தில் பாடிய
திருப்புகழ்

அகத்தி னைக்கொண் டிப்புவி மேல்சில
தினத்து மற்றொன் றுற்றறி யாதுபின்
அவத்துள் வைக்குஞ் சித்தச னாரடு …… கணையாலே

அசுத்த மைக்கண் கொட்புறு பாவையர்
நகைத்து ரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ
அலக்க ணிற்சென் றுத்தடு மாறியெ …… சிலநாள்போய்

இகத்தை மெய்க்கொண் டிப்புவி பாலர்பொன்
மயக்கி லுற்றம் பற்றைவி டாதுட
லிளைப்பி ரைப்பும் பித்தமு மாய்நரை …… முதிர்வாயே

எமக்க யிற்றின் சிக்கினி லாமுனுன்
மலர்ப்ப தத்தின் பத்திவி டாமன
திருக்கு நற்றொண் டர்க்கிணை யாகவு …… னருள்தாராய்

புகழ்ச்சி லைக்கந் தர்ப்பனு மேபொடி
படச்சி ரித்தண் முப்புர நீறுசெய்
புகைக்க னற்கண் பெற்றவர் காதலி …… யருள்பாலா

புவிக்குள் யுத்தம் புத்திரர் சேயர
சனைத்து முற்றுஞ் செற்றிட வேபகை
புகட்டி வைக்குஞ் சக்கிர பாணிதன் …… மருகோனே

திகழ்க்க டப்பம் புட்பம தார்புய
மறைத்து ருக்கொண் டற்புத மாகிய
தினைப்பு னத்தின் புற்றுறை பாவையை …… யணைசீலா

செகத்தி லுச்சம் பெற்றம ராவதி
யதற்கு மொப்பென் றுற்றழ கேசெறி
திருக்க ழுக்குன் றத்தினில் மேவிய …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

அகத்தினைக் கொண்டு இப்புவி மேல் சில தினத்து மற்று
ஒன்று உற்று அறியாது … இல்லறத்தைத் தழுவி இந்தப் பூமியில்
சில நாட்கள் வேறு ஒரு நல்ல மார்க்கத்தையும் தெரிந்து கொள்ளாமல்,

பின் அவத்துள் வைக்கும் சித்தசனார் அடு கணையாலே
அசுத்த மைக் கண் கொட்பு உறு பாவையர் நகைத்து
உரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ … பின்பு பயனில்லாத (கேடு
தரத்தக்க) மன்மதன் செலுத்தி வருத்தும் அம்பால், அசுத்தமானதும்
மை பூசியதுமான கண்களைச் சுழற்றும் பெண்கள் சிரித்துப் பேசும்
பொய் என்னும் கடலில் முழுகி,

அலக்க(ண்)ணில் சென்றுத் தடுமாறியெ சில நாள் போய்
இகத்தை மெய்க் கொண்டு இப்புவி பாலர் பொன் மயக்கில்
உற்று … துக்கத்தில் பட்டு நிலை தடுமாறி இங்ஙனம் சில நாட்கள்
போக, இம்மை வாழ்வை மெய் என்று எண்ணி, இந்தப் பூமி,
குழந்தைகள், பொருள் ஆகிய மாயையில் அகப்பட்டு,

அம் பற்றை விடாது உடலில் இளைப்பு இரைப்பும்
பித்தமுமாய் நரை முதிர்வா(கி)யே எமக் கயிற்றின் சிக்கி
நி(ல்)லா முன் … அந்த ஆசையை விடாமல் உடலில் சோர்வு, மூச்சு
வாங்குதல், பித்தம் முதலிய நோய்கள் மேலிட, தலை மயிர் நரைத்து
கிழவனாகி, நமனுடைய பாசக் கயிற்றில் சிக்குண்டு நான் நிற்பதற்கு
முன்னதாக,

உன் மலர்ப் பதத்தின் பத்தி விடா மனது இருக்கு(ம்) நல்
தொண்டர்க்கு இணையாக உன் அருள் தாராய் … உன்னுடைய
மலர் போன்ற திருவடிகளில் பக்தியை விடாதுள்ள மனதைப் பெற்ற
நல்ல அடியார்களுக்கு நானும் சமமாகும்படி உன்னுடைய
திருவருளைத் தந்தருளுக.

புகழ்ச் சிலைக் கந்தர்ப்பனுமே பொடி படச் சிரித்து அண்
முப்புர(ம்) நீறு செய் புகைக் கனல் கண் பெற்றவர் காதலி
அருள் பாலா … யாவரும் புகழும் (கரும்பு) வில்லை ஏந்திய மன்மதனும்
எரிந்து போகவும் சிரித்து, தம்மை அணுகி வந்த திரிபுரத்தையும்
சாம்பலாக்கிய புகை நெருப்பைக் கொண்ட நெற்றிக்கண்ணை
உடையவரான சிவபெருமானுடய காதலியாகிய பார்வதி பெற்றருளின
மகனே.

புவிக்குள் யுத்தம் புத்திரர் சேய் அரசு அனைத்து(ம்) முற்றும்
செற்றிடவே பகை புகட்டி வைக்கும் சக்கிர பாணி தன்
மருகோனே … பூமியில் போர் வரவும் (திருதராஷ்டிரனின்) பிள்ளைகள்,
அவர்களின் குழந்தைகள், இதர அரசர்கள் யாவரும் முழுப் பகையாகவும்,
(மகாபாரதப்) போரைத் துவக்கி வைத்த, சக்ராயுதத்தைக் கையில் ஏந்திய,
திருமாலின் மருகனே,

திகழ்க் கடப்பம் புட்பமது ஆர் புய(ம்) மறைத்து உருக்
கொண்ட அற்புதமாகிய தினைப் புனத்து இன்புற்று உறை
பாவையை அணை சீலா … விளங்கும் கடப்ப மலர் மாலை நிறைந்த
தோள்களை மறைத்து வேறு கோலத்தைப் பூண்டு, அற்புதம் நிறைந்த
வள்ளி மலையில் உள்ள தினைப் புனத்தில் இன்பமாக வாழ்ந்த
வள்ளியைத் தழுவும் குணவானே,

செகத்தில் உச்சம் பெற்ற அமராவதி அதற்கும் ஒப்ப என்று
அழகே செறி திருக் கழுக் குன்றத்தினில் மேவிய
பெருமாளே. … பூமியில் மேலான சிறப்பைப் பெற்று, தேவேந்திரன்
தலைநகராகிய அமராவதிக்கு ஒப்பாகும் என்று விளங்கும்படி அழகு
நிறைந்த திருக்கழுக் குன்றத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* திருக்கழுக்குன்றத்தின் தலவிருட்சம் வாழையாதலால் இதற்கு ‘கதலிவனம்’ என்றும் பெயர்.