தங்கத்தைப் பார்த்து பயந்த சித்தர் – சிவ வாக்கியர்

Standard

தங்கத்தைப் பார்த்து பயந்த சித்தர் – சிவ வாக்கியர்
தங்கத்தைப் பார்த்து பயந்த சித்தர் – சிவ வாக்கியர்
இறைவனைப் பற்றி அறியும் ஞானமே பிரம்ம ஞானம் என்று சொல்லப்படுகிறது. பெளதீக, சூக்கும, மனோ தத்துவங்களை உருவாக்கியவர்கள் , பிரம்ம ஞானம் பெற்ற சித்தர்கள். உடலில் இருக்கும் ஞானேந்திரியங்களை சரியான முறையில் வசப்படுத்தினால் உயர்ந்தஜீவன்களாக ஆக முடியும். மனிதனின் அறிவுக்கு எட்டாத ரகசியம் எதுவும் இல்லை. காலச் சக்கரம் சுழலும் போது அந்த ரகசியங்கள் சில காலம் மறைந்து விடுகின்றன. மனிதர்களின் நிலையைப் புரிய வைப்பதற்காக சித்தர்கள் தோன்றினார்ககள். அந்த சித்தர்கள் மக்களுக்கு உபதேசம் செய்தார்கள்.
உடலையும் மனதையும் வசப்படுத்தினால் உடலே கோவில் என்பதை உணர முடியும் என்று கூறய சித்தர்தான் சிவவாக்கியர், கருவில் இருக்கும் குழந்தை உலகம் என்ற பிரபஞ்சத்தில் அடியெடுத்து வைக்கும் போது எழுப்பும் முதல் ஒலி அம்மா என்ற குரலே. ஆனால் சிவ சிவா என்ற குரல் எழுப்பி குழந்தை பிறந்தது என்றால் ஆச்சரிய படுவோம் அல்லவா?. அப்படி பிறந்த குழந்தை க்கு சிவ நாமத்தை எப்போதும் உச்சரிக்கும் வகையில் சிவ வாக்கியர் என்று பெயர் சூட்டினார்கள். குழந்தை பருவத்தில் இருந்தே தத்துவத்தை உணர்ந்து வாழ்ந்த சிவ வாக்கியர் முக்திக்கு விடை தேடி தேச சஞ்சாரத்தை மேற்கொண்டு காசியில் ஒரு சித்தரை பார்த்தார்.
அந்த சித்தரை செருப்பு தைக்கும் தொழிலாளியாக மட்டுமே மற்றவர்கள் பார்த்தார்கள். ஆனால் சிவவாக்கியர் அவர்களின் கண்களுக்கு உலகத்தை அறிந்த ஞானிபோல் தென்பட்டார். அவர் அருகே அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டு இருந்தார். அதைப் பார்த்த சித்தரின் மனதில் உபதேசம் கற்க போகும் மாணவன் கிடைத்து விட்டான் என்று தோன்றியது. எவரிடமும் இல்லாத புரிந்து கொள்ளும் சக்தி சிவவாக்கியருக்கு இருப்பதாக அவரது உள் உணர்வு கூறியது.
சிவ வாக்கியரிடம் அவர் பெயரை கேட்காமலேயே ” சிவவாக்கியரே இந்த காசை, என் தங்கை கங்கா தேவியிடம் கொடுத்துவிட்டு, இந்த சுரைக்காயின் கசப்புத் தன்மையை கழுவிட்டு வா” என்றார் சித்தர. சிவவாக்கியருக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் மறுப்பு சொல்லாமல் பேய் சுரக்காயையும் காசையும் வாங்கிக் கொண்டு கங்கை நதிக்கு சென்றார். காசை கங்கை நதியில் போடுவதற்காக தண்ணீர் அருகே கொண்டு சென்றார். நதியிலிருந்து ஒரு கை வெளியே வந்து காசை பெற்றுக் கொண்டுவிட்டது. வியப்பு மேலிட, பேய்ச் சுரக்காயை கழுவி எடுத்துக் கொண்டு சித்தரிடம் வந்தார், மீண்டும் சிவவாக்கியரைச் சோதிக்க நினைத்த சித்தர், ” சிவவாக்கியரே, இந்த தோல் பையில் உள்ள கங்கை தண்ணீரிடம் நீ கொடுத்த காசை கேட்டு வாங்கிக் கொடு” என்றார். குருவுக்கு அடிபணியும் சீடனைப்போல எந்த வித சலனமும் இல்லாமல் ” கங்கை நீரே, என் ஆசான் கொடுத்த காசைக் கொடு” என்றார். அந்த தோல்பையிலிருந்து ஒரு கை நீண்டது. அந்த கையிலிருந்து காசை பெற்று சித்தரிடம் கொடுத்தார் சிவவாக்கியர்.
காசை பெற்றுக் கொண்ட சித்தர் ” உன்னிடம் மனப்பக்குவம் ஏற்பட்டு விட்டது. இனி நான் உனக்கு உபதேசம் செய்கிறேன், என்று கூறி உபதேசம் செய்தார். சில காலம் அவரிடம் சீடராக இருந்தார் சிவவாக்கியர்.
ஐம்பத்தொரு வயதான நிலையில் சிவவாக்கியருக்கு இல்லற ஈடுபாடு மனத்துக்குள் தோன்றயது. இதையறிந்த சித்தர், ” சிவவாக்கியரே சிறிது காலம் இல்லற சுகத்தில் ஈடுபட்டு அதன்பின் முக்தி நிலையை அடைவாய்” என்று கூறினார். மனதில் இருந்த எண்ணத்தை எப்படி அறிந்தார் என்ற கேள்விக் குறியோடு சித்தரை நோக்கினார் சிவவாக்கியர்,
சித்தர் அவரது கையில் மணலையும், பேய் சுரக்காயையும் கொடுத்து ” இந்த இரண்டையும் எந்த பெண் சமைத்துக் கொடுக்கிறாளோ அவளை மணந்து கொள்” என்று கூறி விடையளித்தார் சித்தர். அவைகளை பெற்றுக் கொண்ட சிவவாக்கியர் உபதேசங்களை செய்து கொண்டே நடந்தார், கூட்டங்களில் புதிர்போடுவது போல் ” இந்த மணலையும், பேய் சுரைக்காயையும் சமைத்து உணவாக பரிமாற முடியுமா? என்று கேப்பார், பெண்கள் திகைத்தனர், யாராலும் முடியும் என்று கூற முடியவில்லை, ஒரு கிராமத்தில் மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது ” மணலையும் பேய் சுரக்காயையும் சமைத்து தர முடியுமா? என்று நரிக்குறவர்கள் மத்தியில் இருந்த பெண்களிடம் கேட்டார், அப்போது யாரும் எதிர் பாராமல் ஒரு பெண் முன்னே வந்து ” நான் சமைத்துத் தருகிறேன் என்று கூறி வாங்கிச் சென்றது. சிறிது நேரத்தில் மணலையும் பேய்ச் சுரைக்காயையும் சமைத்து கொண்டு வந்தாள். அதை சாப்பிட்ட சிவவாக்கயர் இவளே என் மனைவி என்பதை அறிந்து , அவளது பெற்றோர்களிடம் தங்களது திருமணத்திற்கு ஒப்புதல் கேட்டு திருமணம் செய்து கொண்டார். நரிக்குறவர்களோடு சிவவாக்கியரும் வாழத் தொடங்கினார். மூங்கில் மரத்தை வெட்டி கூடை செய்யும் தொழிலை கற்றுக்கொண்டார், ஒருநாள் மூங்கில் மரத்தை வெட்டினார், அந்த மரத்தில் இருந்து தங்கத்துகள்கள் கொட்டத் தொடங்கியதைக் கண்டார். இதைப் பார்த்த சிவவாக்கியர் ” சிவபெருமானே ! உன்னிடம் நான் முக்திக்கு வழி கேட்டுக் கொண்டு இருக்கும் போது செல்வத்தைக் காட்டி என்னை மயக்குகிறாய்? என்று தங்கத்தை பார்த்த அதிர்ச்சியில் தலை தெறிக்க ஒடினார், இதைக்கண்ட கிராமத்து மக்கள் அவரிடம் என்ன என்று கேட்க, அந்த மரத்தில் பூதம் வருகிறது என்று பொய் கூற மக்கள் அதன் பக்கத்தில் நெருங்கி பார்க்க தங்க துகள்கள் இருப்பதை கண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு தங்கத்துக்காக மாண்டார்கள்,
இதைப் பார்த்த சிவவாக்கியர் மனம் வெறுத்து அங்கிருந்து புண்ணியத் தலங்களுக்கு சென்று ஆசைகளை ஒழித்தால் சிவனைக் காணலாம் ஆசையை ஒழிக்காவிடில் எமனைத்தான் காண முடியும் என்ற தத்துவத்தை மக்களுக்கு போதித்தார். நாத்திக கருத்துக் கொண்டு ஆன்மீகத்தை நெறிபடுத்தி ஆன்மீகத்தை தத்துவப்பாடல் கள் கொண்டு நூல்கள் இயற்றி உள்ளார், அவர்தம் கருத்துக்கள் எதிர் மறை போல் தோன்றினாலும் அதன் உள்கருத்து பல தத்துவங்களை கொண்டது என்பது தெளிவர விளங்கும். இறுதியில் இவர் சமாதி ஆன இடம் கும்பகோணம்,
சித்தர் இலக்கியத்தில் சிவவாக்கியர் பாடலுக்குத் தனி மரியாதை
தரப்படுவதுண்டு, காரணம், இவர் பாடல்களில் வழக்கமான சித்தர்
கருத்துக்கான யோகம், குண்டலினி, நிலையாமை. வாசி கருத்துக்களுடன்
புரட்சிகரமான கருத்துக்களையும் கூறுவதால் இவர் புரட்சிச் சித்தர் என்றும்
கூறப்படுகின்றார். சமுதாயப் புரட்சி செய்த இந்தச் சித்தர் ஆரம்ப காலங்களில்
நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறினார் என்பதை இவரின் பாடல்
கருத்துக்கள் புலப்படுத்துகின்றன. இதனையொட்டி இவர் முதலில் நாத்திகராக
இருந்து பிறகு சைவராகி சிவவாக்கியரானார் என்றும்; பிறகு வீர வைணவராக
மாறி திருமழிசை ஆழ்வாரானார் என்றும் கூறுவதுண்டு.

சிவவாக்கியரின் பாடல்களும் திருமழிசை ஆழ்வார் பாடல்களும்
சந்தத்தில் மட்டுமே ஓரளவு ஒத்துப் போவதாலும் இவர் பாடல் சாயலில்
ஏனைய சித்தர்பாடல்களும் இருப்பதால் இக்கருத்து ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.

விக்கிரக ஆராதனை

சிவவாக்கியர் பாடல்களில் விக்கிரக ஆராதனை வெகுவாகப் பழிக்கப்
படுகின்றது.

நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ
சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது. அந்த
உணவின் ருசியை உணர்ந்து கொள்ளாதது போலவே மனக்கோயிலினுள்
இறைவன் இருப்பதை அறியாமல் வெறும் கல்லை நட்டு வைத்து தெய்வ
மென்று பெயரிட்டு பூக்களாலும் மந்திரங்களாலும் வழிபாடு செய்வது
அறியாமையே யாகும் என்கிறார்.

“ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே”
நட்டு வைத்த கல்லை தெய்வம் என்று நினைத்து அக்கல்லின் மேல்
மலர்களைச் சாத்திவிட்டு அதைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள். மொண மொண
என்று ஏதோ மந்திரங்களையும் சொல்லுகிறீர்கள். அந்த மந்திரத்தால் என்ன
பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா? அட மூடர்களே, கடவுள் என்பவர்
தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில்
நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ?
சித்தர்களின் இந்தக் கருத்தையொட்டியே சிவவாக்கியரும் மேற்கண்ட
வாறு உருவ வழிபாட்டை எள்ளி நகையாடினார். கல்லில் கடவுளின் வடிவம்
செய்து அதைப் பல பெயர்களால் அழைப்பது அறிவின்மை; அறிவற்ற
மூடர்கள்தாம் இவ்விதம் செய்வார்கள். உலகைப் படைத்துக் காத்து,
அழிக்கவும் வல்ல ஒரு பொருள் கல்லிலா இருக்கிறது? இல்லை அந்தக்
கடவுளின் வடிவம் உள்ளத்தில் மட்டுமே இருக்கிறது. அதனை உள்ளத்தால்
அல்லவோ வழிபட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.

பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர்
எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே

கல்லுருவம் நம்மால் செய்து வைக்கப்பட்டது. அதைப் பழமையான
பொருள், அழியாத இறை என்று எண்ணுகிறீர்கள். அதற்கு என்னென்னமோ
பேர் சொல்லுகிறீர்கள். உங்கள் மனதில் தோன்றும் பெயர்களையெல்லாம்
இட்டு அழைக்கின்றீர்கள். உங்களின் அறியாமை காரணமாகத்தான் இப்படி
யெல்லாம் கடவுளின் பெயரைக் கல்லுக்கு வைத்துஅழைக்கின்றீர்கள். இந்த உலகைப் படைத்த ஒன்று எல்லாவற்றையும் செய்ய
வல்லது; உலகையும், உலகப் பொருள்களையும் படைக்க வல்லது. தாம்
படைத்த பொருளை அறியாமல் வைத்திருக்கவும் காப்பாற்றவும் வல்லது.
அதுமட்டுமல்ல; அவைகளைத் தேவைப்படாத பொழுது அழிக்கவும் வல்லது.
இப்படி படைத்து, காத்து, அழிக்கும் பரம்பொருளை நீங்கள் கல்லிலே காண
இயலாது. உங்கள் நெஞ்சினில் மட்டுமே உணர முடியும். மனதில் மட்டுமே
உணர முடியும் என்று உண்மையை உரைக்கின்றார் சிவவாக்கியர்.

இதில் எங்கும் நிறைந்த கடவுளை உருவ வழிபாட்டின் மூலம் வழி
படுவது தவறு என்றும், அப்படி வழிபடுபவர்கள் அறியாமையை உடைய
ஏழைகள் என்றும் சாடுகின்றார்.

உருவ வழிபாட்டையே மறுக்கும் சிவவாக்கியர் அவ்வுருவ வழிபாட்டின்
பெயரால் நடைபெறும் திருவிழாக்களை மட்டும் ஏற்றுக்கொள்வாரா என்ன?
திருச்சிற்றம்பலம்
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.

Advertisements
Standard

தகட்டூர் பைரவர் திருக்கோயில், நாகப்பட்டினம்

மூலவர் : பைரவர்
உற்சவர் : சட்டைநாதர்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : யந்திரபுரி
ஊர் : தகட்டூர்
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு

பொது தகவல்:

அனுமனுடன் வந்த பைரவர் என்பதால், இத்தலத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோரும், பிரகாரத்தில் கணபதி, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் உள்ளனர். கோயிலுக்கு எதிரேயுள்ள தீர்த்தக்குளம் உள்ளது. குளத்தின் ஒரு கரையில் காத்தாயி, கருப்பாயி சமேத ராவுத்தர் சன்னதி இருக்கிறது. இவரும் இத்தலத்தில் காவல் தெய்வமாக இருக்கிறார்

. தலபெருமை:
தகட்டூரிலுள்ள பைரவநாத சுவாமி: கோயிலில் பைரவர் மூலஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கிறார். இவரை மூலஸ்தானத்தில் கொண்ட கோயில் தமிழகத்தில் இதுமட்டுமே.

பைரவர் பிறப்பு: அபிதான சிந்தாமணி என்ற நூலில் பைரவர் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. தாருகாசுரன் என்பவன் இறவா வரம் வேண்டும் என சிவனிடம் வரம் கேட்டான். உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் சொன்னார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்.

பல அட்டூழியங்கள் செய்த அவன் அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். உடனே, பார்வதிதேவி சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தின் கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர் ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. “காளம்’ என்ற விஷம்படிந்த அந்த பெண்ணுக்கு “காளி’ என பெயர் சூட்டினாள் பார்வதி. காளிதேவி கடும் கோபததுடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம் கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின்னர் அந்தக் கனலை காளிதேவி ஒரு குழந்தையாக மாற்றி அதற்கு பாலூட்டினாள். அதன்பிறகு சிவபெருமான் காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுக்குள் புகச்செய்தார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் குழந்தைக்கு “பைரவர்’ என்று பெயர் வைத்தார்.

நாய் வாகனம்: தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பார்கள். சிலர் நாயை தெருவில் கண்டாலே கல்லெறிவார்கள்.இதுபோல், வாழ்க்கையில் வரும் துன்பத்தையும், இன்பத்தையும் இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்றே வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாகவே நாய் வாகனம் கருதப் படுகிறது. நாய்க்கு “வேதஞாளி’ என்ற பெயரும் இருப்பது குறிப்பிடதக்கது. பெயர்க்காரணம்: இவ்வூருக்கு “யந்திரபுரி’ என்ற பெயரும் இருக்கிறது. இதன் தமிழ்ப்பெயரே “தகட்டூர்’. சக்தி வாய்ந்த தெய்வங்களின் முன்பு ஸ்ரீசக்ரம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். இந்தக் கோயிலிலும் ஒரு யந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உற்சவர் சட்டைநாதர் சிலையும் இருக்கிறது.

தல வரலாறு:

இலங்கையில் ராவணவதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவபூஜை செய்ய முடிவெடுத்தார். அதற்காக லிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பினார். அனுமான் லிங்கத் துடன் வரும்போது, அவருடன் மகாபைரவரும் வந்தார். கோயில்களில் பைரவரே காவல் தெய்வம். அக்காலத்தில், கோயிலைப் பூட்டிபைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதை தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்திவாய்ந்தவராக பைரவர் கருதப் பட்டார். அதுபோல் காசி லிங்கத்திற்கு காவலாக பைரவர் அனுமனுடன் வந்துள்ளார். அவருக்கு தற்போதைய தகட்டூர் தலத்தில் குடியிருக்க ஆசைபிறக்கவே, அங்கேயே தங்கி விட்டார்.
இழந்த சொத்துக்கள் திரும்பப் பெற :

27 மிளகை ஒரு சிறு வெள்ளைத் துணியில் கட்டி பைரவருக்கு முன்னால் ஒரு அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபட இழந்த சொத்துக்கள், பொருட்கள் மற்றும் எதை நினைத்து அர்ச்சனை செய்கிறோமோ அவை விரைவில் திரும்பக் கிடைக்கும்

சாம்பலில் இருந்து வந்த சித்தர் கோரக்கர்

Standard

சாம்பலில் இருந்து வந்த சித்தர் கோரக்கர்
மனித உடல் கூறுகளைப் பற்றி சித்தர்கள் பாடல்களாகப் பாடி வைத்திருக்கிறார்கள்
ஐம்பூலங்களால் ஆன உடம்பில் எத்தனை ஒட்டைகள், ஒன்பது வாசல்கள் என நவத்துவாரங்கள் என பாடியுள்ளனர், கண்கள் இரண்டு, செவிகள் இரண்டு, நாசி துவாரங்கள் இரண்டு, வாய், சிறுநீர் துவாரம், மலத்துவாரம்,என ஒன்பது வாசல்கள் என்றனர், உடலில் எழுபத்திரண்டாயிரம் நரம்புகள், உடலைத் தாங்க முதுகெழும்புத்தண்டு, எட்டு நீண்ட எலும்புகளுடன்இணைக்கப்பட்ட எழுபது எலும்புகள் என கண்டறிந்துள்ளனர்,
விஞ்ஞான காலத்திற்க முன்பே உடல்கூறுகளின் ரகசியங்களையும், ஏதாவது பாகம் பழுது பட்டால் செய்ய வேண்டிய சிகிச்சைகளையும் அறிந்தவர்கள் சித்தர்கள், இதனாலேயே அவ் வைத்தியத்திற்கு சித்தர் வைத்தியம் (சித்த வைத்தியம்) என வழங்கப்படுகிறது.
வட இந்தியாவைச் சேர்ந்த கோரக்கர் என்ற சித்தரைப்பற்றி பார்ப்போம்.
சிவபெருமானும் பார்வதிதேவியும் பூவுலகில் சஞ்சரித்து வரும்போது கடற்கரையில் அமர்ந்து சிவபெருமான் பார்வதி தேவிக்கு தாரக மந்திரம் உபதேசித்தார், பார்வதி தேவி சற்று நேரம் தூக்கத்தில் ஆழ்ந்தார், அதை அறிந்த சிவபெருமான் மந்திரத்தை உபதேசித்துக் கொண்டே இருந்தார், கடற்கறையில் ஒரத்தில் பெரிய மீன்களுக்கு பயந்து ஒரு மீன்குஞ்சு தண்ணீரில் இருந்தது. அப்போது அந்த மீன்குஞ்சு, சிவபெருமான் கூறிய தாரக மந்திரத்தைக் கேட்டது, மந்திரத்தை கேட்ட அந்த மீன்குஞ்சு மனிதனாக மாறியது.
இதைப்பார்த்த சிவபெருமான் மீனாகஇருந்து மனிதனாக மாறியவனுக்கு மச்சேந்திரன் என்று பெயர் சூட்டி, ஞானத்தை போதித்தார், ஞானம் பெற்ற மச்சேந்திரன் சித்தராகி ஞான வழியை மக்களுக்கு போதித்த கொண்டு இருந்தார்.
ஒரு கிராமத்தை சித்தர் மச்சேந்திரன் கடந்த போது, ஒரு வீட்டு வாசலில் கவலையோடு ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அவர் சித்தரைப் பார்த்ததும் அவசரமாக உள்ளே சென்று உணவை எடுத்து வந்து அவருக்கு கொடுத்தார். அவளது முக வாட்டத்தைப் பார்த்த சித்தர் உனக்கு என்ன மனக்குறை என்று வினவினார்,
எனக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை என்றாள்.
சித்தர் சிறிது திருநீற்றை கொடுத்து இந்த திருநீற்றை பாலில் கலந்து குடி குழந்தை பாக்கியம் கிடைக்கும், என்று கூறி ஆசிர்வதித்தார், நற்செய்தி கேட்ட பெண் முகமலர்ந்து சித்தரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். வெளியூர் சென்ற கணவன் வீடு திரும்பியதும் நடந்த நிகழ்வுகளை கூறினாள். அவனோ உனக்கு திருநீறு கொடுத்தவன் உண்மையான துறவியா? என்பது உனக்கு எப்படி தெரியும்? அந்த திருநீற்றை அடுப்பில் போட்டுவிடு என்றான், சிவன் நமக்கு நல்வழீகாட்டுவான் என்றான். கணவன் சொல்லை மறுக்க முடியாத நிலையில் திருநீற்றை அடுப்பில் போட்டாள் மனைவி.
இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்தன, அந்தப் பெண்ணுக்கு குழந்தைப்பாக்கியம் அதன் பின் கிடைக்க வில்லை. சிவத்தலங்களை தரிசித்து விட்டு மீண்டும் அந்த கிராமத்தின் வழியாக வந்தார் சித்தர் மச்சேந்திரன்.தான் திருநீற்றை கொடுத்த பெண் வீட்டுக்கு வந்து கதவைத்தட்டினார், கதவைத்திறந்த பெண் சித்தரை அடையாளம் கண்டு கொண்டு வணங்கினாள்.
சித்தரோ வீட்டின் உள்ளே பார்த்தபடி உன் மகன் எங்கே அவனை அழை நான் பேச வேண்டும் என்றார். அவளோ, எனக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்றாள். நான் தந்த விபூதி என்னவாயிற்று என்றார், உடனே அப்பெண் ” என்னை மன்னியுங்கள், தாங்கள் கொடுத்த திருநீற்றை அடுப்பில் போட்டு விட்டேன் என்றாள், எந்த அடுப்பில் என்றார் சித்தர், இந்த அடுப்பில் தான் போட்டேன் இந்த சாம்பலை இங்கே தான் கொட்டினேன் என்று அவ்விடத்தைக் காட்டினாள். உடனே அவ்விடத்தின் அருகில் நின்று சித்தர் ” கோராக்கா வெளியே வா! என்றார், என்றைக்கு திருநீறு கொடுத்தாரோ, அன்று முதல் இன்று வரை எவ்வளவு காலங்கள் ஆனதோ அத்தனை காலங்களில் ஏற்பட்ட வளர்ச்சியோடு அந்த சாம்பலில் இருந்து குழந்தை வெளிப்பட்டது. அந்தக் குழந்தைக்கு “கோரக்கர்” என்று பெயர்சூட்டினார், அவனை தன் சீடனாக ஏற்றுக் கொண்டார் சித்தர்.
கோரக்கர் எட்டு வயது ஆகும்போதே சித்தரோடு சேர்ந்து அவர் கற்றுக் கொடுக்கும் மந்திரங்களை கற்று குருவுக்கு மிஞ்சின சிஷ்யராக திகழ்ந்தார். சித்தர் மச்சேந்திரனுக்கு மீனாக இருக்கும் போது சிவபெருமான் உபதேசித்த மந்திரங்களையும் உபதேசித்தார். நிறைகுடம் போல் அறிந்தவற்றை வெளிக்காட்டாமல் சிறந்த ஞானியாக வாழ்ந்தார் கோரக்கர் சித்தர். குருநாதருக்கு உணவு வேண்டி வீடுகளில் பிச்சை வேண்டி குருவிற்கு உணவு அளித்தார், ஒரு நாள் பிச்சை எடுக்கும் போது ஒரு வீட்டில் வடை கிடைத்தது. அதை தம் குருநாதருக்கு கொடுத்தார். மறுநாளும் குருநாதர் அதேவீட்டில் வடை வாங்கி வர அனுப்பினார், ஆனால் அந்த வீட்டில் வடை கேட்டார். ஆனால் அந்த பெண் இன்று வடை இல்லை. அரிச்சாதம் தான் உள்ளது. என்றார். அதற்கு கோரக்கர் என் குருநாதர் வடைதான் கேட்டார் என்றார், உடனே அந்த பெண்மணி நல்ல வேளை உன் குருநாதர் வடைதான் கேட்டார், உன் கண்ணை கேட்டால் என்ன செய்வாய் என்றாள். கேட்ட மாத்திரத்தில் சற்றும் தாமதிக்காமல் கண்ணை தோண்டி எடுத்து, அந்த பெண்ணிடம் கொடுத்தார்., குருபத்தி எப்படிப்பட்டது என்பதை விளக்குவதைப் போல் இருந்தது அச்செயல். ஆசிரம் திரும்பிய கோரக்காரரை குருநாத சித்தர் பார்த்து திடுக்கிட்டார். எங்கே உன் கண் என்றார், உடனே கோரக்கார் நடந்த நிகழ்ச்சியை விளக்கினார். கோரக்கரின் குருபக்தியை பார்த்து வியந்த சித்தர், தன் சக்தியால் இழந்த கண்ணை திரும்பக் கிடைக்கச் செய்தார்.
இருவரும் சிவத்தலங்களை தரிசித்து வரும்போது, கேரள தேசத்தில் அந்நாட்டு மன்னனின் மகளை மணந்தார் சித்தர்.

கோரக்கர் தன் குருநாதரிடம் நாம் இங்கே வந்து அதிக காலம் ஆகிவிட்டது. நமது ஆசிரமம் செல்ல வேண்டினார். உடனே குருநாத சித்தர் தன் மனைவியிடம் விடைபெற்று கோரக்கருடன் ஆசிரமம் புறப்பட்டார், அப்போது அவரின் மனைவி தன் கணவரிடம் கோரக்காரருக்கு தெரியாமல் ஒரு தங்க் கட்டியைகொடுத்தர்ர்,
மடியில் கனம் இருந்தால் மனதில் பயம் வருவது இயற்கைதானே. வழியெல்லாம் கோரக்காரரிடம் இங்கு கள்ளர் பயம் உண்டா என கேட்டுக் கொண்டே வந்தார், கோரக்காருக்கு பயத்தின் காரணம் தெரிந்து விட்டது. அன்று இரவு ஒரு இடத்தில் தூங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தூங்கும் போது அதனை கோரக்காரருக்கு தெரியாமல் வைத்து விட்டு சித்தர் தூங்கினார். அப்போது கோரக்கார் சித்தர் மறைத்து வைத்திருந்த தங்கக்கட்டியை எடுத்து கண்காணாதஇடத்தில் புதைத்து விட்டார், தங்கக் கட்டி எடுத்த இடத்தில் அதே எடையுள்ள கல்லை வைத்துவிட்டார்,
காலையில் எழுந்த சித்தர் தங்கக் கட்டி இருந்த இடத்தில் கல் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார், உடனே தன் சீடன் கோரக்கரிடம் என்னுடைய தங்கக் கட்டியை நீ அபகரித்துக்கொண்டாய் , நீ என் சீடனாக இருக்கும் தகுதியை இழந்து விட்டாய் என்று கூறினார்,
கோரக்கரோ அமைதியாக அங்கே இருந்த மலைமீது ஏறி கமண்டலத்தில் இருந்த தீர்த்தத்தை தெளித்து தான் நின்றிருந்த மலையையே தங்கக் கட்டியாக மாற்றினார். குருவே தங்கள் தங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
சித்தராக வாழும் பேற்றினை இழந்து அறியாமையின் பிடியில் சிக்கிய எனக்கு நல்வழிகாட்டிவிட்டாய் என்று வாழ்த்தினார் மச்சேந்திரன். அதன் பின் குருவை பிரிந்து சென்ற கோரக்கர் தவத்தில ஈடுபட்டார். அஷ்டமா சித்திகளையும், காய சித்திகளையும் பெற்றார்.
சித்தர் கோரக்கர் பேரூரில் ஜீவ சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. இவரை சனிக்கிழமை வழிபட்டால் சனி தோசங்கள் நீங்கும். வீண் பயம் அகன்று தைரியம் உண்டாகும்.
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

திருமுறைகள் கூறும் இக்காலத்திற்கான அறவுரைகள்;

Standard

திருமுறைகள் கூறும் இக்காலத்திற்கான அறவுரைகள்;
தாய் தந்தையரை தெய்வாகப் போற்றுதல்:
கடவுள் நிலை அறிந்து அம்மயமான மூவர் பெருமக்கள் அருளிய பாடல்களைத் தேவாரம் எனத் தொகுத்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து மற்ற அருளாளர்கள் பாடிய பாடல்களையும் சேர்த்து பன்னிரு திருமுறைகளாக தொகுத்துள்ளார்கள்.

இறைவரால் ஆட்கொள்ளப்பட்ட திருமுறைப்பாடல்களை அருளிய அருளாளர்கள் மனித உணர்வு (சீவபோதம்) அகன்ற, இறை உணர்வில் ( சிவபோதத்தில் ) மூழ்கிய நிலையில் பிறந்தவை இப்பாடல்கள்.

சாதாரண அறிவு கொண்டு பாடப்பட்டவை அல்ல. இறைவருடைய அருளால் பாடப்பட்டவை திருமுறைப்பாடல்கள்.
” வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவை” – திருஞான சம்பந்தர்

இப்படிப்பட்ட அருளாளர்கள் மூலம் இறைவர் அருளிய திருமுறைப்பாடல்களில் தற்கால முறைக்கு ஏற்ப பலப்பல அறவுரைகள் சிலவற்றை இங்கே காண்போம்.

தாயும் தந்தையும் கண்கண்ட தெய்வமாக போற்றப் பட வேண்டும். பத்து மாதங்களாகத் தாய் – தந்தையின் மூலம் கிடைத்த அணுவின் கருவை சுமக்கிறாள். தாய் கருவுற்றருக்கும் காலங்களில் படும் துன்பங்கட்கு எதனையும் ஈடாக சொல்ல முடியாது. பிள்ளைப் பேறு என்பது மறு பிறப்பு எனலாம். பிள்ளை பெற்ற பிறகு தாயின் பங்கு குழந்தை வளர்ப்பில் மிக கவனமும் அதிகமாகும். குழந்தைகளுக்கு உடல் நலமில்லை என்றால் தாய் மருந்து உண்டு , தான் தரும் தாய்ப் பால் மூலம் குழந்தைக்கு மருந்தளிக்கிறாள். பிள்ளைகட்கு வேண்டியனவற்றை செய்வதில் தந்தையின் பங்கும் அதிகமாகும். பிள்ளைகளை நல்வர்களாக வளர்க்க தாய்தந்தை படும் பாடு செல்லில் அடங்கா.
பன்னிரு திருமுறைகளில் தாயும் தந்தையும் முதல் தெய்வங்கள் என போற்றப்படுகின்றன.தாய் தந்தையர்களை அப்பன் ஈஸ்வரான நினைத்தாலும் சரி, அண்ணல் ஈஸ்வரனை தாய் தந்தையர்களாக நினைத்தாலும் சரி , எது எப்படியாயினும்
” அப்பன் நீ அம்மை நீ” – என்கிறார் நாவுக்கரசர்
“தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே” என்கிறார் ஞானசம்பந்தர்
“எம் எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே” – சம்பந்தர்
“அம்மையே அப்பா ஒப்பிலா மணியே” என்கிறார் மாணிக்க வாசகர்
ஒருமுறை பெற்றோரை வணங்கினால் நூறு முறை கங்கையில் நீராடியதற்கு சமமாகும்.

சான்றோர்களை போற்றுதல் வேண்டும்
காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து சென்ற ஆலங்காடு தலத்தை தம் கால்களால் மிதிக்க அஞ்சினார், திருஞான சம்பந்தர் திரு ஆலங்காட்டிற்கு அருகில் உள்ள பழையனூர் என்னும் ஊரில் தங்கினார், இரவில் ஆலங்காட்டு இறைவர் திருஞான சம்பந்தர் கனவில் காட்சி அளித்து தம்மை பாட ஆலயத்திற்கு வரும்படி கூறியருளினார். தமக்கு முன்னோடியாக தமிழ் பதிகம் பாடி முக்தி பெற்ற காரைக்கால் அம்மையாரைப் போற்றிய காரணத்தால் இறைவருடைய காட்சி கிடைக்கப் பெற்றார் சம்பந்தர் சுவாமிகள்.

இவருக்கு பிறகு அவதரித்தவர் சுந்தர மூர்த்தி சுவாமிகள், இவர் திருஞான சம்பந்தர் காட்டிய வழியைப் பற்றி நடந்தவர். இப் பெருமானார், திருநாவுக்கரசர் சுவாமிகள் கைகளால் உழவாரப்பணி செய்த திருவதிகை வீரட்டாணத்தை வழிபடுவதற்கு வந்தார். ஆனால் அப்பதியை தம் கால்களால் மிதிக்க அஞ்சி வீரட்டாணத்திற்கு அருகில் உள்ள சித்தவடம் என்னுமிடத்தில் இரவு தங்கினார், அன்றிரவு இறைவர் தமது திருவடியை சுந்தரர் தலைமீது சூட்டிக் கருணை புரிந்தார்.

திருஞான சம்பந்தர் அவதாரம் செய்த தலமாகிய சீர்காழியை மிதிக்க அஞ்சி ஊரின் வெளிப்புறத்தே நின்று பதிகம் பாடி வழிபட்டார் சுந்தரர். சீர்காழியில் எழுந்தருளியுள்ள தோணியப்பர் சுந்தரருக்கு இருந்த இடத்திலேயே காட்சி கொடுத்தருளினார். சான்றோர்களைப் போற்றிவதால் நாம் அடையும் நலன்களை அளவிட முடியாது. இப்பண்பு இளைஞர்களிடையே பரவ வேண்டும், இவர்கள் நலம் பல பெற்று வாழ்வார்கள்.

கூர்த்த அறிவு பெற ஐந்தெழுத்தை ஓத வேண்டும்;
திருமால், பிரம்மன், தேவேந்திரன் மற்றும் தேவர்கள் யாவரும் நஞ்சினை கண்டு பயந்து ஓடினார்கள், இப்படிப்பட்ட நஞ்சினை திருவைந்தெழுத்தை (சிவாயநம) சொல்லி அருந்தி நலமுடன் திகழ்ந்தார் திருநாவுக்கரசர். ஐந்தெழுத்தை சொல்லி கல்லையும் கடலில் மிதக்க செய்தவர் இவர். இவர் அருளியுள்ள அறவுரையினைக் காண்போம்.
“பூரியா வரும் புண்ணியம் பொய்கெடும்
கூரிதாய அறிவு கைகூடிடும்
சீரியார் பயில் சேறையுட் செந்நெறி
நாரி பாகன் தன் நாமம் நவிலவே” ( 5-77-1)

“கூரிதாய அறிவு கைகூடிடும்” என்னும் திருவாக்கினை மனத்தில் கொள்ள வேண்டும். காலை, மாலை, இரவு வேளையில் 108 முறை “சிவாயநம” என்னும் ஆதி மந்திரத்தை சொல்லுவார்களானால் யாவரும் நன்மதிப்பு பெற்று உயர்வர் என்பது திண்ணம்.

தீயன செய்யாதிருத்தல்:
“….. செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே” (7-35-4)
நாம் செய்யும் நன்மை தீமைகள் மறுமையில் வரும் என்பதே பெரும்பாலோர் கூறும் உண்மை. ஆனால்இம்மையில் செய்த தீமைகள் இம்மையிலேயே நம்மை வந்தடையும் என்ற உண்மையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் கூறியுள்ளார்கள்
இளமையில் எந்த உயிருக்கும் தீமை செய்யக் கூடாது என்னும் பண்பினை வளர்த்து கொள்ள வேண்டும்.இதுவே முதுமை வரை தொடரும். தீமை செய்யா வினையை வளர்த்துக் கொள்ளும். எனவே எப்பிறப்பிலும் தீமை வரா என்பது திண்ணம்.

யாவரையும் வணங்க கற்றுக் கொள்ள வேண்டும்.
“தலையே நீ வணங்காய்” என்றார் திருநாவுக்கரசர்

இளமையிலேயே கடவுள், பெற்றோர், ஆசிரியர், மற்றும் சான்றோர் ஆகியவர்களை வணங்க கற்றுக் கொள்ள வேண்டும். வணங்க தலைப்படும் பொழுதே வளர்ச்சி நம் பக்கம் திரும்பும், வளைந்து கொடுக்கும் நாணல் வளர்கிறது. நிமிர்ந்து நிற்கும் மரம் வேருடன் தண்ணீரால் சாய்க்கப்படுகிறது. என்பதை உணர வேண்டும்.

வாயினால் வாழ்த்தல் வேண்டும்
” வாயே வாழ்த்து கண்டாய்” – நாவுக்கரசர்
முதலில் நம்மைக் காக்கும் கடவுளை வாயினால் வாழ்த்தப்பாட பழகிக் கொள்ள வேண்டும். வாயில் அபத்தமான சொற்கள் இளமையில் பழகிக் கொள்ள வேண்டும். எதிர்காலம் இனிமையாக அமையும், வாழ்த்துவதன் மூலம் நாம் நலமாக வாழலாம். இது மறுக்க முடியாத உண்மை.

நல்லவர்களுடன் நட்புக் கொள்ள வேண்டும்:
” பரவுமின் பணிமின் பணிவாரோடே
விரவுமின் விரவாரை விடுமினே” (5-43-5)

” உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவர்
உறவு கலவாமை வேண்டும்” ராமலிங்க அடிகள்

நல்ல சிவபக்தி உடையவர்களுடன் மட்டுமே நட்புக் கொள்ள வேண்டும். இவர்கள் தீயவென்பன கனவிலும், நினைவிலா சிந்தைத்தூய மாந்தர் ஆவர். நல்ல உள்ளம் கொண்டவர்களுடன் நட்புக் கொண்டால் நாமும் நல்லவர்களாகவே வளர்வோம், தீயவர்களின் நட்பு வேண்டவேண்டாம் என்கிறார் திருநாவுக்கரசர். ” சேரிடம் அறிந்து சேர்” என்னும் பழமொழியை மனத்தில் கொள்ள வேண்டும்.

புறங்கூறுதல் வேண்டவே வேண்டாம்
” அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்வியனாகிப் பிறர் பொருள் வல்வன்மின்” திருமுறை 10
மனிதராகப் பிறந்த நாம் பொறாமையின் காரணமாக மற்றவர்களை பற்றி புறங்கூறுதல் பெரும் பாவமாகும். இதனால் நமது புண்ணியம் குறையும். அத்துடன் யாரைப் பற்றி புறங்கூறினோமோ அவர் செய்த பாவத்தின் ஒரு பகுதி நம்மை வந்தடையும்.

நலம் பெற நன்மைகள் மட்டுமே செய்தல் வேண்டும்
” இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையினாலே முடிந்தது” – திருமுறை 10.
இப்பிறவியில் நமக்கு அமைந்துள்ள வாழ்க்கை நாம் ஏற்கனவே செய்துள்ள நல்வினை தீவினைகளின் பலனே ஆகும் என்கிறார் திருமூலர்
“தீங்கு வந்து அடையுமாறு நன்மைதான் சேருமாறும்
தாங்கள் செய்வினையினாலே தத்தமக்கு ஆயஅல்லால்
ஆங்கவை பிறரால் வாரா அமுதம் நஞ்சு இரண்டினுக்கும்
ஓங்கிய சுவையின் பேதம் உதவினோர் சிலரும் உண்டோ”

முள் விதையை விதைத்தால் அறுவடை முள்ளாகத்தான் இருக்கும். கனியாக இராது. வினை விைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழியை ஞாபகம் கொளல் வேண்டும்.

இருப்பதைக் கொடுக்கப் பழக வேண்டும்
இல்லாதவர்கட்கு கொடுத்தால் இறைவர் நமக்கு தவறாமல் வாரி வழங்குவார் என்கிறார் நாவுக்கரசர்
“இரப்பவர்க்கு ஈயவைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கெல்லாம் கடும்நரகங்கள் வைத்தார்” திருமுறை 4

செல்வம் இருந்தால் இல்லாதவர்கட்கு கொடுத்துப் பழக வேண்டும். இளமையில் பழகுவது பசுமரத்தில ஆனி அடித்தது போல வந்துவிடும்.

பொய் நீக்கி உண்மையைக் கொள்ள வேண்டும்
” பொய்யஞ்சி வாய்மைகள் பேசி புகழ்புரிந்தார்க்கு அருள் செய்யும்
ஐயஞ்சின்அப்புறத்தானும் ஆருர் அமர்ந்த அம்மானே” நாவுககரசர்

சிறுவயது முதலே பொய் பேசாமல் உண்மையைப் பேசி பழகிக் கொள்ள வேண்டும். இதுவே சான்றோராக்கும். உண்மை தான் கடவுள் , பொய்தான் சாத்தான். உண்மைதான் உயர்வினைத் தரும்.

இனியனவே நினைக்க வேண்டும்
நல்லன நினைத்தால் நல்லன நடக்கும் என்பது முதியோர் வாக்கு.
“இனிய நினையாதார்க்கு இன்னாதானை” திருமுறை 6
நம்முடைய நினைவு அல்லது எண்ணங்கள் விதைகள், செயல்கள் எண்ணங்களின் கனிகள். சிறுவயதிலேயே நல்லனவற்றை நினைக்கப் பழகிக்கொண்டால் வாழ்வின் சூழலே இனியதாய் அமையும்.
வெறுப்பு, கவலை, பேராசை, பயம், பகைமை, பொறாமை போன்ற கீழான எண்ணங்களை மனத்திலிருந்து அகற்றி விடுங்கள். கொடுக்கும் குணம், ஈகை, அன்பு,, நேர்மை, இரக்கம், உண்மை முதலிய உணர்வுகளை மனதில் ஏற்றுங்கள்
உங்கள் சிந்தனைக்கு ஏற்ப செயல்கள் அமைகின்றன. செயல்களே உம்முடைய விதியை வருங்கால வாழ்வை நிர்ணயிக்கின்றன. நீங்கள் எதைப்பற்றி சிந்திக்கின்றீர்களோ அதுவாகிறீர்கள். வாழ்வில் நன்மை பெற விரும்பும் நீங்கள் இனியவற்றையே சிந்திப்பீர்களானால் உங்கள் வாழ்வில் உயர்வு கட்டாயம் உண்டு.
எந்த எண்ணமும் அதற்கு ஒத்த எண்ணங்ளளை தன்பால் ஈர்க்கிறது, இதுதான் நியதி, வாழ்வும் வளத்துடன் அமையும், நாடுமு வலிமையுடன் நிகழும்.
திருச்சிற்றம்பலம் – ஓம் நமசிவய ஓம்
நன்றி: தமிழ்வேதம்
மேலும் ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.

சொற்றுணை வேதியன்

Standard

சொற்றுணை வேதியன்
by devarathirumurai
சொற்றுணை வேதியன்
பதிக எண்: 4.11 கடலில் அருளியது

பண்: காந்தாரபஞ்சமம்

பின்னணி

தருமசேனர் என்ற பெயருடன் தங்களுக்கு குருவாக இருந்து வழிகாட்டி வந்தவர் சைவ சமயத்திற்கு மாறினார் என்பதை அறிந்த சமணர்கள் தங்களுக்கு பல்லவ மன்னனிடம் இருந்த செல்வாக்கினை பயன்படுத்தி, நாவுக்கரசுப் பெருமானை கொல்வதற்கு பல வகையிலும் சூழ்ச்சிகள் செய்தனர். நீற்றறையில் இடுதல், நஞ்சு கலந்த சோறு அளித்தல், என்ற பல சூழ்ச்சிகள் பயன் தராத நிலையில், பட்டத்து யானையைக் கொண்டு அவரது தலையை இடறச் செய்ய ஏற்பாடு செய்தனர். திருநாவுக்கரசர் மீது ஏவப்பட்ட யானை அவரை வலம் வந்து அவரை வணங்கியது; யானைப்பாகன் யானையை மறுபடியும் நாவுக்கரசர் மீது ஏவியபோது, யானை பாகனை வீசி எறிந்ததும் அல்லாமல் அருகிலிருந்த சமணர்களையும் துரத்திக் கொண்டு ஓடியது. தப்பிச் சென்ற சில சமணர்கள் மன்னனிடம் சென்று, நாவுக்கரசரைக் கொன்றால் தான், யானையிடமிருந்து அவர் தப்பியதால் மன்னனுக்கு நேர்ந்த அபகீர்த்தி மறையும் என்றும் கூறினார்கள். மேலும் அவர்கள் கல்லோடு பிணைத்து நாவுக்கரசரை கடலில் விட்டுவிடலாம் என்றும் ஆலோசனை கூறினார்கள். மன்னனின் கட்டளையை அவனது காவலாளர்கள் நிறைவேற்ற, நாவுக்கரசர் தான் எந்த நிலையிலும் சிவபிரானை புகழ்ந்து பாடுவேன் என்று அருளிய பதிகம் தான் இந்தப் பதிகம்.. இதனை சேக்கிழார் குறிக்கும் பெரியபுராண பாடல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர்

ஒப்பரும் ஆழ்கடல் புக்க உறைப்புடை மெய்த்தொண்டர்

தாமும்

எப்பரிசாயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று

செப்பிய வண்தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்து

துதிப்பார்

சொற்றுணை வேதியன் என்னும் தூமொழி

நற்றமிழ் மாலையா நமச்சிவாய என்று

அற்றமுன் காக்கும் அஞ்செழுத்தை அன்பொடு

பற்றிய உணர்வினால் பதிகம் பாடினார்.

இந்தப் பதிகத்தினை நமச்சிவாயப் பத்து என்று அப்பர் பெருமானே அழைப்பதை நாம் பதிகத்தின் கடைப் பாடலில் காணலாம். மூவர் பெருமானார்கள் நமச்சிவாய மந்திரத்தின் பெருமையை உணர்த்தும் விதமாக நமச்சிவாயப் பதிகங்கள் அருளியுள்ளனர். காதலாகிக் கசிந்து என்று தொடங்கும் ஞானசம்பந்தர் அருளிய பதிகமும், மற்று பற்று எனக்கின்றி என்று தொடங்கும் சுந்தரர் அருளிய பதிகமும், இந்த வரிசையில் அமைந்த பதிகங்கள் ஆகும். மணிவாசகப் பெருமான், தனது திருவாசகத்தின் முதல் பாடலான சிவபுராணத்தை, நமச்சிவாய வாழ்க என்ற வாழ்த்துடன் ஆரம்பிக்கின்றார்.

பாடல் 1

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ

கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்

நற்றுணை ஆவது நமச்சிவாயவே

விளக்கம்::

புனிதமான சொற்களைக் கொண்டவை வேதங்கள். எனவே சொல் என்றால் வேதங்கள் என்றும் பொருள் கூறுவர். வேதங்களை முதலில் விரித்துக் கூறியவன் சிவபிரான் என்று பல தேவாரப் பதிகங்களில் கூறப்படுகின்றது. அவ்வாறு விரித்துக் கூறியதன் மூலம் வேதங்களுக்குத் துணையாக நின்ற வேதியன் என்ற பொருளில் சொற்றுணை வேதியன் என்று அழைத்ததாகவும் கருதலாம். .

உலகத்தில் தோன்றிய முதல் நூலாக கருதப்படும் வேதங்களின் நடுவில் வருவது நமச்சிவாய என்ற திருமந்திரம். எண்ணிக்கையில் வேதங்கள் நான்கு என்று வகுக்கப்பட்டு இருந்தாலும், சாம வேதம் என்பது ரிக் வேதத்தின் மந்திரங்களை இசை வடிவில் கூறுவதாகும் என்பதால், மொத்த வேதங்கள் மூன்று என்று நாம் கொள்ளலாம். அவ்வாறு எடுத்துக் கொண்டால் மூன்று வேதங்களில் நடுவாக வருவது யஜுர் வேதமாகும். ஏழு காண்டங்களைக் கொண்ட யஜுர் வேதத்தில் பதினோரு அனுவாகங்கள் உள்ளன. இதன் நடுப்பகுதியில் உள்ள ஆறாவது சூக்தத்தில் ஸ்ரீ ருத்ரம் மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தின் நடுவில் நமச்சிவாய என்ற பஞ்சாக்கர மந்திரம் வருகின்றது. வாழ்க்கை நெறிகளை நமக்கு சொல்லிக் கொடுத்து நமக்குத் துணையாக இருக்கும் வேதத்தின் நடுவில் சிவபிரானின் திருநாமம் வருவதால், சொற்றுணை வேதியன் என்று கூறுகின்றார் என்றும் பொருள் கொள்ளலாம். வேதங்களின் நடுவில் வைத்து போற்றப்படும் மந்திரம் பஞ்சாக்கர மந்திரம் என்பதால், சொற்றுணை வேதியன் என்று இறைவனை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

அனைத்து உயிர்களையும் பற்றியிருக்கும் ஆணவம், கன்மம் மாயை என்ற மும்மலங்களின் தன்மையால் இருளில் மூழ்கியிருக்கும் நமக்கு ஒளியாகத் தோன்றி வழிகாட்டும், வானவர்களுக்கும் தலைவனாக விளங்கும் சிவபிரானை சோதி வானவன் என்று அப்பர்பிரான் குறிக்கின்றார்.

பொழிப்புரை:

புனிதமான சொற்கள் கொண்ட வேதங்களுக்குத் துணையாக இருந்து அவற்றை அருளியவனும், ஒளியாக இருந்து நமக்கு வழிகாட்டுபவனும் ஆகிய சிவபிரானின் பொன் போன்று பொலியும் இணையான திருவடிகளை நமது மனத்தினில் பொருந்த வைத்து நாம் கையால் தொழுது வழிபட்டால், கல்லுடன் பிணைக்கப்பட்டு கடலில் நாம் தள்ளிவிடப் பட்டாலும், நமக்கு பெரிய துணையாக இருந்து சிவபிரானின் திருநாமம் ஆகிய நமச்சிவாய நம்மை காப்பாற்றும்.

பாடல் 2

பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை

ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்

கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது

நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே

விளக்கம்:

திருநாவுக்கரசர் சமண மதத்தை நிந்தனை செய்தார் என்று சமணகுருமார்கள் கொடுத்த புகார் மீது திருநாவுக்கரசரை அரசவைக்கு அழைத்த மன்னான் அவரை ஏதும் விசாரிக்காமல் அவருக்கு பல தண்டனைகள் அளித்தான். இதனால் நடுநிலையிலிருந்து தவறி ஒரு பட்சமாக தண்டனை அளித்த பல்லவ மன்னனின் புகழுக்கு களங்கம் ஏற்படுகின்றது. தான் பெற்ற தண்டனைக்கு காரணமாகிய அரசனின் இந்த தன்மையை நினைவு கூறும் அப்பர் பிரான், இந்தச் செய்தியை இங்கே குறிப்பிட்டாலும் அரசன் மீது கோபமாக ஏதும் சொல்லவில்லை. மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தில், சமணர்களையும், சிவபிரானை வழிபடாதவர்களையும் இழித்துப் பேசும் அப்பர் பிரான் இந்த நமச்சிவாயப் பதிகத்தில் எவரையும் இழித்துக் கூறாதது இந்த பதிகத்தின் தனிச் சிறப்பாகும். பொதுவாக பூ என்று கூறினால் தாமரை மலரைக் குறிக்கும். பல தேவாரப் பாடல்களில் பிரமனை பூமேல் அமர்ந்தவன் என்று அழைப்பது நாம் அறிந்ததே.

நடுநிலை தவறாமல் இருப்பது அரசரக்கு அழகு என்று பல இலக்கியங்களிலும் கூறப்படுகின்றது. செங்கோல் வளைந்தது என்றால் அரசன் நடுநிலை தவறிவிட்டான் என்று பொருள். கோணாத கோல் என்று வளையாத செங்கோலினை உணர்த்தும் அபிராமி பட்டர், அபிராமி பதிகத்தின் ஒரு பாடலில், அபிராமி அம்மையிடம் வேண்டும் பொருட்களில் ஒன்றாக, கோணாத கோலினை, குறிப்பிடுகின்றார். அபிராமி அம்மையின் பாதங்களைத் தொழும் தொண்டர்களுக்கு கிடைக்கும் பேறுகள் இந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவைகளில் ஒன்றாக கோணாத கோல் என்று குறிப்பிடப்படுவதால் எவ்வளவு உயர்வாக நடுநிலை தவறாத அரசன் மதிக்கப்படுகின்றான் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். கன்றாத வளமை என்றால் வற்றாத செழுமை என்று பொருள். துய்த்தல் என்றால் அனுபவித்தல் என்று பொருள். தான் தூங்கிக் கொண்டு இருந்தாலும் உலகில் நடப்பவை அனைத்தையும் அறியும் ஆற்றல் பெற்றவர் திருமால் என்பதால், அவரது தூக்கம் அறிதுயில் என்று கூறப்படுகின்றது.

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு

வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி

இலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத

சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத

கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பம்

இல்லாத வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய

தொண்டரோடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயில் மாயனது தங்கையே

ஆதிகடவூரின் வாழ்வே

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாமி

அபிராமியே

பொழிப்புரை:

பூக்களுக்கு அணிகலனாகத் திகழ்வது தாமரை மலர். பசுக்களுக்கு ஆபரணம் போல் திகழ்வது சிவபிரான் மகிழ்ந்து நீராடும் பொருட்களை அளிக்கும் தன்மை, அரசர்களுக்கு அணிகலனகத் திகழ்வது நடுநிலை நெறி தவறாமல் நடந்து கொள்ளும் தன்மை. நாக்குகளுக்கு அரிய ஆபரணம் போல் திகழ்வது நமச்சிவாய மந்திரமாகும்.

பாடல் 3

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்

உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்

பண்ணிய உலகத்தில் பயின்ற பாவத்தை

நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே

விளக்கம்:

தொடர்ந்து செய்யும் எந்தச் செயலையும் பயிலுதல் என்று கூறுவார்கள். உலகினில் பிறந்த நாம் தொடர்ந்து பாவம் செய்து கொண்டு இருப்பதால் பயின்ற பாவம் என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. நிலத்தில் முளைத்துள்ள ஒரு செடியை பிடுங்கவேண்டும் என்றால், நாம் அதன் அருகில் சென்று அதன் அடிப்பகுதியைப் பற்றிக் கொண்டால் தான் அதனை நம்மால் வேருடன் எடுக்கமுடியும். நமது பாவங்களையும் வேருடன் களைவதற்காக நமச்சிவாய மந்திரம், நமது அருகில் வந்து அந்த பாவங்களை களைகின்றது என்று இங்கே அப்பர் பிரான் கூறுகினார்.

பொழிப்புரை:

ஆகாயம் வரை மிகவும் உயரமாக கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள குவியல் ஆயினும், ஒரு தீப்பொறி அந்த அடுக்கினில் படர்ந்துப் பற்றிக்கொண்டால் அனைத்து கட்டைகளும் சாம்பலாக மாறி ஒன்றும் இல்லாத நிலை ஏற்படுவது போல், நாம் இந்த உலகினில் தொடர்ந்து செய்த பாவங்கள் எத்தனை ஆயினும் அவை அனைத்தையும் சுட்டெரிக்கும் தன்மை வாய்ந்து நமச்சிவாய என்னும் திருநாமம்.

பாடல் 4

இடுக்கண் பட்டிருக்கினும் இரந்து யாரையும்

விடுக்கில் பிரான் என்று வினவுவோம் அல்லோம்

அடுக்கல் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற

நடுக்கத்தை கெடுப்பது நமச்சிவாயவே

விளக்கம்:

தருமசேனர் என்ற பெயருடன் சமணர்களுக்கு குருவாக இருந்து அவர்கள் சார்பில் புத்த மதத்தவருடன் வாதங்கள் செய்து வெற்றி கொண்ட தருமசேனரின் இழப்பு சமணர்களை வெகுவாக பாதித்தது. பல கொடுமைகளை அவருக்கு இழைத்து பயமூட்டினால் அவர் மறுபடியும் தங்களது மதத்தில் இணைந்து விடுவார் என்ற நப்பாசை அவர்களுக்கு இருந்தது. ஆனால் சைவ மதத்தைச் சார்ந்த நிலையில் மிகவும் பிடிப்புடன் இருந்த நாவுக்கரசர், சிவபிரானைத் தவிர வேறு எவரையும் தான் பட்ட கஷ்டங்களுக்காக வேண்டுவதில் விருப்பம் இல்லாதவராக இருந்தார். அந்த கொள்கைப் பிடிப்பு இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப்படுகின்றது. .

அடுக்கல்=மலை. அப்பர் பிரானின் பதிகங்களின் கடைப் பாடல்கள் பெரும்பாலும் இராவணின் கயிலை நிகழ்ச்சியும் அப்போது சிவபிரான் அரக்கனுக்கு அருளிய கருணைச் செயலும் இடம் பெறுவது வழக்கம். ஆனால் இந்தப் பதிகத்தின் கடைப்பாடல் அவ்வாறு அமையவில்லை. அந்த நேரத்தில் சிவபிரான் அருள் செய்யாதிருந்தால் கயிலை மலையின் கீழே நெருக்குண்ட இராவணின் உடல் கூழாக மாறியிருக்கும். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த அந்த நிலையில் இராவணன் சிவபிரானின் நாமத்தை புகழ்ந்து கூறும் சாமவேதத்தினை இசைத்து பாடவே இறைவனின் கருணையைப் பெற்றுய்ந்தான். மலையின் கீழ் அமுக்குண்டு இருந்த இராவணின் நிலை அப்பர் பிரானுக்கு நினைவுக்கு வரவே, அத்தகைய இடறினின்று அவனை நமச்சிவாய மந்திரம் காத்தது போல் தனது நடுக்கத்தையும் கெடுத்து காப்பாற்றும் என்று இங்கே உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

எந்த வகையான இடுக்கண் தன்னை எதிர் நோக்கினும். அந்த இடுக்கண்களிலிருந்து நீர் என்னை விடுவிக்க வேண்டும் என்று எவரையும் இறைஞ்சும் நிலையில் நான் இல்லை. அருளின் வயமாகிய சிவபிரானின் நாமமாகிய நமச்சிவாய மந்திரம், மலையின் கீழ் மாட்டிக் கொண்டு எழமாட்டாத நிலையில் இருந்தாலும், அதனால் எனக்கு ஏற்படும் நடுக்கத்தை கெடுத்து காப்பாற்றும்.

பாடல் 5

வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கெலாம்

அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம்

திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள்முடி

நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே

விளக்கம்:

விரதிகள்=விரதங்களை மேற்கொண்டு தவம் செய்து மெய்ப்பொருளை நாடும் முனிவர்கள். வெந்தநீறு=சாம்பல், இங்கே விபூதியினைக் குறிக்கும். நங்கள்=நாம் அனைவர்

பொழிப்புரை:

பல வகையான விரதங்களை மேற்கொண்டு தவம் செய்து மெய்ப்பொருளை நாடும் முனிவர்களுக்கு அழகு சேர்ப்பது அவர்கள் அணியும் விபூதியாகும்; அந்தணர்க்கு பெருமை சேர்ப்பது அவர்கள் நான்மறைகளையும் ஆறு அங்கங்களையும் கற்றுத் தேர்ந்தவராக இருத்தல்; சந்திரனுக்கு அழகு சேர்ப்பது அவன் சிவபெருமானைச் சரண் அடைந்து அவரது திருமுடியில் இடம் பெற்று இருக்கும் நிலை; சைவர்களாகிய நம் அனைவர்க்கும் பெருமை சேர்க்கும் அணிகலனாக விளங்குவது நமச்சிவாய மந்திரம் ஆகும்.

பாடல் 6

சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்

நலமிலன் நாள்தோறும் நல்குவான் நலம்

குலமிலன் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர்

நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே

விளக்கம்:

சலம்=வேறுபாடுள்ள தன்மை. சஞ்சலம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. உள்ளொன்றும் புறமொன்றுமாக உள்ள நிலை. வேண்டுதல் வேண்டாமை அற்றவன். அனைவருக்கு ஒரே தன்மையாக உள்ளவன். சங்கரன்=இன்பம் அளிப்பவன்.

சிவபிரானின் நாமத்தைச் சொல்பவர் எத்தன்மையராக இருந்தாலும், கொடுந்தொழில் புரிபவராக இருப்பினும், ஏழு நரகங்கள் செல்லவேண்டிய பாவங்கள் புரிந்தவராயினும் அவர்களுக்கும் நமச்சிவாய மந்திரம் நன்மையை அளிக்கும் என்று கூறும் சம்பந்தப் பெருமானின் பதிகங்கள் இங்கே நினைவு கூறத் தக்கவை.

கொல்வாரேனும் குணம் பல நன்மைகள்

இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்

எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்

நல்லார் நாமம் நமச்சிவாயவே

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்

உரை செய்வார் ஆயின் உருத்திரர்

விரவியே புகுவித்திடும் என்பரால்

வரதன் நாமம் நமச்சிவாயவே

பொழிப்புரை:

அனைவருக்கு ஒரே தன்மையாக காணப்படும் சிவபெருமான், தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு எப்போதும் நன்மை செய்பவன்; சிவபிரான் தன்னைச் சாராதவர்களுக்கு நன்மை அளிக்காதவன். நற்குலத்தில் பிறவாதாரும், சிவபிரானின் நாமத்தை ஓதினால், அவர்களுக்கும் நற்குலத்தோர் அடையும் நன்மைகளை அளிப்பவன் சிவபெருமான் .

பாடல் 7

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்

கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்

ஓடினேன் ஓடிச்சென்று உருவம் காண்டலும்

நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே

விளக்கம்:

வீடினார்=உலகப் பற்றினை விட்டவர்கள்; விழுமிய=சிறந்த

சமண சமயம் சார்ந்து இருந்த நேரத்தில் தானுற்ற சூலை நோயினைத் தீர்க்கும் வழி தெரியாமல் திகைத்த போது, சிவபிரானின் அடியாராகிய தனது தமக்கையாரைப் பற்றி, அவரைப் பின்தொடர்ந்து திருவதிகை திருக்கோயில் சென்று இறைவனை வழிபட்டு, சூலை நோய் தீர்ந்து நன்மை அடைந்த நிலை இங்கே குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளது.

அவனது அருளால் சிவபிரானின் உருவத்தைத் தான் தெரிந்து கொண்ட பின்னர் அவனது திருநாமத்தை இடைவிடாது பயின்று, வாயார நமச்சிவாய என்ற நாமத்தைச் சொல்லி திருநீறு அணிந்துகொண்டதாக, ஈன்றாளுமாய் என்று தொடங்கும் திருப்பாதிரிப்புலியூர் பதிகத்தில் அப்பர் பிரான் கூறுகின்றார்.

கருவாய்க் கிடந்தது உன் கழலே நினையும்

கருத்துடையேன்

உருவாய்த் தெரிந்து உன் நாமம் பயின்றேன் உனது

அருளால்

திருவாய்ப் பொலியச் சிவாயநம என்று நீறு

அணிந்தேன்

தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே

பொழிப்புரை:

வீடுபேறு அடையும் நோக்கத்துடன், உலகப் பற்றினை விட்டொழிந்த சிறந்த தொண்டர்கள் ஒன்று கூடி சிவநெறியைச் சிந்தித்தனர். நானும் அவர்களைப் பின்பற்றிச் சென்று அவர்கள் கூறிய அஞ்செழுத்து மந்திரத்தைப் பற்றினேன்; அந்த நமச்சிவாய மந்திரமும் என்னைப் பற்றிக்கொண்டு பல நன்மைகள் புரிந்தது.

பாடல் 8

இல்லக விளக்கது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கது சோதி உள்ளது

பல்லக விளக்கது பலரும் காண்பது

நல்லக விளக்கது நமச்சிவாயவே

விளக்கம்:

இல்=இல்லம். நமது உடல் உயிர் குடி கொண்டிருக்கும் இடம் இல்லம் என்று இங்கே அழைக்கப்படுகின்றது. நமது உடலில் உள்ள மனத்தில் நமச்சிவாய மந்திரம் துதிக்கப்பட்டு ஞானவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டால் நம்மைப் பிணித்திருக்கும் அறியாமை என்ற இருள் விலகுகின்றது. சிவபிரான் சொற்களுக்குத் துணையாக இருக்கும் நிலை, இதே பதிகத்தின் முதல் பாடலிலும் கூறப்பட்டுள்ளது. அனைத்து உயிர்களுடனும் சிவபிரான் கலந்து இருப்பதால் பல்லக விளக்கு என்று கூறப்பட்டுள்ளது.

பொழிப்புரை:

நமச்சிவாய மந்திரம், நமது உள்ளத்தில் ஞான விளக்காக நின்று நம்மை பிணைத்திருக்கும் மலங்களை அகற்றும்; சொற்களுக்குத் துணையாக நின்று சொற்களுக்குப் பொருளை அளிக்கும்; என்றும் நிலைத்து நிற்பது, பல்லாயிரக் கணக்கான உயிர்களின் உள்ளே நிற்பது; பக்குவப் பட்ட நிலையில் நின்று பாசங்களை அறுத்த பலரும் காண்பது: நல்ல உள்ளங்களில் வீற்றிருப்பது ஆகும்.

பாடல் 9

முன்னெறி ஆகிய முதல்வன் முக்கணன்

தன்னெறியே சரண் ஆதல் திண்ணமே

அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்

நன்னெறியாவது நமச்சிவாயவே

விளக்கம்:

இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் தனது துன்பங்களிலிருந்து விடுவிக்குமாறு வேறு எவரையும் வேண்டேன் என்று அப்பர் பிரான் கூறியதற்கு காரணம் இந்தப் பாடலில் சொல்லப் பட்டுள்ளது. அனைத்து தேவர்களுக்கும் முதல்வன் சிவபிரான் என்பது தான் அந்த காரணம். உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் நெறி வீடுபேறு ஒன்று தான். வீடுபேறு அடைந்த உயிர் உலகின் இன்ப துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று, சிவபிரானுடன் கலந்து என்றும் அழியாத இன்பத்தைப் பெறுகின்றது.

பொழிப்புரை:

முதல்வனாகிய முக்கண்ணனே அனைவருக்கும் முன்னே தோன்றிய நெறியாவான். அத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபிரானின் செம்மையான நெறியை உறுதியுடன் சரணம் என்று வாழும் அடியார்களுக்கெல்லாம் மிகவும் நன்மை பயப்பதான வீடுபேறு எனப்படும் நன்னெறியினை அளிப்பது நமச்சிவாய என்னும் மந்திரமாகும்,

பாடல் 10

மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்

பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ

நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து

ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே

விளக்கம்:

மாப்பிணை=மான் கன்று. சிவபிரான் தனது இடது பாகத்தில் மான் கன்றினை ஏந்தி காட்சி அளிக்கின்றார். தனது உடலின் இடது பாகத்தில் உமையம்மையை ஏந்தி இருக்கும் சிவபிரானைப் பற்றி குறிப்பிடும் போது அப்பர் பிரானுக்கு சிவபிரான் இடது கையில் ஏந்தி இருக்கும் மான்கன்று நினைவுக்கு வந்தது போலும். அழகான உமையம்மையை நினைக்கும் எவருக்கு இளமானின் அழகான தோற்றம் நினைவுக்கு வருவது இயல்பு தானே.

சிவபிரானின் திருவடிகளை அனைவரும் பூக்கள் தூவித் தொழுவதால், அவரது திருவடிகள் எப்போதும் பூக்களுடன் இணைந்த தன்மையில் காணப்படுகின்றன. நாவுடன் பிணைந்து தழுவிய பதிகம் என்று குறிப்பிடுவதன் மூலம், அப்பர் பிரான் நமது நாவுடன் நமச்சிவாயப் பதிகம் பிணைந்து, எப்போதும் பிரியாது, இரண்டற கலந்து இருக்க வேண்டும் என்று இங்கே அறிவுறுத்துகின்றார்.

கடைக்காப்பு என்ற வகையில் தனது பதிகங்களுக்கு அப்பர் பிரான், அந்த பதிகங்களைப் பாடுவதால் ஏற்படும் பலன்களை குறிப்பதில்லை. ஆனால் இந்த நமச்சிவாயப் பதிகத்தில், பலன் கூறப்பட்டுள்ளது. இதே போல், இராமேச்சுரம் மீது அருளிய பாசமும் கழிக்க கில்லா என்று தொடங்கும் பதிகத்திலும் அப்பர் பிரான் அந்த பதிகத்தை பாடுவதால் ஏற்படும் பலனை குறிப்பிட்டுள்ளார்.

அப்பர் பிரானுக்கு சமணர்கள் கொடுத்த துன்பம் நீங்கப்பெற்று அவர் திருப்பாதிரிப் புலியூர் அருகே கரை ஏறியதே, இந்த பதிகம் அளிக்கும் பலனுக்குச் சான்றாகத் திகழ்கின்றது.

பொழிப்புரை:

மான் கன்றினை இடது கையில் ஏந்தியும், இடது பாகத்தில் உமையம்மையை ஏற்றுக் கொண்டும் காட்சி அளிக்கும் சிவபிரானின் திருவடிகளை, அனைவரும் மலர்கள் தூவி வழிபடுவதால் எப்போதும் பூக்களுடன் இணைபிரியாது இருக்கும் திருவடிகளை நமது மனத்தினில் பொருத்தி, நமது நாவுடன் நமச்சிவாயப் பதிகத்தினை பிணைத்து சிவபிரானை புகழ்ந்து பாட வல்லவர்களுக்கு எத்தைகைய துயரங்களும் ஏற்படாது.

முடிவுரை

துன்பங்கள் நம்மைத் தாக்கும் போது நம்முடன் இருந்து காக்கும் திருவைந்தெழுத்தினை நினைத்து நாவுக்கரசர் நிரம்பிய அன்புடன் இந்த பதிகத்தைப் பாடியவுடன், கடலில் நாவுக்கரசரைப் பிணைத்து கட்டப்பட்டிருந்த கல் மிதந்தது என்றும் அவரைப் பிணைத்து கட்டப்பட்டிருந்த கயிறுகள் அறுந்தன என்றும் சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். மேலும் நல்வினை தீவினை என்றும் இருவினைப் பாசங்கள் ஆணவமலம் என்ற கல்லுடன் இறுகப் பிணித்தலால் பிறவிப் பெருங்கடலில் விழும் உயிர்களைக் கரையேற்றும் ஐந்தெழுத்து மந்திரம் நாவுக்கரசரை கடலில் ஆழாது மிதக்கச் செய்வது ஒரு வியப்பான செயல் அல்ல என்றும் சேக்கிழார் அதற்கு அடுத்த பாடலில் கூறுகின்றார்.

இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின்

வரு பாவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட

அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல்

ஒரு கல் மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ

நமது உயிர் இருவினைப் பாசங்களால் (அறம், பாவம்) ஆணவ மலத்துடன் பிணைக்கப் பட்டு உடலுடன் கூடிய நிலையில் இருப்பது திருவாசகம் சிவபுராணத்தில் மணிவாசகரால் உணர்த்தப்படுகின்றது.

மறைந்திட மூடிய மாய இருளை

அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி

புறத்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி

மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை

தனது அலைக் கரங்களால் நாவுக்கரசுப் பெருமானை கரையில் கொண்டு சேர்ப்பதற்கு வருணன் மாதவம் செய்திருக்க வேண்டும் என்றும் சேக்கிழார் கூறுகின்றார். நாவுக்கரசர் கரையேறிய இடம், கரையேறிய குப்பம் (கடலூருக்கு அருகில் உள்ளது) என்று அழைக்கப்படுகின்றது.

பின்னர் நீலக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தில் அப்பர் பிரான், சமணர்களின் வஞ்சனையால் தான் கல்லோடு கட்டப்பட்டு கடலில் தள்ளப்படும் நிலைக்கு ஆளானது என்று குறிப்பிடுகின்றார்.

கல்லினோடு என்னை பூட்டி அமண் கையர்

ஒல்லை நீர் புக என் வாக்கினால்

நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்

நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் நன்றே

வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிய காவிரி நதியினைக் கடந்து கொள்ளம்புதூர் சென்று இறைவனை தரிசிக்க ஞானசம்பந்தர் நினைத்தார். வெள்ளத்தை மீறி தன்னை கரை சேர்க்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை இறைவன் முன் வைத்த போது அருளிய பதிகம் கொட்டமே கமழும் என்று தொடங்கும் பதிகம். அதே போன்று வெள்ளம் பெருகியோடும் காவிரியின் எதிர்க் கரையில் உள்ள திருவையாற்று பெருமானை தரிசிக்க சுந்தரர் திருவுள்ளம் கொண்டார். வெள்ளம் வடிந்து தனக்கு வழிவிட வேண்டும் என்று சிவபிரானிடம் விண்ணப்பம் வைத்த பாடல் பரவும் பரிசு ஒன்று அறியேன் என்று தொடங்கும் பதிகம். இந்த இரண்டு பதிகங்களும், சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் பதிகம் போல் காந்தார பஞ்சமம் பண்ணில் அமைக்கப்பட்டுள்ளதை நாம் உணரலாம். கடலைகளின் இரைச்சலையும், நதியில் காணப்பட்ட வெள்ளப்பெருக்கின் ஓசையையும் மீறி தங்களது பாடல்கள் ஒலிக்கவேண்டும் என்பதற்காக உரத்த குரலில் பாடப்படும் காந்தார பஞ்சமம் பண், மூவர்களாலும் தேர்ந்தெடுக்கப் பட்டதோ என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகின்றது.

வாழ்வில் எத்தனைத் துன்பம் வந்தாலும் அவற்றை வெற்றி கொண்டு மீளவும், பயணம் மேற்கொள்ளும்போது நன்மை தரும் வழித் துணைகள் அமையவும், பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறவும் நாம் ஓத வேண்டிய பதிகம் என்று பெரியோர்களால் கருதப் படுகின்றது.