Standard

மஹாளய அமாவாசை ஏன் இவ்வளவு முக்கியம்?!

மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் இன்று காலை புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மறைந்த தங்களது முன்னோர்களை நினைத்து, பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து நீர்நிலைகளில் நீராடி, எள்ளும் தண்ணீரும் அர்ப்பணித்தனர்.

மற்ற அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை, நாம் இந்த மஹாளய அமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான்.

அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மஹாளய என்றால் ‘கூட்டாக வருதல்’ என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றாகல், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மஹாளய பட்சம் என்று கூறுகிறோம்.

மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது.

மஹாளய பட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.

மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் சேர்கின்றன.

1ம் நாள் – பிரதமை – செல்வம் சேரும்

2ம் நாள் – துவிதியை – பெயர் சொல்லும் குழந்தைகளைப் பெறலாம்.

3ம் நாள் – திரிதியை – நினைத்த காரியங்கள் நிறைவேறும்

4ம் நாள் – சதுர்த்தி – பகையிலிருந்து எளிதில் விடுபடலாம்.

5ம் நாள் – பஞ்சமி – அசையா சொத்துக்கள் மற்றும் செல்வம் பெருகும்.

6ம் நாள் – சஷ்டி – பேரும், புகழும் தேடி வரும்.

7ம்நாள் – சப்தமி – தகுதியான மற்றும் சிறந்த பதவிகள் கிடைக்கும்.

8ம் நாள் – அஷ்டமி -அறிவு கூர்மை பெறும்.

9ம் நாள் நவமி – நல்ல வாழ்க்கைத்துணை மற்றும் நல்ல குடும்ப சூழல் அமையும்.

10ம் நாள் – தசமி – நீண்ட நாள் ஆசை உடனடியாக நிறைவேறும்.

11ம் நாள் – ஏகாதசி – கல்வி, விளையாட்டு, கலைகளில் அசுர வளர்ச்சி கிடைக்கும்.

12ம் நாள் – துவாதசி – ஆபரணங்கள் சேரும்.

13ம் நாள் – திரயோதசி – விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும். தீர்க்காயுள் கிடைக்கும்.

14ம் நாள் – சதுர்த்தசி – பாவம் கழியும். வாரிசுகளுக்கும் நன்மையே நடக்கும்.

15ம் நாள் – மஹாளய அமாவாசை – அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்.

இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisements

சிகரம் தொட்ட நம் மண்ணின் மைந்தர்கள் (theni Anandham SK)

Standard

சிகரம் தொட்ட நம் மண்ணின் மைந்தர்கள்   (theni Anandham SK)

ஏழுர் சாலியர் சமுதாயத்தில் அவதரித்த ஸ்ரீவி. போத்தீஸ் நிறுவனத்திற்கு அடித்தபடியில் ஜவுளித்துறையில் வெற்றிகண்டவர்கள் தேனி ஆனந்தம் என்ற ஸ்தாபனத்தின் நிறுவனர் திரு, எஸ்கே என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் எஸ்.ஜி. நடராஜன் அவர்களும் மற்றும் அதன் பங்குதாரர்களான தர்மராஜ் மற்றும் செல்வராஜ் ஆகிய எம் மண்ணின் மைந்தர்களானவர்கள் தான் சிகரம் தொட்ட நம் மண்ணின் மைந்தர்கள்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவி தாலுகா, சுந்தரபாண்டியத்தை சிறப்பு செய்யும் திரு நடராஜன் அவர்கள் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தாலும், இளவயதிலேயே வேளாண்மையிலும், வணிகத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு செய்யும் தொழிலே தெய்வம் என கொண்டு எத் தொழிலையும் சிறப்புடன் நடத்தும் பாங்கு அவருக்கு உண்டு, கல்வியிலும் எம். காம் படித்து அரசு வேலை வாய்ப்பிற்கு செல்லாமல் வணித்தில் நாட்டம் கொண்டு அவர்களுடைய மளிகைக்கடை, சுந்தரமகாலிங்கம் எண்டர்பிரைசஸ் என்ற உரக்கடை மற்றும் கற்பகம் டெக்டைல்ஸ் என்ற ஜவுளி நிறுவத்தினை அவர்களின் கூட்டுக் குடும்பத்துடன் சிறப்புடன் நடத்தி வெற்றிபெற்ற அனுபவம் கொண்டவர். எத்தொழில் செய்தாலும் அதில் ஒரு முத்திரை பதிக்கும் திறன் கொண்டவர் எஸ்கே. அவர்கள். உரக்கடை நடத்தும் போதும் சரி ஜவுளி வியாபாரத்திலும் சரி வாடிக்கையாளர்களை கவரும் மனப்பாங்கு அவருடைய தனி சிறப்பு, உரக்கடையில் வேளாண்மருந்து, உரம் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் அவர்களுடை திருப்தியே தனது திருப்தி என்று செயல்படும் தன்மை கொண்டவர் , வியாபாரம் முக்கியமல்ல என்பதை நன்கு உணர்ந்தவர், இதற்காக வேளாண் துறை அலுவலர்களிடம் தானே பயிற்சி கொண்டு செயல்படுவது அவரின் தனி சிறப்பு, இத்தன்மை கொண்டதால்தான் திரைகடல் ஒடி திரவியம் காண்பதுபோல் தேனி தனக்கு வியாபார தலமாக கொண்டு தேர்வு செய்து, தேனி ஆனந்தம் என்ற பட்டு ஜவுளி ஸ்தாபனம் அமைத்து முதல் சிகரம் தொட்டார்,

இதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தனது மைத்துனர்களான தர்மராஜ் மற்றும் செல்வராஜ் அவர்கள்தான், இவர்கள் இருவரும் அந் நிறுவனத்தின் தூண்காளாக இருந்து தோள் கொடுத்தவர்கள்.

    தேனியில் வளர்ச்சி கண்டபோது தினமலர் நாளிதழ் க்கு பேட்டி கொடுத்த செய்தியையும் இங்கு வைத்துள்ளேன், அவர் அந்நாளில் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு கைத்தறி தொழில் நலிவுற்றபோது அரசு கஞ்சித்தொட்டியில் கஞ்சிவாங்கிக் குடித்த அனுபவத்தையும் காட்டியுள்ளார். தேனி நகரில் வளர்ச்சி கண்டபோது புதிய ஜவுளி ஷோரூம் திறப்பு விழாவிற்கு அமைச்சரர் திருமிகு பன்னீர்செல்வம் திறந்து சிறப்பு பெற்றதையும் காணலாம்,

அவரின் வளர்ச்சி சாலியர் சமுதாயத்தினரின் போத்தீஸ் நிறுவனத்திற்கு அடுத்த படிக்கல்லாக சிகரம் தொட்டு வருகிறார் என்பது மிகையாகாது, அதன் அடிப்படையில்தான் தற்போது காணும் திண்டுக்கல் புது ஜவுளி மாளிகை திறப்பு விழா

 வளரட்டும் அவ்வணிய வளாகம், அதன் அடிப்படையில் உயரட்டும் வேலை வாய்ப்பும் அதனைச்சார்ந்த சமுதாய வளர்ச்சியும்

தொகுப்பு : வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

பிரதோஷ பூஜைக்கு சிறப்புபெற்ற தலம் திருக்கடம்பூர்

Standard

பிரதோஷ பூஜைக்கு சிறப்புபெற்ற தலம் திருக்கடம்பூர் இறைவன் பெயர்: அமிர்தகடேஸ்வரர் இறைவி பெயர்: ஜோதிமின்னம்மை, வித்யுஜோதி நாயகி எப்படிப் போவது? சிதம்பரம் – காட்டுமன்னார்குடி வழியாக எய்யலூர் செல்ல…

மூலம்: பிரதோஷ பூஜைக்கு சிறப்புபெற்ற தலம் திருக்கடம்பூர்

பிரதோஷ பூஜைக்கு சிறப்புபெற்ற தலம் திருக்கடம்பூர்

Standard

பிரதோஷ பூஜைக்கு சிறப்புபெற்ற தலம் திருக்கடம்பூர்

இறைவன் பெயர்: அமிர்தகடேஸ்வரர்
இறைவி பெயர்: ஜோதிமின்னம்மை, வித்யுஜோதி நாயகி

எப்படிப் போவது?

சிதம்பரம் – காட்டுமன்னார்குடி வழியாக எய்யலூர் செல்லும் சாலை வழியில், சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே 32 கி.மீ. தொலைவில் கடம்பூர் உள்ளது. காட்டுமன்னார்குடியில் இருந்து எய்யலூர் செல்லும் சாலையில் முதலில் கீழக்கடம்பூரும் அதையடுத்து மேலைக்கடம்பூரும் உள்ளது. கீழக்கடம்பூர் ஒரு தேவார வைப்புத் தலம். மேலக்கடம்பூரில் உள்ள ஆலயமே பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் இருந்து தென்கிழக்கே 6.5 கி.மீ. தொலைவில் திருஓமாம்புலியூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் உள்ளது. ஓமாம்புலியூரில் இருந்து குணவாசல், ஆயங்குடி வழியாகவும் கடம்பூர் தலத்துக்குச் செல்லலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,
மேலக்கடம்பூர் அஞ்சல்,
காட்டுமன்னார்குடி வட்டம்,
கடலூர் மாவட்டம் – 608 304.

இவ்வாலயம், காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

பிரதோஷ பூஜை

ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வரும் திரயோதசி திதியன்று மாலை வேளையில் பிரதோஷ பூஜை எல்லா சிவாலயங்களிலும் கொண்டாடப்படுகிறது. அன்று சிவபெருமானை வழிபடுவதும், அவரது வாகனமான நந்திதேவருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகங்களில் கலந்துகொள்வதும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதிலும், ஜோதிமின்னம்மை உடனாய அமிர்தகடேஸ்வரர் அருள்பாலிக்கும் திருக்கடம்பூர் ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ கால பூஜை மிகவும் சிறப்புபெற்றது. இந்தச் சிறப்புக்குக் காரணமானவர், இவ்வாலயத்தில் உள்ள ரிஷபதாண்டவமூர்த்தி உற்சவர்.


பிரதோஷ கால பூஜையின்போது மட்டுமே இந்த உற்சவர் திருமேனியை தரிசிக்க முடியும். இந்த உற்சவர் திருமேனி மற்ற நாட்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். நாம் காண இயலாது.

 

தல வரலாறு

பாற்கடலில் அமுதம் கடைந்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் அதனை பருகச் சென்றனர். இதைக் கண்ட விநாயகர், தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி, அமுதக் கலசத்தை எடுத்துச் சென்றுவிட்டார். அவர் கடம்பவனமாக இருந்த இத்தலத்தின் வழியாகச் சென்றபோது, கலசத்தில் இருந்த அமிர்தத்தில் ஒரு துளி தரையில் விழுந்தது. அவ்விடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். தன் தவறை உணர்ந்த இந்திரனும், தேவர்களும் இங்கு வந்து விநாயகரிடம் தங்களது செயலை மன்னித்து அமுதத்தை தரும்படி வேண்டினர். அவர், சிவனிடம் வேண்டும்படி கூறினார். அதன்படி, சிவனை இந்திரன் வேண்ட, அவர் இந்திரனுக்கு அமுதக் கலசத்தை கொடுத்து அருள்புரிந்தார். சிவனும் அங்கேயே தங்கி அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரும் பெற்றார்.


இந்திரனின் தாய் இத்தலத்து இறைவனை வழிபட்டு வந்தாள். அவள் முதுமை கருதி, எளிதாக வழிபட இந்திரன் குதிரைகளைப்பூட்டி, இக்கருவறையை இழுத்துச்செல்ல முற்பட்டபோது, விநாயகரை வேண்ட மறந்தான். விநாயகரை வேண்டி தன் காரியத்தில் இறங்காததால், தேர்ச்சக்கரத்தை விநாயகர் தன் காலால் மிதித்துக்கொண்டார். இந்திரன் எவ்வளவோ முயன்றும் கோவிலை ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை. இந்தின், இறைவனை வேண்ட, சிவபெருமான் அவனுக்குக் காட்சி கொடுத்து “தான் இத்தலத்திலேயே இருக்க விரும்புவதாகச் சொல்லி” இங்கு வந்து தன்னை வணங்கும்படி கூறினார். இந்திரனும் ஏற்றுக்கொண்டு தன் தவறுக்கு மன்னிப்பு பெற்றான். தற்போதும் தினசரி இங்கு வந்து இந்திரன் பூஜை செய்வதாக ஐதீகம்.

கோவில் அமைப்பு

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் என்ற பெயர்ப் பலகையுடன் முகப்பு வாயில் காணப்படுகிறது.

அதையடுத்து ஆலயத்தின் கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. கோபுரம் வழியே உள்ளே நுழைந்தால், நேரே உள்ள முன் மண்டபத்தில் நந்தியும், பலிபீடமும் இருக்கக் காணலாம். கொடிமரம் இல்லை. முன்மண்டபத்தில் நின்று பார்த்தால் நேரே மூலவர் சந்நிதியும், வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் உள்ளன.

கருவறை, தேர்ச் சக்கரங்களுடன் குதிரை இழுப்பதைப் போன்று தேர் வடிவில் அமைந்துள்ளது. கருவறை வெளிப்புறம் முழுவதும் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இச்சிற்பங்களைக் காண்பதற்காகவே ஒவ்வொருவரும் மேலக்கடம்பூர் ஆலயம் அவசியம் வர வேண்டும். இந்திரன் கோவிலை இழுத்துச் செல்ல முயற்சி செய்யும்போது, விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது. கருவறையின் பின்பக்கச் சுவரில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது சிறப்பு. இவருக்கு அருகில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய மூவரும் இருக்கின்றனர். இவருக்கு எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவரை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார்.

கோஷ்ட சுவரிலேயே கங்காதரர், ஆலிங்கனமூர்த்தி ஆகியோரின் சிற்பங்களும் இருக்கின்றன. கருவறை விமானத்தில் தட்சிணாமூர்த்தி புல்லாங்குழல், வீணையுடன் இருக்கும் காட்சியை தரிசிக்கலாம். கோஷ்ட சுவரில் உள்ள பிரம்மா, சிவனை பூஜித்தபடி இருக்கிறார். இவருக்கு இருபுறமும் எமதர்மன், சித்திரகுப்தர் ஆகியோர் இருக்கின்றனர். அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார். இவரது தலை மீது நடராஜரின் நடனக்கோலம் உள்ளது. வலப்பக்க சுவரில் அர்த்தநாரீஸ்வரர், நந்தியுடன் இருக்க, அவருக்குக் கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பது சிறப்பு. அம்பாளைத் தன் தொடை மீது இருத்தி, ஆலிங்கன மூர்த்தியாகக் காட்சி தரும் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.

ரிஷபதாண்டவமூர்த்தி

இத்தலத்தில், நந்தி மீது நடனமாடிய கோலத்தில் ரிஷபதாண்டவமூர்த்தி  10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார். இவருக்கு பிரதோஷத்தின்போது சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்கமுடியும். இவருக்குக் கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் இருக்கின்றன.

ஆரவார விநாயகர்


இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர், தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு, ஆரவார விநாயகர் என்று பெயர். அமிர்த கலசத்தை தூக்கிச்சென்றும், தேர்ச் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்தப் பெயர் வந்ததாம். இவர் தலையை இடதுபுறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சி தருகிறார்.

ஆலயத்தின் மற்ற சிறப்புகள்

 • சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் செய்ய ஏற்ற தலம்.
  கடன் தீர்க்கும் கடம்பவனநாதர் எழுந்தருளியிருக்கும் தலம்.
 • ஆயுள் பலம் தரும் அமிர்தகடேஸ்வரர் சுயம்பு லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கும் தலம்.
 • கழுகு வாகனத்தில் மேற்கு நோக்கி தரிசனம் தரும் சனி பகவான்.
 • அங்காரகன் வழிபட்ட செவ்வாய் தோஷ நிவர்த்தி தலம்.
 • அருணகிரிநாதரால் பாடப்பெற்ற ஆறுமுகன் எழுந்தருளியிருக்கும் தலம்.
 • கடம்பவன தலமாதலால், சதய நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்.
 • காலையில் சரஸ்வதி, மாலையில் லட்சுமி, இரவில் சக்தியாக அருள்தரும் ஸ்ரீவித்யுஜோதிநாயகி.
 • சங்கு சக்கரத்துடன் சிம்மவாகினியாகவும், மகிஷாசுரமர்த்தினியாகவும் அருளதரும் துர்க்கை.
 • அஷ்டமி திதி இரவில் வழிபட வேண்டிய காலபைரவர் தலம்.
 • ஸ்ரீ முருகப்பெருமான், சூரனை அழிக்க தவம் செய்து வில் பெற்ற தலம்.

பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது, இரவில் சுவாமி மீது சந்திர ஒளி விழுவதும் சிறப்பு.

ஒரு பிரதோஷ நாளில் திருக்கடம்பூர் சென்று பிரதோஷ கால பூஜையில் கலந்துகொண்டு ரிஷபதாண்டவமூர்த்தி தரிசனம் செய்யுங்கள்.

 

திருவண்ணாமலை கிரிவலம்… அது தருமே உயிர்பலம்!

Standard

திருவண்ணாமலை கிரிவலம்… அது தருமே உயிர்பலம்!

முக்தி தரும் சிவத்தலங்கள்

காசியில் இறக்க முக்தி

திருவாரூரில் பிறக்க முக்தி

தில்லையில் தரிசிக்க முக்தி

திரு அண்ணாமலையில் நினைக்க முக்தி

இவைகளி்ல் எளியவழியில் முக்தி பெற வழிகொடுக்கும் தலம் அண்ணாமலை

திருவண்ணாமலை அன்பர் தபோதனரை வாவென்று அழைக்கும் மலை’ எனப்படும். அருணாசலத்தின் பெருமை பக்தர்களையும் புலவர்களையும் மிகவும் கவர்ந்துள்ளது எனலாம்.  இதனால்தானோ என்னவோ இம்மலையில் தங்கியிருந்தவர்கள் நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றினர்.  இதனாலேயே குரு நமச்சிவாய சுவாமிகள்,

‘நண்பாக் குகையில் நமச்சிவா யன்கருத்தில்

வெண்பாப் பயிராய் விளையுமலை,’

எனக்கூறினார்.

திருவண்ணாமலையில் வெண்பாவே பயிராக விளைகிறது என்றார். இம்மலையில் தங்கி வாழ்ந்தவர்களுள் ஒருவரே சோணாசல பாரதியார்.

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழ்கிறது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் தலம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்   கிரிவலம் வருவது  வாடிக்கை. முழு நிலவொளியில் ஈசனை மனதில் நிறுத்தி, ‘அருணாச்சலேஸ்வரா’ என்று முணுமுணுத்தவாறே வருவதில் உள்ள சுகானுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

கிரிவலப்பாதை, அருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள பாதையாகும். கிரிவலம் செல்லும்போது வழியில், இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருத்திலிங்கம், வருணலிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்யலிங்கம் ஆகிய எட்டு லிங்கங்களை தரிசிக்கும் பேறு பக்தர்களுக்குக் கிடைக்கும். 

 சிவபெருமானின் அடி முடியைக் காண பிரம்மா அன்னப்பறவையாகவும் விஷ்ணு வராக அவதாரமும் எடுத்துப் புறப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவராலும் காணமுடியவில்லை. இறுதியில் சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி அளித்த தலம்தான் திருவண்ணாமலை.

கிருதயுகத்தில் அக்னிமலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும்,துவாபர யுகத்தில்தங்க மலையாகவும், கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகின்றது.

திருவண்ணாமலையில் சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம்சுரத்குமார் ஆகியோரின் ஆசிரமங்கள் இருக்கின்றன. அங்கு பக்தர்கள் அவரவரது தேவைக்கு ஏற்ப முன்பதிவு செய்து கொண்டு அறைகள் எடுத்துத் தங்கலாம்.

மலை முழுவதுமே அருணாச்சலேஸ்வரரே வியாபித்திருக்கிறார் என்பதால், ,கிரிவலம் முடித்ததும் சுவாமி தரிசனம் செய்யத் தேவையில்லை. இதனால், பலர் முதல் நாளே அறை எடுத்துத் தங்கி சுவாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் வருவார்கள். கிரிவலப்பாதை முழுவதும் 400 ரூபாயிலிருந்து குறைந்த வாடகையில் அறைகள் கிடைக்கின்றன.

கிரிவலம் செல்லும்போது கால்களில் செருப்பு இல்லாமல், செல்வது நல்லது. மலை முழுவதும் ஒவ்வொரு அடியிலும் பல நூறு லிங்கங்கள் பதிந்து இருப்பதாக ஒரு நம்பிக்கை உலவுகிறது. முதலில் சற்று சிரமமாக இருந்தாலும் போகப் போக சரியாகிவிடும்.

கிரிவலம் வரும்போது நண்பர்களுடனோ குழுவாகவோ வந்தாலும் தேவையற்ற வீண் பேச்சுக்கள், வாக்கு வாதங்கள் ஆகியவற்றை தவிர்த்து சிவாய நமவென ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தவாறே நம் பயணத்தைப் பூர்த்திசெய்வது நல்லது. 

கிரிவலப் பாதையில் நடக்கும்போதே நமக்கும் இறைவனுக்குமான (ஆத்ம நிவேதனம்) உரையாடல் தொடங்கிவிடும். மனம் ஒடுங்குதலாகி, ‘நாம் யார்? என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்ன செய்யப்போகின்றோம்?’ என்பன போன்ற கேள்விகள் நமக்குள் எழத் தொடங்கிவிடும். அந்த சிந்தனைகள் நம் மனத்தை சுத்தம் செய்து நமக்கான வாழ்க்கைப் பாதையைத் தெளிவாக்கி விடும். 

கிரிவலம் உடல், மனம் இரண்டுக்கும் ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும். தேக பலமும் தெய்வ பலமும் ஒன்றாகி நமக்கு உயிர் பலம் தந்திடும்.

திருச்சிற்றம்பலம்

ஓம் நமசிவாய

தொகுப்பு ° வை, பூமாலை, சுந்தரபாண்டியம்

திருநாமத்தின் மகிமை

Standard

திருநாமத்தின் மகிமை
இறைவனும் அவனுடைய திருநாமமும் வெவ்வேறல்ல, திருநாமம் என்பதே இறைவன்தான். இறைவனுடைய திருநாமம் மனதில் நிரம்பியவுடன் உள்ளம் இறைவனின் சன்னதியாகி விடுகிறது. நமது சிந்தனைகளை இறைவன்பால் நிறுத்த அவருடைய திருநாமத்தை இடையாமல் நினைவு கூர்வது எளிமையான வழி. திருநாமத்தின் மீது உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்தி நெறிக்கு கூட்டு விப்பது திருநாமம். காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமக்கு நன்னறிக்கு உய்ப்பதும், வேதம் நான்கிலும் மெய்பொருள் ஆவதும் நாதன் நாமம் நமசிவாயவே ” என்கிறார் திரு ஞானசம்பந்தர். அது நான்கு வேதங்களின் உண்மை பொருளாக விளங்குபவனாகிய சிவபெருமானரின் திருநாமமான நமசிவாய என்ற திருவைந்தெழுத்தாகும். இம் மந்திரம் அனைத்து உயிர்களின் துன்பங்களையும் சொன்ன மாத்திரத்தில் நீக்கவல்ல அற்புத மந்திரமாகும் என்கிறார் சம்பந்தர்.
நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க என்று தொடங்கி சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கே என்கிறார் மாணிக்க வாசகர். இம்மந்திரத்தை பொருள் உணர்ந்தோ அல்லது உணராமலோ எப்படி சொல்லினும் உயர்வு உறுதி. அவர் திருநாமம் ஒருவனை ஆன்மீக வாழ்வின் உச்சத்திற்கு இட்டுச் செல்கிறது. இருளில் மூழ்கிய குருட்டு ஜீவனுக்கு வெளிச்சமாக இருக்கிறது. திரு நாமத்தின் சக்தி வெல்ல முடியாது.மனதில் திருநாமம் நிறையும் போது மனம் பணிவு, இறக்கம், இளக்கம் மடையும் நிலை ஏற்படுகிறது. நாம மகிமையால் மனமே இறைவனாக மாறுகிறது. திரு நாமதத்தில் தஞ்சம் அடைவதால் பல அதிசயங்கள் ஆற்ற முடியும். நீங்கள் எந்த இனம் , சாதி கொள்கை கொண்டவராயினும், இறைவனின் திருநாமத்தின் இனிய உறவை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் நாமம் என்னும் நதியில் நாளும் மூழ்கும் உங்கள் ஆத்மா தூய்மை அடைவதோடு யாவும் அறிந்த எங்கும் நிறைந்த இறைவனின் அருளாலும், அன்பினாலும் ஈர்க்கப்படும் என்பது உறுதி , திருநாமம் ஓதும் பழக்கத்தால் ஆசா பாசங்களில் அலையும் மனது கட்டுப்படும் திருநாமத்துடன் தியானம் செய்யும் போது முகமும் உடலும் ஒரு அசாதாரண ஒளியுடன் பிரகாசிக்கும். இமைப்பொழுதும் நீங்காமல் திருநாமத்தை சொல்லமுடியாவிட்டாலும், காலையில் தூங்கி எழும்போதும், இரவில் படுக்குக் செல்லும் போதும் மற்றும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லிவந்தாலே இறைவன் அருள் பெறமுடியும் என்பது உறுதி, பிறந்த பிறப்பின் மகிமை அடைய நாவுக்கரசர் பெருமான் இவ்வாறு கூறுகிறார். ” திருநாமம் ஐந்தெழுத்தை செப்பாராகில், தீவண்ணர் திரம்ஓருகாலும் பேசாராகில் ஒருகாலும் திருக்கோவில் செல்லராகில், உண்பதன் முன் மலர் பறித்திட்டு உண்ணாராகின், அருநோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில் பெருநோய்கள் மிகநலிய வந்து செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே ” என்கிறார். எனவே பிறந்த பிறப்பின் பயன் பெற திருநாமத்தை கூறி பயன் பெற்று வீடு பேறு அடைவோம்,
“ஓம் நமசிவாய”
தொகுப்பு : வை. பூமாலை சுந்தரபாண்டியம்