பஞ்சதிகார விளக்கம்

Standard

பஞ்சதிகார விளக்கம்

பஞ்சதிகார விளக்கம்
ஆன்மாவுக்கு அனாதியாகவே அஞ்ஞானமாகிய குற்றம் உள்ளது. ஆன்மாவுக்கு அழுக்காகக் கூறப்படும்  ஆணவமலம் செம்பிற் களிம்பு போல அனாதி. ஆன்மாக்கள் அனாதியே  ஆணவமலமாகிய இருளில் கட்டுண்டு தம்முள் வேற்றமையின்றி ஆணவமலமும் ஆன்மாவும் ஒன்றே எனும்படி கிடக்கும். ஆன்மா இவ்வாறு ஆணவமலமாகிய இருளில் கட்டுண்டு அறிவற்றுக் கிடக்கும் நிலையை பெத்தநிலை என்றும்  காரணகேவலம் என்றும் கூறப்படும்
   சிவபரம்பொருளின் அளப்பரும் கருணை ஆன்மாவின் சீவத்துவத்தை (ஆணவமலத்தை) நீக்கி சிவத்துவத்தை (பேரானந்த்தை ) அளிக்க இச்சை கொள்கிறது. ஆன்மா மலபந்தம் நீங்கி முத்தியைடைந்து உய்யும் பொருட்டு பேரருளாளனாகிய இறைவன் இந்து தொழில்களைச் செய்கிறான்,
  அவை ஐந்தொழில் அல்லது பஞ்சதிகாரம் எனப்படும்.ஐந்து என்று பொருள் அதிகாரம் என்றால் தொழில், செயல் என்று பொருள். எனவே பஞ்சதிகாரம் என்பது ஐந்தொழி்ல் என்று பொருள்படும். “ஆயக்கடவேன் நானோதான் என்னதோ இங்க அதிகாரம் ” என்பது திருவாதவூரடிகள் வாக்கு. ஒருவன் இச்சைப்படி சுதந்தரமாக தன் இச்சைப்படி செய்யும் தொழிலுக்கே அதிகாரம் என்னும் பெயர்.
  இறைவன் உயிரின் பொருட்டுச் செய்யும் அத்தொழில்களாவன  படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,அருளல் என்பனவாம்.
 இறைவன் செய்யும் படைத்தல் தொழிலாவது உயிர்களின் மலபந்தத்ைத நீக்கும் பொருட்டு சூக்கும  உடலை தூல உடலையும் அளித்து, நால்வகைத் தோற்றத்து எழுவைகப் பிறப்பில் எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதப் பிறப்புகளில் பிறக்குமாறு செய்தலும், அப்பிறப்பில் உயிர்கள் வினை அனுபவம் பெறுவதற்கு தகுதியான உடல், கருவிகள், உலகு நுகர்வுகளை கூட்டி வைத்தலுமாகும்.
  காத்தலாவது, படைக்கப்பட்டன உடனே மறைந்துபோய் விடாமல் அவ்வவற்றிக்கு நியமிக்கப்பெற்ற காலம் வரை நிற்கும்படி செய்தல்.
   அழித்தலாவது அவற்றின் காலவெல்லையில் அவற்றை ஒடுக்குதல்.
   மறைத்தலாவது ஆணவமலம் பரிபாகம் எய்துவரை அதற்கு அனுகூலமாக இரு வினைக்கீடாக உயிர்கள் உடலெடுத்து தத்தம்வினைப்பயன்களை அனுபவித்து உழலும்படி வினையின் வழி அறிவை மறைத்து வினைப்போகத்தை நுகருமாறு நிறுத்தல்..
   கேவல நிலைையில் அறிவு மறைபுண்டு இருளில் கிடக்கும் உயிரின் அறிவை விளக்கம் செய்ய இறைவன்  மாயையிலிருந்து கலை முதலாய தத்துவங்ளைளப்படைத்து உயிருக்கு பொருத்து கின்றான். கலை முதலிய தத்துவங்களூடன் கூடியிருக்கும் நிலை சகலம் எனப்படும். சகலமும் உயிருக்கு பந்தமே, எனவே சகலமும் பெத்தம் எனப்படும்.
 அருளலாவது இருவினையொப்பும் மல பரிபாகமும் வந்துற்ற காலத்தில் சிவம் குருவாக எழுந்தருளி பஞ்சமலமங்களையும் ஒழித்து, முத்திநெறி அறிவித்து உயிரை சிவமாக்கி ஆட்கொள்ளல். அதாவது ஆன்மாவின் பசுத்துவத்தை நீக்கி பதித்துவம் அருளல். உயிரின் சீவத்துவத்தை ஒழித்து சிவதத்துவத்தை கொடுத்தல்.
  ஆணவம்,மாயை, கன்மம், ஆகிய மும்மலபந்தத்ததிலிருந்து நீங்கப்பெற்ற நிலை சுத்தம் அல்லது நின்மலம் எனப்படும்.
  உயிர்கள் இருண்மை நீங்கி அனுபவ அறிவு பெற்றுப் பரிபாகம் பெற இறைவனால் உதவப்பெற்றனவே உடலும் உடலில் உள்ள கருவிகளும், உயிரகள் தங்குவதற்குரிய உலகமும், அவுவுலகில் உடலாலும் கருவிகளாலும் நுகரப்பெறும் நுகர்ச்சிகளும் மாயை என்னும் முதற்பொருளிலிருந்து ஆக்கப்பட்டவையே.
 ஆன்மாவும் மாயையும் வெவ்வேறு பொருள்கள், அவை தனித்தனியாகக் கிடந்தன மாயை அறிவற்ற சடப்பொருள், எனவே அது தானாக உடல் முதலியவைகளாக ஆதலியாலாது, கேவல அவத்தையில் அறியாமையாகிய இருளில் அழுந்திக்கிடக்கும் ஆன்மாவும் தனக்கென இவற்றை படைத்துக் கொள்ள இயலாது. எனவே முதல்வனாகிய இறைவனே மாயை என்ற சடப்பொருளை முதற்காரணமாகக் கொண்டு உயிர்களுக்கு உடல் முதலியவற்றை படைத்து உதவினான்.என்று உய்த்து அறிதல் வேண்டும். மாயை மலநோய் அகற்றும் மருந்து, அம்மருந்தை அறித்தவன் இறைவன்.
திருச்சிற்றம்பலம்
நன்றி் சிலசாந்தலிங்கர் மலர்
Advertisements

பாடிப்பற

Standard
பாடிப்பற
பாடிப்பற என்றால் இறையைப் போற்றிப் பாடுவதற்கு தேடுதலாகிய நாடுதல். இறையை எங்கு தேடுவது?  எந்த வயில் தேடுவது? யார் உடன் வருவார்?  என்ற கேள்விகள் எழுகின்றன.
  உலகிடைத் தோன்றிய அனைத்து உயிர்களும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொன்றை நாடிய வண்ணமுள்ளது. கருப்பையினுள் இருக்கு்ம் போதே கேட்கவும் பார்க்கவும் உண்ணவும் நாடுகின்ற குழந்தை வெளியில் வந்தவுடனே பாலை நாடுகின்றது. பின்னர் கல்விக்காக பள்ளியை நாடுகின்றது. தொடர்ந்து வாழ்க்கையை நன்முறையில் நடத்த ஊதியத்தை நாடுகின்றது. பிற்பாடு தேடிய ஊதியத்ததை பாதுகாக்க நாடுகின்றது. ஆக, நாடுதல் என்பது தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதே சமயத்தில் வயதிற்கு ஏற்ப இந்த நாடுதல் இருந்தால் தான் பொருத்தமுற இருக்கும். இல்லையேல் முன்னுககு பின் முரணாய் இருக்கும் என்பதை அறிவோம். உதாரணமாக பள்ளியிலோ கல்லூரியிலுோ படிக்க வேண்டிய காலத்தில் ஊதியத்தை நாடிவிட்டு அதன் பின்னர் கல்வியை நாடினால் என்னவாகும்? வாழ்கை திசை மாறிப் போகும். எனவேதான் எந்த பருவத்தில் எதை நாட வேண்டுமோ அதை நாடி முழு முயற்சியுடன் நன்விதையை விதைத்துப் பயிர் செய்வது பாங்குறச் செய்யின் முழுமையான பயனை பலனை அனுபவிக்க இயலும். இதனால் தான் பருத்தே பயிர் செய் என்று மொழியப்பட்டது. “விதைக்க மறந்தவனே உனக்கேன் அறுவடை ஞாபகம்”  என்ற  இகழ்்சி பழமொழியும் உண்டு.
   தமிழில் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னுமோர் சிறந்த பழமொழி உண்டு. இதன் விளக்கம் யாவரும் அறிந்ததே. அதாவது நாம் செய்கின்ற வினையானது அது நல்வினையாக இருந்தாலும்  சரி , தீவினையாக இருந்தாலும் சரி அதற்குரிய பலனை நாம் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது ,  இதனுள் மற்றும் ஓர் சிறந்த கருத்தும் உள்ளடங்கி உள்ளது. அது என்னவென்றால் செய் என்ற தமிழ்ப்பதம்  செய் என்றால் வயல் என்ற பொருள் உண்டு.( நன்செய், புன்செய் )வயல் என்று பொருள் கொண்டு மேற்குறித்த பழமொழியை காண்பாேமானால் முற்பகுதியில் அதாவது முன்பாக வயலை நன்கு உழுது, விதை விதைத்து நாற்று நட்டு நீர் பாச்சி  வயல் வேலைகளை செய்தாருந்தால்  விளைச்சல் அமோகமாய் இருக்கும். என்பதாம். அதுதான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றாயிற்று.
   இப்படியாக நாடுதல் என்ற தேடுதல் வயதிற்கு ஏற்ப மாறும் நிலையிருக்க, எந்த காலத்தில் நாடினாலும், பிழையின்று  இடையூறின்றி மற்றவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகாமல் அதே சமயம் என்றும நிலைத்த இன்பத்தை கொடுக்க கூடிய ஒரு நாடுதல் உண்டென்றால் அது பரம் பொருளை நாடுதற்கு வயது வரம்பில்லை செல்வ வளம் தேவையில்லை. உற்றார் உறவினர்கள் தேவையில்லை, கல்வித் தகுதி ேவண்டியதில்லை. ஒன்றே ஒன்று மட்டும் தான் வேண்டும்.  அதுதான் இறைபக்தி, மத்தால் கடைந்தால் வருவது வெண்ணெய் மனத்தால் கடைந்தால் வருவது பக்தி இந்த பக்தயால் எழுவது பாடல்  பாடலை பாடி பரமனை துதிப்பதே பாடிப்பற ஆகும்
  ஆழ்வார்கள் முதல் பன்னிரு தேவார திருமுறை பாடிய சிவனடியார்கள் மற்றும் 63  நாயன்மார்கள் வரை பக்திமான்களை பெற்றெடுத்த பெருமைக்குரியது நம் பாரத தேசம். கருவிலே திருவுடையார் என்று சொ ல்லும் அளவுக்கு  ஞானசம்பந்தரையும், குமரகுருபரையும் இன்னும் பலரையும் இறைவன் பாட வைத்து தான் பரவசமாகி அவர்கள் வாழ்க்கையோடு ஒன்றி இறையையும் அவர்களையும் பிரி்கக முடியாத அளவிற்கு பாடிப்பற என்பதை நிறுவியுள்ளார்.
  அது மட்டுமன்றி எப்போது வேண்டுமோ அப்போது அவர்களை ஆட்கொண்டு  பாட வைத்து நிலைத்த பேற்றை நல்கி உள்ளார் இறைவர். மேலும் தன் அடிபணிய வைத்து அடி யெடுத்துக் கொடுத்து பாடிப் பரவச் செய்தவர் பரமன்் சுந்தரரை திருமணம் செய்து கொள்ள விடாமல் தடுத்து, தன்னை பித்தன் என்று ஏசி பாட வைத்து அந்த ஏச்சையே பேச்சாக்கி பாடிப் பற என்றானே, தோழனாக்கி மகிழ்ந்தானே. அவன் கருணையை என்ன என்பது? வடலூர் வள்ளலார் அடியாருக்கு பார்வதி தேவியாரை அனுப்பி வள்ளலாரை பாடிப்பறச் செய்ததும் அந்த பரமன்தானே. இதற்கு நாடுதலாக அமைந்தது இந்த இறை பக்தி தானேpraying to the hindu god pictures க்கான பட முடிவு
 பாடிப்பற பிரதானமாக அமைவது இறைவனின் கருணையும் இறைபக்தியும் தான் என்பதை நாம் உணரலாம்
திருச்சிற்றம்பலம்

ஆகம வழி பூசை முறைகள்

Standard

ஆகம வழி பூசை முறைகள் சிவபூசை

ஆகம வழி பூசை முறைகள்

சிவபூசை

பூ, புகை, விளக்கு, திருமஞ்சனம், திருவமுது முதலி யன கொண்டு, பூதசுத்தி, தானசுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, இலிங்கசுத்தி என்னும் ஐந்துசுத்திசெய்து ஆசனமிட்டு மூர்த்தியை எழுந்தருளச் செய்து மூர்த்தி மானுகிய பரஞ்சோதியைப் பாவனே செய்து அதன்கண் ஆவாகித்து மெய்யன்புடன் அருச்சனை செய்து விருப்புடன் சிவ வேள்வியினைச் செய்து முடித்தல். இதன் இயல்பினே,

இப்பூசை புறப்பூசை (கிரியை) அகப்பூசை (ஞானம்) என இருவகைப்படும். பூசைத்திரவியங்களே வெளியிற் சேர்த்துக்கொண்டு இறை வன வழிபடுதல் புறப்பூசை. இவற்றை மனத்தாலே படைத்துக்கொண்டு வழிபடுதல் அகப்பூசை யாகும்.

167. உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானுர்க்கு வாய்கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன்
சிவலிங்கம் கள்ளப் புலனேந்துங் காளா
மணிவிளக்கே (1828)
அகப்பூசைக்குரிய அங்கங்கள் ஆமாறு உணர்த்துகின்றது.

அகப்பூசை

கடவுளை மனதில் நிறுத்தி தாமே பூசை செய்வது. இந்தப் பூசை செய்யும் போது யாரும் பார்க்க முடியாது. இப்பூசையைச் செய்ய எந்தவொரு பொருளும் செலவுசெய்யத் தேவையில்லை. பூசாரியும்தேவையில்லை. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் செய்யலாம். நேரகாலம் பார்க்கவும் தேவையில்லை. இதனை ஞானபூசை என்பர்.இப்பூசையின் சிறப்பை தாயுமானசுவாமிகள்

“நெஞ்சமே கோயில் நினைவே சுகந்தம் அன்பு
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே”
என இறையை தன் மனக்கோயிலில் எழுந்தருள அழைப்பதைப்பாருங்கள்.
திருநாவுக்கரசு நாயனார் தான் செய்த அகப்பூசையை
“காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய அட்டி
பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே” – (பன்.திரு: 4:76:4)

இதனால் பெறும் பயன் வருமாறு :-

கண்ணாடியை விளக்க விளக்க, மாசு நீங்கி மேலிட்டு வரும் ஒளி போன்று ஆன்மா சுத்தி அடைவதால் சிவபெருமான் நம் வழிபடு தெய்வ வடிவில் நின்று விளங்கித் தோன்றுவான். அதன் பயனாக மும்மலங்களும் நீங்கி ஞானம் தோன்றும். இதுவே ஆன்ம முத்திக்குரிய உயர்ந்த சாதனமாகும்.

புறப் பூசை

எல்லோரும் பார்த்திருக்கச் கடவுளுக்கு பூசை செய்வது.இதனை கிரியாபூசை என்றும் கூறுவர். தேவாரம் பாடி,மந்திரங்களைக்கூறி, நாம் இப்பூசையை பூவால் அர்ச்சித்தும்செய்யலாம். பூசாரியைக் கொண்டும் செய்விக்கலாம். இதுவேகோயில்களில் நடைபெறும் பூசையாகும். இப்பூசையை ஒவ்வொருகோயில் அறக்காவலர் தத்தமது வீக்கத்தைப் பொறுத்து பெரும்தடல் புடலாக போட்டி போட்டு செய்வர். அதிலும் நம் கோயில்திருவிழாக்களையும் சிறப்புப் பூசைகளயும் செய்தோர் தாம்செய்ததைச் சொல்லும் பாங்கைக் கேட்க காதுகள் கோடி வேண்டும்.இதற்கு சில கோயில் அறக்காவலர்களும் பூசாரிகளும்விதிவிலக்கல்ல.
நெஞ்சம் நெகிழ்ந்து நெகிழ்ந்து நினைப்பவரது மனத்துள்ளே புகுந்துநிற்கும் பொன்போலும் சடையையுடைய இறைவன், பொய்யும்புரட்டும் மிக்கோர் பூசையில் இடுகின்ற பூவையும் நீரையும் பார்த்துஅவர்களின் அறியமையை எண்ணி வெட்கப்பட்டுச் சிரிப்பாராம்’ எனதிருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தில் பாடியுள்ளார். அதனை நாம்நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை.
“நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடைப்புண்ணியன்
பொக்கம் மிக்கவர் பூவும்நீரும் கண்டு
நக்கு நிற்கும் அவர்தம்மை நாணியே” (பன்.திரு: 5: 90: 9)
எம்மனம் குற்றங்களாகிய தூசுக்களால் அழுக்குப் படிந்துஇருக்கின்றது. மனம்நிறைய குற்றங்களைச் சுமந்து கொண்டு நாம்என்ன கூக்குரல் இட்டாலும் இறைவனின் தன்மையை நாம்உணரமாட்டோம் என்பதை மாணிக்கவாசகர் திருவெம்பாவையில்

சீலமும் பாடி சிவனே சிவனேயென்று
ஓலமிடினும் உணராய் உணராய் காண்”

என்று சுவையாகச் சொல்லியுள்ளார்.
திருச்சிற்றம்பலம்

அகப்பூசை க்கான பட முடிவு
அகப்பூசை க்கான பட முடிவு

கோவில்களில் அபிஷேக ஆராதனை செய்யப்படுவது ஏன்?

Standard

கோவில்களில் அபிஷேக ஆராதனை செய்யப்படுவது ஏன்?

 

ஆண்டவனுக்கு உரிய ஆராதனைகளுள் பதினாறு வகை உபசாரங்கள் முக்கியமானவை என்கின்றன ஆகமங்கள். அவற்றுள்ளும் அபிஷேகமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஆற்றல் மிக்கதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம் முன்னோர் இருப்பத்தாறு வகை திரவியங்களைப் பயன்படுத்தினார்கள். காலப்போக்கில் அது பதினெட்டாகி, தற்போது பெரும்பாலான கோயில்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த திரவியங்கள் எள் எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், சுத்த ஜலம் என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் வழக்கம் பெரும்பாலான கோயில்களில் உள்ளது.

சிலைகளுக்கு ஏன் இப்படி விதவிதமான திரவியங்களால் அபிஷேகம் செய்யவேண்டும்? அதற்கு முக்கியமான காரணம். ஒரு கோயிலின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமைகிறது என்பது, அந்த சிலைக்குச் செய்யப்படும் அபிஷேக திரவியங்களின் எண்ணிக்கையையும், அளவையும், அது செய்யப்படும் சிறப்பையும் பொறுத்தே அமையும். இன்றைய விஞ்ஞான அடிப்படையில் சொல்வதானால், உயர்வான மின்கலனில் ஆற்றல் சேமித்து வைக்கப்பட்டாலும், உரிய காலகட்டத்தில் அதனை சார்ஜ் செய்வது முக்கியம் அல்லவா? சில மின்கலன்களின் உள்ளே உள்ள திரவங்களை குறிப்பிட்ட காலகட்டத்தில் மாற்றி அமைப்பதும் அவசியமாக இருக்கிறதுதானே? அப்படித்தான் இறையருளை மந்திர, யந்திர ஸ்தாபனங்கள் மூலம் சிலாரூபத்தில் இருத்திடும்போது அந்த ஆற்றலை நிலைக்கச் செய்யவும் அதிகரிக்கச் செய்யவும் அபிஷேகம் முதலானவை அவசியமாகிறது. இந்த உண்மையை சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர் கண்டுபிடித்துவிட்டனர். எனவேதான் கோயில்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்துப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அதோடு அபிஷேகப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க கைங்கர்யம் செய்வதற்கு வசதியாக கோயில் சொத்தாக நிலங்களை எழுதி வைத்தனர்.

அபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய மூன்றும் சிறந்ததாகும். அதேபோல எந்த வகை அபிஷேகம் செய்தாலும் அதனை ஒரு நாழிகை, அதாவது இருபத்து நான்கு நிமிடங்கள் செய்யவேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், சில கோயில்களில் அவற்றின் நடைமுறை வழக்கப்படி இரு நாழிகை அளவுக்கு (48 நிமிடங்கள்) அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு. இது, ஒவ்வொரு கோயிலுக்கும் உரிய சிலை பிரதிஷ்டை பந்தன விதிகளை ஒட்டி மாறுபடுவதும் உண்டு. அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரில் சுத்த கந்த திரவியங்களான பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, வெட்டிவேர் ஆகியவற்றை கலந்து வாசனைதீர்த்தமாக அபிஷேகம் செய்வது சிறந்தது.

முற்காலத்தில் மூலவிக்ரகத்துக்கு நடத்தப்படும் அபிஷேகங்களுள் சந்தனம், விபூதி, கலச அபிஷேகம் ஆகியவற்றைத் தவிர மற்றவற்றைப் பார்க்க பக்தர்களை அனுமதிக்கமாட்டார்கள். ஆகமப்படி இவை தவிர மற்ற எந்த அபிஷேகத்தையும் பக்தர்கள் பார்க்கக்கூடாது. என்றாலும் பல கோயில்களில் எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் காண அனுமதிக்கப்படுகிறார்கள்.
கருவறையில் கற்சிலையாகக் காட்சிதரும் மூலவர் திருமேனி, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கே ஈர்த்து அதைக் கோயில் முழுவதும் பரவச் செய்கிறது. அந்த ஆற்றலானது அபிஷேகம் செய்வதால் பலமடங்கு அதிகரிக்கிறது. நம் முன்னோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்த இந்த உண்மையை, இன்றைய விஞ்ஞானிகள் சமீபத்தில்தான் கண்டுபிடித்து ஒப்புக்கொண்டுள்ளனர். பழமையான கோயில்களில் உள்ள மூலவர் சிலைகளின் பீடத்தில் அரிய மூலிகைகளும், ஆற்றல் வாய்ந்த மந்திரத் தகடும் (யந்திரம்) பதிக்கப்பட்டு உள்ளன. இந்த யந்திரமும், மூலிகைகளும் வெளிப்படுத்தும் ஆற்றலும் அபிஷேகத் தீர்த்தத்தில் கலக்கிறது. அதனால்தான் அதனைத் தலையில் தெளித்துக் கொண்டாலும் சிறிதளவு உட்கொண்டாலும் அபரிமிதமான புத்துணர்ச்சி கிடைக்கிறது. தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் ஆற்றலைக் கடத்தும் திறன் ஏற்படுகின்றது. அபிஷேகம் செய்யச் செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எலக்ட்ரான்கள் அதாவது எதிர்மின்னூட்டியின் அளவு அதிகரிப்பதை அறிவியல் சோதனைகள் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளியின்வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும், தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருவதாகவும். அது கோயில் முழுதும் பரவி, பக்தர்கள் மனதில் பக்தி உணர்வினை அதிகரிப்பதாகவும் கூறுகிறார்கள். அபிஷேகத்தின் போது சொல்லப்படும் மந்திர ஒலி, சிலை மீது பட்டு நேர் அயனியாக வெளிப்படுகிறது. நேர் அயனியை சிவமாகவும், எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தி ஐக்கிய பாவத்திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர். அந்த ஆற்றல் சேமிக்கப்படவேண்டும் என்பதற்காகவே கருவறையில் இருந்து கோமுகம் வழியே சென்று, பின் அபிஷேக திரவியங்கள் நேராக கோயில் திருக்குளத்தை சென்றடைய வழிவகை செய்திருந்தனர்.

அதுபோலவே அபிஷேகத்துக்கு உரிய பொருளை நேரடியாக எடுத்துவந்து தருவதைவிட அதனைச் சுமந்தபடி பிராகாரத்தில் வலம் வந்து பின்னர் கொடுப்பதே நல்லது என்பதால்தான், பால் காவடி முதலானவற்றைச் சுமந்துவருபவர்கள் கோயிலை வலம் வந்து அளிக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்தினர்.

பொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு. அதனாலேயே எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி நடைபெறும். பால் அபிஷேகம் குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்குச் செய்யப்படும்போது அது மிக முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல முருகனுக்குத் திருநீறு, பால், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யும்போது அளவுகடந்த ஆற்றல் வெளிப்படுகிறது. அதன் காரணமாக பக்தர்கள் வாழ்க்கையில் செழுமையும் நலமும் நிறைகிறது. ஆண்டவனின் அருளாற்றலை அதிகரிக்கச் செய்யக்கூடிய அற்புதமான செயல், அபிஷேகம். உங்களால் இயன்றபோதெல்லாம் அபிஷேக நேரத்தில் கோயில்களுக்குச் செல்லுங்கள். நீங்கள் நேரடியாக அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும் என்பது இல்லை. கோயிலுக்குள் இருந்தாலே போதும் உங்கள் வாழ்வில் கோடிகோடி நன்மைகள் சேரும். மனமும் உடலும் தூய்மை பெறும்.

திருச்சிற்றம்பலம்

சிவாகமங்களில் கூறப்பெற்ற சிவபூசையில் ” பூவும் நீரும் “

Standard

சிவாகமங்களில் கூறப்பெற்ற

சிவபூசையில் ” பூவும் நீரும் ”

“புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு” என்பது திருமுறை. மானிடராகப் பிறந்த ஒவ்வொருவரும் வழிபாடு செய்வது இன்றியமையாதது. வீடுகளில் செய்யப் பெறுவது ஆத்மார்த்த வழிபாடு. திருக்கோயில்களில் நிகழ்த்தப் பெறுவது பரார்த்த வழிபாடு. இவ்விரண்டிலும் இறைவன் திருவுருவங்களுக்கு அபிஷேகம், அர்ச்சனை முதலியன நிகழும். அபிஷேகத்திற்குரிய திரவியங்கள் இவை என்பதையும், அவற்றின் பயன்களையும், அதுபோல மலர்களின் மாட்சியும் அவற்றை இறைவனுக்குச் சாத்துவதால் உண்டாகும் நன்மைகளையும் அறிந்துகொள்வது அவசியம். எவ்வித வழிபாடாக இருப்பினும் புறந்தூய்மையும் அகந்தூய்மையும் வேண்டும். புறந்தூய்மை நீரால் அமையும் ஆதலால் வழிபாட்டிற்கு முன்னர் நீராடி, தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து தூயவராக விளங்கவேண்டும். திருநீறு முதலிய சமய அடையாளங்களும் தேவை. ஐம்புலன்களாலும் மனம் சலனமடையாமல் இறை வழிபாட்டில் ஒன்றுதல் வேண்டும்.

திருக்கோயிலுக்குச் செல்லும்போது இறைவழிபாட்டிற்குரிய மலர்கள், அபிஷேகத் திரவியங்கள், தூபம், தீபம் முதலியவற்றிற்கான பொருள்களைக் கொண்டு செல்லவேண்டும். வழிபாட்டிற்குரியனவற்றை இடுப்பிற்குக் கீழே இருக்குமாறு எடுத்துச் செல்லக்கூடாது. இரு கைகளாலும் கொண்டுசெல்ல வேண்டும். தூய்மையான இடங்களில் வைக்கவேண்டும்.

அபிஷேகத் திரவியங்கள்

தூய்மையான ஆற்றுநீர், கிணற்றுநீர் அபிஷேகத்திற்கு முதன்மையானதாகும். “சென்றாடு தீர்த்தங்கள் ஆனார்தாமே” என்னும் அப்பர் பெருமானின் வாக்கினால் தீர்த்தம் இறைவனோடு தொடர்புடையதாகும். இதனைக் குடங்களில் தூய்மையானவர்கள் சென்று வாத்தியங்கள் முழங்க நாள் தோறும் கொண்டுவரல் வேண்டும்.

கங்கை எல்லா நீர்நிலைகளிலும் விளங்குகின்றாள் என்பது மரபு. கொண்டுவந்த திருமஞ்சனத்திற்குரிய நீரில் பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலிய மணமுள்ள பொருள்களை இடவேண்டும்.

“தடங்கொண் டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல் குடங்கொண் டடியார் குளிர்நீர் சுமந்தாட்ட” என்னும் திருஞானசம்பந்தர் வாக்கால் அபிஷேக நீர் இறைவனுக்குக் குளிர்ச்சியுடன் குடங்களில் கொணர்தல் வேண்டும் என்பதை அறியலாம். “போதொடு நீர் சுமந்தேத்த” என்னும் அப்பர் வாக்கால் உரிய காலங்களில் நீர் எடுத்து வரவேண்டும் என்னும் செய்தி தெரிகின்றது. பழைய நீரைப் பயன்படுத்தக் கூடாது.

அபிஷேக முறை

நல்லெண்ணெய், மாப்பொடி, நெல்லிமுள்ளி, பஞ்சகவ்யம், பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன் கரும்பின் சாறு, பழவர்க்கம், இளநீர், வாசனைச் சந்தனம் சிருங்கநீர், தாராநீர், ஸ்நபனநீர், சங்காபிஷேகம் ஆகியனவற்றை வரிசையாகச் செய்யவேண்டும். விபூதி, அன்னம், கும்பநீர், அர்க்கிய தீர்த்தம் இவற்றாலும் அபிஷேகம் செய்யவேண்டும்.

சகலாகம சங்கிரகம் என்னும் நூலில் கீழ்க்கண்ட முறை கூறப்பட்டுள்ளது:- 1. எண்ணெய், 2. பஞ்சகவ்யம், 3. மாவு, 4. நெல்லிமுள்ளி, 5. மஞ்சள் பொடி, 6. பஞ்சாமிருதம், 7. பால், 8. தயிர், 9. நெய், 10. தேன், 11. கரும்பின் சாறு, 12. பழரசங்கள், 13, இளநீர், 14. அன்னம், 15. சந்தனம், 16. ஸ்நபனநீர்.

பலன்கள்

நன்னீர் ஆட்டினால் நம் விருப்பங்கள் இனிதே நிறைவேறும்; வாசனைத் தைலம் சுகத்தை அளிக்கும்; பஞ்சகவ்யம் பாவத்தைப் போக்கும்; பசுவின் பால், தயிர், நெய், நீர், சாணம் இவற்றால் ஆவது பஞ்சகவ்யம்.

“ஆவினுக்கருங்கலம் அரனஞ்சாடுதல்” – பசுவிற்குப் பெருமை, அதன் ஐந்து பொருள்களை இறைவன் திருமஞ்சனத்திற்கு ஏற்றருள்கின்றான்

பஞ்சாமிருதம் உடல் திடத்தை நல்கும். யம பயத்தைப் போக்கும் என்பதை திருஞானசம்பந்தர்

“பாலினால் நறுநெய்யால் பழத்தினால் பயின்றாட்டி

நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்

சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள்

காலினால் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே” – என்று திருவாய் மலருகின்றார்.

நெய் அபிஷேகம் செய்தால் மோட்சநிலை கிடைக்கும்; பால் நீடித்த ஆயுளையும்; சத்வகுணத்தையும் தரும்.

தயிர்கொண்டு அபிஷேகம் செய்வதால் நன்மக்களைப் பெறலாம். குழந்தைகள் பேரில்லாதவர்கள் தயிர் அபிஷேகம் செய்து அக்குறையை நீக்கிக் கொள்ளலாம்.

மாப்பொடி கடன் தொல்லையை நீக்கி நல்வாழ்வு நல்கும்.

நெல்லிமுள்ளி அபிஷேகம் உடலிலுள்ளா நோய்களைப் போக்கி நல்லுடம்பு தரும்.

கரும்புச் சாறு கொண்டு திருமஞ்சனம் செய்யின் ஆரோக்கியம் அளிக்கும்.

தேன் சுகத்தைக் கொடுக்கும்.

பழங்களைக் கொண்டு பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யின் செல்வப் பெருக்கு உண்டாலும். வாழைப்பழம் பயிர் வளர்ச்சியையும், மாம்பழம் மக்கட்பேறும், மாதுளை கோபத்தைப் போக்கி சாந்தத்தையும், கொளஞ்சி சோகத்தை நீக்கி இன்பத்தையும், நாரத்தம்பழம் ஒழுக்கத்தையும் நல்கும். எலுமிச்சை யம பயத்தை நீக்கும்.

சர்க்கரை பகையை அகற்று. இளநீர் போகங்களைத் தரும்.

அன்னத்தினால் அபிஷேகம் செய்வது அரச வாழ்வு தரும்.

சந்தனம் கலந்த நீர் இலட்சுமி கடாட்சம் நல்கும்.

நைவேத்யம் நிலப் பிரபுத்வத்தைத் தரும்.

தாம்பூலம் சுகத்தையும் சங்காபிஷேகம் புண்ணிய வாழ்வையும் அளிக்கும்.

பஞ்சாமிருதம் சுக வாழ்வைத் தரும்

தூப தீப ஆராதனை

1. தூபம், 2. தீபம், 3. மகாதீபம் (அடுக்குதீபம்), 4. நாகதீபம், 5. விருஷபதீபம், 6. புருஷதீபம், 7. பூர்ணகும்பம், 8. ஐந்து பஞ்சதீபம், 13. நட்சத்திர தீபம், 14. மேரு தீபம், 15. கற்பூரம், 16. மகாநீராஞ்சனம்.

மகாதீபம் 11, 9, 7, 5, 3, 1 முதலிய அடுக்குகளாக அமைந்திருக்கலாம். பதினாடு அடுக்கு – ஏகாதச ருத்திரர்கள், ஒன்பது அடுக்கு – நவசக்தி, ஏழு – சப்தமாத்ரு தேவதைகள், ஐந்து – பஞ்சபிரும்மம், மூன்று – மும்மூர்த்திகள், ஒன்று – சிவன் ஆகிய மூர்த்திகள் அதிதேவதைகள் ஆகும். தூபத்தை மூக்கிற்கு நேரிலும், தீபத்தைக் கண்களுக்கு எதிரிலும் காட்ட வேண்டும்.

உபசாரமில்லாவிடில் உண்டாகும் தீங்கு

பூஜை இல்லாவிடின் ரோகமும், புஷ்பமில்லாவிடில் குலநாசமும், சந்தனமில்லாவிடின் குஷ்டரோகமும், ஜலமில்லாவிடில் துக்கமும், தூபமில்லாவிடில் சுகமின்மையும், தீபமில்லாவிடில் பொருள் முட்டுப்பாடும், நைவேத்யமில்லை எனில் வறட்சியும் மந்திரமில்லை எனின் வறுமையும் உண்டாலும்.

ஆடைகள்

மிருதுவான பட்டு, பஞ்சு ஆகியவற்றால் ஆன வண்ணங்களுடன் கூடிய ஆடைகளை அணிவிக்க வேண்டும். ஆடை சாத்துவதால் சிவலோக வாழ்வு கிட்டும்.

சந்தனம்

அகர், சந்தனம், கோஷ்டம், குங்குமப்பூ, கற்பூரம் இவைகளூடன் பன்னீர் கலந்த சந்தனம் சாத்த வேண்டும்.

ஆபரணங்கள்

ஞாயிற்றுக்கிழமை மாணிக்க ஆபரணமும், திங்களன்று முத்துமாலையும், செவ்வாயன்று பவள வடமும், புதன் மரகத ஆபரணமும், வியாழன் புஷ்பராக அணியும், வெள்ளி வைர ஆபரணமும், சனி இந்திரநீல அணியும் அணிவிப்பது விஷேசம். எல்லா ஆபரணங்களையும் எல்லா நாட்களிலும் சாத்தலாம். ஆனால் மேலே கூறிய கிழமைகள் சிறப்பானவை.

மலர்கள்

 

இறைவன் திருமுடியில் ஒருபோதும் மலர் இல்லாமல் இருக்கக்கூடாது.

காலை நேரத்தில் தாமரை, புரசம்பூ, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, சண்பகம், புன்னாகம், (தாழை – இம்மலர் சிவவழிபாட்டில் பயன்படுத்தலாகாதது.) ஆகிய பத்துவித மலர்களால் வழிபட வேண்டும்.

நடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஓரிதழ் ஆகியன நன்மை தரும்.

மாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம் ஆகியன உகந்தன.

பூஜைக்குரிய இலைகள் (பத்திரங்கள்)

துளசி, முகிழ், சண்பகம், தாமரை, வில்வம், கல்ஹாரம், மருக்கொழுந்து, மருதாணி, தர்ப்பம், அறுகு, அசிவல்லி, நாயுறுவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி முதலியவற்றின் இலைகள் பூஜைக்குரியன.

பஞ்ச வில்வங்கள்

முல்லை, கிளுவை, நெச்சி, வில்வம், விளா ஆகியன.

இறைவனுக்கு எல்லாவற்றையும் அர்ப்பணித்து வழிபடாமல் உண்பவன் பொருள் நாசத்தை அடையும். எனவே உகந்தனவற்றை நைவேத்யம் செய்ய வேண்டும்.

இத்தொகுப்பில் கண்ட செய்திகள் சிவாகமங்களில் கூறப்பெற்றவை. எனவே கூடுமானவரை விதிகளை உணர்ந்து தவறாது அபிஷேகம், அர்ச்சனை முதலிய வழிபாடுகளைச் செய்து நல்லன எல்லாம் பெருக.

திருச்சிற்றம்பலம்

 

இல்லத்தில் இனிய வழிபாடு

Standard

இல்லத்தில் இனிய வழிபாடு

Related image

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இல்லங்களில் இறைவரை வழிபாடு செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஒரு சிலருக்கு எப்படி வழிபாடு செய்வது என்று அறியாமலிருக்கின்றனர். அவர்களுக்காக சில உபயோக குறிப்புக்கள்

பூசை செய்வதற்கு தனி அறையிலோ அல்லது தனி அலமாரிலோ இறைவரின படத்தை வைத்து பூசை செய்யும் போது எப்போதும் சிவனாரின் படம் மேலே இருக்கும் படி பார்த்துக்கொள்ளுதல் நன்று அதன் கீழ் குலதெய்வங்களின் படங்களும் சக்தியின் படங்களும் வைத்துக்கொள்ளலாம். இத்துடன் சைவ நெறியில் இருப்பவர்கள் சமயக்குறவர்களின் படங்களையும் சேர்த்து வைத்து வழிபடுவது சிறந்தது. நாம் வழிபடும் இத்திருவுருவப் படங்களுக்கு நாள்தோறும் மலர் வைத்து, தீபம் ஏற்றி தூபம் காட்டி திருவமுது செய்து நம் தமிழ் வேதங்களாகிய பன்னிரு திருமுறைகளை மந்திரமாக ஓதி வழிபட வேண்டும்.

இறை வழிபாட்டிற்கு வடமொழி மந்திரங்கள் தான் உரியது என்று எண்ணக்கூடாது. நம்முடைய தாய் மாெழியிலேயே நம் பன்னிரு திருமுறை ஆசிரியர்கள் பாடிய மந்திரப்பாடல்களால்  வழிபாடு செய்வதுதான் சிறந்தது என்பதை அறியவேண்டும். மந்திரம் என்பது  “நிறைமொழி மாந்தர் ஆனையிற் கிளர்ந்த  மறைமொழி தானே மந்திரம் என்ப ” என தொனல்காப்பியம் வகுத்து தந்ததை அறிதல் வேண்டும். நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமாெழி காட்டிவிடும் என்று அருளியும் உள்ளார்

திருமறைக்காட்டில் வேதம் பூட்டிய கதவை திறந்தது நம் திருநெறிய தமிழ் அல்லவா?  திரு மயிலாப்பூரில் எலும்பும் சாம்பலுமாக இருந்த பூம்பாவை உயிரோடு எழச் செய்தது தமிழ் வேதம் தானே,  மேலும் திரு அவிநாசி தலத்தில் முதலை உண்ட பாலகனை உயிரோடு மீட்டது தமிழ் மந்திரங்கள் தானே, தில்லையில் ஆடல்புரியும் நடராஜன் எழுதிய திருவாசகம் தமிழ் வேதம் தானே, எனவே சிவனே தமிழ் தமிழே சிவம் என்பதை உணர்தல் வேண்டும்

” பண்ணிடை தமிழ் ஒப்பாய் ”  தண்ணார் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டானை ” என்கிற மந்திர வாசங்களை உணர்தல் வேண்டும். இது போன்ற வாசக மந்திர வரிகள் நம் இல்லங்களில் முழுங்க வேண்டும். அந்த தெய்வீக ஒலி நம் இல்லம் முழுவதும் நிரம்பி நம் வாழ்வை மேம்படுத்தும் என்பது உறுதி.

எளிய வழி பூசை செய்யும் முறை

திருப்படங்களுக்கு மலர் சூட்டிய பின் திருவிளக்கை ஏற்றுதல் வேண்டும். அப்போது அப்பர் பாடிய திருமுறை திருமந்திரப் பாடல்

” இல்லக விளக்கது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கது சோதி உள்ளது

பல்லக விளக்கது பலரும் காண்பது

நல்லக விளக்கது நமச்சிவாயவே

பின்பு

இறைவருக்கு திருவடி நீர் பஞ்சபாத்திரங்களைக் கொண்டோ அல்லது முத்திரை விரலினாலே அளித்து தூப தீபம் மூன்று முறை காட்ட வேண்டும். அப்போது இப்பாடலை பாடவும்

” சலம் பூவோடு தூபம் மறந்தறியேன்

தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்

நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன்

உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்

உலர்ந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்

உடல் உள் உறுசூலை தவிர்த்தருள்வாய்

அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில

வீரட்டானத்து உறை அம்மானே ”

பின்னர்  அமுது செய்வித்தல் வேண்டும். நம் வசதிக்கேற்றபடி கற்கண்டு கனி வகைகள் அளிக்கலாம்

பின்

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்

பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை

என் அன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புற

இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே ” என்ற பாடலை பாடவும்

பின்  இறைவனை போற்றி அர்ச்சனை செய்க . அப்போது

” வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி

மீளாமே ஆள் என்னைக் கொண்டாய் போற்றி

ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி

ஓவாத சத்தத்து ஒலியே போற்றி

ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி

ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி ! போற்றி!!

என்ற பாடலை பாடி அவர் அவர்களின் நேரத்திற்கேற்ப பன்னிரு திருமுறைகளை பாடி  வழிபாடு செய்க

நிறைவாக இறைவனிடத்தில் மனம் மொழி மெய்களால் செய்த பிழைகளை பொறுக்க  வேண்டுதல் செய்க

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்

போகமும் திருவும் புணர்ப்பானைப்

பின்னை என் பிழையைப் பொறுப்பானைப்

பிழை எல்லாம் தவிரப் பணிப்பானை

இன்ன தன்மையன் என்று அறிவொண்ணாா

எம்மானை எளிவந்த பிரானை

அன்னம் வைகும் வயல் பழனத்து அணி

ஆரூரானை மறக்கலுமாமே ” என்ற தேவராப் பாடலைப் பாடி

 

எல்லா உயிர்களும்இனிது வாழ வாழ்த்து பாடி வழிபாட்டை நிறைவு செய்யலாம்

வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்

கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க

நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம் ”

வழிபாட்டின் தொடக்கத்திலும் நிறைவிலும் திருச்சிற்றம்பலம் என்று சொல்லி மகுடம்  சொல்லுங்கள்

தென்னாடுடைய சிவனே போற்றி

என்நாட்டவருக்கும் இறைவா போற்றி

திருச்சிற்றம்பலம்

சொல்லித் தெரிவதல்ல சொக்கனாதன் திருவருள்

Standard

சொல்லித் தெரிவதல்ல சொக்கனாதன் திருவருள்

சொக்கநாதர் என்றால் நாம் வாழும் இக்கலியுகத்திலேயே சிவபெருமானும், மீனாட்சி தேவியும் , திருவாலவாயத்தம்பிரான் என்ற ராஜாவும், அங்கயற்கண்ணி என்ற ராணியாய் மதுரையை 12 தேவ ஆண்டுகள் அரசாண்ட திவ்ய தேசம் மதுரையம்பதி ஆகும்.

பார்வதி பரமமேஸ்வரன் மதுரையை ஆண்ட போது போதித்த சத்யம், தர்மம், மீண்டும்  இக்கலியுகத்தில் தழைக்க வேண்டுமானால் வீட்டுக்கு வீடு தினமும் வேதமறை, திருமந்திரம், தேவாரம், திவ்ய பரபந்தம், திருவாசகம் திருப்புகழ் அருட்பா போன்ற தமிழ் மறைகள் ஓதப் பெற வேண்டும். வேத ஒலியில் உண்டாகும் வேதஅக்னி, எல்லாவற்றையும் பரிசுத்தமாக்கும் மாமறை ஒலி உடல் உள்ளம்,மனம் புத்தி அறிவு ஐந்தையும் தூய்மையாக்க வல்லதாம்.

  மதுரையில் இறைவனே நிறுவி வளர்த்து பொலிந்தது முதலாம் தமிழ்ச்சங்கம். இதில் சிவபெருமான், முருகன், அகத்தியர் 49 பைந்தமிழ் புலவர்கள்வீற்றிருந்து, ஒப்பற்ற தெய்வத்தமிழ் சேவை ஆற்றினர். இறைவனே ஒரு மொழிக்கு சத்சங்கம் வைத்து வளர்த்து பரிபாலித்த பேறு தெய்வத்தமிழுக்கு மட்டுமேஉண்டு.

வில்லால், சொல்லால், கல்லால் பிரம்பால் பலரிடமும் அடியுண்டும், பக்தர்களைை அரவனைத்து ஒப்பற்ற பேரன்புடன் அருள்பவர் காருண்ய மூர்த்தியாகிய சிவபெருமானார். நாம் வாழும் இதே கலியுகத்ததில் வந்தி எனும் ஒரு சிவபக்தையான மூதாட்டிக்காக பிட்டுக்கு மண் சுமந்து பிரம்பால் அடிபட்டு கொண்டிட ,,,, அந்த அடி உலகத்து உயிர்கள் அனைத்திற்கு அடியாக பட்டு தழும்பு ஏற்பட்டது. இந்த வைபவமே போதுமே இறைவன் எல்லா ஜீவ ராசிகளிடமும் ஆத்மாவாய் இருக்கிறார் என்பதற்கு அடையாளம்.

மதுரையில் வாழ்ந்த பக்தர்களான இரட்டை தமிழ் புலவர்கள் ஏழ்மையில் வாடியவர்கள், கலம்பகத்தமிழ் இலக்கணத்தில் பிரசித்தி பெற்று கரை ககண்டவர்கள். ஒரே ஆடையை துவைத்து காய வைத்து அதையே அணியும் அளவுக்கு வறுமை அவர்களிடம் கொழித்தது. ஆனால் ஞானம், பக்தி, தீர்க தரிசனம் ஆத்ம சக்தி நிறைந்த ஆன்மீகச் செல்வந்தரகளாய் இந்திரனும், குபேரனும் வியக்கும் படியாய் பொலிந்தார்கள்.

ஒரு முறை மதுரை வைகை ஆற்றில் ரெட்டை புலவர்களில் ஒருவரிடம் இருந்த ஒரே ஆடையும் வைகை ஆற்றின் வேக நீர் போக்கால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அப்போது அப்புலவர் எவ்வித வருத்தமும் இன்றி பக்தி மிகுந்து பாடினார். இக்கலிங்கம் போனாலென், ஏகலிங்கமாம் மாமதுரை சொக்கலிங்ம் உண்டே துணை என்று பாடினார் ( கலிங்கம் என்றால் ஆடை)

இந்திரன் தெய்வத்தமிழ் புலவருக்கு உயர்ந்த பட்டாடை உண்மையான பொன்னால் நெய்யப்பெற்ற பொன்னாடை அளிக்க முன் வந்தார். இதனை சொக்கலிங்க பெருமான் தடுத்து, ” இந்திரா இப்புலவர் பெருமக்கள் எம்மிடம் மாறா பக்தி பூண்டவர்கள், நீ இதனை அறியமாட்டாய், பூலாேக பக்தியின் ஆழம் தேவலோகத்தில் புலப்படாது, நீ அளிக்கும் பட்டாடையை ஏற்றுக்கொள்ளவும் தயங்குவர் ” என்றார்.

இவ்வாறாய் எளிய பூலோகத்து சிவபக்தரிடம் பெறும் ஆசியின் மகிமை மகத்துவத்தை ஈஸ்வரனின் திருவாய் மொழியாய் நேரடியாய் பூவலகத்தில் அதுவும் மதுரையம்பதியில் கேட்ட இந்திரன் ஆனந்தத்தால் திசையறியாது போனார். அந்த புலவரின் ஆசியை பெற முடியாமல் போனாா். அவ்விரு புலவர்களும் தன்னை அறியா வண்ணமாய் இந்திரர் உடனே மாறுவேடம் பூண்ட கையோடு அந்த தெய்வப் புலவர்களின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார், அப்போது அந் செந்நாப் புலவர்கள் ஆசியளிக்கும் முன், சிவபெருமான் போல் சூக்குமமாய் நல்விளக்கம் தந்தார்கள். ஓ பக்தா  ஆனானப்பட்ட இந்திரனே உன் காலடியில் வந்து வீழ்ந்தாலும் நம் மாமதுரை கடவுளாம் சொக்கனின் அனுமதியோடுதான் ஆசிகளை அளிக்க வேண்டும் என்பது தமிழ் மாதா வாக்கு தேவவாக்கு பாத்திரம் அறிந்து பிச்சை இடு ” என்றாரே பார்க்கலாம்.

ஒப்பற்ற செல்வங்களை உடைய தேவலோகத்து இந்திரனால் பூலாேகத்தில் ஓர் ஏழைக்கு தானம் அளிக்க முடியவில்லை, ஏழை பக்தனின் ஆசியை பெற முடியவில்லை,என்பது தெளிவு, பூலாேகத்தில் உற்பவிக்கும் பக்திக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. இவர்களின் பக்தியைக் கண்டு வியந்து தலை வணங்கிய இந்திரன், ” பூலோகத்து பக்திக்கு தெய்வத்தையே தன்னிடம் ஈர்க்கும் இவ்வளவு பவித்ரமான வலிமையா ? என்று சிந்தித்து ஆனந்தித்தார்.

பூலாேகத்தில் ஆற்றும் நற்சேவைகளின் புண்ணிய சக்தியால் தேவதேவ இந்திராதி குபேர பதவிகளும் கிட்டும் என்பது உண்மையே, ஆனால் இவை யாவும் சாதுவதமல்ல, அந்தந்த பூலோக தேவலோகப் பிறவியில் அந்தந்த நிலையில் அந்தந்த லோகத்தில் எக்காலத்தும் தூய இறைபக்தியுடன் துலங்க வேண்டும்,என்பது இங்கு கிட்டும் பாடம். சாசுவதமான இறைத்திருவடி பக்திச் செல்வ வளம் நிறைந்தது நாம் வாழும் பூலாேகம் இதனை உணர்ந்து பூவுலகத்தில் ஒவ்வொரு நாளிலும் அர்த்தத்தோடு வாழ வேண்டும்.

திருச்சிற்றம்பலம்

நன்றி அகத்தியர் விஜயம் / திரு வேங்கட்ராம சுவாமிகள் அறவுரை