கனி இருக்க காயை கவரும் மாந்தர்

Standard

கனி இருக்க காயை கவரும் மாந்தர்

கனி இருக்க காயை கவரும் மாந்தர்
நாம் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் நம் உள்ளத்திருந்தே வெளிப்படுகின்றன. அவற்றில் எதுவும் கொண்டு வரப்படுவதில்ைல, நம் உள்ளத்திலுள்ள நல்ல இனிைமயான சொற்கள் நிறைந்துள்ளன. அப்படியிருக்க அருவருப்பான வார்த்தைகளை தேடி நாம் அடுத்தவர் மனம் புண்படும்படியாக பேசுகிறோம். இது ஒரு இடத்தில் சுவையான கனி இருக்கும் போது சுவையற்ற காயை எடுத்துக் கொள்வதைப் போன்றன, இதனையே வள்ளுவர் பெருந்தகையும்
” இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய் கவர்ந் தற்று” என்கிறார்,
அதுபோல நம் உயிரோடு உடன் பிறந்தது நம்முள்ளே உள்ள அன்பு அதை விடுத்து கோபத்தை நாம் தேடி கொண்டுவருகிறோம், அதனை கிண்டி கிளரி வளர்த்து விடுகிறோம். இதனால் நமக்கு இயல்பாக உள்ளதை விட்டுவிட்டு நமக்கு பகையாக உள்ளதை நாம் தேடிப்பிடித்து சேர்த்துக்கொள்கிறோம். பகை, பொறாறமை, வஞ்சம், காமம் குரோதம், இவை யனைத்தும் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் குற்றங்கள், அன்பு ஒன்றே உயிருக்கு குணமாகும்,
அதுபோல இறைவனை வணங்குவதும் நாடுவதும், நமக்கு குணமாகும், நம் உள்ளே உள்ளவன் அவன், ஆனால் நமக்கு பிறவான ( வெளியே உள்ள ) உலகப் பொருட்களை உடலையுமே நாம் நாடுகிறோ ம். திசைமாறி செல்கிறோம், கனியாக உள்ள இறைவனை விடுத்து காயாக உள்ள நிலையற்ற உலகப் பொருட்களை விரும்பி பற்றுகிறோம்.
முதியவர் ஒருவர் தள்ளாடி த் தள்ளாடி நடந்து சென்றார், அவர் உடம்பில் தெம்பில்லை. உண்ணாமல் வாடிப்போய் இருந்தார். அப்போது அவரை அம்ைமயப்பரான உமையும் சிவனும் பார்த்தனர். இருவருக்குமே அவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால இருவரில் யார் உதவுவது என்பதில் மட்டும் கருத்து வேறுபட்டது. “நீயா? நானா? ” என்ற போட்டி , அவர் தள்ளாடி யபடியே நடக்கிறார், இன்னும் சிறிது நேரத்தில் கால் இடறி கீழே விழப்போகிறார், அப்போது அவர் ” அப்பா ” என்றால் இறைவரும், அம்மா என்றால் உமையம்மையும், இறைவா? என்றால் இருவரும் சேர்ந்து சென்று உதவலாம் என்று முடிவு எடுத்தனர். அவ்வாறு அவர்கள் எதிர்பார்த்தபடி வயதானவர் தள்ளாடி நடந்து வரும் போது கல் தடுக்கிய முதியவர் கீழே விழந்தார், அப்போது இறைவர் இறைவி இருவரும் நம்மில் யாரை அழைக்கின்றார் என்று ஆவலோடு எதிர்நோக்கியிருந்த வேளையில் அவரோ ” ஐயோ” என கத்தினாராம், யாரையும் நினைக்காது ஐயோ என்றார், எனவே இருவரும் உதவ முன்வரவில்லை. இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளவேண்டியது அருளவேண்டும் என்ற இறைவன் தயாராக இருந்தும் அவரை எண்ணவில்ைல. அவன் அருள பற்று வைக்கவில்லை இறைவன் மீது பற்றில்லாமையால் அவரை நாம் அவன் அருளை பெற வாய்ப்பை இழக்கின்றோம். இதனையே அப்பர் சுவாமிகளும் ” கையினால் தொழாது ஒழிந்து கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே, ” அதாவது ” கனிபோலச் சிவன் இருக்க காய்போன்ற வேறு பொருள்களை பற்றி வாழும் உயிர்களே என்கிறார் அவர். இனிமேலாவது கனிபோன்ற இறையருள் இருக்கும் போது சுவையற்ற காய்களான வேறுபொருட்கள்மீது நாட்டம் கொள்ளாது இறையன் அருள் ெபற கனியினை கவருவோம்.

Advertisements

அம்மையப்பர் வடிவம்

Standard

அம்மையப்பர் வடிவம்

இன்று ஒருவருடைய குடும்பத்தை பற்றி சாடையாக கேட்கும் போது உங்கள் வீடு மதுரையா? அல்லது சிதம்பரமா? என்று கேட்பதுண்டு வீடு மனைவியின் ஆட்சியில் இருந்தால் அது மதுரை என்றும் கணவர் ஆட்சியில் இருந்தால் அது சிதம்பரம் என்று கிண்டலாக பேசுவதை நாம் அறிந்திருக்கின்றோம். மதுரையில் மீனாட்சிக்கே முதலிடம் அங்கு மீனாட்சி அருளிக்கொண்டே இருக்கிறாள். அதாவது சிவனருளை என்றும் அவள் வழங்கிக்கொண்டே உள்ளாள். சிதம்பரத்தில் சிவனருள் பரிபூரணமாக என்றும் உள்ளது ஆயினும் சிவகாமியின் வழியில் தான் அவன் அருள முடியும். அருளை இறைவனிடம் இருந்து வாங்கித் தருவது அன்னைதானே. கூட்டிக்கழித்து பார்த்தால் இரண்டும் ஒன்றுதான் வரும் வழி வேறுபாடாக இருந்தாலும் அருளும் பலன் ஒன்றுதானே. கூடுதல் குறைதல் எதுவும் அவர்களிடம் இல்லை, அவர்கள் இருவரும் என்றும் எங்கும் சமம்தான்.
நம்மிடையே ஆண் – பெண் என்ற வேறுபாடு இன்றி இரண்டும் சமம் என்று உணர்த்தும் விதமாகத்தான் தன்னுள் பாதியை பெண்ணுருவமாகவும் மறுபாதியை ஆண் உருவமாகவும் ஆனுக்குள் பெண்ணோ? அல்லது பெண்ணுக்குள் ஆனே இன்றி இரண்டும் சமமே என்று உணர்த்தவே அர்த்த நாரீஸ்வராக காண்கின்றார்.அந்த சம வடிவமே அம்மையும் அப்பனும் இணைந்து அம்மையப்பன் என்கிற அர்த்தநாரீசுவரர் வடிவம் அர்த்த என்றால் பாதி நரன் என்றால் ஆண் என்றும் நாரீ என்றால் பெண் என்றும் ஈசுவரன் என்றால் சகல ஐசுவரியமும் உடைய தலைவன் , தன் உடலில் பாதியை பெண்ணுக்கு தந்த தலைவன் என்பது பொருள். அந்நிலையில் அவனே மங்கைபாகன் எனப்படுகிறான்.
சிவன் தன் ஆற்றலோடு வந்தாலன்றி உலகம் இயங்காது ஆகவே அவன் பிரிக்க இயலாத தன் சக்தியோடு இணைந்து நமக்காக இறங்கி வரும் தோற்றமே அம்மையப்பர் உருவம், நாம் வழிபடும் சிவலிங்கத் திருமேனி ஆண்பாதி பெண்பாதி வடிவம் அதனால் தான் அவனோடு என்றுமுள்ள சக்திக்கு பிரியாவிடை என்று பெயர். உயிர்க்கூட்டம் அனைத்தும் தம்முள் ஆண் பெண் என்றே இயங்கிக் கொண்டுள்ளது. ஆணுக்கு பெண்ணும் , பெண்ணுக்கு ஆணும் அவர்களுக்கு உலகமும் இன்பமும் தருவதாக ( போகப் பொருள்களாக ) அமைந்துள்ளன, எனவே இந்த அம்மையப்பர் போகவடிவம் எனப்படுகிறது. இதுவே அவனுடைய கருணையை காட்டுகிறது. சிவன் உமையோடு கூடிய இவ் அருள்வடிவை ஞான சம்பந்தர் ” வேயுறு தோளி பங்கன்” என்றும் மாணிக்க வாசகர் ” மலைமாது ஒரு பாகா ” என்றும் பாடியுள்ளனர். எனவே ஆணும் பெண்ணும் இணைந்ததே இவ்வுலகம் , என்றும் அதில் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை என்றும் ஆண், பெண் இருவரும் சமம் என்றும் உணர்த்துகிறது அம்மையப்பர் வடிவம். 

இலிங்கம்

Image

இலிங்கம் என்பதற்கு பலரும் பல பொருள்களைக் கூறுகின்றனர். அவற்றுள் முக்கியமாக கீழ்காணும் மூன்று பொருள்கள் சொல்லப்படுகின்றன.

1. லிம் என்பது லயத்தையும் (ஒடுங்குதல்) கம் என்பது வெளிவருதலையும் குறிக்கும். எந்த இடத்தில் பிரளய காலத்தில் சேதன, அசேதனப் பிரபஞ்சங்கள் அனைத்தும் லயம் அடைந்து பின்னர்ப் படைப்புக் காலத்தில் எதிலிருந்து மீண்டும் உற்பத்தியாகின்றனவோ அதுவே லிங்கம் எனப்படுகிறது.

2. லிங்கம் என்பது சித்தரித்தல் எனப் பொருள்படும் என்றும் சிவபெருமான் படைப்பு முதலான ஐந்தொழில்களால் பிரபஞ்சத்தைச் சித்தரிப்பதால் சிவலிங்கம் எனப் பெயர் ஏற்பட்டது என்று வருணபத்தி எனும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.

3. இலிங்கம் ஒரு பொருளின் சிறப்பியல்பை உணர்த்தும் அடையாளத்தை அல்லது குறியை உணர்த்தும். சிவலிங்கம் என்பது சிவத்துக்கு அடையாளம்.

சிவலிங்கம்

Standard

சிவலிங்கம்
” ஞாயிறு போற்றுதும், திங்கள் போற்றும், மாமழை போற்றுதும், ” என் ஆரம்பிக்கிறது சிலப்பதிகாரம், இயற்கை வழிபாட்டை அது போற்றுகிறது. சூரியன், சந்திரன் மழை, மலை, என தனக்கும் மீறிய பொருட்களை வணங்கத் தொடங்கினான் ஆதிகாலத்திலேலே மனிதன் .இயற்கையாகப் பொருட்கள் தோன்றும் வடிவம் அனைத்தும் சிவலிங் வடிவம் தான் ஏன் மனித வடிவம் கூட சிவலிங்கமாக கூறுகிறார் திருமூலர். மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் என்றார். இயற்கையின் சுயவடிவமே சிவலிங் வடிவம்.அது இயற்கையாக தோன்றுவதே சுயம்பு என்கின்றனர். சுயம் என்றால் தன், தானாக என பொருள்படும். சிவலிங்க வழிபாடு ஒர் இயற்கை வழிபாடு. இதுவே காலத்தால் முந்திய வழிபாடு. இயற்கை உருவமான காலத்தே சிவலிங்க வடிவம் என கொள்ள வேண்டும். அவ் இயற்கையையும் தோற்றுவித்தவன் சிவன்தானே.
நிலம் நீர், தீ, காற்று ஆகாயம் என்னும் ஐம்பூதப் பொருள்களை தொழிற்படுத்துபவன் இறைவன். அவை ஒன்றோடு ஒன்று கூட உண்டாவது இவ்வுலகம். உலகப் பொருட்கள் நம் உடல், இப்படி அவை கூடும் போது இயலபாகத் தோன்றுவதே சிவலிங்க வடிவம். ஆக இயற்கை என்னும் பேராற்றலையே, இயற்கையே வடிவ மான சிவலிங்க வடிவத்தில் நாம் வழிபடுகிறோம்.
தானாக செயல்பாடற்று ” சிவனே ” என்று என்றும் உள்ளதை சிவம் என்கிறோம். அதுவே நமக்கென இறங்கி வரும்போது அதன் ஆற்றலை சக்தி (Energy) என்கிறோம். அந்த ஒரே பரம் பொருள்தான் நமக்கு சிவனாகவும் சக்தியாகவும் இருபொருளாகக் காட்சி தருகிறது. நாம் வணங்கும் சிவலிங்கத்தின் கீழ்ப்பாகம் (ஆவுடை) பெண்பாகம், மேலுள்ள இலிங்ம் ஆண்பாகம் ஆகவே சிவலிங்கத்தை வழிபட்டால் அது சிவனையும் அவன் சக்தியையும் ஒருசேர வழிபட்டதாகும், சிவ உருவில் ஒருபாகம் சிவனாகவும், மறு பகுதி (இடப்பக்கம்) பராசக்தியின் உருவத்தையும் கொண்டுள்ளார் என்று ஆன்மீக வரலாறு கூறுவதை நாம் அறியலாம்.
சிவந்தவனை சிவப்பு நிறம் உடையவனைச் சிவன் என்கிறோம். செம்மை என்றால் சிவப்பு முழுமை செம்மை உடையவன் சிவன். ” சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான் ” என்கிறார் அப்பர். லிங்கம் என்ற சொல்லில் “லிங்” என்பது ஒடுக்கத்தையும் “கம்” என்பது தோற்றத்தையும் குறிக்கும் அதாவது அனைத்தையும் தோற்றுவித்துக் காத்து ஒடுக்குபவன் அவன் என்பதை இச்சொல் உணர்த்துகிறது. நாம் அனைத்தையும் சிவமாகவே காண்பதால் ” சிவமயம்” எனத் எழுதித் தொடங்குகிறோம். நம் எண்ணம் செயல்பாடு அனைத்தும் அவனை நோக்கியதாக உள்ளன என்பதையே இது காட்டுகிறது. எனவே இவ்வுலகில் நமக்கு அருள வேண்டி அவன் எடுத்த திருமேனியே சிவலிங்க திருமேனி ( இயற்கை என்கிற திருமேனி) அதுவே நமக்கு அனைத்து வளங்களையும் அளிக்கிறது. ” பொன்னும் மெய்பொருளும் தருவானை ” என்கிறார் சுந்தரர். பொன்னும் அவனே கொடுப்பவன் ( அது அழியக்கூடியது) அழியாத மெய்பொருள் என்னும் வீடுபேற்றையும் அவனே தருவான். மேலும் ” வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் ” என்று அப்பரும் ” வேண்டத்தக்கது அறியாய் நீ வேண்ட முழுதுந் தருவோய் நீ ” என மாணிக்க வாசகரின் கூற்றும் இதனை முன்னிருத்தி பாடப்பட்டுள்ளது. சிவலிங்க வடிவில் மண்ணுலகில் வேண்டுவார்க்கு வேண்டுவன அருள்வான் ஈசன் என்கிறார்கள், இம்மண்ணில் நமக்கு அருள் தருவதற்கென்றே அவன் தன் ஆற்றலோடு எடுத்தது சிவலிங்க உருவம் அது ஓர் இயற்கையான திருஉருவம்.
திருச் சிற்றம்பலம் 

Aside

“மீண்டும் வாரா வழியருள் புரிபவன்”
மக்களாகிய நாம் அனைவரும் இயங்குபவர்கள், நம்மை இயக்குபவன் இறைவன். நாம் பாவங்களைப் போக்கி மீள வேண்டும் என்றே இங்கு வந்து நாம் பிறந்துள்ளோம். அவனை அடைவது ஒன்றே அதன் முடிவு. ஆனால் நமக்கு நாமே உண்டாக்கிக் கொண்ட வேலைப்பளு காரணமாக அதை மறந்து திசைமாறி சென்றுகொண்டிருக்கிறோம். நம் உடலால் நாமும் ஒரு பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டோம், அது மனைவி, மக்கள் என்னும் குடும்பம் நம்உடல் சுகம், குடும்ப சுகம், என்று பணம் பொருள் தேடவும், வீடு, வாகனம் வாங்கவும், அவற்றைப் பாதுகாக்கவும் என்றே இப்பிறவியை கழித்துவிட்டோம். மாறாக நம் உயிர் முன்னேற்றம் பெற, அது இறைவனை அடைய நாம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இறைவனை அடைய நமக்கு நேரமும் இல்லை, அதனால் அவனை அடைய அந்த எண்ணம் வர நாம் மறுபடியும் பிறக்கவேண்டுமே. எனவே தான் மாணிக்கவாசகரும் ” மீண்டு வாரா வழியருள் புரிபவன்” என்று பாடியுள்ளார். அவனை எண்ணி வணங்கினால் ” நாம் மீண்டும் இப்புவிக்கு வாராத வழிகாட்டி தன்னுடனே நம்மையும் வைத்துக் கொள்வான் ” என்கிறார். நாம் இவ்வுலகப் போக்கில் நம் வேலைகளுக்கும் இடையில் உண்மையாக அவனை நேசித்து வழிபட பழக வேண்டும். உடலுக்காக வாழும் நாம் உயிருக்காவும் வாழ வேண்டும் பின் நாம் திசை மாறி போக வாய்ப்பே இராது. நாம் நமக்கென இட்ட பணியை நிறைவேற்றலாம். நாம் பிறந்த பயனை அடையலாம், இதனையே வள்ளுவர் பெருந்தகையும் பிறவி பெருங்கடல நீந்துவார் நீந்தார் இறைவனடி சேராதார் என்றும் கூறியுள்ளார், இப்பிறவியில் பிறந்ததன் பயனை அடைய இறைவன் பால் பற்றுக் கொள்வோம், இன்னும் ஒரு பிறவி எடுக்காதிருக்க முயல்வதுதான் இப்பிறவியின் பயன்,