எதற்காக தீபாவளி ?

Standard

எதற்காக தீபாவளி ?

 
 எதற்காக தீபாவளி ?
தீபாவளி : வாரியார் அவர்களின் விளக்கம்.
தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக யாண்டுங் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதன் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரேயாவார்கள்.
அதனைச் சிறிது இங்கு விளக்குவோம்.
பெரும்பாலோர், நரகாசுரைனைக் கண்ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனையழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால் கேவலம் ஒரு கொடியவனைக் கொன்ற நாளுக்கு, ஒரு கொண்டாட்டம் நிகழ்வது, யாண்டும் எக்காலத்தும் இருந்ததில்லை. அப்படியிருக்குமாயின், இரணியனைக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனைப்பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே அந்தகாசுரன் சலந்தராசுரன், இரண்யாட்சன், திருவணாவர்த்தன் இப்படிப் புகழ் படைத்த அரக்கர்கள் ஒவ்வொருவரையுங் கொன்ற நாட்களையெல்லாம் கொண்டாடுவதாயின், ஆயுளே அதற்குச் சரியாகிவிடும்.
ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று.
தீபம் = விளக்கு
ஆவளி = வரிசை
தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள், தீபாவளி எனவுணர்க. தீப மங்கள ஜோதியாக விளங்கும் சிவபெருமானை, நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார்களன்றோ?
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்
என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு.
சிவ விரதம் எட்டு எனக் கந்தபுராணத்தின் ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டம் புகல்கிறது.
அவையாவன:
சோமவார விரதம்
உமாமகேச்சுர விரதம்(கார்த்திகை மாதம் பெளர்ணமி)
திருவாதிரை விரதம் (மார்கழியில்)
சிவராத்திரி விரதம் (மாசியில்)
கல்யாண விரதம் (பங்குனி உத்திரம்)
பாசுபத விரதம் (தைப்பூசம்)
அஷ்டமி விரதம் (வைகாசி பூர்வபட்ச அஷ்டமியில்)
கேதார மாவிரதம்(இதுதான் தீபாவளி)
தொல்லைவல் வினைகழித்துத் தருஞ்சோமவாரமா திரை நோன்பன்றிப்
புல்லியவு மாமகேச் சுரஞ்சிவராத் திரிமுறையில் பொருத்த நோற்கப்
பல்வினையுந் தொலைந்திடுகே தாரமணவிரதமிவை பரமநோன்பு
கொள்ளூறு சூற் படைவிரத மெனுமெட்டுஞ் சிவ விரதங் குணிக்குங்காலே
இந்த விரதம் நோற்கும் முறை
புரட்டாசி மாதம் பூர்வ பட்சம் அஷ்டமியில் தொடங்குதல் வேண்டும். நிறைகுடம் வைத்து, அதில் சிவபெருமானை ஆவாகனஞ்செய்து, இருபத்தொரு இழையுடைய நூலைக் கையில் புனைந்து, அருச்சனை செய்து, தூப தீப நிவேதனம் புரிந்து வழிபட வேண்டும்.
ஐப்பசிமாத அமாவாசைக்கு முந்தினநாள் சதுர்த்தசியினுன்று, அதிகாலையிலெழுந்து நீராடி, தூய ஆடையுடுத்து, நெல்லின்மீது நிறைகுடம் வைத்து, அதில் சிவமூர்த்தியை நிறுவி, சிவமாகவே பாவனை புரிந்து, பக்தி பரவசமாக அருச்சித்துப் பாராயணம் புரிந்து, தூப தீப நிவேதனங்கள் செய்து வழிபட வேண்டும்.
மறுநாள் அமாவாசையன்று காப்பை யவிழ்த்து விட்டு உணவருந்த வேண்டும். இந்த விரதம் கேதார விரதம் எனப்படும்.
“கேதாரம்” என்னும் இமயமலைச்சாரலில் சக்திதேவி  “கௌரி” என்னும் அவதாரமெடுத்து சிவனின் இடப்பாகத்தை பெற்றதால இதுக்கு “கேதார கௌரி விரதம்”ன்னு பேரு…
 
இந்த விரதமிருந்தா கணவன், மனைவி பிரிஞ்சிருந்தா ஒண்ணு சேர்வாங்க. அவங்களுக்குள் அன்பு பலப்படும்.. குடும்பம் நல்லாயிருக்கும்ன்னு ஐதீகம்.
 
சக்தி தேவி ஏன் இந்த விதமிருந்தாங்கன்னு அதுக்கொரு கதையிருக்கு…
 
தீவிர சிவபக்தரான பிருகு முனிவர், சிவனையல்லாது எத்தெய்வத்தையும்   வணங்கமாட்டார்.  இதனால் , நாரதர் கலகத்தால்… முனிவர் வரும் வேளையில் சக்தி தேவி, சிவன் அருகில் மிக நெருக்கமா உக்காந்திருந்தார்.  இதைக்கண்ட பிருகு முனிவர், வண்டாய் மாறி.. சிவனை மட்டும் வணங்கி சென்றார்… தன்னை பிருகு முனிவரும், சிவனும் அவமானப்படுத்தியதாக எண்ணி கோவத்துடன்  பூலோகம் வந்தார்.
 
சிவனுடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டால்தான் தானும் சிவனும் ஒன்றாவோம் என நினைத்து.. வயல்வெளி நிறைந்த கேதாரம் என்ற இடத்தில் கடுந்தவமிருந்து சிவனிடம் சரிபாதி உடலை வாங்கி… அர்த்தநாரீஸ்வரராக அவதாரமெடுத்தனர்..
 
கேதார கௌரி விரதம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சுக்ல பட்ட தசமியில் ஆரம்பிக்க வேண்டும்.
 

 
பிருங்கி முனிவர் சக்தியை விலக்கிச் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபட்ட காரணத்தினால், உமாதேவியார் வெகுண்டு, இடப்பாகம் பெறும் பொருட்டு, திருக்கயிலாய மலையினின்றும் நீங்கி, கெளதம முனிவருடைய வனத்தையடைந்தனர். அவ்வனம் அம்பிகையின் வரவினால் மிகவுஞ் செழிப்புற்றது. பாம்பும், தவளையும், அரவும் கீரியும், உரகமுங் கருடனும் உறவாடின.
கெளதமர் கெளரியைத்தொழுது துதித்தனர். இந்த விரதத்தைக் கெளதமர் கூற, விதிப்படி உமையம்மையார் நோற்று, இறைவருடைய இடப் பாகத்தைப் பெற்று மகிழ்ந்தனர்.
கெளரி நோற்ற காரணத்தால், கேதாரிகெளரி விரதம் எனவும் இது பேர் பெற்றது.
இருபத்தொருநாள் அனுட்டிக்க முடியாதவர்கள், ஐப்பசி தேய்பிறைச் சதுர்த்தசியன்று மட்டும் மேற்கூறிய முறைப்படி அனுட்டிக்க வேண்டும்.
இவ்விரதத்தை எல்லோரும் மேற்கொண்டு, அன்று சிவமூர்த்தியை வழிபட்டு, நலம் பெறுதல் வேண்டும். தீபங்களை வரிசையாக ஏற்றி, அன்புடன் வழிபட வேண்டும்.
சிறப்பு வாய்ந்த இந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன் பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார்.
 
இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார் என ஐதீகம்.
 
இந்த பூலோகத்தில் கேதார கௌரி விரதத்தை மனப்பூர்வமாய் விரும்பி அனுஷ்டிப்பவர்களுக்கு அந்த பரமேஸ்வரன் சகல செல்வங்களையும் அளிப்பார்
தீபாவளியன்று மது மாமிசங்களையுண்டு களியாட்டம் களிக்கின்ற மாந்தர் பெரும் பாவத்திற்கு ஆளாவார். இனியேனும் அந்தத் தீயநெறியைக் கைவிட்டுத் தூய நெறி நின்று நலம் பெறுவார்களாக.
[திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் அருளிச்செய்த வாரியார் விரிவுரை விருந்து எனும் நூலிலிருந்து]
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு வை. பூமாலை சுந்தரபாண்டியம்
Advertisements

சைவமும், சாலிய சமுதாயமும் — vpoompalani05

Standard

Originally posted on vpoompalani05: அறிந்தும் அறயாமலும், தெரிந்தும் தெரியாது செய்தி சுந்தரபாண்டியம் சாலிய சமுதாயத்தின் சந்ததியினர் தமககும் சைவ மதத்திற்கும் இருக்கும் நெருங்கிய பந்தம் பற்றி இன்னும் அறியாது உள்ளனர். அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாது இருக்கும் நம்சாலிய சமுதாயத்தின் சைவ நெறியின் பங்கினை அறிந்திட இச்செய்தியினை மறு வெளியிடாக வெளியிடுகிறேன். வெள்ளி, 27 ஜூலை, 2012 அன்று வெளியிட்ட செய்தியின் மறு வெளியீடு சைவமும், சாலிய சமுதாயமும் சைவ மதத்தின் தூண்கள் என்று போற்றப்படும்…

via சைவமும், சாலிய சமுதாயமும் — vpoompalani05

 

சைவமும், சாலிய சமுதாயமும்

Standard

vpoompalani05

அறிந்தும் அறயாமலும், தெரிந்தும் தெரியாது செய்தி

சுந்தரபாண்டியம் சாலிய சமுதாயத்தின் சந்ததியினர் தமககும் சைவ மதத்திற்கும் இருக்கும் நெருங்கிய பந்தம் பற்றி இன்னும் அறியாது உள்ளனர். அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாது இருக்கும் நம்சாலிய சமுதாயத்தின் சைவ நெறியின் பங்கினை அறிந்திட இச்செய்தியினை மறு வெளியிடாக வெளியிடுகிறேன்.


வெள்ளி, 27 ஜூலை, 2012  அன்று வெளியிட்ட செய்தியின் மறு வெளியீடு

சைவமும், சாலிய சமுதாயமும் 

சைவ மதத்தின் தூண்கள் என்று போற்றப்படும் சமயக்குறவர்கள் வாழ்ந்த காலத்திலிருந்தே சாலியர் சமுதாயம் சைவ மதத்தில் வேறூண்றி தழைத்து, ஆன்மிகத்தில் – சிவத்தொண்டு செய்யும் சிவனாடியார்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர், சாலியர் சமுதாயத்தின் வம்சாவழி சாலிய மகரிஷி வழித்தோன்றவர்களே எனவே சாலியர்களின் கோத்திரம் சாலியமகிரிஷி கோத்திரம் என்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் வசம்சாவழியில் தான் சாலிய இனத்தை சேர்ந்தவரான 63 நாயன்மார்களில் ஒருவரான நேசநாயனாரும், இவரும் அக்காலத்தில் தற்போது சாலிய இனத்தவரின் குலத்தொழிலான நெசவு தொழிலையே செய்து சிவனாடியார்களுக்கு கோவனம் என்றளக்கப்படும் சிற்றடையை சிவனடியார்களுக்கு வழங்கி சிறப்புடன் சிவத்தொண்டு புரிந்து வந்துள்ளது பெரியபுராணம் காட்டுகிறது.

(சிவனடியார்களுக்கு உடை,கோவணம்,கீள் முதலியன கொடுத்துக் காத்த சாலியர்.)

இதன் மூலம் சாலியரின் சைவத் தன்மைக்கு முத்திரை பதிக்கப் பட்டுள்ளது. அந்நாள் முதல் இந்நாள் வரை சைவ மதத்தில் சாலியர் சமூகம் முக்கிய பங்கினைக் கொண்டு சிவனடியார்களுக்கு சிவத் தொண்டும், சிவன் கோவில்களையே அடிப்படையாகக் கொண்டே குல தெய்வங்களும் அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர்…

View original post 499 more words

தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம் திருஐயாறு

Standard

தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்   திருஐயாறு (திருவையாறு) 

கோயில் தலவரலாறு

பெயர்க் காரணம் 

திரு+ஐந்து+ஆறு காவிரி,மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது.

ஐயாறப்பர் கோயில்

இங்குள்ள ஐயாறப்பர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்[5]. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேக்கிழார் அருளிய பெரியபுராணத்தின்படி அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலம் இதுவாகும்

இறைவர் திருப்பெயர் : பஞ்சநதீஸ்வரர், ஐயாற்றீசர், செம்பொற்சோதீஸ்வரர், பிரணதார்த்திஹரன்.

இறைவியார் திருப்பெயர் : அறம்வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி. 

தல மரம் : வில்வம். 

தீர்த்தம் : சூரியபுட்கரணி, காவிரி. 

வழிபட்டோர் : திருநந்தி தேவர், இலக்குமி, இந்திரன், வருணண், வாலி, 

 சேரமான் பெருமாள், ஐயடிகள் காடவர்கோன், பட்டினத்துப் பிள்ளையார்,   அருணகிரிநாதர்.

தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் – 1. கலையார் மதியோடு (1-36), 

2. பணிந்தவர் அருவினை (1-120), 

3. புலனைந்தும் பொறிகலங்கி (1-130), 

4. கோடல் கோங்கங் (2-6), 

5. திருத்திகழ் மலைச்சிறுமி (2-32); 

 2. அப்பர் – 1. மாதர் பிறைக்கண்ணியானை (4-3), 

2. விடகிலேன் அடிநாயேன் (4-13), 

3. கங்கையை சடையுள் (4-38), 

4. குண்டனாய்ச் சமணரோடே (4-39), 

5. தானலா துலக மில்லை (4-40), 

6. அந்திவட் டத்திங்கட் (4-99), 

7. குறுவித்த வாகுற்ற (4-91), 

  8. சிந்திப் பரியன (4-92), 

9. சிந்தை வாய்தலு (5-27), 

10. சிந்தை வண்ணத்த (5-28), 

11. ஆரார் திரிபுரங்கள் (6-37), 

12. ஓசை யொலியெலா) (6-38); 

 3. சுந்தரர் – பரவும் பரிசொன் (7-77). 

தல வரலாறு

ஐந்து ஆறுகள் சேரும் இடம் என்பதால், இப் பெயர் பெற்றது.

சிவாச்சாரியார் ஒருவர் காசியாத்திரை சென்று உரிய காலத்தில் வர தாமதம் ஏற்பட, இறைவன், சிவாச்சாரியார் வடிவம் கொண்டு தம்மைத் தாமே பூசித்துக்கொண்டார். (இதனை மாணிக்கவாசகர் ஐயாறு அதனிற் சைவனாகியும் என்பார்.)

நந்திதேவர் இப்பதியில் ஏழுகோடி முறை உருத்திர ஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாட்டப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் காரணமாக திருவையாறு என அழைக்கப்படுகின்றது.

இறைவர், நந்திதேவருக்கு சுயம்ப்ரகாசை என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்த தலம். இதனைச் சுற்றி ஏழூர்த் தலங்கள் (சப்தஸ்தானம்) இதனோடு தொடர்புடையன.

அப்பர் பெருமானுக்குக் கயிலைக் காட்சி அருளிய தலம்.

சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சுந்தரர் பதிகம் பாட, வெள்ளம் ஒதுங்கி நின்று வழி தந்த பதி.

இத்திருக் கோயிலுள் ஐயாறப்பர் கோயில், தென் கயிலைக் கோயில், ஒலோகமாதேவீச்சரம் ஆக மூன்று கோயில்கள் உள்ளன.

தியாகராஜ ஆராதனை விழா

 

கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பதித்தவரான தியாகராஜ சுவாமிகள் நினைவாக, அவர் வாழ்ந்த ஊரான திருவையாற்றில், ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தியாகராஜரின் சமாதியின் அருகில், தியாகராஜ ஆராதனை விழா என்ற இசை நிகழ்ச்சி ஐந்து நாள்கள் நடைபெற்று வருகிறது. இதனை ஒரு தனித்துமான இசை பெரு விழாவாகவே கர்நாடக இசையுலகத்தினர் கருதுகிறார்கள். இதேபோல் சென்னையிலும் சென்னையில் திருவையாறு என்ற தலைப்பில் திருவையாற்றை முன்மாதிரியாகக் கொண்டு சென்னையில் ஆண்டு தோறும் இசை விழா நடைபெற்று வருகின்றது.

சிறப்புகள்

சப்த ஸ்தான தலங்களுள் முதன்மையானது.

நந்தி தேவர் திருமண உற்சவமும், சித்திரைப் பெருவிழா உற்சவமும் இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது.

பிற்காலச் சோழர், பாண்டியர் மற்றும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.

திருவையாறு சப்தஸ்தானம்[தொகு]

சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்[6]. பின்னர் பிற சப்தஸ்தான பல்லக்குகள் அவரவர் தலங்களுக்குத் திரும்பும்.இவ்வாறான திருவிழா கும்பகோணம், கரந்தட்டாங்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற இடங்களில் நடைபெறுகிறது.

திருநல்லூர், திருநீலக்குடி, திருக்கஞ்சனூர் ஆகிய இடங்களிலும் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு 

தஞ்சாவூருக்கு வடக்கே 10-கி.மீ. தூரத்தில் உள்ளது. தஞ்சாவூர்,கும்பகோணம் ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது.

தொகுப்பு  வை. பூமாலை சுந்தரபாண்டியம் 

அர்த்தமுள்ள இந்துமதம் – கனவுகள்-கவியரசு கண்ணதாசன்

Standard

அர்த்தமுள்ள இந்துமதம் – கனவுகள்-கவியரசு கண்ணதாசன்

    ஆண்டாள் கனவு காண்கிறாள்; அற்புதமான கனவு; இனிமையான கனவு. கலியாணமாகாத ஒவ்வொரு கன்னிப் பெண்ணும் காணுகின்ற கனவு. நிறைவேறாத காரியங்களைப் பற்றிக் கனவு காண்பதிலே தான் எவ்வளவு சுகம்!

இந்தக் கனவுகளிலே பலவகை உண்டு. அரைகுறைத் தூக்கத்தில் வரும் கனவு, நினைவின் எதிரொலி.

பகல் தூக்கந்தான் பெரும்பாலும் அரைகுறை தூக்கமாக இருக்கிறது. ஆகவேதான், `பகல் கனவு பலிக்காது’ என்கிறார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் வரும் கனவு பெரும்பாலும் பலிக்கிறது. ஆழ்ந்த தூக்கம் என்பது அதிகாலையில் தான் வருகிறது. ஆகவே, `காலைக் கனவு கட்டாயம் பலிக்கும்’ என்கிறார்கள். ஆண்டாள் காண்பதோ காலைக் கனவுமல்ல; பகல் கனவுமல்ல. அது ஆசையின் உச்சம்; பக்திப் பெருக்கு; பரவசத் துடிப்பு. கண்ணனை மணவாளனாகக் காண்கிறாள் கோதை.    `உன் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்று தன்னை அவன் கையில் தருகிறாள் நாச்சியார். கண்ணாடி முன் நிற்கிறாள். பூச்சூடி, குழல் முடித்து, பொட்டிட்டு நின்று, தன் திருமுகத்தைத் தானே பார்க்கிறாள். ஆண்டாளின் ஸ்தூலத்திற்குக் கண்ணாடியில் தெரியும் அவளது உருவமே தோழியாகிறது. “அடி தோழி!

நான் கனவு கண்டேன். வாரண மாயிரம் சூழ வலம்வந்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக்கனாக் கண்டேன் தோழீ நான்.”

– “எல்லே இளங்கிளியே! என் கனவைக் கேட்டாயா?

ஆயிரம் யானைகள் சூழ நாரண நம்பி வந்தான்;

அவன் வரும்போது பூரண கும்பங்கள் எழுந்தன;

தோரணங்கள் நாட்டப்பட்டன. கதிரொளி தீபம் கலசமுட னேந்தி சதிரிள மங்கையைர் தாம்வந் தெதிர்கொள்ள மதுரையார் மன்னர் அடிநிலை தொட்டெங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீநான். – ஆம்!

ஒளி மிகுந்த தீபங்களைக் கையிலேந்திக் கொண்டு சதிராடும் இளமங்கையர் வந்தார்கள். அவனை எதிர்க்கொண்டார்கள். அந்த மதுரையார் மன்னர், மாயக் கண்ணன், எனது பாதத்திலிருந்து உச்சிவரை உடம்பே அதிர்ந்து போகுமாறு புகுந்ததாகக் கனவு கண்டேன். அந்த மைத்துனன் நம்பி, மதுசூதனன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனவு கண்டேன். அடி தோழி! என் கனவு நனவாகும்.”

– ஆம், ஆண்டாளின் கனவு, அவளது ஆசையின் விரிவு! ஏக்கத்தின் இலக்கியம்!

இத்தகைய கனவுகளைப் பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது. கனவுகள் நினைவுகளுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தால், அவை பலிக்கும் என்கிறது. சிலப்பதிகாரத்தில் `கனாத்திறம் உரைத்த காதை’ வருகிறது. `முத்தொள்ளாயிர’ நாயகிகளும் கனவு காண்கிறார்கள். திருக்குறளிலும் கனவுக் குறிக்கப் பெறுகிறது. கனவு என்பதை இறைவன் விடும் முன்னறிவிப்பு என்றே நான் கருதுகிறேன்.

இந்துக்களுக்கு கனவு நம்பிக்கை அதிகம். எனக்கு மிக அதிகம். காரணம், நான் கண்ட கனவுகள் பெரும்பாலும் பலித்திருக்கின்றன. 1948-ஆம் ஆண்டு நான் சேலத்தில் வேலை பார்த்தபோது அரிசிப்பாளையத்தில் தங்கியிருந்தேன்.

என்னோடு பூந்தோட்டம் திருநாவுக்கரசு என்ற நண்பரும், சாந்தி மா. கணபதி என்ற நண்பரும் தங்கியிருந்தார்கள். அவர்களில் பூந்தோட்டம் திருநாவுக்கரசு இப்பொழுது சிங்கப்பூரில் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார். சாந்தி மா. கணபதி என்ற நண்பர், 1960-ல் காலமானார். ஒருநாள் காலையில், காந்தியடிகளைச் சுட்டுக் கொன்று விட்டதாக எனக்கொரு கனவு வந்தது. காலையில் எல்லாரிடத்திலும் அதைச் சொன்னேன்.    “சீ சனியனே! உன் கருநாக்கை வைத்துக்கொண்டு சும்மாயிரு. எதையாவது உளறித் தொலைக்காதே” என்று எல்லாரும் என்னைக் கோபித்துக் கொண்டார்கள். அன்று மாலை வானொலி கண்ணீரோடு ஒரு செய்தியைச் சொன்னது, “காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்று. எனது நண்பர்கள் திகைத்துப் போனார்கள்; என்னை எச்சரித்தார்கள். “இதோ பார்! நீ கனவு கண்டதாகச் சொன்னால் யாரும் நம்பமாட்டாகள். இதிலே உனக்கும் சம்பந்தமிருப்பதாகச் சொல்லிவிடுவார்கள். ஆகவே, வாயை மூடிக் கொண்டு சும்மாயிரு” என்றார்கள். எனக்கு, அந்தப் பயம் தெளியவே வெகு நாளாயிற்று. சில கனவுகள் ஆணியடித்தாற்போல் எதிர்மறை பலன்களைக் காட்டுகின்றன. உதாரணத்திற்கு, என் கனவில் மலம் வந்தால் மறுநாள் எங்கிருந்தாவது பணம் வருகிறது. நூற்றுக்கணக்கான முறை அந்தக் கனவைக் கண்டு மறுநாளே பலனடைந்திருக்கிறேன். பல் விழுவதாகக் கனவு கண்டால், மறுநாளே என்மீது கோர்ட்டில் புது வழக்கு வருகிறது. இருபது வருடங்களாக அடிக்கடி நான் படிப்பது போலக் கனவு காண்கிறேன்.

ஒவ்வொரு தடவையும் அந்தக் கனவு வந்த பிறகு என் புகழ் உயர்ந்து வந்திருக்கிறது. பல தடவை ரயிலுக்குப் போகும்போது ரயிலைத் தவற விடுவதாகக் கனவு கண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதாவதொரு நல்ல சந்தர்ப்பத்தை நான் இழந்திருக்கிறேன். உயரமான இடத்தில் ஏறி இறங்க முடியாமல் தத்தளிப்பதாகக் கனவு கண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் வாழ்க்கையில் ஏதாவது சிக்கல் வந்து தீர்க்க முடியாமல் கலங்கியிருக்கிறேன்.

ஏறிய உயரத்திலிருந்து மளமளவென்று இறங்கி வருவது போலக் கனவு கண்டால், வந்த சிக்கல் தீர்ந்து விடுகிறது. கனவில் வெள்ளம் வந்தால், காலையில் பணம் வருகிறது. அந்த வெள்ளம் வடிந்து போவது போல் கனவு கண்டால், பணம் செலவழிந்து போகிறது. 1967- ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்தபோது, காங்கிரஸ் தோற்றுப் போவதையே கனவில் கண்டேன். ஒரு கோட்டை!

நானும் மற்ற காங்கிரஸ் நண்பர்களும் அங்கே நிற்கிறோம். மூவேந்தர் காலத்து ஆடை அணிந்து, தி.மு. கழக நண்பர்களெல்லாம் படைகள் போல வந்து, அந்தக் கோட்டையைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.அந்தக் கனவைப் பற்றி அப்பொழுதே எனது நண்பர்கள் பலரிடமும் கூறினேன்; அது பலித்து விட்டது. 1971- ஆம் ஆண்டுத் தேர்தலில் யானை என்னைத் துரத்திக் கொண்டு ஓடி வந்து, எனக்கு மாலை போடுவது போலக் கனவு கண்டேன். அந்தத் தேர்தலில் நான் சார்ந்திருந்த இந்திரா காங்கிரசுக்குப் பலத்த மெஜாரிட்டி கிடைத்தது. இரண்டாண்டுகளுக்கு முன், ஒரு மலை மீது நான் சுற்றி வருவதாகவும், அந்த மலையில் எங்கும் நாமம் போட்டிருக்கவும் கனவு கண்டேன். திருப்பதிக்குச் சென்று திரும்பி வந்தேன். பல தொல்லைகள் மளமளவென்று தீர்ந்தன. அதன் பிறகுதான், “திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு திருப்பம் நேருமடா – உன் விருப்பம் கூடுமடா” என்ற பாட்டை எழுதினேன். என் கனவில் கண்ணன் அடிக்கடி வருகிறான்; ஆனால் என்னோடு பேசுவதில்லை. ஒருவேளை இது என் நினைவின் எதிரொலியாக இருக்கலாம். தி.மு.க. விலிருந்து நான் பிரிந்த பிறகு, நானும் சம்பத்தும் தமிழ் தேசியக் கட்சியின் சார்பில் பெங்களூரில் ஒரு கூட்டத்தில் பேசச் சென்றோம். மத்தியானம் உட்லண்ட்ஸ் ஓட்டலில் நான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தபோது, நான் கூட்டத்திற்குச் செல்வதாகவும், அங்கே கல்லெறி நடப்பதாகவும், என் கார்க் கண்ணாடி உடைந்ததாகவும் கனவு கண்டேன். அது பகல் கனவுதான், என்றாலும் ஆழ்ந்த தூக்கத்தில் வந்த கனவு. என்ன ஆச்சரியம்! நான் கண்ட கனவு அன்று மாலையே அப்படியே நடந்தது. காரில் எந்தக் கண்ணாடி உடைந்ததாகக் கனவு கண்டேனோ அதே கண்ணாடி உடைந்தது. கனவில் வந்த முகங்களே என் கண் முன்னாலும் காட்சியளித்தன. வாய் நிறைய ரோமம் இருப்பதாகவும், அது இழுக்க இழுக்க வந்து கொண்டிருப்பதாகவும் கனவு கண்டேன்.

அப்பொழுதெல்லாம் தொல்லை மாற்றித் தொல்லை வரும்.

சிவனடியார்களின் கனவில் ஆண்டவன் வந்து, `இந்த இடத்துக்கு வா’ வென்று சொன்னதாகவும் அவர்கள் அந்த இடத்திற்குச் சென்று அமைதி கொண்டதாகவும் செய்திகள் படிக்கிறோம். அவை பொய்யல்ல என்றே நான் நினைக்கிறேன். `நிர்மலமான தூக்கத்தில் களங்கமற்ற உள்ளத்தில் தோன்றும் கனவுகள் பலிக்கின்றன’ என்பது இந்துக்களின் நம்பிக்கை. அந்தக் கனவுகளை நாம் வரவழைக்க முடியாது. அவை ஆண்டவன் போட்டுக் காட்டும் படங்கள்.

திருச்சிற்றம்பலம்

தொகுப்பு ; வை, பூமாலை. சுந்தரபாண்டியம்

மறக்கொணா இருவர்

Standard

மறக்கொணா இருவர்

பாராரும் புலிமுனியும் பதஞ்சலியும் தொழுதேத்த

ஏராரும் மணிமன்றில் எடுத்ததிரு வடிபோற்றி”

Chidambaram_Nataraja_patanjali_vyaghrapadaதிருவாதவூரடிகள் எம்பெருமானது ஐந்தொழிற்கூத்து நிகழ்வதற்கு உரிமையுடைய திருத்தலமாகத் தில்லையை, “தில்லை மூதூர் ஆடிய திருவடி”, என்றும்,”தில்லையுட் கூத்தனே” என்றும் கூறியருளினார். தில்லை என்பது சிதம்பரம். அது, சித்+அம்பரம் என்னும் தொகைச்சொல். ‘சித்’ என்றால் ,‘ஞானம்’ என்று பொருள்; ‘அம்பரம்’ என்றால் ‘ஆகாசம்’ என்று பொருள். எனவே, சிதம்பரம் ‘ஞானாகாசம்’ஆகும். அந்த ஞானாகாசம் அண்டத்திலும் உண்டு; பிண்டமாகிய உடலிலும் உண்டு. அண்டத்திலுள்ளது, பராகாசம் என்றும் பிண்டத்திலுள்ளது , ‘தகராகாசம்’ எனவும் வழங்கப்படும். தகரம் – சிறுமை.

பராகாசம், தகராகாசம் எனும் இவ்விரண்டு ஆகாயங்களும் ‘பரை’ அல்லது ‘சித்சத்தி ’வடிவின. இவ்விரு ஆகாசங்களில் இருந்துகொண்டு ஐயன் ஐந்தொழிற் கூத்தியற்றி அண்ட பிண்டங்களை இயக்குகின்றான்.

பரமாண்டத்தின் இருதயகமலமாகக் கருதப்படுவது, புண்ணிய பூமியாகிய பாரதத் திருநாட்டின் அங்கமாகிய மாதவஞ்செய் தமிழ்நாட்டின் தில்லை மூதூர். தில்லை என்பதே பழமையான பெயர். சிதம்பரம் என்பது காலப்போக்கில் தோன்றி நிலைபெற்றுவிட்ட பெயர்.

இதயகமலத்தில் இறை என்னும் பதிப்பொருள் ஞானப்பிரகாசமாக, சிவப்பிரகாசமாக, அறிவொளியாக, அருட்சோதியாகத், தன்னை அன்பால் நினைவார் நினையும் வடிவில் எழுந்தருளுவதை தெய்வப்புலவர், “மலர்மிசை யேகினான்” என்று சுட்டினார்.

திருவாதவூர்ப் பெருந்தகை,

“மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி” என விரித்துரைத்தார். இந்த இதயகமலத்தை,’அனாகதம்’ எனும் பெயரால் யோகியர் குறிப்பர்.

மேலானது, உயர்ந்தது எனும் பொருள்படும் பரம் (supreme being) என்னும் பெயர் ஆண்பால் விகுதியேற்றுப் ‘பரன்’ எனவும், பெண்பால் விகுதியேற்றுப் ‘பரை’ எனவும் ஆகும். பரம்- சிவம்; பரன் –சிவன்; பரை- சிவசத்தி. பராகாசம் அல்லது ஞானாகாசம் சித்சத்தி வடிவம். பரையிடமாக நின்று உரையுணர்வுக் கெட்டா ஒருவன் பஞ்சாக்கரத்தால் வரைமகள் காணும்படிக் கருணையுருக் கொண்டு ஆடிதலைப் பேணுபவருக்குப் பிறப்பில்லை என்பது நம் ஞானசாத்திரமாகிய உண்மைவிளக்கம்.

பரை பக்குவ ஆன்மாக்களுக்குத் திருவருளாகச் சிவத்தைக் காட்டும்; பக்குவமிலாத ஆன்மாக்களுக்குச் சிவத்தை மறைத்து, மறைப்புச்சத்தியாகிய திரோதானமாக நின்று உலகத்தைக் காட்டும்.

சிவத்தைக் காட்டுவது ‘ஞானநடனம்’ என்றும், பிரபஞ்சத்தைக் காட்டுவது ‘ஊனநடனம்’ என்றும் சாத்திரம் பேசும். இவ்விரு நடனங்களின் இயல்பைத் திருவாதவூரிறை,

“ஊனை நாடக மாடுவித்தவா

உருகி நானுனைப் பருக வைத்தவா

ஞான நாடக மாடு வித்தவா

நைய வையகத் துடைய விச்சையே”

(திருச்சதகம் 95)

என்றருளினார்.

பிண்டமாகிய உடலில் இருந்துகொண்டு அதனை இயக்கும் உயிர்போல, உயிரின் உள்ளிருக்கும் தகராகாசமாகிய ஞானாகசத்தில் சிவம் இவ்விருவகை நடனங்களையும் இயற்றுகிறது; ஊன நடனத்தால் உலகபோகங்களை ஊட்டிப் பக்குவம் வரச் செய்கிறது; ஞான நடனத்தால் சிவானந்தமாகிய சிவபோகத்தை அருளுகின்றது. இதனை, “உய்யவென் னுள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யா”, என்றும், “மருவியெப் பொருளும் வளர்ப்போன் காண்க” என்றும் மணிவாசகர் மொழிந்தருளினார்.

ஆணவ இருளினால் மறைப்புண்டு கிடப்பாருடைய கண்கள் ஞானாகாச வியாபகத்தில் வியாப்பியமாகக் கலந்திருந்தும் இந்தத் திருக்கூத்தினைக் காணும் தகைமை உடையன அல்ல. பலபிறவிகளிலும் ஈட்டிய சிவபுண்ணியப் பயனால் சிவகுருவின் அருள் கிடைத்து ஆணவ இருள் நீங்கப் பெற்றவரே இந்நடனத்தைக் காணும் பேறு பெறுவர். ஞான நடனக் காட்சியால் விளைவது அந்தமிலா ஆனந்தமாகிய சிவபோகம்.

chidambaram-kumbha-3சிவசத்தியால் மலவாசனை நீங்கப்பெற்ற ஆன்மா இச்சிவபோகத்தை ஞானசத்தியால் அனுபவிக்கும். இவ்வனுபவத்தைத் தெய்வச் சேக்கிழார், “உணர்வின் நேர்பெற வருஞ்சிவபோகம்” என்றார். இந்தப் போகம் ஐம்புலன்களின் வழி நுகரப்படும் ‘சுவை ஒளி ஊறு நாற்றம் ஓசை’ போன்றதொன்றன்று. ஞானம் அல்லது அறிவால் அனுபவிக்கப்படுவது.

அதனால், நம் அருணகிரி மாமுனிவரும், “ அறிய அறிய அறியாத அடகள் அறிய அடியேனும், அறிவுள் அறியும் அறிவூர அருள்வாயே” (உத்தரமேரூர்), “”பசுபா சமும்விட் டறிவா லறியப் படுபூ ரணநிட் களமான, பதிபா வனையுற் றநுபூ தியிலப் படியே யடைவித் தருள்வாயே” (கருவூர்), “எப்பொருளுமாய அறிவையறி பவரறியும் இன்பந்தனை” (பொது), “அறிவும் அறியாமையும் கடந்த அறிவுதிரு மேனி” பொது) எனப்பல திருப்புகழ் மறையில் எடுத்தோதியமை காண்க.

‘உணர்வின் நேர்பெற வருஞ் சிவபோகத்தை” , “ஊனடைந்த உடம்பின் பிறவியே தானடைந்த உறுதியைச்”சேருமாறு ஐம்பொறிகளாலும் அடையப் பெற்றவர்கள் நம் சைவசமயாச்சாரியர்களாகிய நால்வர். அவர்களுக்கும் முன்னதாக அருளப்பெற்றவர்கள், பதஞ்சலி முனிவர் , வியாக்கிரபாத முனிவர் ஆகிய இருவருமாவர்.

பதஞ்சலி முனிவர் ஆதிசேடனின் அவதாரமாகப் பூவுலகில் முனிவராகத் தோன்றியவர். அத்திரி முனிவரும் அவருடைய பத்தினியார் அநசூயா தேவியாரும் மகப்பேறு விரும்பித் தவம் முயன்றனர். எம்பெருமானை வணங்கிக் கொண்டிருந்த அநசூயாதேவியின் கரங்களில் இறைவனின் அருளால் ஆதிசேடன் சிறுநாகப் பாம்பின் குட்டியாகத் தோன்றினான். அச்சமடைந்த அநசூயாதேவி கையைஉதறினாள். பாம்புக்குட்டி அவளுடைய பாதங்களில் வீழ்ந்தது. அதனால் பதஞ்சலி என்று பெயர் பெற்று மனித உடலும் பாம்பின் வாலும் பெற்று வளர்ந்தது.

யோக சூத்திரம் செய்த பதஞ்சலி இம் முனிவரின் வேறாவர் என்பது அறிதல் வேண்டும்.

பதஞ்சலி முனிவரும் மத்தியந்த முனிவர் மைந்தரான வியாக்கிரபாத முனிவரும் தில்லையில் இறைவனை நோக்கித் தவம் செய்தனர். இருவரும் செய்த தவம் சைவநெறிப்படிச் சரியை கிரியை யோகம் ஞானம் என்பனவே.

chidambaram-kumbha-2

இருவரும் தில்லைவனத்தில் தவம் செய்யும் நாட்களில் விடியும் முன்னெழுந்து வைகறைப்போதில் மரங்களின் மீதேறி மலர் பறிப்பர். பதஞ்சலி முனிவர் பாம்புடலினராதலின் மரக்கொம்புகளைச் சுற்றிப் படர்ந்து மேலேறுவர்.

மந்தியந்த முனிவரின் மைந்தர், மரங்களின் மீதேறிக் கோட்டுப் பூக்களைப் பறிக்கும்போது பனியீரத்தால் வழுவாதிருக்கும் பொருட்டுப் புலியின் கால்கலையும் மையிருளில் வண்டு புழு அரிக்காத மலர்களைக் காணக் கைவிரல் நுனிகளில் கண்களையும் இறைவனிடம் வேண்டிப் பெற்றார். புலியின் கால்களை வேண்டிப் பெற்றமையால் புலிக்கால் முனி எனப்பட்டார். இவர் வழிபட்ட்தால் தில்லை ‘புலியூர்’ எனப்பட்டது. புலிக்கு வடமொழியில் வியாக்ரம் எனப் பெயர். எனவே, இவர் விய்ரபாத முனிவர் எனப்பட்டார்.

முனிவர் இருவரும் ஆற்றிய தவவழிபாட்டினை ஏற்று மகிழ்ந்த எம்பிரான்,” இங்குக் கொள வேறேதும் உண்டோ” என வினவினான்.திருக்கூத்துக் கண்ட முனிவர் இருவருக்கும் இத்தரிசனத்திற்கு மேல் வேண்டுவதொன்றுமில்லை. ஆயினும், நிலவுலகில் ஆன்மாக்கள் படுகின்ற துயரினை நீக்கக் கருணையுள்ளம் கொண்டு, பெருமானே! மின்னல் போலும் வாழ்க்கையையுடைய ஆன்மாக்கள் கண்களினால் தரிசிக்கும்தோறும் நிறைந்த ஞானவொளியாகிய இச்சபையிலே, அன்பையுடைய துணைவியாகிய உமாதேவியுடனே, இன்று முதல் எக்காலமும் ஆனந்த நடனம் அருளத் திருவுளம் இரங்க வேண்டும்” என வேண்டிக் கொண்டனர். தேவர்கள் தேவனாகிய மகாதேவன் திருவருளும் அங்கு அவ்வண்ணமே செய்ய இரங்கியது.

யான் எனது என்னும் வஞ்சத் தலைமையினையுடைய ஆன்மாக்கள் படுந் துன்பத்தினை எண்ணீ, முனிவரிருவரும் கருணையினால் வேண்ட இன்றும் நிகழ்வதுவே தில்லை மன்றுள் நிக்ழும் எம்பிரானின் திருக்கூத்து.

தில்லை வனத்துள் எம்பிரான் ஆடிய மேடை அம்பலம் அல்லது மன்றம் எனப்படும். அம்பரம்- ஆகாசம்.ரகரவொற்று இங்கு லகரவொற்றாகத் திரிந்து, அம்பரம் அம்பலம் ஆயிற்று. இது வெட்டவெளி. மன்று என்பது கூத்தாடும் மேடை. இது எவ்விடத்துள்ளாரும் கூத்தினைக் கண்டின்புறுமாறு உயரமான, நாற்றிசையும் திறந்த வெளி. இவ்வெளி காலப்போக்கில் மூன்று திசைகள் அடைக்கப்பட்டுளதாயிற்று.

நெல்லுக்குப் பாயும் நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசிவது போலவும், நல்லார் ஒருவருளரேல் அவர் பொருட்டுப் பெய்யும் மழை எல்லாருக்கும் பயன்படுவது போலவும் இவ்விருவருக்கும் வெளிப்பட்ட திருக்கூத்து மையல் வாழ்வில் உழலும் நமக்கும் கிடைத்தது.

இருமுனிவரும் செய்தருளிய உபகாரங்கள் பல. தனக்கெனத் திருமேனியில்லாத பரம்பொருளைத் தன் கருணையையே திருவுருவாக, அத் திருமேனி கொண்டு ஆடலைக் கண்டவர்க்கெல்லாம் முத்தி கிடைக்க அருள் செய்தனர். தேவர் முதலிய நம்மினும் பெரியர் யாராலும் செய்விக்க முடியாத பெருமானின் திருக்கூத்தை நம்பொருட்டு மண்ணின்மேல் தில்லையில் நிகழச் செய்தனர். அதனால் கயிலைமலையைக் காட்டிலும் தில்லை வனத்தை உயரச் செய்தனர். தில்லைத் திருக்கோவில் வழிபாட்டுப் பூசாவிதி, நித்திய நைமித்திய காமிய உற்சவ விதிகளைப் பதஞ்சலி பத்ததி எனும் நூலாக உதவினர். உலகில் உள்ள சிவாலயங்களிலெல்லாம் பொருந்தி உயிர்களுக்கு அருள்செய்யும் சிவகலைகள் அனைத்தும் அர்த்தசாம பூசையின்போது தில்லையில் வந்து குவியும்படி செய்தனர். தில்லையில் அர்த்தசாமபூசையை வாழ்வில் ஒருமுறையேனும் கண்டு அனுபவிக்க வேண்டும்.

சிதம்பரத்துக்குச் சென்று வழிபடுவோர் பலருக்கும் பதஞ்சலி வியாக்கிரபாதர் பற்றிய அறிவோ நினைவோ இருப்பதில்லை. தில்லைக்கூத்தினைக் கண்டு வணங்குமுன் அக்கூத்தினை நமக்குக் காட்டியருளிய இம்முனிவர் இருவரையும் நன்றியுடன் நினைவு கூர்தல் வேண்டும். ஆகையால் இவ்விருவரும் மறக்கொணா இருவராவர். 

திருச்சிற்றம்பலம்

தேவார பாடல் பெற்ற தலங்கள் ( 5) திருவீழிமிழைலை

Standard

தேவார பாடல் பெற்ற தலங்கள் ( 5) திருவீழிமிழைலை

சம்பந்தரும் அப்பரும் அண்ணசாலை மடங்கள் அமைத்து பஞ்சம் தீர்த்த தலம்

திருவீழிமிழலை

இறைவர் திருப்பெயர் : நேத்திரார்ப்பணேசுவரர், விழியழகீசர், விழியழகர்.

இறைவியார் திருப்பெயர் :சுந்தரகுஜாம்பிகை,                                                                                                    அழகுமுலையம்மை.

தல மரம் : வீழிச் செடி / விழுதி செடி.

தீர்த்தம் : விஷ்ணு தீர்த்தம்.

வழிபட்டோர் : பிட்சாடனர், ரதிதேவி, வசிஷ்டர், காமதேனு, மனு முதலியோர்.

தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் -1சடையார்புன லுடையானொரு, 

2. தடநில வியமலை, 

3. அரையார் விரிகோவண, 

4. இரும்பொன் மலைவில்லா, 

5. வாசி தீரவே, காசு, 

6. அலர்மகள் மலிதர, 

7. ஏரிசையும் வடவாலின், 

8. கேள்வியர் நாடொறும், 

9. சீர்மருவு தேசினொடு, 

10. மட்டொளி விரிதரு, 

11. வெண்மதி தவழ்மதில், 

12. வேலி னேர்தரு கண்ணி, 

13. துன்று கொன்றைநஞ், 

14. புள்ளித்தோ லாடை.

 2. அப்பர்   – 1. பூதத்தின் படையர், 

2. வான்சொட்டச் சொட்டநின், 

3. கரைந்து கைதொழு, 

4. என்பொ னேயிமையோர், 

5. போரானை ஈருரிவைப், 

6. கயிலாய மலையுள்ளார், 

7. கண்ணவன்காண் கண்ணொளி, 

8. மானேறு கரமுடைய, 

3. சுந்தரர் -1.நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்

 

 

தல வரலாறு

வீழிச் செடிகள் நிறைந்திருந்தமையால் வீழிமிழலை என்று பெயர் வந்தது.

இத்தலத்தில், திருமால் சக்கரம் வேண்டி இறைவனைப் பூசை செய்யும் போது ஒரு நாள் ஒருமலர் குறையத் தம் கண்ணையே இடந்து சாத்தி சக்கரத்தைப் பெற்றார். இவ்வரலாறு திருமுறையில் கூறப்பட்டுள்ளது. கல்யாணசுந்தரரின் பாதத்தில் விஷ்ணு தம் கண்ணைப் பறித்து அருச்சித்த அடையாளம் உள்ளது.

சிறப்புக்கள்

இத்தல விநாயகர் – படிக்காசு விநாயகராவார்.

இத்தலத்திற்கு பூகைலாசம், கல்யாணபுரம், பஞ்சாக்கரபுரம், தக்ஷிணகாசி, ஷண்மங்களஸ்தலம், சுவேதகானனம், ஆகாசநகரம், பனசாரண்யம், நேத்திரார்ப்பணபுரம், தேஜிநீவனம் எனப் பத்துப் பெயர்களுண்டு.

இத்தலம் 23 திருமுறைப் பதிகங்களையுடையது.

திருமுறை மட்டுமன்றி, சேந்தனாரின் திருவிசைப்பாவும், அருணகிரிநாதரின் திருப்புகழும் பெற்ற சிறப்புடையத் தலமாகும்.

ஞானசம்பந்தருக்கும், அப்பருக்கும் இறைவன் படிக்காசு தந்தருளி அவர்கள் மூலமாகச் சிவனடியார்க்கு அமுதூட்டிய தலம். அவ்வாறு படிக்காசு வைத்தருளிய பலிபீடங்கள் கோயிலின் கிழக்கிலும், மேற்கிலும் உள்ளன.

சம்பந்தரும், அப்பரும் தங்கியிருந்த திருமடங்கள் வடக்கு வீதியில் கீழ்க்கோடியிலும் (சம்பந்தர்) மேற்குக் கோடியிலும் (அப்பர்) உள்ளன.

இறைவன், ஞானசம்பந்தருக்குத் தாம் சீகாழியில் இருக்கும் திருக்கோலத்தை இங்குள்ள விண்ணிழி விமானத்தில் காட்டியருளினார்.

இத்தலபுராணம், திருவாவடுதுறை ஆதீனத்து, இரண்டாவது குருமூர்த்திகளான ஸ்ரீ மறைஞானதேசிகருடைய மாணவரான ஸ்ரீ மெய்ஞ்ஞான முனிவரால் இயற்றப்பட்டது – உள்ளது.

இக்கோயிலிலுள்ள வெளவால் நத்து (வாவல் நெற்றி) மண்டபம் மிகச் சிறப்பான வேலைப்பாடுகள் உள்ளதாகும். கோயில் திருப்பணிகள் செய்யும் ஸ்தபதிகள் சில தலங்களில் உள்ள அரிய திருப்பணிகள் நீங்கலாகச் செய்யும் ஒப்பந்தங்களில இம் மண்டபமும் ஒன்றாகும்.

வெளவால் நத்தி மண்டபம் – கல்யாண மண்டபம் உள்ளது; அழகான அமைப்பு – நடுவில் தூணில்லாமல், சுண்ணாம்பு கொண்டு ஒட்டப்பட்டுள்ள அமைப்பு – பார்ப்பவரை வியக்கச் செய்யும்.

இக்கோயில் மாடக் கோயில் அமைப்புடைது.

சுவாமி உள்ள இடம் விண்ணிழி விமானம் என்று சொல்லப்படுகிறது. பதினாறு சிங்கங்கள் தாங்கும் சிறப்புடைய இவ்விமானம் திருமால் கொணர்ந்தது, என்பதனை “தன்றவம் பெரிய சலந்தரனுடலந் ……..” என்ற சம்பந்தரின் வாக்கிலிருந்தும் அறியலாம்.

இறைவன் உமையை மணந்துக் கொண்ட தலம் என்னும நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணூம் உள்ளன.

Vimanam

இத்தலத்தில் தான் மிழலைக் குறும்பர் என்னும் வேடுவர் விளாங்கனியை நிவேதித்து அருள்பெற்றார்.

சம்பந்தரும், அப்பரும் படிக்காசுப் பெற்று அவற்றைக் கடைத்தெருவிற்குக் கொண்டு சென்று பொருள்களை வாங்கிய கடைத்தெரு இப்போது ஐயன்பேட்டை என வழங்கப்படுகிறது. அங்கே உள்ள சுவாமி பெயர் – செட்டியப்பர், அம்பாள் – படியளந்த நாயகி. உற்சவமூர்த்தி தராசு பிடித்த கையோடும், அம்பாள் படியைப் பிடித்தக் கையோடும் காட்சித் தருகின்றனர். தலவிருக்ஷம் ஒவ்வொரு யுகத்திற்கும் ஒவ்வொன்றாக உள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் சந்தனமாகவும், பிறகு சண்பகமாகவும், பின் வீழிச்செடியாகவும் உள்ளது. அடுத்து இருக்கவுள்ளது பலாமரமாகும்.

இத்திருக்கோயிலைச் சுற்றி; பத்ம தீர்த்தம், புஷ்கரணி, விஷ்ணு தீர்த்தம், திரிவேணி சங்கமம், குபேரதீர்த்தம், இந்திர தீர்த்தம், வருண தீர்த்தம், இலக்குமி தீர்த்தம், வசிட்ட தீர்த்தம் முதலாக 25 தீர்த்தங்கள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு 

மயிலாடுதுறை – திருவாரூர் இருப்புப் பாதையில் பேரளத்தையடுத்துள்ள பூந்தோட்டம் நிலையத்திலிருந்து 10 கி. மீ. தொலைவில் உள்ள தலம். திருவாரூர், கும்பகோணம், பேரளம், ஆடுதுறை, பூந்தோட்டம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

திருச்சிற்றம்பலம்

தொகுப்பு; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

நன்றி ; சைவம் டாட் காம்