புயலுக்கு பின்தான் அமைதி / இறைவன் சோதனைக்கு பின்தான் அருள்

Standard

புயலுக்கு பின்தான் அமைதி / இறைவன் சோதனைக்கு பின்தான் அருள்

இறைவனிடம் நாம் வேண்டுவது என்ன? சுகமான வாழ்வு கொண்ட இன்பம். இன்பம் எங்கிருந்து கிடைக்கும் கடையில் கிடைக்குமா? பிறரிடம் பெறமுடியுமா? அல்லது மண்ணில் / அல்லது தொழில்சாலையில் பெறமுடியுமா? அல்லது வேறு ஒருவரிடமிருந்து பகிர முடியுமா? இதனை இறைவன் ஒருவனிடமிருந்து மட்டுமே பெறமுடியும், மற்ற வழியில் கிடைத்தால் அது நிலையானதாக இருக்காது. வந்தது போல் போய்விடும். இறைவனிடமிருந்து இறை பக்தியுடன் அன்புடன் ஒருங்கிணைந்து ஒடுங்கி வேண்டி அவன் அருளால் பெறும் இன்பமே நிரந்தர இன்பம் இது முக்தி பேறு அளிக்க வல்லதும் ஆகும். இதனையே நாயன்மார்கள்  வாழ்ந்து காட்டி அவர்கள் பெற்ற அருள் நமக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இறைவன் கருணை மிக்கவன், கருணாகர மூர்த்தி அவன் பால் அன்பு செலுத்தும் பக்தர்களுக்கு அவன் ஒருபோதும் நீங்கு விளைவிப்பதும் இலலை, அவன் அருள் வழங்கத்தவறுவதும் இல்ைல. பால் நினைந்தூட்டும் தாய்க்கு ஒப்பானவன். பாலுக்கு பாலகள் வேண்டி அழுத போது பாற்கடலையே தந்த ஒப்பறிவாளன்

அவனிடம் நாம் தான் அன்பு செலுத்தி அவனிடம் மனம் ஒன்றி வேண்டுவதில்லை. ஏதோ பொழுபோக்கிற்காக கோவில் செல்கிறோம் ஏதோ கடமைக்காக இறைவனிடம் பேரம் பேசி எனக்கு இதை தா? நான் உனக்கு மொட்டை போட்டு தேங்காய் உடைத்து காணிக்கை செலுத்துகிறேன். அல்லது இன்ன பொருள் செய்து வைக்கிறேன் என்று பேரம் பேசி தொழுது வணங்கிறோம். நம்முடைய வாழ்நாளில் அவசியமற்ற பொழுபோக்கு நிகழ்வுகளே அவசியமான காலப்பொழுதாகவும், ஏதோ நேரம் போகாவிட்டால் கோவிலுக்கு சென்று பொழுது போக்குவோம் என்ற நிலை எல்லாருக்கும் உண்டாகிவிட்டது. மாலையில் சுமார் 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரையி்ல் தொலைக்காட்சி பெட்டியில் தொடர் நாடகங்களிலும் ஆடல் பாடல் நிகழ்வுகளிலும், சினிமா காட்சிகளிலும் தான் பொழுது களிக்கிறோம். மாலையில் இறைவனிடம் வேண்டும் நேரமோ, அவரிடம் தேவார திருவாசப் பாடல்கள் பாடி அருள் பெறும் நேரமோ மிகமிக குறைவு, இறைவன் நம்மிடம் வேண்டுவது மனம் ஒன்றிய அன்புடன் கூடிய பக்தி யே இந்த பக்தி நம் அருளாளர்கள் பாடிய தேவார திருப்பதிகள் மூலம் வேண்டும் அன்பு நெறி பக்தியே, நம் முன் வினை பயன்கள், தற்போது நாம் செய்யும் வினைப்பயன்களால் தான் நம் பாவங்கள் கூடிய புண்ணியச் செயல்கள் குறைகின்றன. ஏழை எளியோர்க்கு அன்னதானங்கள் செய்தும், நம்மால் செய்யத்தக்க செயல்கள் பிறருக்கு செய்தும் நாம் சிவாய என்று அமைதியாக இருந்தால் புது வினைகள் சேராமல் முன் வினைப்பயன்களும் குறைந்து புண்ணிய பலன்களைப்பெறலாம். இறைவனிடம் பக்தி அன்பு குறைந்து விட்டதால் ஆணவ மலம் விரிந்து துன்பங்களுக்கு வித்தாகி வேர் ஊன்றி வளர்ந்து விட்டது. இறைவனிடம் நாம் செல்ல முடியாவிட்டாலும், இறைவர் திருவிழாக்காலங்களில் தேர் பவனியில் நம்மைத் தேடி வருகிறார். அவருக்கு நம் அன்பைக்காட்டி

மனம் ஒன்றி வேண்டினால் நமக்கு வேண்டிய அருளை தருவார். கிடைத்தற்கரிய இந்த மானிடப்பிறப்பில் இருக்கும் அறிவினை இறைவன் பால் செலுத்த பயன்படுத்த வேண்டும். அதற்காகவே மானிடப்பிறப்பிற்கு ஆறாம் அறிவு காெடுத்துள்ளார் இறைவன். அடுத்தவன் துன்பங்கண்டு நாம் இன்புறுதல் கூடாது. ஒருவன் தேர்தலில் தோல்வி அடைந்தால், எதி்ர் வீட்டு பெண் வீட்டைவிட்டு ஓடிவிட்டால் , எதிர்வீட்டில் கொள்ளை நடந்து விட்டால், அல்லது வருமான வரித்துறை சோதனை நடந்தால்  எதிர்பார்ட்டில் வீடுகளில்  விருந்து உபச்சாரம் களைகட்டும், அவன் துன்பம் நமக்கு இன்பம் என்ற சூழல்தானே தற்போது நாம் காண்பது. இது இறைவழி பாட்டிற்கு உகந்ததா? மற்றவரின் துன்பம் கண்டு இனபம் பெறக் கூடாது.

மாெத்தத்தில் நமக்கு சோதனைகள் நடந்தால் நமக்கு இறைவன் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். நாயன்மார்கள் வரலாற்றில் இது நாம் கண்ட உண்மை.  தங்கம் கட்டியாக இருந்தால் அதன் அழகி தெரியாது. அது பொற்கொல்லர் கைவண்ணத்தால் நம்மைக்க வரும் ஆபரணமாக மாறுகிறது. தங்கத்தை போடம் போட்டு உருக்கி ,செதுக்கி ஆபரணம் ஆக்குவது போல்தான் நம்மை இறைவர் சோதனைக்கு உட்படுத்தி இறை அருள்வழங்குவார்.

மனம் ஒன்றி பக்தி செய்து இறை அருள் பெறுவோம்

திருச்சிற்றம்பலம்

( கூனம்பட்டி ஆதினம் சொற்பொழிவின்போது கேட்டு ரசித்தது)

Advertisements

சுந்தரர் வாழ்வும் வாக்கும்

Standard

சுந்தரர் வாழ்வும் வாக்கும்

sundarar life history க்கான பட முடிவு

திருவாரூரில் நடந்தது தேவாசிரய மண்டபத்தில் நடந்தது

சுந்தரமூர்த்திநாயனார் பரவையாரோடு கூடி வாழ்ந்திருக்குங் காலத்தில், ஒருநாள் திருக்கோயிலை அடைந்தபோது தேவாசிரய மண்டபத்திலே சிவனடியார்கள் கூடியிருந்ததைக் கண்டு, அவர் கண்மேலே பத்திமிகுந்து, “இவர்களூக்கு நான் அடியனாகும் நாள் எந்நாள்” என்று நினைத்துக்கொண்டு, சுவாமிதரிசணஞ் செய்வதற்குத் திருக்கோயிலினுள்ளே போனார். அப்பொழுது அடியார்க்கு அடியனாக வேண்டுமென்று அவர் விரும்பிய வரத்தைக் கொடுக்கும் பொருட்டு, சுவாமி அவருக்குக் காட்சி கொடுத்தருளி, “நீ நம்முடைய அடியார்களை வணங்கி அவர் கண்மேலே பதிகம் பாடு” என்றருளிச்செய்ய; சுந்தரமூர்த்தி நாயனார் வணங்கி நின்று, “சுவாமி, அடியார்களுடைய வரலாறு இன்னது என்றும் அவர்கள் தன்மை இப்படிப்பட்டது என்றும் அறியாத தமியேன் எப்படிப் பாடுவேன்? அவர்களைக் குறித்துப் பாடுஞ் சத்தியைச் சர்வஞ்ஞத்துவம் உடைய தேவரீரே அடியேனுக்கு அருளிச்செய்யவேண்டும்” என்று பிரார்த்தித்தார். சுவாமி அதற்கிசைந்து, அடியார்களுடைய வழித்தொண்டு, அவருக்குத் தெரியும்படிச் செய்து, உலகத்தார் உய்யும் வண்ணம் வேதாகமங்களை அருளிச் செய்த தமது அருமைத் திருவாக்கினாலே “தில்லைவா ழந்தணர்த மடியார்க்கு மடியேன்” என்று அடியெடுத்துக்கொடுத்து மறைந்தருளினார். அது கண்டு, சுந்தரமூர்த்தி நாயனார் புறப்பட்டுத் தேவாசிரய மண்டபத்தை அடைந்து, அடியார் திருக்கூட்டத்தை பலமுறை வணங்கி அந்த அடியார்கள் யாவர்க்கும் வெவ்வேறாக அடியேன் என்று திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகம்பாடி அவர்களை வணங்கினார். அவர் பாடிய பாடலே சேக்கிழார் பெரிய புராணம் பாடியதற்கு வித்தாக அமைந்தது.

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்

விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்

அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே

………..

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்

முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே

இவ்வாறு சைவ நெறியின் கருவூலமான சைவ சமய சிவனடியார்கள் பற்றிய புராணம் நமக்கு கிடைக்க சேக்கிழார் மூலம் அருள் செய்த பெரிய புராணம் கிடைத்தது

திருச்சிற்றம்பலம்

நிலையான முத்தியை தருபவன் இறைவனே …. சைவ சித்தாந்தம்

Standard

நிலையான முத்தியை தருபவன் இறைவனே …. சைவ சித்தாந்தம்

இறைவன் ஆன்மாவுடன் ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நிற்கின்றான் என்பது சைவசித்தாந்த கொள்கையாகும்.
அதாவது சைவசித்தாந்தம் என்பது முப்பொருள் உண்மையை வலியுறுத்துகின்றது. பதி(இறைவன்),பசு(ஆன்மாக்கள்),பாசம்(மும்மலங்கள்-ஆணவம்-கன்மம்-மாயை).ஆன்மாக்கள் தொன்றுதொட்டு இருப்பவையாகும். யாராலும் தோற்றுவிக்கப்படாதவை. ஆணவமலத்துள் கட்டுண்டு இருக்கும் ஆன்மாக்களை ஆணவமலத்திலிருந்து விடுவித்து முக்தி அளிப்பதற்காக இறைவன் தனு,கரண,புவன போகங்களைப் படைத்து அவற்றை ஆன்மாக்கள் அனுபவிக்கச் செய்து பக்குவப்படவைத்து மும்மலங்களையும் அறுத்து வீடுபேற்றை நல்குகின்றான் என்கிறது சைவசித்தாந்தம். வீடுபேற்றை பெற்ற ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பெடுப்பதில்லை.ஆக; நிலையான முக்தி!

சைவசித்தாந்தம் உயிர்கள் தானே அறியும் ஆற்றல் அற்றவை என்றும் இறைவன் அறிவிக்க அறிவன என்றும் கூறுகின்றது. அதுபோலவே இறைவன் உயிர்களோடு உடனாக இருந்து இயக்குகிறான் என்கிறது.கடவுள் உயிர்களோடு ஒன்றாயும் வேறாயும் உடனாகவும் இருந்து உயிர்களை இயக்குகின்றான்.உயிர்களுக்கு அறிவிக்கின்றான். உயிர்கள் இறைவன் அறிவிக்க இறைவனால் அறிந்து கொள்கின்றன.

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல்பசு பாசம் அநாதி – திருமந்திரம்

முக்தியில்; தன்னோடு நிலையாக இணைத்துக் கொண்டபோதும்; சீவனை சிவமாக்கியபோதும் சீவனால் சிவன்போல் ஐந்தொழில்கள் ஆற்ற முடியாது. சிவனோடு கலந்து சிவமாகி சிவானந்தத்தை நுகருமே ஒழிய; சிவன்போல் தொழில்கள் ஆற்ற முடியாது.

“முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.” -மாணிக்கவாசகர்

இப்பாடலை நெஞ்சுக்குள் நிறுத்தி உள்ளத்தால் உருகி படித்தால் இப்பாடலில் சூட்சுமமாக சொல்லப்பட்டுள்ள உண்மை புலனாகும்.

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை -முக்திநெறி அறியாத மூர்க்கரோடு இருந்த என்னை என்பது பொருளாகும். அதாவது ஆணவமலத்துள் அழுத்தி கண்ணில்லாத தேனீபோல் தத்தளித்து துன்பப்பட்டுக்கொண்டிருந்த என்னை என்று பொருள் கொள்க.

பத்திநெறி அறிவித்துப் -பக்தி வழியைக் காட்டி -தனு,கரண,புவன போகங்களைப் படைத்தருளி அதனை அனுபவிக்கச் செய்து மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிதந்து பக்தி மார்க்கம் தந்து அதனூடாக

பழவினைகள் பாறும்வண்ணஞ் சித்தமலம் அறுவித்து-பழைய வினைகள் எல்லாம் கெட்டொழியும்படி அறிவை பற்றியுள்ள மூலமலத்தை(ஆணவமலத்தை) போக்கி

சிவமாக்கி எனையாண்ட – சிவமாக்கி என்னை ஆட்கொண்ட – சிவத்தன்மையாக்கி என்னை ஆட்கொண்ட

அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே – இறைவன் பெருங்கருணையினால் தானே வந்து தனக்கு அருளிய அத்தகைய அருமையை யார் தான் பெறுவர்!

ஆணவமலத்துள் சிக்கித்தவித்துக் கொண்டிருந்த தன்னை அதிலிருந்து விடுவிக்கும் பொருட்டு இறைவன் ஆன்மாவாகிய தன்மீது கொண்ட பெருங்கருணையின் நிமித்தம் தன்னை தனு,கரண,புவன போகங்களை அனுபவிக்கச் செய்து பிறவிகள் தந்து அதனூடாக பக்குவப்படவைத்து இன்பம்-துன்பம் இரண்டையும் சமமாக பாவிக்கின்ற அருமையை ஏற்படவைத்து கன்மம்,மாயை ஆகியவற்றை உதரியபின் மூலமலமாகிய ஆணவமலத்தை தானே முன்வந்து நீக்கி சிவமாக்கி நிலையான பேரின்பத்தை தந்தருளிகின்றான் என்பதை சூட்சுமமாக இப்பாடலில் உணர்த்துகின்றார் மாணிக்கவாசகர்.

சிவமாக்கி என்னை ஆண்ட என்ற பதமும் அத்தன் எனக்கு அருளியவாறு என்கின்ற பதமும் நமக்கு தெளிவாக ஒருசெய்தியை உணர்த்துகின்றது. அது யாதாயின்; இறைவனே நமக்குள் இருக்கின்ற சிவத்தன்மையை உணரவைத்து(ஒன்றாய்,வேறாய்,உடனாய் ஆன்மாக்களோடு இறைவன் கலந்திருக்கின்ற தன்மையை) நமக்கு வீடுபேறு அருளி நிலையான முக்தியை தந்தருளிகின்றான் என்பதையாகும்.

திருச்சிற்றம்பலம்26380-6d865f3d83f6003643e27b2ae00317da2b252812529

அஞ்சுவது அஞ்சேல், அன்பிலாதவரைக்கண்டால் அஞ்சுவேன்

Standard

அஞ்சுவது அஞ்சேல், அன்பிலாதவரைக்கண்டால் அஞ்சுவேன்

பாம்பைக் கண்டு பயப்படமாட்ேடன், பொய்யரைக் கண்டாலும் அஞ்ச மாட்டேன். கொடிய நோய் கண்டாலும் அஞ்சமாட்டேன், பிறப்போடு இறப்பு வந்தாலும் அஞ்சமாட்டேன்.  ஆனால் அஞ்சும் தன்மை யுடைய செயலகள் பிற தெய்வ வழிபாடு செய்பவரகள், இறைவரை எள்ளவும் நினையதோர், இறைவரிடம் அன்பில்லாதரவர்கள் ஆகியவர்களை கண்டால் மிகவும் அஞ்சுவேன் என்கிறார், எட்டாம் திருமுறை அச்சப்பத்து பதிகப் பாடல்களில்

தெய்வப் பிறவியை எய்தினோர் யாவரிடத்தும் உள்ள தெய்வத்தன்மைகள் பலவும் சிவபெருமானது அருளாற்றலின் தீவண்ணர்திறம் பற்றி கூறாது ஒழிந்தாலும், அவனை உணர்ந்த பின்னர்ப் பிறிதொரு தெய்வத்தைச் சுதந்திரமாய் நின்று அருள்செய்வதாகக் கருதுதல் குற்றமாயிற்று. எனவே, பிறிதொரு தெய்வத்தை அவன் அருள்வழிநின்று அருள் செய்யும் அதிகார தெய்வமாகக் கருதின் குற்றமின்றாதல் பெறப்படும்.   எனவே அவன் அன்றி பிறிதொரு தெய்வம் இல்லைஎன்பதை உணர வேண்டும் என்கிறார் மாணிக்க வாசகர். அதுமட்டுமல்லாது எதற்கும் அஞ்சமாட்டேன். பிற தெய்வ வழிபாடு செய்யும் அன்பர்களைக் கண்டால் அஞ்சுவேன் என்கிறார்.

மேலும்கடைசி பாடலில் பிறையை அணிந்த எம்பிரானை நீண்ட பிறையாகிய, அணிகலத்தையுடைய சிவபெருமானை எண்ணிக் கசிந்து உருகி, நெகிழ்ந்து ஒளிபொருந்திய விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பெருகத் துதித்து நின்று புகழ மாட்டாத ஆண்மை யுடையரல்லாரைக் காணின் ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று. என்கிறார்

புற்றில்வா ளரவும் அஞ்சேன்

பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்

கற்றைவார் சடைஎம் அண்ணல்

கண்ணுதல் பாதம் நண்ணி

மற்றும்ஓர் தெய்வந் தன்னை

உண்டென நினைந்தெம் பெம்மாற்

கற்றிலா தவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சு மாறே

புற்றிலேயுள்ள கொடிய பாம்பிற்கும் அஞ்ச மாட்டேன். பொய்யர்களது மெய் போன்ற சொற்களுக்கும் அஞ்ச மாட்டேன். திரட்சியான நீண்ட சடையையுடைய, எம் பெரியோனாகிய, நெற்றிக் கண்ணையுடைய இறைவனது திருவடியை அடைந்தும், வேறொரு தெய்வத்தை இருப்பதாக எண்ணி, எம் பெருமானைப் போற்றாதாரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று இத்துடன்

நினைந்துநைந் துருகி நெக்கு

வாணிலாங் கண்கள் சோர

வாழ்த்திநின் றேத்த மாட்டா

ஆணலா தவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சு மாறே

நீண்ட பிறையாகிய, அணிகலத்தையுடைய சிவபெருமானை எண்ணிக் கசிந்து உருகி, நெகிழ்ந்து ஒளிபொருந்திய விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பெருகத் துதித்து நின்று புகழ மாட்டாத ஆண்மை யுடையரல்லாரைக் காணின் ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

திருச்சிற்றம்பலம்

சிந்தனைத் துளிகள் சில

Standard

 

 

 

 

பேசுவதில் இனிமை தேவை

கொடுப்பதில் தாராளம் தேவை

கோபத்தில் பொறுமை தேவை

கடவுளிடம் அன்பு தேவை@

 

மனம் என்னும் தோட்டத்தில் நல் எண்ணம் என்ற விதை கொண்டு செயல் என்னும் மலர் பறித்து, இன்பம் என்னும் கனி பெறுவோம்

 

ஆணவத்தால் அறியாமை விளையும்

அறியாமையாமல் தீவினை வளர்கிறது

தீவிணைகளால் துன்பங்களை அறுவடை செய்கிறோம்

 

 

பாவியை மகானாக்குவது சிவபக்தி

பக்தியின் முதிர்ச்சி வீடுபேற்றின் வாசல்

 

அறிஞர்களின் கூட்டம்உயிருள்ள வாசகசாலை

நல்ல நூல்கள் நாம் இட்டுவைத்த பொற்குவியல்

தீவண்ணர் திறம் பேசுவோம்

Standard

தீவண்ணர் திறம் பேசுவோம்

சீவகரணங்களை சிவகரணங்களாக மாற்றும்பண்பாளர், முத்தி நெறியை காட்டி அருளுபவர், அவரைப்பற்றி பேசவும், புகழ்பாடவம், அவர் திறம் பேசவும் செய்பவர், ஆன்மாக்கள் மாயை இருளில் உழன்று நீங்கி வீடு பேறு அடைய வழி காட்டும் சிவனார் பற்றி சிந்தித்தும், பேசுயும், பாடியும் களிப்புற அவர் செயலே அதற்கு மருந்தாகும்.

நமக்கு பசிவந்தால் நாம் உணவு உண்கிறோம். தாகம் வந்தால் நாம் தான் நீர் அருந்துகிறோம், நோய் வந்தால் நாம் தான் மருந்து உண்கிறோம். இதைப்போல தீவிணை நீங்குவதற்கு நாம் தான்  தீவண்ணர் புகழ் பாடியும், பேசியும், அவரிடமே நாம் நம் குறைகளை கூறி வேண்டுதல் வேண்டும். அர்ச்சகரைக் கொண்டு அர்ச்சனை செய்தல் எவ்வாறு நியாயம் ஆகும். வினை நீக்கத்திற்கு வழி செய்ய அருளாளர்கள் பாடியுள் அதற்கான தேவாரப்பாடல்களை பாடி நம் குறைகளை கலைய வேண்டுதல் வேண்டும்

தீவண்ணரின் புகழ் பற்றி மாணிக்கவாசகர் திறம் கூறும் பாடல் இதே, ( எட்டாம் திருமுறை, திருஅம்மானை பாடல் 2)மீனவனாய் வந்து வலை வீசித் திருவிளையாடல்களை செய்தவர் கருணைக்கடலாய் விளங்கபவர், எல்லாருக்கும் ஞானபித்தேறச் செய்து மீண்டும் நோய் வராதிருக்க முத்தி நெறியை அருள் செய்தவன், இத்தகைய சிவபெருமானார் புகழ் பரவ பாடுவோம் பேசுவோம்,

பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்

ஆராலும் காண்டற் கரியான் எமக்கெளிய

பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி

வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த

ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்

பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்

மண்ணுலகத்தார் விண்ணுலகத்தவர் முதலிய எல்லாராலும் காண்பதற்கரியனானவனும், திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னைப் பித்தனாக்கினவனும், முத்தி வழியை அறிவித்தவனும், வலை வீசுதல் முதலிய திருவிளையாடல்களைச் செய்தவனும் கருணைக் கடலும் ஆகிய சிவபிரானைப் புகழ்ந்து பாடுவோம்.

திருச்சிற்றம்பலம்

குலச்சிறை நாயனார்

Standard

குலச்சிறை நாயனார்
குருபூசை: ஆவணி – அனுஷம் 15/09/20181503940306
பாண்டிநாட்டிலே, மணமேற்குடியிலே, குலச்சிறைநாயனார் என்பவரொருவர் இருந்தார். அவர் விபூதி உருத்திராக்ஷந்தரிக்கின்றவர்களும் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை ஓதுகின்றவர்களுமாகிய சிவனடியார்களை, உயர்குலம் இழிகுலங்களும் நற்குணம் தீக்குணங்களும் பாராமல் வணங்கித் துதிக்கின்றவர். அவ்வடியார்கள் பலர்கூடி வரினும், ஒருவர் வரினும், அன்பினோடு எதிர்கொண்டு அழைத்துத் திருவமுது செய்விக்கின்றவர். பரமசிவனுடைய திருவடிகளை அநுதினமுஞ் சிந்தித்துத் துதித்து வணங்குகின்றவர். நெடுமாறர் என்னும் பெயரையுடைய பாண்டியருக்கு முதன்மந்திரியாராயினவர். அந்தப்பாண்டியருடைய மாதேவியாராகிய மங்கையர்க்கரசியார் செய்கின்ற திருத்தொண்டுக்குத் துணைசெய்கின்றவர். கீழ்மக்களாகிய சமணர்களுடைய பொய்ச்சமயத்தைக் கெடுத்து, பாண்டி நாடெங்கும் திருநீற்றை வளர்க்கும் பொருட்டு, பரசமய கோளரியாகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருவடிகளை வணங்கிய சிறப்பினையுடையவர். வாதிலே அந்நாயனாருக்குத் தோற்ற சமணர்களைக் கழுவிலே ஏற்று வித்தவர். சுந்தரமூர்த்திநாயனாராலே திருத்தொண்டத்தொகையிலே “பெருநம்பி” என்று வியந்துரைக்கப்பட்டவர்.
இக்குலச்சிறை நாயனார் இச்சிவபுண்ணியத்தான் மிகச் சிறப்புற்றவர் என்பது, சமணர்களுடைய பொய்ச் சமயத்தைக் கெடுத்துப் பாண்டி நாடெங்கும் திருநீற்றை வளர்க்கும் பொருட்டுத் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருவடிகளை வணங்கினமையாலும், வாதிலே அந்நாயனாருக்குத் தோற்ற சமணர்களைக் கழுவிலே ஏற்றுவித்தமையாலும், செவ்விதிற்றெளியப்படும். இவர் இவ்வாறு செய்தபின்பு, பாண்டி நாடெங்கும் புறச்சமயமாகிய இருள் கெடச் சைவ சமயமாகிய பேரொளி தழைத்து ஓங்கியதன்றோ? ஆதலால், இதனின் மிக்க புண்ணியம் வேறு இல்லை எனத் தெளிந்து, சைவத்தை வளர்த்தற்குச் சிவனது திருவருளையே முன்னிட்டுக் கொண்டு இடைவிடாது பெருமுயற்சி செய்க.
திருச்சிற்றம்பலம்