மூன்று வகை பக்தி

Standard
மூன்று வகை பக்தி
நீரளவே நீராம்பல் என்பது பழமொழி , இது பக்திக்கும் பொருந்தும். எல்லோரும் தான் இறைவனை வழிபடுகிறோம். எல்லோருக்கும் ஒரே மாதிரியகவா அருள்கிடைக்கிறது? ஒரே மாதிரியாகவா ஞானம் கிடைக்கிறது? இல்லை. ஏன்? அவரவர் வழிபாட்டில் இறைவன் மீது வைத்திருக்கும் திடமான நம்பிக்கை மற்றும் அன்பைப் பொறுத்தே இறைவனுக்கும் பக்தனுக்கும் ஏற்ப பிராத்தனையின் வீரியமும் நோக்கமும் வித்தியாசப்படுகிறது.
இறைவனை மனிதன் வழிபடும் வகை மூன்று நிலையில் இருக்கிறது, அவை உத்தம பக்தி, மத்யம பக்தி, மந்த பக்தி.
மந்த பக்தி என்பது இறைவனிடம் பூரண நம்பிக்கை இல்லாத ஒரு நிலை. அல்லது சந்தேகத்திற்கு உரிய நிலை, அதாவது ஏனோ தான என்ற நிலை என்பர், அதாவது ஏதோ கும்பிட்டு வைப்போம் என்ன நடக்கிறது பார்ப்போம் என்று ஒருவர் வழிபடும் வகைதான், அவர் இறைவன் மீது வைத்திருக்கும் மந்த பக்தி. அவர் இறைவர் மீது வைத்திருக்கும் பத்தி நம்பிக்கை அற்றது. இது இப்படியும் இருக்கலாம். தனக்கு எப்போது இறைவன் துணை தேவைப்படுகிறதோ, அப்போது வழிபாடு செய்தல், பிடித்த தோசங்கள், சங்கடங்கள் நீங்கவேண்டும் என்பதற்காகவோ ஏதாவது ஆசைப்பட்ட பொருள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, வேலை வாய்ப்பு கிடைக்க, உடல் ஆரோக்கியம் பெற, செல்லம் பெற, கடன் பிரச்சனைகள் தீர, என்பதற்காக வழிபாடு செய்வது “மந்த பக்தி ” இது பக்தி யே இல்லை என்பர் இது சுயநலம் கொண்டது என்பர்.
” மத்யம பக்தி ” என்பது மந்த பக்திக்கு சற்று முன்னேறிய நிலை, இந்நிலையில் பக்தன் தன் கஷ்டம் நீங்க வேண்டும் என்றோ பொருட்கள் வேண்டுமென்றோ வழிபடுவதில்லை, தான் முக்தி அடைய வேண்டும். ஞானம் பெற வேண்டும் பிறவி பயன் அடைய வேண்டும் தன்னுடைய பிராத்தனை எல்லாம் இறைவனை அடைவதை குறிக்கோளாக கொண்டிருக்கும். இந்த வகை பக்தியில் இவ்வுலக வாழ்க்கை பற்றி ஆசைகள் பிராத்தனையாக இருக்காது. எனவே இந்த நிலைக்கு “மத்யம பக்தி” என்று பெயர்,
மூன்றாவதாக உத்தம பக்தி என்பது உயர்ந்த பக்தி, எல்லோருக்கும் கிடைத்துவிடாத பக்தி, பெருமை பெற்றது. இந்த உத்தம பக்தி செய்பவர்கள் இறைநிலையை ஒத்த ஞானிகள், சித்தர்கள், ஆவர். இவர்கள் தான் வேறு, இறைவன் வேறு என்று இருப்பதில்லை , இறைவனும் பக்தனும் ஒன்றிவிட்ட பேரானந்த நிலை , உத்தம பக்தியின் நிலையில் இருக்கும் ஞானி வழிபாடு செய்கிறார் , ஆனால் எதையும் வேண்டுவது இல்லை. எனவே அவர் செய்கின்ற வழிபாடு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைந்து விடுகிறது. இந்த வகை உத்தம பக்தி செலுத்தும் பக்தன் தானும் ஒருநிலையில் இறைவனாகி விடுகிறான். நாம் மந்தபக்தியில் இருந்து கொண்டே மத்யம பக்திக்கு முன்னேறுவோம், “அவன் அருளாளே அவன் தாள் வணங்கி” என்ற மாணிக்க வாசகர் கூற்றை ஏற்று உயர்வான உத்தம பக்தி க்கு நம்மை யும் இறைவன் அவன் அடிசேர அழைத்துக்கொள்வான்,
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி: பிரட்டிலிப்

 

Advertisements

ஆணவம்

Standard

ஆணவம்

நம்மிடம் ஏதுமில்லை’ என்று நினைப்பது ஞானம்.

`நம்மைத் தவிர ஏதுமில்லை’ என நினைப்பது ஆணவம்.

ஞானம், பணிந்து பணிந்து வெற்றி மேல் வெற்றியாகப் பெறுகிறது.

ஆணவம், நிமிர்ந்து நின்று அடி வாங்குகிறது.

***

நமது புராண இதிகாசங்களில் ஆணவத்தால் அழிந்தவர்களைச் சித்தரிக்காதது மிகவும் குறைவு.

ராம காதையில் ராவணன், பாரதத்தில் துரியோதனன், இரணியன், கண்ணனால் கொல்லப்பட்ட நரகாசுரன், கந்தனால் கொல்லப்பட்ட சூரபத்மன் மற்றும் பத்மாசுரன் இவர்களெல்லாம் ஆணவத்தின் அடையாளச் சின்னங்கள்.

இவர்களுடைய முடிவு கொடுமையானதைக் காட்டி, இந்து மதம் ஆணவக்காரர்களை எச்சரிக்கிறது.

“நான்” என்னும் எண்ணம் ஒருவனுக்குத் தோன்றுகின்றது என்றால், அவன் தோல்விகளைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றான் என்று பொருள்.

அறிவு குறைவானவர்களுக்கே ஆணவம் வருகிறது.

நிறை குடங்களுக்கு அது வருவதில்லை.

வெற்றி மயக்கம் ஏற ஏற அறிவு தடுமாறி, முட்டாள்தனமான தைரியம் தோன்றி, `எல்லாம் நாமே’ என்ற எண்ணம் பிறந்து, தடுமாறிக் காரியம் செய்யத் தொடங்கியதும் ஒவ்வொரு தோல்வியாகத் தொடர்ந்து வந்து, ஆணவக்காரனைக் கூனிக் குறுகச் செய்கின்றன.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர், நீண்ட கால நண்பர்.

ஆரம்பத்தில் மிகுந்த சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

அந்தச் சிரமத்தோடு கடன் வாங்கி ஒரு படம் எடுத்தார்.

கதை, வசனம், டைரக்ஷன் எல்லாம் அவரே.

படம், `ஓகோ’ என்று ஓடிற்று.

வெற்றி மயக்கத்தில் அவர் நிலை கொள்ளவில்லை!

உடனே ஒரே நேரத்தில், நாலைந்து படங்கள் எடுக்கப் போவதாக விளம்பரம் செய்தார்.

விநியோகஸ்தர்கள் அவரிடம் வந்து, “புதிய படங்களை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்; யார் யார் நடிக்கிறார்கள்!” என்று கேட்டார்கள்.அதற்கு அவர் கோபமாக, “எல்லாம் நானே. என் பெயருக்குத் தான் படமே தவிர நடிப்பவர்களுக்காக அல்ல; இஷ்டமிருந்தால் கையெழுத்துப் போடுங்கள்” என்று மிரட்டினார்.

நான் ஒருநாள் அவரைச் சந்தித்தபோது, “என் ஒவ்வொரு படத்தையும் `பாக்ஸ் ஆபீஸ்’ பண்ணிக் காட்டுகிறேன்” என்று என்னிடமே சவால் விட்டார்.

“என்னுடைய படம் என்றால், ஓலையிலே பிரிண்ட் பண்ணினாலும் ஓடும்” என்று சொன்னார்.

பெரிய பெரிய கோவில்களுக்கெல்லாம் வேண்டிக் கொண்டும், அவரது அடுத்த படம் படுதோல்வியடைந்தது. மூன்றாவது படமும் படுதோல்வி. கடன்காரரானார்; கஷ்டப்படுகிறார்.

தன்னைத் தேடி வந்தவர்களிடம் ஆணவத்தோடு நடந்து கொண்ட அவர், தினமும் அவர்களைத் தேடி நடக்கிறார்.

இன்னொருவர்-

அவரும் கதை வசனம் எழுதி டைரக்ஷன் செய்கிறவர்.

அவர் விழித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், பெரும்பகுதி தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்.

நீங்கள் அவரோடு பேசப்போனால் நீங்களும் அவரைப்பற்றியே பேசினால்தான் அவர் உங்களோடு பேசுவார்.

வசனத்திலே வல்லினம், மெல்லினம் இருக்காது. ஆனால் குருட்டுத்தனமாக வந்த வெற்றி, அவரைக் குருடனாகவே ஆக்கிவிட்டது.

இதுவரை ஆணவக்காரர்கள் எப்படி அவதிப்பட்டார்களோ, அப்படிப்பட்ட அவதிக்கே அவரும் தயாராகிக் கொண்டிருக்கின்றார்.

மனிதன் உடம்பு மிகவும் பலவீனமானது.

அதில் ஒரு நரம்பைத் தட்டினால் பல நரம்புகளிலும் சங்கீதம் கேட்கிறது.

ஒரு வெற்றி கண்ணுக்குத் தெரிந்துவிட்டால், வரப்போவதெல்லாம் வெற்றியே என்ற திமிர் வருகிறது.

அந்தத் திமிர், யாரையும் அலட்சியப்படுத்தச் சொல்கிறது.

அடி பலமாக விழுந்ததும், திமிர் தானாக அடங்கிப் பணிவு எங்கிருந்தோ வந்துவிடுகிறது.

ஒரு சபைக்கு நான் போயிருந்தேன்.

பெரிய பெரிய அறிஞரெல்லாம் வந்திருந்தார்கள்.

அவர்களையெல்லாம் சாதாரணமாக நினைத்து, ஓர் அரை குறைப் படிப்பாளி, ஆணவத்தோடு பேசிக்கொண்டு இருந்தார்.

அவரது ஆணவத்தைப் பார்த்து அவர் பேசியதிலிருந்த தவறுகளைக்கூட யாரும் திருத்தவில்லை.

ஒவ்வொரு வரியையும் முடிக்கும்போது, “எப்படி நான் சொல்வது?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

நான் ஆத்திரம் தாங்காமல், “ஒரு குழந்தை எப்படிச் சொல்லுமோ, அப்படியே சொல்கிறீர்கள்” என்றேன்.

“தெளிவில்லாதவன், விவேகமற்றவன்” என்பதை நயமாகவும், நளினமாகவும் சொன்னேன்

 சில கவியரங்கங்களிலும் இந்த அனுபவம் எனக்குக் கிடைத் திருக்கிறது.

இலக்கண மரபோ, இலக்கியச் சுவையோ தெரியாத சிலரும், அந்த அரங்கங்களில் தோன்றிவிடுவார்கள்.

என்னைத் தாக்கிவிட்டால் தாங்கள் பெரிய கவிஞர்கள் என்ற எண்ணத்தில், அசிங்கமாகத் தாக்குவார்கள்.

நான் அடக்கத்தோடும் பயத்தோடும் உட்கார்ந்திருப்பேன். திரும்ப அவர்களைத் தாக்கமாட்டேன்.

காரணம், கிருபானந்தவாரியார் சொன்ன ஒரு கதை.

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக்கொண்டு சுத்தமாக வந்துகொண்டிருந்ததாம்.

ஓர் ஒடுக்கமான பாலத்தில் அது வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்ததாம்.

யானை ஓர் ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழிவிட்டதாம்.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்துவிட்டது!” என்று சொல்லிச் சிரித்ததாம்.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா! நீ பயந்துவிட்டாயா?” என்று கேட்டதாம்.

அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னதாம்.

“நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்துவிடக் கூடாதே என்று ஒதுங்கினேன். நான் ஏறி மிதித்தால் அது துவம்சமாகிவிடும்; ஆனால் என் கால் அல்லவா சேறாகிவிடும்.”

இந்தக் கதையின்படி சிறியவர்களின் ஆணவத்தைக் கண்டு, நான் அடக்கத்தோடு ஒதுங்கி விடுவது வழக்கம்.

முன்னேற விரும்புகிற எவனுக்கும் ஆணவம் பெருந்தடை.

ஆணவத்தின் மூலம் வெற்றியோ லாபமோ கிடைப்பதில்லை; அடிதான் பலமாக விழுகிறது.

தான் பணக்கார வீட்டுப்பெண் என்ற மமதையில் கணவனை அலட்சியப்படுத்தும் மனைவி;

தான் மந்திரியாகிவிட்ட போதையில் தொண்டர்களை அலட்சியப்படுத்தும் தலைவன்;

தான் சொன்ன ஏதோ ஒன்றை ஜனங்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்காகத் தினமும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் தலைவர்கள்;

இவர்களெல்லாம், ஒரு கட்டத்தில், அவமானத்தாலும் வெட்கத்தாலும் கூனிக் குறுகிப் போய்விடுகின்றார்கள்.

`எதற்கும் தான் காரணமல்ல; ஏதோ ஒரு சக்திதான் காரணம்’ என்று எண்ணுகிறவன் ஆணவத்திற்கு அடிமையாவதில்லை.

`மற்றவர்களுக்கு என்ன தெரியும்’ என்று நினைப்பவன், சபைகளில் அவமானப்படாமல் தப்பியதில்லை.

ஆணவத்தால் அழிந்துபோன அரசியல் தலைவர்கள் உண்டு; சினிமா நடிகர்கள் உண்டு; பணக்காரர்கள் உண்டு.

அடக்கத்தின் மூலமாகவே தோல்விகளில் இருந்து மீண்டும் வெற்றிகரமாக முன்னேறியவர்கள் பல பேருண்டு.

மகாபாரதத்தில் நான் கேட்டிருந்த ஒரு சம்பவம்.

பரந்தாமன் மஞ்சத்தில் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தானாம்!

துரியோதனனும் அர்ச்சுனனும் அவனிடம் உதவி கேட்கப் போனார்களாம்.

துரியோதனன் பரந்தாமனின் தலைமாட்டருகே அமர்ந்தானாம்.

அர்ச்சுனன் காலடியில் அமர்ந்தானாம்!

காலடியில் அமர்ந்திருந்ததால், விழித்ததும் முதன் முதலில் அவனையே பார்த்த பரந்தாமன், “என் உதவி உனக்குத்தான்” என்று

கூறிவிட்டானாம்.ஆணவம் தலைமாட்டில் அமர்ந்தது; அடக்கம் காலடியில் அமர்ந்தது.

அடக்கத்துக்கு உதவி கிடைத்தது.

பாரதப் போரில் ஆணவம் தோற்றது.

ஆணவத்தோடு நிமிர்ந்து நிற்கும் தென்னை, புயற்காற்றில் விழுந்து விட்டால் மீண்டும் எழுந்து நிற்க முடிவதில்லை.

நாணலோ பணிந்து, வளைந்து, எந்தக் காற்றிலும் தப்பிவிடுகிறது.

`எல்லார்க்கும் நன்றாம் பணிதல்’ என்றான் வள்ளுவன்.

`அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்றவனும் அவனே!

நான்கு வரி ஒழுங்காக எழுதுவதற்கு முன்னால், `கம்பன் என்னிடம் பிச்சை எடுக்க வேண்டும்’ என்று பேசுகிறவர்கள் உண்டு.

ஆனால், கம்பனுக்கு அந்த ஆணவம் வந்ததில்லை.

அதனால்தான், காலங்களுக்கும் நிலைக்கக்கூடிய காவியத்தை அவனால் எழுத முடிந்தது.

இந்துக்கள் வற்புறுத்தும் பணிவும் அடக்கமும் வாழ்வில் வெற்றியை நோக்கிப் போவதற்கான படிக்கட்டுகளே!

இந்தப் பணிவை வங்காளத்து இந்துக்களிடம் அதிகம் காணலாம்.

தன்னைவிட வயதில் மூத்தவரைச் சந்தித்தால், எந்தப் பேரறிஞனும், அவர்கள் காலைத் தொட்டுக் கும்பிடுகிறான்.

வெறும் வயதுக்கே அந்த மரியாதையைத் தருகிறான்.

என்னுடைய விழா ஒன்றில், ஒரு பெருந்தலைவரின் காலைத் தொட்டு வணங்கியதுபற்றி, என்னைச் சிலர் கோபித்தார்கள்.

நான் சொன்னேன்:

“அந்தக் கால்கள் தேசத்துக்காகச் சத்தியாக் கிரகம் செய்யப் போன கால்கள்.

சிறைச்சாலையில் பல்லாண்டு உலாவிய கால்கள்.

என்னுடைய கால்களுக்கு அந்தப் பாக்கியம் இல்லாததால், கைகளாவது அந்தப் பாக்கியத்தைப் பெறட்டுமே!”

சில சபைகளில், என்னை உட்கார வைத்துக் கொண்டே என்னைப் புகழ்வார்கள். எனக்கு சர்வாங்கமும் ஒடுங்கிவிடும்.

`நாம் என்ன எழுதிவிட்டோம்? என்ன செய்துவிட்டோம்.

திருச்சிற்றம்பலம்

நன்றி ; தமிழ்களஞ்சியம் அ்ர்த்தமுள்ள இந்து மதம்

வெளிச்சத்தில் தேடுங்கள் – கடவுளைக் காண ஞானம் வேண்டும் –

Standard
வெளிச்சத்தில் தேடுங்கள்
– கடவுளைக் காண ஞானம் வேண்டும் –
கடவுள் எங்கும் இருக்கிறார், நம் கண்ணுக்கு தெரிவில்லை, அதற்காக கடவுள் இல்லை என்று சொல்ல முடியாது. நம் கண்ணுக்கு புலப்படவிலலை என்பதால் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வரக்கூடாது.
இருட்டில் இருக்கும் பொருள் கண்ணுக்கு தெரிவதில்லை. வெளிச்சம் இருந்தால் பொருளை காணலாம். இருட்டு நம் அஞ்ஞானம் பொருள் என்பது கடவுள்.
வெளிச்சம் தான் ஞானம். அஞ்ஞானம் என்ற இருட்டை , ஞானம் என்ற வெளிச்சத்தால் அகற்றினால் கடவுள் என்ற பொருளைக் காணலாம். கடவுள் எங்கும் இருக்கிறார். எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானலும் வருவார். அவரை புரிந்து கொள்ளவும். அறிந்து கொள்ளவும் ஞானம் வேண்டும் எதிலும் எங்கும் கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை புரிந்து விட்டால் கடவுளை எந்த ரூபத்திலும் காணலாம். இதனை விளக்குவதே இரணியன் – பிரகலாதன் வரலாறு. பிரகலாதன் உறுதியே கடவுளை வரவழைத்தது இரணியன் சம்காரம் ஆனது.
குருகுலத்தில் ஒரு சீடன் தன் குருவிடம் பகவானை தான் காணவேண்டும் அதற்கு ஒரு உபாயம் உண்டா? என்று வினவினான். அதற்கு குருநாதர் அந்த சீடனிடம் ஒரு தாரக மந்திரத்தை உபதேசித்து , நாளும் பொழுதும் இதை ஜெபிக்க கூறினார். இந்த தாரக மந்திரம் நிச்சயம் பகவானை காட்டினால் அதை தியானிக்க இப்போதே இதனை ஜெபிக்க ஆரம்பிக்கிறேன் என்று சொன்னான் சீடன். நிச்சியமாக பகவானை பார்க்க முடியுமா? என்று மேலும் கேட்க , அதற்கு குரு நிச்சயம் வருவார் ஆனால் இந்த தாரக மந்திரத்தை ஜெபிப்பவரிடம் பகவானை பகவான் தான் என்று கண்டு கொள்ளும் ஞானம் இருக்க வேண்டும். அதனைப் பொருத்தே கடவுள் உனக்கு புலப்படுவார் என்றார். சீடன் உடனே மந்திரத்தை துதிக்க தொடங்கினான். மாதங்கள் ஓடின, ஒரு தினத்தன்று, பகவான் இன்று வரவேண்டும் தன்னை ஆசிர்வதிக்க வேண்டும் என்று பகவானை வேண்டிக் கொண்டு தியானித்தான். பகவான் வருவார் என்ற பூர்ண நம்பிககையோடு காத்திருந்தான். வீட்டில் ஆச்சாரத்தோடு, தடபுடலாக விருந்து தயார் செய்தான்.
அவ்வேளையில் வீட்டு வாசலில் ஒரு முதியவர் குரல் கேட்டது. என்ன என்று முதியவரிடம் கேட்டான். அதற்கு வந்திருந்த முதியவர் ” தம்பி பசிக்கிறது ” என்றார் . அதற்கு சீடன் கொஞ்சம் பொறு, பகவான் என் வீட்டுக்கு வருகிறார். அவர் சாப்பிட்டதும் உனக்கு விருந்து தருகிறேன். என்றான். நேரம் ஓடியது. முதியவர் பொறுத்து பொறுத்து பார்த்தார் , தம்பி என்னால் பசி தாங்க முடியவில்லை, நான் வேறு வீட்டிற்கு சென்று உணவு வாங்கிக் கொள்கிறேன். என்று கூறி கிளம்பி விட்டார்.
இரவு வந்தது. பகவான் வரவே இல்லை , என்ற ஏக்கத்தில் குருநாதரிடம் சென்று நடந்த நிகழ்வுகளை கூறி புலம்பினான். அதற்கு குருநாதர் சிரித்துக் கொண்டே ” பகவான்உன் வீட்டிற்கு வந்தார், சாப்பிட ஆசையாக இருந்தார். நீ தான் அதை புரிந்து கொள்ளாமல் அவரை கண்டு கொள்ளவே இல்லை. கால் கடுக்க நின்று பார்த்து விட்டு என் வீட்டிற்கு வந்தார் இங்கு சாப்பிட்டு விட்டு போய் விட்டார் என்றார். அப்படியா? என்று வியந்த சீடனிடம் பகவான் உன் வீட்டிக்கு ஒரு முதியவாராக வந்தார். நீ அவர்தான்பகவான் என்று நம்ப – உணர முடியவில்லை அதனால் நீ ஏமாந்து விட்டாய் என்றார் குரு.
பகவான் எப்படி வருவார் அதை அறிய ஞானம் வேண்டும் என்பதை அறிந்தான் சீடன்,
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு

 

இறை வழிபாடு பற்றி சிந்தனை

Standard

இறை வழிபாடு பற்றி சிந்தனை

இறை வழிபாடு என்பது மனித சமுதாயத்தை விலங்கு உணர்விலிருந்து தேவ நிலைக்கு உயர்த்துவதாகும்

இறை வழிபாடு என்பது மக்களிடம் உள்ள பொறாமை,பேராசை, கோபம், புறங்கூறல் போன்ற தீய குணங்களை நீக்குவதாகும்

இறை வழிபாடு என்பது மக்களிடம் அன்பு, கருணை, ஈகை,பெரியோர் வணக்கம், பொறுமை, சாந்தம், முதலிய நற்குணங்களை வளர்ப்பதும், மறந்தும் பிறருக்கு தீமை செய்யாமையுமே ஆகும்

இறை வழிபாடு என்பது இறைமையை நினைந்து நினைந்து இறை மயமாகுவதாகும்,

இறை வழிபாடு என்பது எல்லா உயிர்களிடத்தும் இறைவர் விளங்குகின்றார் என்று உணர்த்துவதே ஆகும்

இறை வழிபாடு என்பது எல்லா உயிர்களையும் தம்முயிர் போலக் கருதுவதே ஆகும்.

இறை வழிபாடு என்பது பிற உயிர்கட்கு துன்பம் உண்டாகாதாவாறு நடத்தலே ஆகும்.

இறை வழிபாடு என்பது ஏழை களுக்கு தவறாமல் உதவுவதே ஆகும்

இறை வழிபாடு என்பது நம்மிடம் உள்ள குறைகளை கண்டு பிடித்து நம்மை நாமே சீர்படுத்திக் கொள்வதே ஆகும்.

இறை வழிபாடு என்பது நடப்பன யாவும் நம்முடைய நன்மைக்கே என்று நினைத்து வாழ்வதே ஆகும்,

இறை வழிபாடு என்பது உலகம் நிலையற்றது, கடவுன் ஒருவரே நிலையானவர் என்று நினைத்து வாழ்வது ஆகும்.

இறை வழிபாட்டின் இரண்டு கண்கள் நேர்மையும், உண்மையும் ஆகும்.

விலங்கு உணர்விலிருந்து மனித சமுதாயத்தை தேவ நிலைக்கு உயர்த்துவது இறை வழிபாடு ஆகும்.

நன்றி : தமிழ் வேதம்

தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

*************************************************

பாவமன்னிப்பு என்ற லாஜிக் 

யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே

மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள்

வேதனைப் படும் இறக்கும் பிறக்கும்மேல் வினையுஞ் செய்யும்

ஆதலான் இவையி லாதான் அறிந்தருள் செய்வ னன்றே. 

இப்பாடல் சிவஞான சித்தியார் எனும் சாத்திர நூற்பா .இப்பாடலின் பொருள் நீங்கள் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அத்தெய்வமாக

அங்கே சிவபெருமான் தான் அருளுவார் ஏனெனில் மற்ற தெய்வங்கள் என்று நீங்கள் சொல்லும் எல்லாமே கருவில் உதித்து இவ்வுலக பிறப்பு இறப்பாகிய வினை அனுபவித்து மரணம் சம்பவித்தவை .கடவுள் அழியாதவர் .ஒரு கருவில் தோன்றி அழியும் ஒருவர் எப்படி கடவுளாகமுடியும் ? நீங்கள் எம்மத கடவுளை வணங்கினாலும் நீங்கள் செய்யும் நல்வினை தீவினைகளுக்கேற்ப 

அருளுபவர் சிவபெருமான் ஒருவரே அவர் ஒருவரே தோற்றமும் முடிவும் இல்லாதவர் .இந்த உடல் அழியும் ஆனால் உயிர் அழிவில்லாதது .எம்மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் பிறவிகள் தோறும் பிறந்து அந்த ஆன்மா பக்குவப்பட்டு சைவ சமயம் சார்ந்து தான் பிறப்பில்லா முக்தி அடைய முடியும் .அதனால் பாவம் செய்து விட்டு மன்னிப்பு கேட்டுவிட்டால் பாவம் போய்விடும் என்றால் டீ சாப்பிடுவது போல களவும் கொலையும் கற்பழிப்பும் இன்னபிற தவறுகளும் மலிந்துவிடும் .பாவமன்னிப்பு என்ற லாஜிக்கே தவறு செய்த பாவத்தை நாம் அனுபவித்தே தீர்க்க முடியும் வேறு புற வாசல் வழியாக தீர்ப்போம் என்றால் அது அண்டப்புளுகு தான்

திரு சி ற்றம் பலம்  

தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

சிவ ஞானியார் – அரதத்தர்

Standard
சிவ ஞானியார் – அரதத்தர்
இன்றைக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் , காவிரியின் வடகரையில் அமைந்துள்ள கஞ்சனூர் என்னும் பாடல் பெற்ற இத்தலத்தில் வைணவர்கள் அதிகமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கெல்லாம் தலைவராக ( ஆசாரியாராக) திகழ்ந்தவர் வாசுதேவர் எனும் அந்தணர். இவருக்கு மகனாக அவதரித்தவர் அரதத்தர்.
வைணவர்களின் விருப்படியே கஞ்சனூரில் உள்ள வரதராசப்பெருமாள் சன்னதியில் தீக்குழி உண்டாக்கி , அதில் இரும்பு முக்காலியை இட்டு பழுக்க காய்ச்சினார்கள். இந்த முக்காலியின் மீது அமர்ந்து ” சிவமே முழுமுதற் தெய்வம் ” ( சிவமே பரம் பொருள்) என்ற அரதத்தர் மூன்று முறை கூறினார். தீக்குழியும் இரும்பு முக்காலியும்தாமரை மலர்போல குளிர்ச்சியாயிருந்தன. அரத்தருக்கு வைணவர்கள் அனைவரும் சைவரானார்கள். இத்தகைய சிவனருட் செல்வரின் வாழ்வில் நடந்த சில அற்புதங்களை தொடர்ந்து காண்போம்.
1. சிவபூசைக்குரிய தண்ணீரை நாய்க்கு அளித்தது.
அன்றாடம் அரதத்தர் வீட்டில் சிவலிங்கம் வைத்து அபிசேகம் செய்து வழிபடுவது வழக்கம். இதனைக் கண்டு வணங்குவதற்கு பலர் வருவார்கள். ஒரு நாள் அரதத்தர் சிவபூசை செய்து கொண்டிருந்தார் அச்சமயம் ஒரு நாய்க்குட்டி அவ்விடத்தில் வந்து தண்ணீர் தாகத்திற்கு நாக்கை நீட்டியது. அரதத்தர் அபிசேக நீரை நாக்கில் விட்டார். நாய்க்குட்டியும் சென்று விட்டது. மீதமிருந்த நீரைத் சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்தார். பூசை முடிந்த பிறகு அங்கு வந்திருந்தவர்களில் ஒருவர் ” ஐயா நாய் அருந்திய மிகுதி நீரை அபிசேகம் செய்யலாமா? ” எனக்கேட்டார்.
” இங்பே நாய் வடிவில் வந்தது சிவபெருமானார். நான் சிவபெருமானாரைக் கண்டேன், தாங்கள் நாயைக் கண்டீர் ” என்றார் அரதத்தர். அந்த அன்பருக்கு சந்தேகம் தீரவில்லை.
அரதத்தர் ” சிவா வருக ” என அழைத்தார், முன்பு வந் நாய்க்குட்டி வந்தது. அதன் மீது அரதத்தர் சிவாயநம என்று சொல்லியவாறு தண்ணீரைத் தெளித்தார். அது சிறிய சிவலிங்கமாக மாறியது. அந்தசிவலிங்கத்தைச் சந்தேகப்பட்ட அன்பரிடம் கொடுத்து ” நாள்தோறும் பூசை செய்து வருக ” எனக் கூறினார்.
2. ஒரு ஏழை அந்தணரின் வறுமை நீக்கியது
கஞ்சனூரில் சதாவிவம் என்ற புரோகிதர் மிகவும் வறுமையில் வாழந்து வந்தார். ஒரு சிறந்த சிவனடியாருக்கு ஒருவேளை உணவு அளித்தால் அவருடைய வறுமை தீரும் என்று சான்றோர்கள் சொன்னது அவர் மனதில் பதிந்து ஒன்று.
அரதத்தரே சிறந்த சிவபக்தர் என்று முடிவு செய்தார். சதாசிவம் அவர்கள் ஒரு நாள் அரதத்தரைத் தம் வீட்டிற்கு அழைத்து உணவு அளித்து மகிழ்ந்தார். அரதத்தரும் நெஞ்சார அவரை வாழ்த்தி விட்டுச் சென்றார்.
அன்று இரவு சோழ மன்னன் கனவில் சிவபெருமானார் தோன்றி ” அன்பனே கஞ்சனூரில் உள்ள புரோகிதர் சதாசிவத்திற்கு அரிசி, ஆடை, பணம் ஆகியவற்றை வேண்டி அளவு அனுப்பி வை ” என்று அருளி மறைந்தார்.
மறுநாள் சோழ மன்னன் கஞ்சனூர் புரோகிதர் சதாசிவத்திற்கு நிறைப் பொருள் உணவுப் பொருட்களையும் புத்தாடைகளுடன் அனுப்பி வைத்தார். ( அடியாருக்கு அளித்து ஆண்டவன் அருள் கிடைத்தது)
” நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடும் பகவதற்கு அது ஆமே ” திருமந்திரம்
திருச்சிற்றம்பல்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி : தமிழ் வேதம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு

 

மரணத்திற்குப் பின் (கற்பனை)

Standard

மரணத்திற்குப் பின் (கற்பனை)

மரண விளிம்பில் 9 அனுபவங்கள்

ரேமண்ட் மூடி தன் ஆராய்ச்சி முடிவில் மரண விளிம்பு அனுபவங்களில் பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்ட ஒன்பது விஷயங்கள் இவை தான்.

1) ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலி கேட்டல்:

ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் மரணம் நெருங்குகிறது உணரும் அந்த நேரத்தில் பலரும் ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியைக் கேட்டிருக்கிறார்கள். அது இனிமையாக இல்லாத ஒருவித அசாதாரண ஒலியாக இருந்தது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது இன்னமும் நமக்கு ஒரு புதிராகவே இருக்கிறது.

2) உடலை விட்டு வெளியேறிய அனுபவம் :

கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் உடலைப் பிரிந்து அந்தரத்தில் மிதப்பது போல உணர்ந்ததாகத் தெரிவித்தார்கள். மருத்துவர்கள் சூழ நின்ற தங்கள் உடலை அவர்கள் தெளிவாகப் பார்க்க முடிந்ததாகத் தெரிவித்தார்கள். அந்த அறையில் மருத்துவர்களும், நர்சுகளும் பேசிக்கொண்டதை அவர்களால் கேட்க முடிந்ததெனக் கூறினார்கள். மருத்துவர்களும், மற்றவர்களும் என்ன செய்தார்கள், என்ன பேசினார்கள் என்பதை அப்படியே அவர்கள் சொன்னார்கள்.

3) அமைதியும் வலியின்மையும் :

மரண சமயத்தில் எத்தனை வலி இருந்தாலும் உடலை விட்டு ஆவி பிரியும் கணத்தில் அந்த வலி மறைந்து விடுகிறது என்றும் பேரமைதி கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

4) சுரங்கவழிப் பாதை அனுபவம் :

பலரும் கும்மிருட்டிற்கு ஒரு சுரங்கவழிப் பாதை வழியாக மின்னல் வேகத்தில் இழுக்கப்பட்டதாகவும் அந்த சுரங்க வழிப் பாதையின் முடிவில் பளிச்சிடும் பொன்னிற அல்லது வெள்ளை நிற ஒளிக்குச் சென்றதாகக் குறிப்பிட்டார்கள். இது ப்ளேடோவின் சிப்பாய் கண்ட அனுபவமாகவும் இருக்கிறது.

5) பூமியைப் பார்த்தல் :

சிலர் சுரங்கவழிப் பாதையில் இழுத்துச் செல்லப்படாமல் மேல் நோக்கி சொர்க்கம் போன்ற இடத்திற்கு வேகமாகப் போவதாய் உணர்ந்ததாகவும் பூமியை விட்டும் வெளியே போய் பூமி அண்டசராசரத்தில் ஜொலிப்பதைப் பார்த்ததாகவும் சொன்னார்கள். இது கார்ல் ஜங் அனுபவத்தோடு ஒத்துப் போகிறது.

6) ஒளி மனிதர்களைக் காணுதல் :

சுரங்கவழிப்பாதையின் இறுதியிலோ, பூமியை விட்டும் விலகிப் போன சொர்க்க பூமியிலோ அவர்கள் உள்ளிருந்து ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மனிதர்களைக் கண்டதாகச் சொல்கிறர்கள். சில சமயங்களில் முன்பே இறந்து போயிருந்த ஒருசில நண்பர்களோ, நெருங்கிய உறவினர்களோ அங்கிருப்பதைப் பார்த்ததாகச் சிலர் சொன்னார்கள்.

7) அருட்பெரும் ஜோதியைக் காணுதல்:

ஒளி படைத்த மனிதர்களைக் கண்ட பிறகு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பிரகாசமான தெய்வீகப் பிறவியைப் பலரும் சொன்னார்கள். ஆனாலும் அப்பேரொளி கண்களைக் கூசும் படியானதாக இருக்கவில்லை என்றும் கூறினார்கள். (புறக்கண்ணால் பார்க்கும் போது மட்டுமே கண்கள் கூசும். அந்தக் கண்களின் உதவியின்றி அந்த ஒளியைப் பார்த்ததால் கூசுவதற்கு வாய்ப்பில்லை என்பது பெரும்பாலானோர் அறிவுக்கு எட்டவில்லை என்கிறார் இன்னொரு ஆராய்ச்சியாளர்)

அந்த தெய்வீகப் பிறவியை மதத்தினர் அவரவர் மதக்கடவுளாகக் கண்டார்கள். சிலர் யேசுகிறிஸ்து என்றும், தேவதை என்றும், பொதுவாக கடவுள் என்றும் சொன்னார்கள். மத நம்பிக்கை இல்லாதவர்களும் ஒளிபடைத்த அபூர்வ சக்தி படைத்த ஒருவரைப் பார்த்ததாகவே கூறினார்கள்.

மேலும் நன்றாக விசாரித்ததில் அந்த பேரொளி விஷயத்தில் அனைவருமே ஒத்துப் போனார்கள். அந்தப் பேரொளியை அவர்களாக அவரவர் கடவுளாக எண்ணிக் கொண்டனர் என்ற முடிவுக்கு ரேமண்ட் மூடி வந்தார். ஆனால் பேரொளி மாத்திரமா என்று கடவுள் நம்பிக்கையோ, மத ஈடுபாடோ இல்லாதவர்களிடம் கூடக் கேட்ட போது அவர்களும் வெறும் பேரொளி மட்டும் அல்ல என்றும் அதற்கு மீறிய தங்களிடம் பேசவல்ல ஒரு சக்தியாக அது இருந்தது என்றும் தெரிவித்தார்கள்.

8) வாழ்ந்த வாழ்க்கையை பரிசீலித்தல் :

அந்த தெய்வீக சக்தி முன் தங்கள் வாழ்க்கை பரிசீலிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். வாழ்க்கையின் மிக முக்கிய கட்டங்கள் திரும்பவும் நடப்பதாக ஒரு சாட்சி போல், திரையில் காண்பது போல் தத்ரூபமாகக் கண்டதாகவும் சொன்னார்கள். கிட்டத்தட்ட கிறிஸ்துவர்களின் நியாயத் தீர்ப்பு நாள் அல்லது இந்துக்களின் சித்திரகுப்தன் கணக்கு படித்தல் போல் இது இருப்பதாகத் தோன்றுகிறதல்லவா?

9) வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவிக்கப்படல் :

அந்த தெய்வீகப்பேரொளியுள்ள தேவதையோ, தெய்வமோ வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவித்தது போல் கிட்டத்தட்ட அனைவரும் தெரிவித்தார்கள். திரும்பிப் போகும்படி கூறப்பட்டதாக சிலரும், தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்கள் இனியும் உள்ளன என்று தாங்கள் அந்த நேரத்தில் தீவிரமாக எண்ணியதாகச் சிலரும் சொன்னார்கள்.

இந்த கருத்துப் பரிமாற்றங்கள் யாவும் அவரவர் தாய்மொழியில் பேசப்பட்டதாக அவர்கள் எவரும் எண்ணவில்லை. ஆனாலும் கருத்துப் பரிமாற்றம் நடந்துள்ளது என்பதை ஒத்துக் கொள்ளும் அவர்களுக்கு அதை எப்படி என்று விவரிக்கத் தெரியவில்லை.

1975க்கு பின் பல நாடுகளிலும் இந்த மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் நடைபெற ஆரம்பித்தன. அதில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முன்னிடம் வகுத்தன. டாக்டர் கென்னத் ரிங் (Dr. Kenneth Ring) என்பவரும் இந்த ஆராய்ச்சிகளை பல வருடங்கள் செய்து 1993 ஆம் ஆண்டு தன் ஆராய்ச்சி முடிவுகளை விரிவாக வெளியிட்டார். அவருடைய ஆராய்ச்சிகளில் சிலர் அருகில் நடந்த சம்பவங்கள் மட்டுமன்றி மிகத் தொலைவில் நடந்த அவர்களுக்கு மிக நெருக்கமான நபர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களையும் பார்த்தார்கள், கேட்டார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார். இது மனிதர்களுடைய அறிந்துணரும் திறன் அவர்கள் உடல்களுக்கு அப்பாற்பட்டதற்கான அசைக்க முடியாத ஆதாரம் என்று அவர் கூறுகிறார்.

டாக்டர் கென்னத் ரிங், ஷரான் கூப்பர் (Sharon Cooper)என்பவரோடு சேர்ந்து இரண்டாண்டு காலம் குருடர்கள் பெற்ற மரண விளிம்பு ஆராய்ச்சிகளை ஆராய்ந்திருக்கிறார். அதில் சில பிறவிக் குருடர்கள் கூட தங்கள் உடல்லை விட்டுப் பிரிந்த பின் எல்லாவற்றையும் தெளிவாகக் கண்டதை விவரித்ததாகச் சொல்கிறார். இது போன்ற ஆராய்ச்சிகளை பிற்காலத்தில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் (Dr. Bruce Greyson), டாக்டர் பிம் வான் லோம்மெல் (Dr. Pim van Lommel), டாக்டர் மைக்கேல் சாபொம் (Dr. Michael Sabom) போன்றவர்களும் செய்து டாக்டர் ரேமண்ட் மூடியின் ஆராய்ச்சி முடிவுகளை உறுதி செய்தனர்.

அவர்களில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் இன்னும் ஒருபடி மேலே போய் மரண விளிம்பு அனுபவத்தின் போது மயக்க மருந்தின் தாக்கத்தில் சம்பந்தப்பட்ட மனிதர் இருந்தாரா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டார். ஒருவேளை சிகிச்சையின் போது தரப்பட்ட மயக்கமருந்தின் தாக்கத்தால் கற்பனைக் காட்சியைக் காண்கிற நிலை இருக்கிறதா என்றும் உறுதிப்படுத்திக் கொள்ள எண்ணினார். ஆனால் மயக்க மருந்து ஆதிக்கத்தில் இல்லாத நபர்கள், மயக்க மருந்து ஆதிக்கத்தில் இருந்தவர்களை விட அதிகத் தெளிவுடன் அந்த நிகழ்ச்சிகளை விவரிக்க முடிந்ததைத் தன்னால் அறிய முடிந்தது என்றும் கூறினார்.

இந்த அனுபவங்களின் ஆராய்ச்சிகள் புலன்வழியல்லாமலேயே மனிதர்களால் உடலை விட்டு நீங்கும் போது பார்க்க, பேச, கேட்க, உணர முடிகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன அல்லவா? எல்லாராலும் அப்படி உடலை விட்டுப் பிரிகிற போது அடைய முடிகிற இந்த அபூர்வ சக்தி மனித உடலில் உள்ள போதே சித்தர்கள், யோகிகள், அபூர்வ சக்தியாளர்கள் ஆகியோரால் அடைய முடிகிறது. ஏனென்றால் அவை மனிதனுக்கு இயல்பாகவே அறிய முடிகிற சக்திகள். உடலுக்குள் புகுந்த பின் ஐம்புலன்கள் வழியாகவே அறிய ஆரம்பித்து இந்த இயல்பான அபூர்வ சக்திகளை உபயோகிக்காததால் அவன் இழந்து விடுகிறான். முறையாக முயற்சித்தால், பயிற்சி செய்தால் இழந்ததை அவன் மறுபடி பெற முடிவதில் வியப்பென்ன இருக்கிறது?

இந்து சமயத்தின் மடியில் வளர்ந்த பௌத்த சமயமும் சமண மதமும் இந்து வேதங்களில் கூறப்பட்ட சில விடயங்களுக்கு முரண்பாடான கருத்துக்களை கொண்டவையாயினும், மறுபிறப்பையும் கர்மாவையும் தமது ஆதார தத்துவங்களாக ஏற்றுக் கொண்டவை. கிறிஸ்துவுக்கு முன் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து நதிப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்களின் வழிபாட்டு முறைகளை ஆராயுமிடத்து, அவர்கள் மறுபிறப்பில் நம்பிக்கையுடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று அறியக் கிடைக்கின்றது.

கிறிஸ்துவுக்கு முன் 6 ம் நூற்றாண்டில் கிரேக்க தேசத்தில் பரவியிருந்த ஆர்பியஸ் வழிபாட்டு மரபில் (Orphic Cult) மனிதன் பிறப்புகள் தோறும் ஆன்மீக உயர்வு பெற்று இறுதியில் பிறப்பு – இறப்பிலிருந்து விடுதலை பெறுகிறான் என்ற நம்பிக்கை இருந்து வந்தது. இந்து மதத்துக்கே உரியதான இந்த தத்துவம் இந்தியாவுடன் தொடர்பு வைத்திருந்த அக்காலத்து கிரேக்க வணிகர்களால் அங்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.
ஆதிகால கிரேக்க சமய மரபுகள் (Greek Gnosticism) இந்து சமய நம்பிக்கைகளை ஒத்திருக்கக் காணப்படுகின்றன. எம்பிடொக்கில்ஸ், பைதகொறஸ் போன்ற பேரறிஞர்கள் மறுபிறப்புத் தத்துவத்தை மக்கள் மத்தியில் கூறிவந்தார்கள். இவர்களைத் தொடர்ந்து பிளாட்டோவும் மறுபிறப்பு நம்பிக்கையை வலியுறுத்தினார்.

யூதர்களின் வழிகாட்டியும், அவர்களின் சமயக் கோட்பாடுகளுக்கு ஆரம்ப வித்திட்டவருமான மோசஸ் பரப்பிய “கபாலா” தத்துவம் மறுபிறப்பை ஏற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் பின்னால் வந்த “மிஷ்னா”, “தல்முட்” என்ற யூத போதனைகளில் இத்தத்துவம் ஏனோ வலியுறுத்தப்படவில்லை. ஆரம்பகால கிறிஸ்தவ தத்துவங்களிலும் சிந்தனைகளிலும் மறுபிறப்பு நம்பிக்கையின் பிரதிபலிப்புகள் இருந்ததென்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

கி.பி. 538 – ம் ஆண்டின் கான்ஸ்டான்ட்டினோபிளில் நடைபெற்ற மகாநாட்டில் (Council of Constantinople) தான் முதல் தடவையாக ஜஸ்ரீனியன் என்ற பேரரசன் மறுபிறப்பில் நம்பிக்கை வைப்பது திருச்சபைக்கு இழிவு ஏற்படுத்தும் செயல் (Anathema) என்று சட்ட மூலமாகப் பிரகடனப்படுத்தினான்.

மனிதன் முக்தியடையும் வரை அவனுடைய ஆத்மா பிறப்பெடுத்துக் கொண்டேயிருக்கும் என்று இந்து சமயம் புகட்டுகிறது.

கி.மு. 5 – ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க சரித்திர ஆசிரியர் ஹெறோடொட்டுஸ் (Herodotus) என்பவர் “எகிப்தியர்கள் மறுபிறப்பில் நம்பிக்கையுடையவர்களாக இருந்தனர் மனிதனின் ஆத்மா அழிவற்றது. மனிதன் இறந்தவுடன் இன்னொரு உடலினுள் அவனுடைய ஆத்மா புகுந்து விடுகிறது என்று நம்பினார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

அலெக்சாந்திரியாவின் கிளமேந்து என்னும் போப்பாண்டவர் (2ம் நூற்றாண்டு) அதேகாலத்துப் பேரறிஞர் ஓறிஜின் ஆகியோரும் மறுபிறப்பு தத்துவத்தில் தமக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள்.

ஜெருசலத்தில் பிரம்மாண்டமான தேவாலயத்தை நிறுவிய இஸ்ரவேல் நாட்டின் புகழ்பெற்ற மன்னன் சாலமன் (கி.மு 970 – 933) வெளியிட்ட “அறிவுக்களஞ்சியம்” (book of wisdom) என்ற தனது நூலில் “நான் நல்லவனாயிருந்ததால் எனது ஆத்மா ஒருநல்ல உடலில் புகுந்து கொண்டது” என்று கூறியுள்ளார்.

மேற்கு நாட்டு அறிஞர்கள் பலர் மறுபிறப்பில் தமக்கு உண்டான நம்பிக்கையை தங்கள் நூல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள். இவர்களில் இங்கிலாந்தைச் சேர்ந்த Samuel Alexander (1859 – 1939) பிறான்ஸ் தேசத்தைச் சேர்ந்த Henri Bergson (1859 – 1941) ஆகியோர் முக்கியமானவர்கள். அமெரிக்கப் பேரறிஞர் எமேர்சனும் (1803 – 82) மறுபிறப்புத் தத்துவத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த டாக்டர் இவான்ஸ் வென்ஸ் (Dr. Evans Ventz) ஒரு ஞான ஆராய்ச்சியாளர். இவர் 1958-ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் உரையாற்றிய பொழுது, “இன்னும் ஐம்பது வருடங்களில் விஞ்ஞானிகள் மறு பிறப்புத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டுவிடுவார்கள்” என்று கூறினார். இன்றைய சமுதாயம் விஞ்ஞான அடிப்படையில் ஆய்ந்தறிந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத எதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் சுபாவமுடையது. இருந்தும் இறப்புக்குப் பின் ஏதோவொரு வகையில் மனித வாழ்வு தொடர்கின்றது என்ற நம்பிக்கை இப்போது உலக மக்கள் மத்தியில் பரவலாக நிலை பெற்றுவிட்டது.

கடவுளை நம்புகிறவர்களுக்கு கர்மாவிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை வைப்பது தவிர்க்க முடியாததாகின்றது.

ஆக எதுவா இருந்தாலும் இருக்கற போது மத்தவங்களுக்கு தொல்ல கொடுக்காதீங்க பாஸ். அப்பத்தான் நாம ஆப்பு வாங்காம இருப்போம்.

யோகா முத்திரைகள்

Standard

யோகா முத்திரைகள்

முத்திரை யோகம் கதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.
சித்தா, ஆயுர்வேதம் மற்றும்

யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த ஐம்பூதங்கள் ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் ஆகியனவாகும். இதில் ஆகாயம் “ஈதர்” என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கப தத்துவமாக சொல்லப்படுகிறது. காற்று உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து உடலில் வாதத் தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. தீ பித்தம். வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த ஐம்பூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன.

1. கட்டைவிரல் – தீ
2. ஆள்காட்டி விரல் – காற்று
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – நிலம்
5. சுண்டுவிரல் – நீர்.

இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.

முத்திரைகளை பயிலும் முறை

1. “பத்மாசனம்” போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.
2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.
3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு “சூன்ய முத்திரை”. இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.
4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.
5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.
6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.

முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில

1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.
பயன்கள் – களைத்த உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.
2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.
பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி ‘பிராண முத்திரையுடன் செய்தால்’ தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.
3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.
பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சளியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.
4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.
5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.
6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.
7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.
பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.
8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.
பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.
9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.
பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.எச்சரிக்கை

1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.
2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.
11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.
பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.
12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.
பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.

நமது பழங்கால முனிவர்ககளும் சித்தரகளும் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்.

நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன

1. கட்டைவிரல் – தீ
2. ஆள்காட்டி விரல் – காற்று
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – நிலம்
5. சுண்டுவிரல் – நீர்.
இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.