ஈசனின் அருள்

Standard

ஈசனின் அருள் இல்லையேல் வெற்றி காணமுடியாது அவனிடம் நம்பிக்கை வைத்தால்தான் அவனருள் நமக்குக் கிடைக்கும்
பக்தர்கள் எதைக் கொடுக்கிறார்கள் என்று ஈசன் பார்ப்பதில்லை என்ன நோக்கத்தோடு கொடுக்கிறார்கள் என்றுதான் பார்க்கிறார்கள்
சிவலிங்கத்தின் மேல் கல்லை விட்டெறிந்த சாக்கிய நாயனருக்கு அருள் பாலித்தார்
அவர் மேல் மலரை எறிந்த மன்மதனுக்கு மரணத்தை அளித்தார்
அவர் நம்மிடம் இலை மலர் கனி நீர் ஆகியவற்றைத்தான் எதிர்பார்க்கிறார் அவற்றை பக்தியோடு அளிக்க வேண்டும்
அவர் நமக்களித்துள்ள அறிவை ஈசனின் புகழ் பாடி அவரை அடைய பயன்படுத்த வேண்டும் வெற்றி எல்லாருக்கும் கிடைப்பதில்லை,ஆனால்
வெற்றி பெற கூடிய தகுதி எல்லாருக்கும் உண்டு…..
அடைத்திட்ட வாசலின் மேல்மனம் வைத்துப்
படைத்தவன் தன்னையே பார்.. அன்பே சிவம்….

Advertisements
Standard

இன்று (30.11.15) – கார்த்திகை இரண்டாம் சோமவாரம்

சோமவார விரதம் ஈசனுக்குரிய அஷ்ட மகா விரதங்களுள் ஈசனுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக் கூடியது என புராணங்கள் குறிப்பிடுகின்றன.

சோமவார விரத கதை – 1 :

பிரஜாபதி தட்சனுக்கு மொத்தம் அறுபது பெண்கள். அவர்களுள் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திர கன்னிகளும் சந்திரனை மணமுடிக்க விரும்பி தவமிருந்து தட்சனின் ஆசிகளோடு அவரை திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் நடந்த புதிதில் சந்திரன் எல்லோரிடமும் அன்பாகவே நடந்து கொண்டான். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவன் ரோஹிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி மற்றவர்களை ஒதுக்கத் தொடங்கினான்.

இதனால் கோபம் கொண்ட மற்ற இருபத்தாறு மனைவிகளும் சந்திரனின் மீது கோபமும் ரோகிணியிடம் பொறாமையும் அசூசையும் கொண்டு தங்களது தகப்பனாரிடம் முறையிட்டனர்.

இதைக்கேட்ட தட்சன், சந்திரன் அவனது வாக்குறுதியை மீறுவதைப் பார்த்து தன் மக்களின் நிலை கண்டு வருத்தமும் கோபமும் கொண்டான்.

எனவே அவர் சந்திரனைப் பார்த்து தன் இருபத்தியேழு பெண்களையும் சமமாகப் பாவித்து அனைவரிடமும் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சந்திரன் அப்போதைக்கு அதை ஒப்பு கொண்டாலும் மீண்டும் அவன் அதே போலவே நடக்கத் தொடங்கினான். நிலை பொறுக்காத மற்ற பெண்கள் மீண்டும் தட்சனிடம் முறையிட்டனர்.

சந்திரன் அவனது வாக்குறுதியை மீறுவதைப் பார்த்து தன் மக்களின் நிலை கண்டு வருத்தமும் கோபமும் கொண்டான் தட்சன். தன் பெண்கள் கண்ணீரும் கம்பலையுமாய் நிற்பதைப் பார்த்த தட்சனுக்கு கோபம் அதிகரித்தது.

கோபம் கொண்ட தட்சன், அவனுக்கு கொடிய நோய் தோற்றி அழகு மற்றும் தேஜஸ் அனைத்தையும் இழக்க சாபமிட்டார். இதனால் சந்திரன் மிகவும் பலவீனமாகி, அழகை இழந்து மிகுந்த துன்பத்திற்குள்ளானான்.

சந்திரன் தேவர்களிடம் முறையிட அவர்கள் அவனை பிரமனிடம் அழைத்துச் சென்றனர்.பிரம்மன் சந்திரனுக்கு அறிவுரை கூறி புண்ணியத் தலமான பிரபாசத்திற்குப் போய் பரமசிவனை வணங்கினால் அவர் அவனது குறையை நீக்குவார் என்று கூறி மறைந்தார் .

சந்திரனும் உடன் பிரபாசத்திற்கு சென்று சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து மிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரித்து இந்த சோமவார விரதம் பின்பற்றி ஈசனை வணங்கினான்.

சந்திரனின் பக்தியில் நெகிழ்ந்த சிவன் அவனுக்கு அருள் புரிய திருவுள்ளம் கொண்டார். எனவே ,ஒரு மாதத்தில் பதினைந்து நாட்கள் சந்திரனின் கலைகள் குறைந்து மீதிப் பதினைந்து நாட்களில் அது மீண்டும் வளர பரமன் அருள் புரிந்து அவனை அவரது சிரசில் சூடி சந்திரசேகரர் / சோமசுந்தரர் ஆனார்.

ஓம் நமசிவாய

காஞ்சி கருணைக்கடல்

Standard

காஞ்சி கருணைக்கடல்
இந்துமத தத்துவங்கள் பற்றி வேதங்களில் கூறிய விதிகள், சாஸ்திரங்கள் கூறும் யுத்திகள் பற்றி காஞ்சி பெருயவர் கூறிய யுத்திகள்

மதச்சின்னங்கள்
மானிட வாழ்விற்கான அவசியங்கள் மற்றும் முக்கியத்துவம் பற்றியும், காலப்போக்கில் அதன் வளர்ச்சி்க்கு ஏற்ற மாற்றம் ஏற்பட்டாலும், அச்சின்னங்களால் ஏற்படும் முக்கியத்துவம் அவசியமாகிறது.
இந்து சைவ மதத்தின் அடையாளங்களாவன; நெற்றில் விபூதி, கழுத்தில் ருத்திராட்சம், சடாமுடி, திருஐந்தெழுத்து நாமம்

விஷ்ணு மதத்திற்கு நெற்றியில் திருமஞ்சன நாமம், துளசி மாலை, வேதங்கள் பயின்றதன் பொருள் உணர்த்தும் தலைகுடுமி,

கிருஸ்துவ மதத்தினர், சிலுவை மாலை
முஸ்லீம் மதத்தினர் முகத்தில் காணும் குறும்தாடியும் தலைப்பாகையும்

அவரகள் அணியும் சமய அடையாளங்களினால் அவரவர்கள் தன் மதத்தின் மேல் கொண்ட மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்பதில் அதன் சின்னங்களே விளக்கும், வைதிகம் மனம் சார்ந்ததா? உடை சார்ந்ததா? என்பதல்ல, அதன் பயன்கள் தரும் நன்மைகளே நமக்கு பாதுகாப்பு,
பெண்கள் அணியும் குங்கும் அவரகளுக்கான மங்கள தத்துவத்தையும், சுமங்கலி என்ற அடையாளத்தையும் நமக்கு காட்டுகின்றன. அவை ஆன்மீக தத்துவத்தை விளக்கினாலும், கெட்ட செயல்கள், துர்ஆவிகள் சம்பந்தமான தீய செயல்களிலிருந்து அவரகளை காப்பாற்றும் சக்தியையும் அளிக்க வல்லன.

தற்கால கட்டத்தில் பள்ளிகளுக்கு சீருடையும், காவல்துறை மற்றும் அந்தந்த துறைகளுக்கான அடையாள சீருடைகளும் மற்ற அடையாளங்களும் அதன் முக்கியத்துவத்தை விள்க்குவதை நாம் அனுதினமும் காணலாம்

நம் ஆத்மா மூன்ற லோகங்களை அடையும் வல்லமை பெற்றது.
1. பூலோகம் / தற்போது நாம் வாழும் லோகம்
2, தேவலோகம்/ இது சொர்க்கலோகம், வைகுண்டலோகம், சிவலோகம், எமலோகம், என்ற புண்ணியலோகமாகும்
3. நரகலோகம்/ இது நாம் பூலோகத்தில் நாம் பண்ணிய பாவ கர்மங்களால் நமக்கு கிடைக்கும் தண்டனை லோகமாகும்.
இந்த மூன்று லோகங்களிலும் சிறந்தது நாம் வாழு்ம் இந்த பூலோகமே என்கிறார் பெரியவர்,
ஏனெனின், இங்கு தான் நாம் நல்லதோ அல்லது கெட்டதோ அவரவர் இஸ்டத்திற்கு செயல்பட வாய்ப்பு உள்ளது இங்கு நாம் செய்யும் பாவ புண்ணிய ெசயல்களுக்கு தக்க நமக்கு மற்ற இரு லோகங்களும் கிடைக்கும், மேலும் நம் ஆன்மிக அருளாளர்கள் இவ் லோகத்தில் மீண்டும்மீண்டும் பிறவா நிலையும் வேண்டும் என்கிறார்கள், அவ்வாறு பிறந்தால் இறைவரை மறவா நிலை வேண்டும் என்றனா்.

இவ் பூலோக வாழ்வில் மானிட பிறவி, மாயையிலிருந்து விடுபட, இனியும் பிறவா நிலை பெற, பூலோக வாழ்வில் ஈ்டேற ஆத்மாவிற்கு எட்டு குணங்கள் வேண்டும் என்கிறார்.
அவை ;
1. தயை / ஈகை. என்ற பிறஉயிர்களிடத்தில் காட்டும்அன்பு
2.சாந்தி / அமைதி என்ற ஆரவாரம் அற்ற குணம்
3.அனுசூயை / பொறாமையற்ற குணம்
4.செளதம் / சுத்தம் புறஉடல் சுத்தம் அக சுத்தம்
5.மங்களம் / அமங்கலமற்ற, நல்ல செயல், பேச்சு
6.அனாயகம் / எதிலும் பதட்டமற்ற குணம்
7.அகார்ப்பம் / தாராள குணம், கஞ்சத்தனமற்ற குணம்
8.அப்பிரஹா / ஆசையற்ற குணம்

இவ் பூலோக வாழ்வில் நம் ஆத்மாவிற்கு மேற்கண்ட எட்டு குணங்கள் கொண்டு வாழ்ந்து வந்தால் இனி இந்த லோகத்தில் பிறவா நிலையும் தேவலோகம் அடையலாம் என்கிறார்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை

சிறப்புலி நாயனார் புராணம்

Standard

சிறப்புலி நாயனார் புராணம்

“சீர்கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்.”

“திருவைந்தெழுத்தை ஓதித் தாம் புரிந்த வேள்வியைச் சிவபெருமானுக்கே தத்தம் செய்த மறையவர்.”

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்..

“ஆலை சூழ் பூகவேலி அத்திரு ஆக்கூர் தன்னில்
ஞாலமார் புகழின் மிக்கார் நான்மறைக் குலத்தில் உள்ளார்
நீலமார் கண்டத்து எண் தோள் நிருத்தர்தம் திருத்தொண்டு ஏற்ற
சீலராய்ச் சாலும் ஈகைத் திறத்தினில் சிறந்த நீரார்.”

பாடல் விளக்கம்:-
கரும்பு ஆலைகளைச் சூழ்ந்திருக்கும் பாக்கு மரங்கள் வேலி என அமைந்திருக்கின்ற அத்திருவாக்கூரில், உலகில் நிறைந்த புகழால் மிக்கவரும், நான்மறைகளையும் ஓதும் குலத்தில் தோன்றிய வரும், நஞ்சுண்ட கழுத்தையும் எட்டுத் தோள்களையும் உடைய கூத்தப் பெருமானின் தொண்டினை மேற்கொண்டு ஒழுகி வருபவரும் ஆக வாழ்பவர் சிறப்புலி நாயனார் ஆவர்.

சிறப்புலி நாயனார் புராணம்

இறைவன்: தான்தோன்றியப்பர்

இறைவி: வாள்நெடுங்கண்ணீ

அவதாரத் தலம்: ஆக்கூர்

முக்தி தலம்: ஆக்கூர்

குருபூசை நாள்: கார்த்திகை – பூராடம்

பொன் கொழிக்கும் பொன்னி வளநாட்டிலே திருவாக்கூர் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள தூயமலர்ச்சோலை, சுடர்தொடு மாடங்களிலும் மாமழை முழக்கம் தாழ மறையொலி முழக்கம் ஓங்கும். அகிற்புகையும், வேள்விச் சாலையிலிருந்து எழும் ஓமப்புகையும் விண்ணும், மண்ணும் பரவும். எம்பெருமானின் திருநாமம் எந்நேரமும் ஒலிக்கும். இத்தகைய மேன்மை மிக்கத் திருவாக்கூர் தலத்தில் நான்மறை ஓதும் அந்தணர் மரபிலே சிறப்புலியார் என்னும் நாமமுடைய சிவனடியார் அவதரித்தார்.

இவர் இளமை முதற்கொண்டே திருசடைப் பெருமானிடத்தும், திருவெண்ணீற்றன்பர்களிடத்தும் எல்லையில்லாப் பேரன்பு கொண்டிருந்தார். தினந்தோறும் திருவைந்தெழுத்தினை முக்காலமும் நியமமாக ஓதி முத்தீயினை வளர்த்து ஆனேறும் பெருமானை வழிபட்டு வந்தார். இவர் எண்ணற்ற வேள்விகளை சிவாகம முறைப்படி நடத்தி வந்தார்.

அத்தோடு சிறப்புலி நாயனார் விருந்தோம்பல் இலக்கணமறிந்து சிவனடியார்களை அமுது செய்வித்து அகம் குளிர்ந்தார். இவர் காட்டி வந்த ஈடு இணையற்ற அன்பினாலும் நெறி தவறாத அறத்தினாலும் பிறரால் தொழுவதற்குரியவரானார். இவ்வாறு கொன்றை வேணியர்க்குத் திருத்தொண்டுகள் பல புரிந்து வந்த இச்சிவனருட் செல்வர், நீண்ட காலம் நிலவுலகில் வாழ்ந்தார். எம்பெருமானின் திருவடி நிழலை அடைந்து வாழும் நிலையான பேரருளினைப் பெற்றுப் புகழுற்றார்.

குருபூஜை: சிறப்புலியார் நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் பூராடம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

“அறத்தினில் மிக்க மேன்மை அந்தணர் ஆக்கூர் தன்னில்
மறைப் பெரும் வள்ளலார் வண் சிறப்புலி யார் தாள் வாழ்த்திச்
சிறப்புடைத் திருச் செங்காட்டங் குடியினில் செம்மை வாய்த்த
விறல் சிறுத் தொண்டர் செய்த திருத்தொழில் விளம்பல் உற்றேன்.”

பாடல் விளக்கம்:-
சிவ அறங்களில் மேன்மை மிக்க அந்தணர் வாழும் திருவாக்கூரில் தோன்றிய வேதியரான வண்மையுடைய அச்சிறப்புலி யாரை வாழ்த்தி, திருச்செங்காட்டங்குடியில் செம்மையால் திளைக்கும் சிறுத்தொண்ட நாயனாரின் திருச்செயலைக் கூறப் புகுகின்றேன்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் திரு தில்லை இளந்தென்றல்

“ஓம் நமசிவாய…! சிவாய நம ஓம்…!”

“திருச்சிற்றம்பலம்” “திருச்சிற்றம்பலம்” “திருச்சிற்றம்பலம்”

தினமும் ஒரு திருவாசகம்

Standard

தினமும் ஒரு திருவாசகம்

தினமும் ஒரு திருவாசகம் மாணிக்கவாசகர் அருளியது

திருக்கழுக்குன்றத்து பதிகம்

பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
மான்உன் நாமங்கள் பேசுவார்க்
கிணக்கி லாததோர் இன்ப மேவருந்
துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கி லாததோர் வித்து மேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே

பொழிப்புரை:

பெருந்துறைப் பெருமானே! உன் திருப் பெயர்களைப் புகழ்ந்து பேசுவோர்க்கு ஒப்பற்ற ஆனந்தமே! என் இருவினை ஒத்தபிறகு, என் பிறவி வித்து இனிமேல் முளையாதபடி,
ஓர் வித்து – உலர்த்தப் படாத ஒரு விதை; `ஒன்று` என்பது, ஒருவகையைக் குறித்தது. `விளையாமையை ஒத்தபின்` என இயையும். `விளையாமல்` என்பது பாடமன்று. விதைகள் யாவும் விளைவின் பின்னர் ஈரம் புலர உலர்த்தப்பட்ட பின்பே முளையைத் தோற்றுவித்தற்குரிய பக்குவத்தை எய்தும்; அவ்வாறின்றி ஈரத்தோடே நிழலிலே கிடப்பின், அதன்கண் உள்ள முளைத்தற் சத்தி கெட்டொழியும். அவ்வாறே செய்யப்பட்ட வினையாகிய ஆகாமியம் அதன்கண் மேலும்மேலும் நிகழும் விருப்பு, வெறுப்புக்களால் முறுகி நின்ற வழியே பின்னர்ப் பிறவியைத் தோற்று விக்கும். இவ்விருப்பு வெறுப்புக்கள் அஞ்ஞானத்தால் நிகழ்வன. இறைவன், அருளிய ஞானத்தில் உறைத்து நிற்பின், அஞ்ஞானங்கெட, விருப்பு வெறுப்புக்கள் எழமாட்டா. அவை எழாதொழியவே, ஒரோ வழிப் பயிற்சி வயத்தால் செய்யப்படும் ஆகாமிய வினை முறுகிநின்று பின்னர்ப் பிறவியைத் தோற்றுவிக்கமாட்டாது கெட்டு விடுமாகலின், “என்வினை உணக்கிலாததோர் வித்து மேல்விளையாமையை ஒத்தபின்“ என்று அருளிச்செய்தார். நீ திருக்கழுக் குன்றிலே எழுந்தருளி உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ;வை.பூமாலை

திருநாவுக்கரசர் தேவாரம்

Standard

சுண்ண வெண்சந்தனச் சாந்தும் – பாடல் 8

திருநாவுக்கரசர் தேவாரம்

ஆடல் புரிந்த நிலையும் அரையில் அசைத்த அரவும்
பாடல் பயின்ற பல் பூதம் பல்லாயிரம் கொள் கருவி
நாடற்கு அரியதோர் கூத்தும் நன்குயர் வீரட்டம் சூழ்ந்து
ஓடும் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

அரங்கிடை நூலறிவாளர் அறியப்படாததோர் கூத்து என்று ஆறாவது பாடலில் கூறிய அப்பர் பிரான், இந்த பாடலில் பல்லாயிரக் கணக்கான இசைக் கருவிகள் சேர்ந்தாலும் சிவபிரானின் கூத்திற்கு இசைய வாசிக்க இயலாது என்று அவரது கூத்தின் பெருமையைக் கூறுகின்றார்.

பொழிப்புரை

எப்போதும் திருக்கூத்து ஆடிய நிலையில் விருப்பத்துடன் இருப்பவரும், தனது இடுப்பில் இறுக்கமாகக் கட்டிய பாம்பினை உடையவரும், பாடல்கள் பயின்ற பல பூதங்கள் ஆயிரக்கணக்கான கருவிகள் கொண்டும் அறியமுடியாதபடி கூத்தினை ஆட வல்லாரும், உயர்ந்த மதில்களைக் கொண்ட அதிகை வீரட்டத்தில் உள்ள கோயிலைச் சூழ்ந்து ஓடும் கெடில நதியை தீர்த்தமாக உடையவரும் ஆகிய சிவபிரானின் அடியவனாகிய ஆகிய நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை

தொகுப்பு வை.பூமாலை

பன்னிரு திருமுறைகள் பற்றி சிறிய குறிப்பு

Standard

பன்னிரு திருமுறைகள் பற்றி சிறிய குறிப்பு

பல சங்க இலக்கியங்களில், கடவுள் வாழ்த்துப் பகுதியிலும், மற்ற பல இடங்களிலும், சிவபெருமானைப் பற்றிய குறிப்பு காணப்பட்டாலும், முழுவதும் சிவபெருமானின் புகழை எடுத்துரைக்கும் நூல்கள் ஏதுமில்லை.

சமண, புத்த சமயங்கள் ஓங்கி நின்று, இந்து சமயம் நலிவுற்ற நிலையில், சைவ சமயம் தழைத்தோங்க, இறைவனின் அருளால், கி.பி. ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் எழுந்தவை தேவாரப் பாடல்கள். இறைவனுக்கு சூட்டப்பட்ட சொல் மாலைகள் என்ற பொருள் பட, தேவாரம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்தப் பாடல்கள், திருஞானசம்பந்தர், அப்பர் என்கிற திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் அருளப்பட்டன.

இவர்கள் ஒவ்வொருவரும், ஆயிரக்கணக்கில் பாடல்கள் அருளினார்கள் என்று கருதப்படுகிறது. ஆனால், தேவாரப் பாடல்களை சிதம்பரம் திருக்கோயிலில் நம்பியாண்டார் நம்பி கண்டெடுத்தபோது, மிகவும் குறைவான பாடல்களே கிடைத்தன. எஞ்சியவை செல்லரித்துக் காணப்பட்டன. கிடைத்த தேவாரப் பதிகங்களை, பாடல்களுக்கு உரிய பண்ணின் முறைப்படி, முதல் ஏழு திருமுறைகளாக அவர் வகுத்தார்.

திருஞானசம்பந்தர் அருளிய 383 பதிகங்கள் (4147 பாடல்கள் கொண்டவை), முதல் மூன்று திருமுறைகளாகவும், அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் அருளிய 312 பதிகங்கள் (3065 பாடல்கள் கொண்டவை) நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் திருமுறைகளாகவும், சுந்தரர் அருளிய 100 பதிகங்கள் (1026 பாடல்கள் கொண்டவை) ஏழாம் திருமுறையாகவும், வகுக்கப்பட்டன.

பின்னர் திருவாசகம் மற்றும் திருக்கோவையார் (எட்டாம் திருமுறை), திருவிசைப்பா திருப்பல்லாண்டு (ஒன்பதாம் திருமுறை) திருமந்திரம் (பத்தாம் திருமுறை), காரைக்கால் அம்மையார் போன்றோர் அருளிய பல வகையைச் சார்ந்த பாடல்கள் (பதினோராம் திருமுறை), பெரிய புராணம் (பன்னிரண்டாம் திருமுறை) என்று சேர்க்கப்பட்டு, இந்த சைவ இலக்கியங்கள் ‘பன்னிரு திருமுறை’ என்று பொதுப் பெயரால் அழைக்கப்படுகின்றன.

கருத்தாழம் மிக்க தேவாரப் பாடல்களை, பொருள் உணர்ந்து அனைவரும் பாட வேண்டும் என்ற எண்ணத்தில், தினம் ஒரு தேவாரப் பதிகம் என்ற இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடல்களின் எளிய பொருள்கள், தேவையான இடங்களில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டு, தினமும் ஒரு தேவாரப் பாடலாக வெளியிடப்படுகிறது.
தினமும் ஒரு தேவாரம், தினம் ஒரு திருவாசகம், மற்றும் தினம் ஒரு திருப்புகழ் வீதம் என்னால் முயன்றவாறு தொகுத்து வழங்கப்படுகிறது
ஆன்மீக அன்பர்கள் தினமும் அந்த இறைவனை நினைக்க இது மூலம் எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமென எண்ணுகிறேன். தினமும் அவன் புகழை நினைக்க, படிக்க,
அருளாளர்கள் கூற்றிற்கிணங்க வணங்க வழி கிடைக்கு மென எண்ணுகிறேன்.
திருச்சிற்றம்பலம்