சிவஞானபோதம் சிந்தனைகள் சில…

Standard

சிவஞானபோதம் சிந்தனைகள் சில…Image description

 
சிவஞானபோதம் இன்று நம் கைகளில் இருப்பது எப்படி ? சிவஆகமங்கள் எங்கிருந்து நமக்கு வந்தது ?
சைவ சமயம் அரிய பெரும் அளவிலா ஞானமுடைத்து என்பதை நாம் அறிவோம். காலச் சுழலில், இன்றைய நாளில் ஓர் எறும்பாய் உயிர்பெற்று அலைந்து கொண்டிருக்கும் நமக்கு அரிய பெரும் பரிசாக சிவஞானம் பற்றிய உண்மைகள் கிடைத்துள்ளது. இவற்றை நமக்கு அருளியது யார் ? எப்படி நமக்கு கிட்டியது ?

பிறப்பு இறப்பும் முதலும் முடிவும் இல்லாத பரமசிவனார் உயிர்கள் மீது பெரும் கருணை கொண்டு சிவஞானத்தை போதித்தார். சிவபெருமான் அருளிச்செய்த ஆகமங்கள் இருபத்தெட்டு உள்ளன. அவை, அறுபத்தாறுபேர் அப் பெருமானை வணங்கி அவரது மேன்முகமாகிய ஈசான முகத்தில் அரிய கருத்துக் களைக் கேட்டுணர்ந்தனவாம். சிவலோகத்தில் மேலான சதாசிவ மூர்த்தியாய் இருந்து ஆகமங்களைப் பிரணவர் முதலியோர்க்கு உணர்த்தியருளிய சிவபெருமான், நிலவுலகிற்கு ஏற்ப அவற்றை உணர்த்தியருளும் பொழுது சீகண்ட பரமசிவனாய் இருந்து உணர்த்த, தேவர்களால் வணங்கப்படுகின்ற நந்தி பெருமான் மெய்யுணர்வுடையராய் அவை இனிது விளங்கப்பெற்றார்.

திருநந்திதேவர் சிவாகமங்களின் உண்மையை சனற்குமார முனிவருக்கு உபதேசித்தார். அவர் அவற்றை சத்தியஞானதரிசினிகளுக்கும், அவர் தம் மாணவர் பரஞ்சோதி முனிவருக்கும் உபதேசித்தனர். திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞானதரிசினிகள், பரஞ்சோதி முனிவர் ஆகிய நால்வரும் தேவ பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அகச்சந்தானக்குரவர் எனப்படுவர்.

பரஞ்சோதி முனிவர் அகத்தியரைக் காண வரும் போது 2 வயது குழந்தையாகிய மெய்கண்டாருக்கு திருவருளின் படி உபதேசித்தார். மெய்கண்டாரின் சீடரானவர் சகலஆகம பண்டிதரான அருணந்திசிவம். அவரின் சீடர் மறைஞான சம்பந்தர். அவரின் சீடர் உமாபதிசிவம். இவர்கள் நால்வரும் பூதபரம்பரையை சேர்ந்தவர்கள். இவர்கள் நால்வரும் புறச்சந்தானக்குரவர் எனப்படுவர்.
உமாபதிசிவத்தின் சீடர் அருள்நமச்சிவாயர். அவரது சீடர் சித்தர் சிவப்பிரகாசர். அவரது சீடர் நமச்சிவாய மூர்த்திகள். இவரே திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவி, இன்றும் குருபரம்பரையாக சைவ சமயத்தை உய்வித்து வருகின்றனர். மறைஞான சம்பந்தரின் சீடரான மச்சுச்செட்டியார் என்பவரின் 8 ஆவது வழி சீடரான குருஞானசம்பந்தர் என்பவர் தருமபுரம் ஆதீனத்தை நிறுவினார். இவர்களும் சைவ சமயத்திற்கு தலைமுறை தலைமுறையாக அரும் பெரும் தொண்டாற்றி வருகின்றனர்.
அகச்சந்தான குரவர்களும் அவர்களின் சீடர்களும் நமக்கு அருளிச் செய்ததே 14 சாத்திர நூல்களாகும். கிடைத்தற்கரிய ஞான புதையல்களை நாம் அறிந்து படித்து பயன்பெறுவோம்.

சிவஞானபோதம் நூலின் நோக்கம்

வரும் சில மாதங்களில் உலகிலேயே தத்துவ துறையில் தலைசிறந்த அறிவு நூலாகிய, சைவ சித்தாந்தத்தின் கருத்துக்களை முழுமையாக நமக்கு உணர்த்தக்கூடிய சிவஞான போதம் என்னும் நூலில் இருந்து பல கருத்துக்களை சிந்திக்க இருக்கிறோம். சைவ சமயத்தில் 14 சாத்திர நூல்களுள்ளும் மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் தலையாய நூலாகும். இந்நூலை தொட்டு அறிவதற்கே மிகப் பெரும் புண்ணியம் செய்திருந்து சிவனருள் பெற்றிருக்க வேண்டும் என்பர் சான்றோர். அவ்வாறாயின் இந்நூலின் பெருமையை நம்மால் ஒருவாறு யூகிக்க இயலும். இந்நூல் அளவில் மிகவும் சிறியது. சொல் சுருக்கமும், பொருள் பெருக்கமும் உடையது.
இந்த நூலைச் செய்தவர் மெய்கண்டார். ஆசிரியர் மெய்கண்டார் இந்நூலின் பெயர் இது என்று எங்கும் சுட்டவில்லை. அவரது மாணவராகிய அருள்நந்தி சிவம் தம் ஆசிரியப்பிரானாகிய மெய்கண்டாரையும் அவரது நூலையும் தம் நூலிற் குறிப்பிடுகிறார்; ஆயின் நூற்பெயரைக் கிளந்து கூறாமல் மெய்கண்டான் நூல் என்றே கூறிச் செல்கிறார்.

அருள் நந்தி சிவனாரின் மாணவருக்கு மாணவராய் வந்த உமாபதி சிவனார் சிவப்பிரகாசம் என்னும் சார்பு நூலைச் செய்தார். அவரே அந்நூலின் பாயிரத்தில் தெரித்த குரு முதல்வர் உயர் சிவஞானபோதம் செப்பினர் என இந்நூற் பெயரை எடுத்தோதினார். சிவஞான போதம் என்பது காரணப் பெயர். அப்பெயரில் சிவம், ஞானம், போதம் என்னும் மூன்று சொற்கள் உள்ளன. ஞானம் என்பது அறிவு. அறிவு மூன்று வகையாய் நிகழும். அவை ஐயம், திரிபு, உண்மை என்பன. ஒரு பொருளை இதுவோ அதுவோ என இரட்டுற அறிதல் ஐயமாய் அறிதலாகும். ஒன்றை மற்றொன்றாக மாறி அறிதல் திரிபாய் அறிதலாகும். இவ்விரு குற்றமும் இன்றி ஒரு பொருளை உள்ளவாறு அறிதலே உண்மையாய் அறிதலாகும். உண்மையறிவே ஞானம் எனப்படும்.

உலகிற்கு முதலாகிய கடவுளை முதற்பொருள் என்றும் மெய்ப்பொருள் என்றும் கூறுதல் பொதுப்படக் கூறும் வழக்கமாகும். சிவம் என்னும் தனிப்பெயரால் கூறுதலே சிறப்பு வழக்கமாகும். சிவமாகிய அம்முதற் பொருளை உள்ளவாறு உணரும் அறிவு சிவஞானம் எனப்படும். சிவத்தை உணரும் ஞானம் எனச் சுருங்கச் சொல்லலாம். போதம் என்பது போதித்தல். போதித்தலாவது, ஐயம் திரிபுகளை நீக்கி மாணவர்க்குத் தெளிவுண்டாகுமாறு உணர்த்துதல். எனவே சிவத்தை உணரும் ஞானத்தைப் பக்குவமுடைய மாணவர்க்கு ஐயந்திரிபின்றி உணர்த்துதலைக் கருதி எழுந்தது இந்நூல் என்பது இனிது விளங்கும்.

அந்தமே ஆதி என ஏகாரம் சேர்த்துக் கூறுதல் ஆசிரியர் கருத்து. ஆயினும், அந்த ஏகாரத்தைத் தொகுத்து அந்தம் ஆதி என்றார்.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ; சைவம் டாட் காம்

Advertisements

அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே

Standard
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே

மருந்து வேண்டில் மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும்புண்ணியங்கள் இவை
திருந்துதேவன்குடித் தேவர் தேவெய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே .. த,வே, 3,25,01
திருவேண்ணீறு, உத்திராக்கம், துவர் ஆடை, சடைமுடி, முதலியன சிவச் சின்னங்களாகும். சிவனடிார்கள் இவற்றினை அணிவதும், அணிந்து கொண்டுள்ள அடியார்களை வணங்குவதும் வேண்டிய ஒன்றாகும் என்பது திருஞானசம்பந்த சுவாமிகளின் திருவாக்கும்.
பாடலின் திரண்ட கருத்து : திருத்து தேவன்குடியில் ( நண்டாங்கோயில்) எழுந்தருளியிருக்கும் தேவர்கட்கெல்லாம் தலைவராய் விளங்கும் சிவபெருமானார் அருந்தவத்தோர்களர் தொழப்படுவார்.
1, இப்பெருமானாருடைய திருவேடங்கள் ( திருவேண்ணீறு, உத்திராட்சம், சடைமுடி) மருந்து வேண்டுவோருக்குமருந்தாகும்.
2. மந்திரங்கள் வேண்டுபவர்க்கு மந்திரங்களாகும்.
3, சிவபுண்ணியங்கள் அளிப்பவனவாகவும் அமையும்,

மானம் ஆக்குவ்வன மாசு நீக்குவ்வன
வானை உள்கச் செலும் வழிகள் காட்டுவ்வன
தேனும் வண்டும் இசைபாடும் தேவன்குடி
ஆனஞ்சாடும் முடி அடிகள் வேடங்களே, 3-25-3
4, நமக்கு பெருமையை அளிப்பன
5. அறியாமையால் மனத்தில் ஏற்படும் தீய எண்ணங்களை அகற்றுவன
6. முக்திக்கு உரிய வழிகளை காட்டுவன
இதே கருத்தினை திருநாவுக்கரசர் சுவாமிகளும் கூறியுள்ளதைக் காணலாம்.
” வேடம் பரவித் திரியும் தொண்டர்
ஏதப் படாவண்ணம் நின்றார் போலும், 6-89-6
சிவ வேடங்களான திருநீறு, உத்திராட்சம், சடைமுடி துவர் ஆடை ஆகியவற்றை கண்ட பொழுதே சிவ பெருமானாரை நினைந்து வணங்கும் தொண்டர்கள் துன்பப்படாவண்ணம் காத்து நிற்பவர் சிவனார். என்பது நாவுக்கரசரின் அனுபவ வாக்கு,
மெய்ப்பொருள் நாயனாரும், ஏனாதி நாத நாயனாரும் தம்மைக் கொல்ல வந்தவர் திருவெண்ணிறு அணிந்திருந்ததைக் கண்ட உடன் சிவபெருமானாரே வந்துள்ளார் என்று நினைந்தார்கள்.
புகழ்சோழர் தமது படைத்தலைவர் ஒரு சடைமுடியுடைய தலையைக் கொண்டு வந்ததைக் கண்டவுடன் தீயில் மூழ்கி இறைவரடி சேர்ந்தார்.
சலவைத் தொழிலாளியின் உடம்பு உவர் மண்ணால் வெண்மை நிறமாகத் தெரிந்தது, பேரரசராகிய சேரமான் பெருமான் நாயனார் இவரைக் கண்டவுடன் மண்ணில் வீழ்ந்து வணங்கினார், காரணம் திரவேடத்தைக் கண்ட மாத்திரத்தில் சிவபெருமானாருடையநினைவு வந்தது.
வரகுண பாண்டிய மன்னர் திருடன் ெந்ற்றியில் திருநீறு கண்டவுடன் சிவபெருமானார் நினைவு பெற்றார். ஆதலால் அத்திருடனைத் த்ண்டிக்காமல் அனுப்பி வைத்தார்.
“எவரேனும் தாமாக இலாத்திட்ட திருநீறுஞ் சாதனமும் கண்டால் உள்கி
உவராதே அவரவரைக் கண்ட போதே உகந்தடிமைத் திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி
இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி இரண்டடாட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணிக்
கவராதே தொழும்அடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே, த,வே, 6
திருநீறும், உத்திராட்சமும், அணிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வெறுக்காமல் இவர்அவர் என்று வேறுபாடு கருதாமலும், அவர்களைக் கண்ட பொழுதே உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும். அவர்களைச் சிவமாகவே எண்ணி மனம் ஒன்றுபட்டு வணங்க வேண்டும். அவ்வாறு தொழும் அடியார் நெஞ்சினுள்ளே சிவபெருமானார் எழுந்தருளுவார்.
சிவச்சின்னங்கள் அணிவதாலும், அணிந்தவர்களைக்காணும் பொழுதே வணங்குவதாலும் சிவபெருமானாருடைய மனங்களையே இறைவர் கோயிலாகக் கொள்வார்.பிறகு முத்தி நிச்சயமாகும்..
சிவ நினைவினால் மற்ற அவ நினைவுகள் மனதில் தோன்றுவதில்லை, அதனால் மனம் அலைவதில்லை,மனம் அலைய வில்லையானால் சக்திகள் பல உண்டாகும்.இதனால் நோயற்ற வாழ்வு, நீண்ட வாழ்நாள், முடிவில் பிறவா நெறி பெறலாம்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி : தமிழ் வேதம்

கருவிலே திருவுடையவர்கள்

Standard

கருவிலே திருவுடையவர்கள்

confirman-que-el-vientre-tu-bebe-escucha-L-pssRPz

கருவிலே திருவுடையவர்கள்’ என்று சொல்வார்கள். கருவிலே திருவுடையர்கள் என்றால் யார்? நம் பெயர் அந்தப் பட்டியலில் இருக்கிறதா? அல்லது வரவாவது வருமா? திருமூலரிடம் செல்லலாம்.
அவர் பதில் சொல்வார். கூடவே அப்பர் சுவாமிகளும் மாணிக்கவாசகரும்,
கை கோக்க வருவார்கள்.

கை விட்டிலேன் கருவாகிய காலத்தும்
மெய் விட்டிலேன் விகிர்தன் அடி தேடுவன்
பொய் விட்டு நானே புரி சடையான் அடி
நெய் விட்டிடாத இடிஞ்சிலும் ஆமே
(திருமந்திரம் – 495)

கருத்து: கருவில் இருந்தபோதுகூட, நான் சிவபெருமானின் திருவடியை மறக்கவில்லை. பிறந்து வாழ்கின்ற இப்போதும் அதனை நான் மெய்யன்போடு தேடுகிறேன். அதனால் அத்திருவடி, நெய்விட்டு ஏற்றாமல் இயல்பாகவே ஔிவிடும் விளக்காக இருக்கிறது எனக்கு. தாயின் வயிற்றிலிருந்தபோதும், சிவபெருமான் திருவடியைக் கைவிடவில்லையாம்; பிறந்த பிற்பாடும் அப்படியே இருந்தாராம்.

எல்லோருக்கும் வாய்க்கக்கூடியதா இந்தப் பேறு என்ற சந்தேகம் எழுந்தாலும், அதில் பாதி வாய்க்கப் பெற்றவர்கள் நாம். ஆமாம், பிறக்கும்வரை நாமும் இறை சிந்தனையுடன்தான் இருக்கிறோம். தாயின் வயிற்றில் குழந்தையிருக்கக்கூடிய சில படங்களை (மருத்துவ நூல்களில்) பார்க்கும்போதே தெரியும் – குழந்தை வளைந்து கும்பிட்ட நிலையில்தான் இருக்கும்!

ஏன் அப்படியிருக்க வேண்டும்? மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடலைப் பார்த்தால் விவரம் புரியும். ஓர் அற்புதமான ‘ஸ்கேனிங்’ பாடல் இது!

மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒரு மதித்தான்றியின் இருமையில் பிழைத்தும்
இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும் மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்

(திருவாசகம்-கீர்த்தித் திருவகவல் – 13-26 வரிகள்)

தாயின் வயிற்றில் புழுக்களுடன் நிகழ்த்தும் கிருமிப் போரில் அழியாமல் தப்பிப் பிழைத்து, முதலாம் மாதம் தான்றிக்காயின் அளவிலே உருவான கரு தப்பிப் பிழைத்து, இரண்டாம் மாதம் மற்ற புழுக்களும் கருப்பையில் புகுந்து செய்யும் இடையூறுகளில் தப்பிப் பிழைத்து, மூன்றாம் மாதம் பெருகும் மதநீரினால் அழியாமல் தப்பிப் பிழைத்து, நான்காம் மாதம் கருப்பை அடைப்பு, வெடிப்பு முதலானவற்றால் அழியாமல் தப்பிப் பிழைத்து, ஐந்தாம் மாதம் மரணத்திலிருந்து தப்பிப் பிழைத்து, ஆறாம் மாதம் கருப்பையின் நெருக்குதலில் தப்பிப் பிழைத்து, ஏழு, எட்டு, ஒன்பதாம் மாதங்களில் கரு சிதையாமல் இடையூறுகளில் இருந்து தப்பிப் பிழைத்து…

‘யப்பாடா! பொறக்கறத்துக்குள்ள இவ்…வளவு இருக்கா?’ என்று அவசரப்பட்டு ஆச்சரியப்பட வேண்டாம்; இன்னும் பிறக்கவில்லை. அதைக் கடைசி இரு வரிகள் விவரிக்கின்றன: பத்தாவது மாதம் நாம் பிறக்கும்போது, தாயாருக்கும் பிரசவ வேதனை, நமக்கும் தாய் வயிற்றிலிருந்து வெளிப்படும் வேதனை! இவ்வளவுத் துயரங்களிலிருந்தும் தப்பிப் பிழைத்துப் பிறக்கிறோம்.

அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதைப் போலக் கைகளைக் கூப்பியபடி கருவறையில் கிடக்கிறோம், பிறக்கிறோம். இது எங்கே நமக்குப் புரியாமல் போய்விடுமோ என்று எண்ணியே, தாயின் வயிற்றிலிருந்த பரீட்சித்தை பகவான் காப்பாற்றினார் என பாகவதம் விவரிக்கிறது.

தாயின் வயிற்றில் இருக்கும்போது, ‘ஆண்டவா! செய்த வினைகளின் காரணமாக வந்துவிட்டேனே!’ என்று இறை சிந்தனை இருக்கும். ஆனால் பிறந்து வெளிப்பட்ட பிறகு, வெளிக் காற்றுத் தாக்கியவுடன்… போச்சு! இறை சிந்தனை இல்லாமல் போய்விடும். அப்புறம் என்ன? பிறந்தவுடன் பசியின் காரணமாகப் பாலுக்கு அழத் தொடங்கி, வளர வளர ஒவ்வொன்றுக்காகவும் அழுது, அடுத்தவர்களையும் அழவைத்து… இப்படியே போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை!

இவற்றின் நடுவில் தெய்வ சிந்தனைக்கு இடம் ஏது? ஆனால், திருமூலர் இப்படிக் கருதவில்லை. கருவிலே கங்காதரன் நினைவோடு இருந்தவர், பிறந்த பிறகு தானும் அழாமல் அடுத்தவரையும் அழவைக்காமல் இருந்தவர் அவர். இன்னும் சொல்லப்போனால், ஐந்தறிவு படைத்த மாடுகளின் துயர் தீர்ப்பதற்காக, மூலனின் உடம்பில் கூடு விட்டுக்கூடு பாய்ந்தவர். அதன்பிறகும் கூட, சிவ சிந்தனையிலேயே இருந்து தவம் செய்து, நமக்காகத் தன் அனுபவங்களைத் திருமந்திரப் பாடல்களாகத் தந்தவர்.

‘நெய் அல்லது எண்ணெய் ஊற்றாமல் இயல்பாகவே ஒளி வீசக்கூடிய ஜோதிவடிவாக சிவபெருமான், என்னுள்ளே ஒளிவீசிப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்,’ என்று கூறிப் பாடலை நிறைவு செய்கிறார் திருமூலர். பிறந்த பிறகும் இறை சிந்தனை மாறாமல் இருப்பவர்களே, கருவிலே திருவுடையவர்கள் என்பது திருமூலர் வாழ்விலிருந்தும், அவரது பாடல்களிலிருந்தும் புலனாகின்றது. இப்பாடலில் திருமூலர் சொன்ன இதே கருத்து, அப்பர் சுவாமிகளின் பாடலிலும் வெளிப்படுகிறது:

கருவாய்க் கிடந்து உன் கழலே
நினைக்கும் கருத்து உடையேன்
உருவாய்த் தெரிந்து உன் நாமம்
பயின்றேன் உனது அருளால்
திருவாய்ப் பொலிய சிவாய நம
என்று திருநீறு அணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப்
புலியூர் அரனே

திருமூலரின் வாக்கும் அப்பர் சுவாமிகளின் வாக்கும் ஒன்றுபோல் இருப்பதில் வியப்பில்லை. உத்தமர்களின் உள்ளம் ஒன்றேபோல்தான் இருக்கும். அதன் காரணமாகவே அவர்களெல்லாம் எப்போதும் ஆனந்தமாகவே இருந்தார்கள். எல்லோருக்கும் இந்நிலை வாய்ப்பதில்லை. அது கிடைக்க வேண்டுமென்றால், நல்ல குரு அமையவேண்டும்; நல்வழி காட்டும் அந்த சத்குரு வழியிலேயே நடக்கவேண்டும். சத்குரு கிடைப்பது அல்லது அமைவது குதிரைக் கொம்பாக இருக்கிறதே என்றால், அங்குதான் பிரச்னையே முளைக்கிறது. சரி, திருமூலர் இதைப் பற்றி என்ன சொல்கிறார் எனப் பார்க்கலாம்.

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு வெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதி போன்றும்
நெய்ப்பட்ட பால் இளநீர் தயிர் தான் நிற்கக் கைப்பட்டு உண்பான் போன்றும் கன்மி ஞானிக்கு ஒப்பே (திருமந்திரம் – 526)

கருத்து: கையில் கிடைத்த மாணிக்கக் கல்லை வீசி எறிந்துவிட்டு, வெயிலில் கொதித்துக் கிடக்கும் பருக்கைக் கல்லைச் சுமப்பவன் போலும், நெய்யுள்ள பால், இளநீர், தயிர் ஆகியவையிருக்க, கசந்து வழிந்து தீங்கு விளைவிக்கும் எட்டிப் பழத்தை உண்பவன் போலும், ஞானகுரு இருக்கையில் அவரை விடுத்து அஞ்ஞானியைக் குருவாகக் கொள்பவனின் செயல் இருக்கிறது.

இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்க முயலாதே – அழகுள்ள இடத்தில் ஆபத்து இருக்கும். Where beauty lies There danger lies என்றெல்லாம் நமது முன்னோர்கள் சொன்னதை மெய்ப்பிக்கும் பாடல் இது. மனித இயல்பை மிகவும் அழகாகச் சொல்லித் துவங்குகிறது பாடல். எவ்வளவுதான் உயர்ந்ததான ஒன்று நம்மிடம் இருந்தாலும், அதை அலட்சியப்படுத்தத்தான் செய்வோம். உயர்ந்ததான அதை அலட்சியப்படுத்துவதுடன், உதவாக்கரையைத் தேடியும் போவோம்; அதைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாடுவோம்.

அதைச் சொல்லும் திருமூலரின் இந்த வாக்கு, ‘மாணிக்கத்தை வீசிவிட்டு, மண்ணாங்கட்டியைத் தூக்கிச் சுமப்பதைப்போல’ என, முன்னோர்கள் சொல்வார்கள். சரி, வெளியில்தான் இப்படியிருக்கிறோம் என்றால், நம் உள்ளே போவது எப்படி இருக்கிறது? அதையும் சொல்கிறார் திருமூலர். தூய்மையான பால், இளநீர், தயிர் என ஆரோக்கியத்தைத் தரும் எவ்வளவோ நல்ல உணவுப் பொருட்கள் இருக்க, அவற்றை ஒதுக்கிவிட்டு எட்டிப் பழத்தை நாடி, உண்போம். காரணம்?

எட்டிப் பழம் பெரியதாகக்கூட இருக்காது; சுவையோ, கசந்து வழியும். இருந்தாலும், வண்ணம் நிறைந்த அதன் அழகு நம்மைக் கவர்கிறது; போய் விழுகிறோம். அந்தக் கவர்ச்சியில் மயங்கி, ஏமாந்து அதனை உட்கொள்ளும் போது அதன் கசப்பைத் தாங்காமல் தவிக்கிறோம். இதைச் சொல்லி, நம்மை வழி நடத்த முயற்சிக்கிறார் திருமூலர்.

அதாவது, பால், இளநீர், தயிர் என பல இருந்தாலும், அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு, வண்ணக் கவர்ச்சியில் மயங்கி, எட்டிப் பழத்தின் கசப்பை அனுபவிப்பதுபோல, நல்லதை ஒதுக்கிவிட்டு கெட்டதை அனுபவிக்கிறார்களே என்கிறார் திருமூலர். அழுத்தமாகச் சொல்லவேண்டுமானால், உள்ளும் புறமும் நல்லவற்றை ஒதுக்கிவிட்டுக் கெட்டதைத்தான் ஏற்கிறோம். நல்வழி காட்டக்கூடியவர்கள் இருந்தாலும், அவர்களை ஒதுக்கிவிட்டு, தீயவழி காட்டுபவர்களை நம் குருநாதர்களாக, வழிகாட்டிகளாகக் கொள்கிறோம்.

இதை, ‘கன்மி ஞானிக்கு ஒப்பே’ எனும் சொற்கள் விளக்கும். இவ்வாறு சொன்ன திருமூலர், விதி என்ற சொல்லையும் இப்பாடலில் பயன்படுத்தியிருக்கிறார். விதிக்கப்பட்டவற்றை விலக்கி, விதிக்கப்படாதவற்றை நாடி அல்லல் வலையில் அகப்படுகிறோம். உண்மை உணர்ந்து துயரங்களில் இருந்து விடுபட, நல்ல குருநாதரை அடைய வேண்டும் என்கிறார் திருமூலர். அவர் தம் அடுத்த பாடலில், தெளிந்த ஞானிகளின் உள்ளத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானின் இயல்புகளை சற்று விரிவாகக் கூறுகிறார்.

தளியறிவாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறிவாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளியறிவாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளியறிவாளர் தம் சிந்தையுளானே
(திருமந்திரம் – 502)

கருத்து: தெளிந்த ஞானிகளின் உள்ளத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான், அன்பினால் கண்ணீர் துளிர்க்கும் அடியார்களுக்கு, குளிர்ச்சி உடையவராய் விளங்குவார். யோக நெறியில் மூச்சையடக்கித் தியானத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒருவேளை விளங்கலாம். ஆனால் ஞானம், அன்பு, யோகம் எனும் ஏதுமின்றித் தீர்த்தத்திலே மட்டும் நீராடுபவர்களுக்கு, அந்தச்சிவபெருமான் அடைதற்கு அரியவர்.

ஞானம் என்றாலே, தெளிவு என்பதுதான் பொருள். அப்படியிருக்கத் திருமூலர் ஏன் இவ்வாறு சொல்லவேண்டும்? ஞானிகள் பலர் தவம் செய்து தெளிவு பெற்ற பிறகும் மனங்கலங்கித் தவநிலையிலிருந்து தவறியிருக்கிறார்கள். தவறி விழுந்ததும் அதன்பின் எச்சரிக்கையாக இருப்போமல்லவா? அதுபோல, தவநிலையில் தவறிய ஞானிகள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள்; தெளிவு அவர்களுக்குள் நிலை பெற்றுவிடும். அதன்பின் அவர்கள் மனம் கலங்கவே கலங்காது. அப்படித் தெளிவு பெற்ற ஞானியர் உள்ளத்தில் தெய்வம் வீற்றிருக்கும்.

அடுத்து, அன்பினால் ஊற்றெழும் கண்ணீர் ஆறாகப் பெருக வழிபடும் அடியார்க்கு, குளிர்ச்சியாய் இருக்கும் தெய்வம். அதாவது அன்புள்ளம் கொண்டவர்க்கு, தெய்வம் அருள் மழை பொழியும் என்பது கருத்து. ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’ எனத் திருஞானசம்பந்தரும்; ‘வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’ என மாணி்க்கவாசகரும்; ‘மழுமான் கரத்தனை விழியால் புனல் சிந்தி விம்மிவிம்மி அழு நன்மைவேண்டும் என்றே’ எனப் பட்டினத்தாரும் கூறியது, இக்கருத்தைத்தான்.

மேற்கூறிய இரு வழிகளையும் விடுத்து, தீர்த்த யாத்திரை செய்வதில் பலனில்லை என்கிறார் திருமூலர். உள்ளத்தில் அன்போ, சீலமோ இல்லாமல், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதில் பலனில்லை என்பது அவரது கருத்து. அனைவரிடமும் அன்பைச் செலுத்துவோம்! ஆண்டவன் அருளைப் பெறுவோம்!

இறை வழி்பாட்டின் படிநிலைகள்

Standard

இறை வழி்பாட்டின் படிநிலைகள்- Stages in spiritual life

பொதுவாக இறைவனை அடைய நான்கு படிநிலைகளை கடக்க வேண்டும். இவற்றையே நான்கு படிநிலைகள் இருப்பதாக சித்தாந்தம் கூறுகிறது. அவை முறையே “சரியை”, “கிரியை”, “யோகம்”, “ஞானம்” என்ப்படும்.

’கூறும் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கும் முறையே அரும்பு, மலர், காய், கனிக்கு இணையாகும்!’ சைவ நாற்பாதங்கள் என்றும் இவற்றை கூறுவர்.

சைவ நாற்பாதங்கள் என்பது சைவ மக்கள் பிறவித் துன்பம் நீங்கி பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் பாதங்களை அடைவதற்கு கடைபிடிக்க வேண்டிய படிமுறைகளாகும். இதன் மறுபெயர்களாக சைவ நன்னெறிகள், சைவ நாற்படிகள், சிவ புண்ணியங்கள் என்பன அறியப்படுகின்றன.

சரியை

கிரியை

யோகம்

ஞானம்

சரியை;

புறத்தொழில் மாத்திரையானே சிவபிரானது உருவத் திரு மேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாவது, திருக்கோயிலுள் இருக்கும் திருமேனிகளையே சிவபெருமானாகக் கண்டு, அக் கோயிலில் திருவலகிடுதல்,திருமெழுக்குச் சாத்தல், திருவிளக்கிடுதல், திருநந்த வனம் வைத்தல், பூக் கொய்து கொடுத்தல், பூமாலை கட்டித் தருதல், திருவுருவங்களை வணங்கிச் சிவபிரானது புகழ்ப் பாடலைப் பாடுதல், ஆடுதல், சிவனடியார்களைக்கண்டால், அடியேன் செய்ய வேண்டிய பணி யாது? எனக் கேட்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்தல் முதலிய பலவகைப் புறத்தொண்டாகும். ஆதலின், அதனைத் திருநா வுக்கரசரே பெரிதும் எடுத்தோதியுள்ளார்என்பது நன்கறியப்பட்டது.

நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா

நித்தலும்எம் பிரானுடைய கோயில்புக்குப்

புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்

பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்

தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்

சங்கரா சயபோற்றி போற்றி என்றும்

அலைபுனல்சேர் செஞ்சடைஎம் ஆதீ என்றும்

ஆரூரா என்றென்றே அலறா நில்லே.

(தி. 6 ப. 31. பா. 3)

எவரேனும் தாமாக இலாடத் திட்ட

திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி

உவராதே அவரவரைக் கண்ட போதே

உகந்தடிமைத் திறம் நினைத்தங் குவந்து நோக்கி

இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி

இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக்

கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

(தி. 6 ப. 61. பா. 3)

என்னும் திருத்தாண்டகங்கள், சரியைத் தொண்டினை இனிதெடுத்து விளக்குவனவாம். இவைகள்ஆங்காங்குப் பல இடங்களில் குறிக்கப் படுவதையும் நாம் நாவரசர் திருமுறையில் காணுதல் கூடும் சரியை சைவ நாற்பாதங்களில் முதலாவது படியாகக் கூறப்படுவதாகும். அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும். இலகுவில் செய்யக்கூடிய ஆரம்ப முயற்சியான இதற்குத் தூய தெய்வ பக்தியில் இறையம்சமும் துணை நிற்கவேண்டும். இந்நெறியில் நிற்போர் சிவனை ஆண்டானாகவும் தம்மை அடிமையாகவும் கொள்ளும் தாச மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாவர். தாச மார்க்கம் பற்றி திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.

எளிய நல் தீபம் இடல் மலர் கொய்தல்

அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்

பளிபணி பற்றல் பன்மஞ்சனம் ஆதி

தளி தொழில் செய்வது தான் தாச மார்க்கமே.(திருமந்திரம்)

இந்நெறி நிற்போர் சாலோக முத்தியையும், சிவனின் உலகை அடைதலாகிய சிவலோகத்தையும் பெறுவர்.

சரியைத் தொண்டுகள்

சிவாலயத்தை அலகிடுதல், மெழுகுதல், கழுவுதல், பூஞ்சோலை அமைத்தல், பூப்பறித்துக் கொடுத்தல், பூமாலை கட்டுதல், பூசைத் திரவியம் கொடுத்தல், பூசைக்குரிய பொருட்களைத் துலக்கிச்சுத்தம் செய்தல், விளக்கிடல், தீவர்த்தி, குடை, கொடி, ஆலவட்டம் பிடித்தல், வாகனம் துடைத்தல், கழுவுதல் முதலியன சரியைத் தொண்டுகளாகும்.

நமது இல்லத்தில் இறைவனை ஆத்மார்த்தமாய் வழிபடுவதுடன், கோவில்களுக்கு சென்று இறைவனைப் பணிந்து அங்கே மலர் கொய்து மாலை தொடுத்தல் போன்ற ஆலயத் தொண்டுகளை செய்வதன் மூலம் கிடைக்கப் பெறுவதாகும்.இதுவே சரியை வழி எனப்படுகிறது. இத்தகைய நெறி தவறாத வாழ்வின் மூலம் கிடைக்கப் பெறும் முக்தி நிலை சாலோக முக்தி எனப்படும்.

சிலைகளை வைத்து வணங்குதல், கோவில் கட்டுதல், குடமுழுக்கு நிகழ்த்துதல், தேர் உள்ளிட்ட அத்தனை உருவ வழிபாட்டு ஆராவாராங்களும் ‘சரியை’ எனப்படும் முதல் நிலையைச் சார்ந்தவை.

கிரியை – Kriyai

இனி, புறத்தொழில், அகத்தொழில் என்னும் இரண்டானும் சிவபிரானது அருஉருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாவது, பூவும் நீரும் ஆனைந்தும் புகையும் ஒளியும் திரு வமுதும் முதலிய பொருள்களைச்சேர்த்துக் கொண்டு ஐவகைச் சுத்திகளைச் செய்து, இலிங்கத்தில் அகத்தும் புறத்தும் மந்திரங்களால் ஆசனம் முதலியவைகளைக் கண்டு, சிவபிரானை வருவித்தல் (ஆவாகனம்) முதலியவைகளைச் செய்து, நீராட்டுதல்,ஒற்றாடை சாத்துதல் முதலாகத் திருமேனியைத் தீண்டிச் செய்யும் பணிவிடைகளாகிய அணுக்கத் தொண்டாகும். இதனை,

“சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்”    (தி. 4. ப. 3. பா. 1)

“போதொடு நீர்சுமந்தேத்திப் புகுவாரவர்பின் புகுவேன்”

(தி.4 ப.3 பா.1)

பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி

அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை உள்ளே வைத்து

விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்

கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்டனாரே.

(தி. 4. ப. 31. பா. 4)

நகமெலாந் தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி

முகமெலாங் கண்ணீர் வார முன்பணிந் தேத்துந் தொண்டர்

அகமலால்கோயிலில்லை ஐயன்ஐ யாற னார்க்கே

(தி. 4. ப. 40. பா. 8)

நின்போ லமரர்கள் நீண்முடி சாய்த்து நிமிர்த்துகுத்த

பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன பாங்கறியா

என்போ லிகள்பறித் திட்ட இலையும் முகையும் எல்லம்

அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ யாறன் அடித்தலமே (தி. 4. ப. 92. பா. 10)

என்பன முதலிய திருப்பாடல்கள் விளக்கும்.

காயமே கோயி லாகக் கடிமனம் அடிமையாக

வாய்மையே துய்மை யாக மனமணி இலிங்க மாக

நேயமே நெய்யும் பாலா நிறையநீ ரமைய ஆட்டிப்

பூசனை ஈச னார்க்குப் போற்றவிக் காட்டினோமே.

(தி. 4. ப. 76. பா. 4)

என்னும் திருப்பாடல், அகப் பூசையைச் சிறப்பாக விளக்குவது. அகப் பூசை புறப்பூசைகளில் அட்ட புட்பம் (எட்டுப் பூக்கள்) சாத்துதல் என்பது சிறப்பாகச் சொல்லப்படுவது. அதனை ஒரு திருப்பதிகம் முழுவதும் அப்பர்பெருமானார் அருளியுள்ளார்.

“எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி

மட்ட லரிடு வார்வினை மாயுமால்”                 (தி. 5 ப. 54 பா. 1)

எனத் தொடங்குவது அத்திருப்பதிகம். ஆனைந்து (பஞ்ச கௌவியம்) ஆடுவதில் சிவபிரான் மிக்க விருப்பம் உடையவன் என்பதை நாயனார் பல இடங்களில் எடுத்தோதி அருளுவார்.

“ஆவினுக் கருங்கலம் அரன்அஞ் சாடுதல்” (தி. 4 ப. 11. பா. 2)

“பாலுநெய் முதலா மிக்க பசுவில்ஐந் தாடு வானே”

(தி. 4. ப. 63. பா. 9)

“பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்

ஆவில் அஞ்சுகந் தாடு மவன்கழல்

மேவ ராய்மிக வும்மகிழ்ந்துள்குமின்”

(தி. 5 ப. 99. பா. 1)

“ஆட்டான தஞ்சும் அமர்ந்தாய் போற்றி”   (தி. 6 ப. 57. பா. 1)

என்பவற்றை எடுத்துக்காட்டாகக் காணலாம்.  இன்னும்,

“நெய்யினொடு பால்இளநீர் ஆடி னான்காண்”

(தி. 6 ப. 52. பா. 5)

“நறப்படுபூ மலர்தூபம் தீபம் நல்ல

நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர்

சிறப்போடு பூசிக்கும் திருவா ரூரில்

திருமூலட் டானத்தெம் செல்வன் தானே”

(தி. 6 ப. 30. பா. 5)

என்றற் றொடக்கத்துத் திருப்பாடல்கள், கிரியையாகிய வழிபாட்டினை நன்கு வலியுறுத்துவனவாம்.

இங்ஙனம் பூவும் நீரும் பிறவுங் கொண்டு சிவபெருமானைப் பூசிக்குங்கால், இன்றியமையாது வேண்டப்படுவது, உள்ளத்துள் இருக்கும் அன்பே என்பதையும், `அவ்வன்பு இல்லாது புறத்தோற்றத் திற்கு மாத்திரம்பூசிப்பவரது பூசையைச் சிவபிரான் எள்ளி நகையாடி, ஆங்கு வருவதற்கு அருவருப்புக் கொண்டு அப்பாலே ஒதுங்கி நிற்கின்றான்’ என்பதையும் நாயனார் அருளிச் செய்திருத்தல் பெரிதும் போற்றி உணர்தற்குரியது.

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்;

பொக்கம் மிக்கவர் பூவும்நீ ருங்கண்டு

நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.        (தி. 5 ப. 90.பா. 9)

என்னும் திருக்குறுந்தொகைப் பாடலைக் காண்க.

`சரியையில் நின்று வழிபடுவோர்க்கச் சிவபெருமான் இலிங்கத் தில் மறைத்து நின்று அருள் செய்கின்றான்’ எனவும், `கிரியையில் நின்று வழிபடுவார்க்கு, விறகில் மறைந்து நிற்கின்ற நெருப்பும், பாலில் மறைந்துநிற்கின்ற நெய்யும் அவைகளைக் கடையுங்காலத்து வெளிப்படுதல் போல, மந்திர நியாசங்களைச் செய்யுங்கால் அவற்றில் வெளிப்பட்டு நின்று அருளுவன்’ எனவும் சாத்திரம் கூறும். அதனை,

விறகில் தீயினன் பாலிற் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.    (தி. 5 ப. 90. பா. 10)

என்னும் திருக்குறுந்தொகை பாடலே நமக்கு அருளுகின்றது.

கிரியை சைவ நாற்பாதங்களில் இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும். மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக அறிந்து சமய, விசேட, நிர்வாண தீக்கைகளைப் பெற்றோர் மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியை நெறியாகும். தம்பொருட்டு தம்மளவில் செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யப்படும் பரார்த்த பூசையும் இந்நெறியுள் அடங்கும். இந்நெறி சிவனுக்கு அருகில் இருக்கும் சற்புத்திர மார்க்கமாகும். இந்நெறி நின்றோர் சாமீபமுத்தியைப் பெறுவர். சற்புத்திர மார்க்கம் பற்றி திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.

பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்

ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை

நேசித்திட் டன்னமும் நீர்சுத்தி செய்தல் மற்(று)

ஆசற்ற சற்புத்திர மார்க்கமாகுமே.

சிவச்சின்னங்களை அணிந்து சிவனடியாராக இறைச் சேவை செய்வது ஒன்றையே வாழ்வின் நோக்கமாய் கொண்டு வாழ்வதே கிரியை வழியாகும்.இந்த வகையில் கிடைக்கும் முக்தி நிலை சாமீப முக்தி எனப் படும்.

தகுந்த குருவிடம் மந்திர உபாசனை பெற்று, அதைவிடாமல் பயிற்சி செய்து மனோலயப்படுதல் கிரியை மார்க்கம் எனப்படும். கற்பனையாய் தெய்வ உருவங்களை ஆராதித்தல் உள்ளிட்ட அத்தனை மனப்பயிற்சிகளும் இந்த மார்க்கத்தில் அடக்கம்.

Yogam – யோகம்:

“உயிரா வணம்இருந் துற்று நோக்கி

உள்ளக் கிழியின் உருவெழுதி

உயிர்ஆ வணம்செய்திட் டுன்கைத் தந்தால்

உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி”

(தி. 6 ப. 25. பா. 1)

என்னும் திருத்தாண்டகம், ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, மனத்தை ஓடாது நிறுத்தி, உள்ளமாகிய கிழியில் சிவபிரான் உருவத்தை எழுதி, அதிலே ஒன்றியிருக்கும் அகத்தொழிலாகிய யோகமுறையை அறி வுறுத்துகின்றது.

“ஞானி நாலினுக்கும் உரியன்” (சிவஞானசித்தி. சூ. 12.5) என்பதனால், சரியை முதலிய மூன்றும் சிவப்பேற்றை அடைய விரும்புவார்க்கு அதனை அடையும் சாதனமாய் மட்டும் இல்லாமல், ஞானத்தாற்சிவனைப்பெற்றார்க்கும், அதனை இழக்காதிருத்தற்கும் சாதனமாம். ஆகையால், மேற்காட்டியவை எல்லாம் ஒவ்வொரு சாரார்க்கு மட்டும் இன்றி, எல்லோருக்குமேயாம் என்க.

வழிபாடு

சரியை முதலியவற்றில் நிற்பவர்கள் சமய தீக்கை முதலியன பெற்றுக் காலை நண்பகல் மாலைகளில் வழிபாடு செய் யுங்கால், அவ்வவழிபாட்டை சிவபிரான் சந்தித்தெய்வமாய் நின்று ஏற்றுஅவர்களக்கு அருள்புரிதலை,

புரிகாலே நேசம் செய்ய இருந்தபுண் டரீகத் தாரும்

எரிகாலே மூன்று மாகி இமையவர் தொழநின் றாரும்

தெரிகாலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று

திரிகாலங் கண்ட எந்தை திருச்செம்பொன் பள்ளி யாரே

(தி. 4. ப. 29. பா. 7)

என்று, செல்வேந்தர் குறித்தருளுகின்றார்.

யோகம் சைவ நாற்பாதங்களில் மூன்றாவது படியாகக் கூறப்படுவதாகும். சரியை, கிரியை ஆகிய நெறிகளை விட மேலானதாக இந்நெறி சாத்திர நூல்களில் கூறப்படுகின்றது. இதற்கு இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய அட்டாங்க யோக உறுப்புக்கள் உள்ளன. இவ்வட்டாங்க யோகங்களிலும் பயிற்சி பெற்று படிப்படியாகத் தேறியவரே யோக நெறியை அனுசரிக்க முடியும். இதனை யோகியரிடம் பயின்ற திடசித்த முடையவர்களே அனுட்டித்து ஈடேற முடியும். இந்நெறி நட்பு மார்க்கமாக ஒழுக வேண்டியதால் இந்நெறி மூலம் சாரூப முத்தியும் சிவரூபம் பெறும் பாக்கியமும் பெறுவர். இச்சக மார்க்கம் பற்றி திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.

யோகச் சமாதியின் உள்ளே அகலிடம்

யோகச் சமாதியின் உள்ளே உளர் ஒளி

யோகச் சமாதியின் உள்ளே உள சக்தி

யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.

தகுதியான குருவை பணிந்து யோக முறைகளை கற்று, தொடர் பயிற்சியின் மூலம் உடல்,மனம் ஆகியவற்றை தூய்மையாக்கி இறைவனை வழிபாடு செய்து முக்தி பெறுவதே யோக வழியாகும். இத்தகைய முக்தி நிலை சாரூப முக்தி எனப் படும்.

Gnanam – ஞானம்:

இனி, சரியை முதலிய நான்குமே ஒருவகையில் ஞானமாயினும், சிவப்பேற்றை நேரே அடைவிப்பதாய், `ஞானம்’ எனச் சிறந்தெடுத்துப் பேசப்படுவது, `பதி, பசு, பாசம்’ என்னும் முப்பொருளின் இயல்புகளைஉள்ளவாறு உணர்தலேயாகும். இதுவே, `தத்துவஞானம்,’ `ஆத்தும ஞானம்’ என்றெல்லாம் சிறப்பித்துக் கூறப்படுவது. இதனையே நாம் சாத்திரங்களில் விரிவாகக் காண்கின்றோம்.

ஞானம் சைவ நாற்பாதங்களில் நாலாவது படியாகக் கூறப்படுவதாகும். ஞானமானது ஆன்மாவாகிய தன்னை சிவார்ப்பதிதஞ் செய்தல். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் வழிபடுதலாகும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கு அங்கங்கள் இந்நெறிக்கு உண்டு. முன்னைய மூன்று நெறிகளிலும் நின்று பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவிலே வந்து தீட்சை உபதேசம் செய்து ஞானத்தை அளித்து முத்தியை வழங்குவார்.

இத்தகைய ஞானம் கைகூடுவதற்குச் சற்குருவின் அருள் இன்றியமையாதது. ஆன்மாவின் பரிபக்குவ நிலையிற் சிவனே மானுட வடிவிற் குருவாக வந்து தீட்சை கொடுத்து முத்தி அருளுவான். இவ்வாறு சற்குருவின் அருள் பெற்ற சாதகன், அக்குருவைச் சிவனாகவே காணுவான்; சற்குரு வழிபாடே சன்மார்க்கம் என்று திருமந்திரம் கூறுகிறது.

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்ய

பரிசிக்க கீர்த்திக்கப் பாதுகம் சூடக்

குருபக்தி செய்யும் குவலயத்தோருக்குத்

தருமுத்திச் சார்பூட்டும் சன்மார்க்கம் தானே.

குருவைக் காணலும், பூசித்தலும், நினைத்தலும், தொட்டுக் கும்பிடுதலும், குருவின் புகழ் பாடுதலும், திருவடிகளைச் சிரத்திற் சூடுதலும் ஆகிய குருபக்தி செய்யும் நெறியே சன்மார்கம். இது உலகத்தவர்க்கு உலகச் சார்பினை ஒழித்து முத்திச் சார்பினைத் தந்து பேரின்பத்தை ஊட்டும் என்பது இப்பாடலின் பொருள். ஆன்மா சாந்ததன் வண்ணமாவது; பாசத்தோடு சார்ந்திருக்கும் நிலையிலே அசத்தைச் சார்ந்து அசத்தையே காணும். தன்னையும் அசத்தாகவே காணும். இந்தச் சரீரமே தான் என்று எண்ணும். இவ்வாறிருந்த ஆன்மா முத்தி நிலையிலே சத்தைச் சார்ந்து, சத்தையே காணும். அது இந்த உயிர்நிலையடைந்து, உடலோடு கூடியிருக்கும் நிலை ‘சீவன் முத்தி்’ எனப்படும். ‘சீவன்முத்தர்’ உடம்பு பிரியும் போது சிவத்துடன் இரண்டறக் கலந்து பேரின்பம் அனுபவிப்பர். இந்த வகையில் பெறும் முக்தி நிலை சாயுச்ய முக்தி எனப்படும்.

திருச்சிற்றம்பலம்

சிவவாக்கியர் கூறிய ஆட்கொல்லியால் விபரீதம் என்ன?

Standard

சிவவாக்கியர்

 

சிவவாக்கியர் கூறிய ஆட்கொல்லியால் விபரீதம் என்ன?

பதினெண் சித்தர்களுள் ஒருவரான சிவவாக்கியர் சிவபெருமானின் மீது தீராத பக்தி கொண்டவர். சிவபெருமானைத் துதித்து ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். ஒருநாள் சிவவாக்கியர் திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் தன் தவத்துக்கு இடையூறு செய்யாத பெண்ணாக இருக்கவேண்டும் என்றும் நினைத்தார். அதற்காகத் தன் குருநாதரிடம் சென்று யோசனை கேட்டார். குருநாதரோ “பேய்ச்சுரைக்காயையும், மணலையும் எந்தப் பெண் எந்தவித மறுப்பும் இல்லாமல் நீ கொடுத்ததும் உனக்குச் சமைத்துத் தருகிறாளோ அவளே உனக்கானவள். அவளையே நீ திருமணம் செய்து கொள் ” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

சிவவாக்கியர்

ஒருநாள் ஒரு கிராமத்தின் வழியாக சிவவாக்கியர் நடைப்பயணமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மிகுந்த பசி ஏற்பட்டது. போகும் வழியில் தென்பட்ட ஒரு வீட்டுக்குச் சென்றார். அங்கே ஒர் இளம் பெண்ணைத்தவிர வேறு எவரும் இல்லை.

அவளிடம் சென்ற சிவவாக்கியர் “வீட்டில் பெரியவர்கள் இல்லையா அம்மா”, என்றார்

அந்தப்பெண்ணோ ” இல்லை ஐயா, என் பெற்றோர்கள் கூடை முடைவதற்கு மூங்கில் வெட்டிவரச் சென்றிருக்கிறார்கள்” என்றாள்.

உடனே சிவவாக்கியரோ ” சரி அம்மா எனக்கு மிகுந்த பசியாய் இருக்கிறது. என்னிடம் பேய்ச்சுரைக்காயும், மணலும் இருக்கின்றது. இதனைச் சமைத்து எனக்கு உணவு பரிமாற முடியுமா” என்று கேட்டார்.

உடனே அந்தப்பெண் எந்தவித தயக்கமும் இன்றி பேய்ச்சுரைக்காயையும், மணலையும் அழகாகச் சமைத்து உணவு பரிமாறினாள்.

சிவவாக்கியரோ, குருநாதர் அடையாளம் காட்டிய பெண் நமக்கு கிடைத்துவிட்டாள் என்று மகிழ்ச்சி அடைந்தார்.

அந்தப் பெண்ணின் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பினார்கள். சிவவாக்கியர் அவர்களிடம் ” உங்கள் பெண் நான் கொடுத்த பொருளை வைத்து அருமையாக உணவு தயாரித்து பரிமாறினாள். என்னை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. என் தவத்துக்கு இவளால் எந்த இடையூறும் இருக்காது என்று நான் நம்புகிறேன், எனவே எனக்கு இவளைத் திருமணம் செய்துதர முடியுமா” என்று கேட்டார்.

அப்பெண்ணின் பெற்றோரும் “ உங்களைப் பார்த்தால் சித்தரைப் போன்று இருக்கிறது. உங்களுக்கு எங்கள் பெண்ணைத் திருமணம் செய்துதருவது நாங்கள் செய்த புண்ணியம் சாமி” என்று கூறித் திருமணத்துக்குச் சம்மதித்தனர். இருந்தபோதும் “எங்கள் குல வழக்கப்படி திருமணத்துக்குப் பின்னரும் எங்களுடனே நீங்கள் தங்கியிருக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டனர். சிவவாக்கியர் அதற்கு ஒப்புக்கொள்ளவே திருமணம் சிறப்பாக நடந்தேறியது.

குடும்ப வாழ்க்கையை ஏற்றுக் கொண்டாலும் இல்லற வாழ்வில் நாட்டமில்லாதவராகத்தான் இருந்தார் சிவவாக்கியர். பாசி, பவளமணி சேகரிப்பது, மூங்கில் வெட்டி முறம் செய்வது போன்ற வேலைகளை அவர்களோடு இணைந்து செய்து வந்தார்.

ஒருநாள் வழக்கம்போல் மூங்கில் வெட்டுவதற்காகக் காட்டுக்குச் சென்றார் சிவவாக்கியர். அப்படி வெட்டிக் கொண்டிருக்கும்போது தங்கத் துகள்கள் பொடிப்பொடியாக உதிர்வதைக் கண்டார். இதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தார் .

சிவபெருமான்

‘ஆடுகாட்டி வேங்கையாய் அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ’
‘கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே’.

‘சிவபெருமானே ஆட்டைக் காட்டி, புலியைப் புடிப்பது போல் இந்த ஆட்கொல்லியைக் காட்டி என்னை மதிமயக்கப் பார்க்கிறாயா.
நான் உன்னிடம் வேண்டுவது முக்திதானே தவிர ஆட்கொல்லி இல்லை என்று சொல்லி மரத்தை விட்டுத் தூரமாகச் சென்றார்.

இதனை நான்கு இளைஞர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர்

“என்ன ஐயா எதைக்கண்டு இவ்வளவு பயத்துடன் ஓடி வருகிறீர்கள்?” என்று கேட்டனர்.

அதற்குச் சிவவாக்கியர் ” நான் ஒரு மூங்கில் மரத்தை வெட்டிக் கொண்டிருக்கும்போது, உள்ளிருந்து ஆட்கொல்லி வந்தது, அதனால்தான் பயந்து ஓடிவந்தேன்” என்றார். தங்கம்தான் கொட்டியது என்பதையறிந்த நால்வரும் சிவவாக்கியரை பைத்தியம் என்றெண்ணி தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். மேழும் சிவவாக்கியரிடம் “ஆமாம் ஐயா, இது ஆட்கொல்லிதான். நீங்கள் உடனடியாக வீட்டுக்குச் சென்றுவிடுங்கள்” என்று சொல்லி அனுப்பிவைத்தனர்.

சிவவாக்கியர் சென்றதும் நால்வரும் சேர்ந்து தங்கத்தை மூட்டையாகக் கட்டிக் கொண்டனர். இப்போது ஊருக்குள் சென்றால் மாட்டிக் கொள்வோம். இருட்டியதும் செல்லலாம் என்றும் முடிவெடுத்தனர். நால்வரில் இருவர் பக்கத்து ஊருக்குச் சென்று உணவு வாங்கி வரவும், மீதமிருவர் தங்க மூட்டையை பார்த்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

உணவு வாங்கச் சென்றவர்கள் இருவரும் வாங்கி வரும் உணவில் விஷத்தைக் கலந்து காட்டில் இருக்கும் இருவரையும் கொன்றுவிட்டு, தங்கத்தைப் பங்கிட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர். காட்டில் இருப்பவர்களோ உணவு வாங்கச் சென்றவர்கள் இருவரையும் அடித்துக் கொன்றுவிட்டு தங்கத்தைத் தாங்கள் இருவரும் அபகரிக்க முடிவு செய்தனர். அதற்காக ஒரு மரத்துக்குப் பின் ஒளிந்தும் கொண்டனர்.

தங்கள் திட்டமிட்டபடியே அவர்கள் காட்டுக்குள் வந்ததும், இருவரையும் அடித்தே கொன்றனர். பின்பு அதிகமாக பசி எடுக்கவே அவர்கள் வாங்கி வந்த உணவை உட்கொண்டனர். விஷம் கலந்த உணவு ஆதலால் இவ்விருவரும் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தனர்.

திருச்சிற்றம்பலம்

உமாதேவியார் சிவபூசை

Standard

காஞ்சியில் வாழ்பவர் எத்தகையவராயினும் மாதவங்களாக மாறும்  பேறு

பெரியபுராணம் போற்றும் பெண்ணடியார்கள் / உமாதேவியார் சிவபூசை

(திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம் / சேக்கிழார் அருளியது)

தென்னாடு செய்த திருத்தவத்தால் உமாதேவியார் சிவபூசை செய்வதற்காக காஞ்சிபுரம் வந்தடைந்தார். அங்கு பதுமன் என்ற நாகம்உமாேதவியாரின் திருவடிகளை வணங்கி எல்லா உலகங்களையும் ஈன்றருளிய அன்னனயே அடியேன் வாழும் பிலத்தின் இடையில் நீவிர் அமர்ந்து திருக்கோயில் கொண்டுருள ேவண்டும் என்று விண்ணப்பித்து உமையம்மையும் பதுமனின் விண்ணப்பத்தினை ஏற்று அவ்வாறே அருள்புரிந்தார். உமாதேவி எல்லையில்லா இன்பத்தில் அருள் வடிவமான சிவலிங்கத்தை இருத்தி சிவபூசை செய்ய விரும்பினார்.

இறைவனின் திருவுருவை காண்பதற்காக எங்கு தேடியும் சிவபெருமான் திருவிளையாட்டினால் எங்கும் சிவமாக நிறைந்திருந்தேயன்றி ஓர்உருவமும் தென்பட வில்லை. அதனால் உமாதேவியார் மனம் வாக்கு காயத்தால் மாதவம் செய்தே ஈசனை காண விழைந்தார். மனம் இறைவனைக் காண்பதையே குறிக்கோளாக கொண்டு இறைவனையே எண்ணியது. திருவாக்கு இடைவிடாது நரந்தரமாக திருவைந்தெழுத்தையே நிகழ்த்தியது. திருக்கைகள் சிரமேற் குவித்து கூப்பிய வண்ணம் அருந்தவம் செய்தன. இவ்வாறு சிவனையே தஞ்சமாக வைத்து அரும் தவம் ஆற்றினார்.

உமையம்மையின் தனிப்பெருங்கணவராக சிவபெருமான் தேவியாரின் அருந்தவத்தை கண்டு வாளாதிரு்பபாரோ?  தேவியார்  காணும் படி மாமரத்தினடியில் வந்து சிவலிங்கத் திருமேனியாக காட்சியாளித்தார். உமாதேவியார் தான் செய்த பெருந்தவத்தின் பயனாக ஏகம்பத்தில் எழுந்தருளிய

ஏகாம்பரநாதரைக்  கண்டதும் திருவடிகளில் விழுந்து வணங்கி எழுந்தார். தன் நாதர் மீது அளவில்லாத காத் உள்ளூரப் பொங்கி எழுந்தது. தன் நாதர் உரைத்த ஆகம விதிப்படி அவரை பூசை செய்ய வேண்டும் என்ற விருப்பம் பெருக்கெடுத்ததால் தேவியார் அவ்வாறே பூசை செய்யத் தொடங்கினார்.

தன்சேடியர்களான கமலினியும்,  அனிந்தரையும் பூக் கூடைகளை ஏந்தி கொண்டு தன்னுடன் வர, தேவியாரின் திருவடியினையடிகள் ஓதுங்கி நடந்து அடியெடுத்து வைத்து அம்பிகாவனம் என்னும் திருநந்தவனத்திற்கு சென்று சிவ பெருமானுக்கு ஏற்ற தூய புது நறுமலர்கள் கொய்தனர். பின்பு அந்த நறுமலர்களால் காப்பிடச் சந்தனம் மற்றும் தூபதீபங்கள் முதலான பூசை சாதனங்களைக் கொண்டு வந்து தேவியார் விரும்பும்பேதெல்லாம் சேடியர்கள் எடுத்து ஏத்த சிவாகமங்கள் வாசித்தவாறே மெய்யன்போடு உலக மாதவான எம்பிராட்டி உமாதேவியார் பூசை செய்து வந்தார்.

இதைக்கண்ட ஏகாம்பரநாதர் திருவுள்ளம் மகிழ்ந்தார். அம்மையார் மீது கொண்ட பெருங்காதல் மிகுதியினால் ஒரு திருவிளையாடல் மூலம் திருவருள் புரிய எண்ணினார். ஏழு கடல்களும் ஒன்றாக திரண்டு வானம் முட்ட வருவது போலக் கம்பா நதியில் வெள்ளம் பெருகி வருமாறு செய்தார். அந்த பெருவெள்ளம் பொங்கிப் பாய்ந்து மேலெழுந்து ஓடி வருவதைக் கண்டதும் உமையம்மை பதறினார். அந்த பெருவெள்ளம் சிவலிங்கத்தின் மீது வந்து விடுமோ என்று பதறினார். தன் கையால் அவ்வெள்ளத்தை தடுத்து நிறுத்த முயன்றார்.  தன் நாயகராகிய சிவலிஙகத்தின் மீது வெள்ளம் கொள்ளாதிருக்க அன்பு மிகுதியால்  சிவலிங்கத் திருமேனியை தம் திருமுலைகள் சிவனாரின் மார்பில் பதிய தமது வளைக்கரங்களினால் வளைத்து நெருக்கி இருக்கி கட்டி அனைத்து தழுவிக்கொண்டார். தம் தேவியின் கொங்கைகளும் தளிர் கைகளுக்கும் மெத்தென்று குழையும்படி தன் வலிமையான திருமேனியை குழைந்து காட்டினார். இது கண்டு அண்ட சராசரங்களிலுள்ள எல்லா உயிர்களும் உருகி எம்பிராட்டிக்கு மெல்லியரானார் ஏகாம்பரார் என்று போற்றித் துதித்தன. தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். கம்மையாற்றில் எழுந்த பெருவெள்ளம் உமையம்மையின் திருமு்ன்  வந்து வணங்கி அடங்கியது. தம் தேவி தழுவியதால் மெய்ப்பயனை பெற்ற சிவலிங்கப் பெருமான் தமது திருமேனியில் கைவளைத் தழும்பும் முலைச்சுவடும் அணிந்து கொண்டார்.

 

பெருமாட்டியாரின் தலைவரான சிவபெருமானும், அப்பெருமாட்டியாரின் பூசையினைப் பெருவிருப்பத்துடன் மகிழ்வுற ஏற்று வரும்பொழுது, காதல் மிகுந்ததொரு திருவிளையாட்டால், அழகிய குண்டலங்களை அணிந்த அம்மையாருக்கு அருள் புரிந்திட வேண்டி, ஒலி பொருந்திய கடல் ஏழும் ஒன்றாகத் திரண்டு பெருகி ஓங்கி, வான் உலகுகளும் தன்னுள் அடங்கிடுமாறு பரந்து, மேல் செல்வது போன்று பெருகி வரும்படி, கம்பையாற்றை வெள்ளமாகப் பெருகும்படி தமது திருவுள்ளத்து நினைந்தருளினார்.

இதோ அதற்கான சேக்கிழார் பெருமானின் பாடல்கள்.

அண்ண லாரருள் வெள்ளத்தை நோக்கி

அங்க யற்கண்ணி தம்பெரு மான்மேல்

விண்ணெ லாங்கொள வரும்பெரு வெள்ளம்

மீது வந்துறும் எனவெருக் கொண்டே

உண்ணி லாவிய பதைப்புறு காதல்

உடன்தி ருக்கையால் தடுக்கநில் லாமை

தண்ணி லாமலர் வேணி யினாரைத்

தழுவிக் கொண்டனள் தன்னையே ஒப்பாள்

தலைவரான சிவபெருமான், அருளிய அக் கம்பையாற்றின் பெருவெள்ளத்தினை, அழகிய கயல் மீன் போலும் கண்களையுடைய பெருமாட்டியார் நோக்கித், தாம் பூசனை புரிந்தருளும் தம் பெருமான்மேல், வானும் அடங்குமாறு பெருகி வரும் பெருவெள்ளம் வந்து அலைக்கும் என அச்சம் கொண்டு, தம் திருவுள்ளத்து நிலவுகின்ற பதைப்புடைய காதலுடன், தம் திருக்கையால் அவ்வெள்ளத்தைத் தடுத்திடவும், அவ்வெள்ளம் நில்லாமையைக் கண்டு, பின்னர்ச் செயல் வேறின்றி, குளிர்ந்த பிறையினைச் சடையில் உடையாரைத் தம்மையே தமக்கு ஒப்பான பிராட்டியார், இறுகத் தழுவிக் கொண்டார்.

மலைக்கு லக்கொடி பரிவுறு பயத்தால்

மாவின் மேவிய தேவநா யகரை

முலைக்கு வட்டொடு வளைக்கையால் நெருக்கி

முறுகு காதலால் இறுகிடத் தழுவச்

சிலைத்த னித்திரு நுதல்திரு முலைக்கும்

செந்தளிர்க் கரங்க ளுக்கும்மெத் தெனவே

கொலைக்க ளிற்றுரி புனைந்ததம் மேனி

குழைந்து காட்டினார் விழைந்தகொள் கையினார்

மலையரசன் மகளாராகிய பூங்கொடி போன்ற பெருமாட்டியார், தம் திருவுள்ளத்துப் பெருமானார் மீது கொண்ட அன்பு கெழுமிய அச்சத்தால், மாமரத்தின் அடியின் மேவி இருந் தருளும் தேவர் தவைரைத் தம் மார்பகமாகிய மலையோடு வளை யணிந்த கைகளால் இறுகத் தழுவிக் கொள்ளலும், அப்பெருமாட்டி யாரின் அன்பினை விரும்பும் சிவபெருமான் அதுபொழுது வில்லின் வனப்புடைய திருநெற்றியையுடையவரான பெருமாட்டியாரின் திருமுலைக்கும், சிவந்த தளிர்போலும் அப்பெருமாட்டியாரின் திருக்கரங்களுக்கும், மெத்தென்று இருக்குமாறு, கொலை செயும் யானைத் தோல் போர்த்த தமது திருமேனியைக் குழைந்து காட்டினார்.

பாடல் எண் : 65

கம்பர் காதலி தழுவமெய் குழையக்

கண்டு நிற்பவுஞ் சரிப்பவு மான

உம்ப ரேமுதல் யோனிக ளெல்லாம்

உயிரும் யாக்கையும் உருகியொன் றாகி

எம்பி ராட்டிக்கு மெல்லிய ரானார்

என்றும் ஏகம்பர் என்றெடுத் தேத்த

வம்பு லாமலர் நிறையவிண் பொழியக்

கம்பை யாறுமுன் வணங்கிய தன்றே

தம் காதலியார் தம்மைத் தழுவிட, ஏகம்பர் தமது திருமேனி குழைந்திடக் கண்டபோது, நிற்பனவும் இயங்குவனவும் ஆகிய தேவர்கள் முதலாக உள்ள எழுவகைத் தோற்றத்து எண்பத்து நான்கு நூறாயிரம் வகைப்பட்ட உயிர்கள் எல்லாம், தம் உயிரும் உடலும் உருகி ஒன்றாகி எம்பெருமாட்டியாருக்கு என்றும் மெல்லிய ரானார் எம்பெருமான் என்று எடுத்து மொழிந்து போற்றிட, நறுமணம் பொருந்திய மலர்களை வானம் பொழிந்திட, அது பொழுது கம்பை யாறும் வணங்கித் தன் வெள்ளம் தணிந்தது

பூதியாகிய புனித நீர் ஆடிப் பொங்கு

கங்கை தோய் முடிச் சடை புனைந்து

காதில் வெண் குழை கண்டிகை தாழக்

கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்

ஆதி தேவனாராயுமாதவஞ் செய் அவ்

வரங்கொலோ அகிலம் ஈன்று அளித்த

மாது மெய்ப் பயன் கொடுப்பவே கொண்டு

வளைத் தழும்புடன் முலைச் சுவடு அணிந்தார்

4.5.66

1149

. கோதிலா அமுது அனையவள் முலைக்

குழைந்த தம் மணவாள நல் கோலம்

மாது வாழவே காட்டி முன் நின்று வரங்கள்

வேண்டுவ கொள்க என்று அருள

வேத காரணராய ஏகம்பர் விரை மலர்ச்

செய்ய தாமரை கழல் கீழ்

ஏதம் நீங்கிய பூசனை முடிந்த தின்மை

தான் அறிவிப்பதற்கு இறைஞ்சி

சிறந்த செல்வமாகிய தூய நீற்றினை அணிந்து, பொங்கிடும் கங்கை ததும்பும் முடியையுடைய சடையை அணிந்து, திருக்காதில் வெண்தோடும் திருமார்பில் உருத்திராக்கமாகிய கண்டி கையும் தாழ அணிந்து, தாம் அருளுடன் கலந்த யோகத்தில் பொருந்திய திருவுள்ளம் உடையராக, அவர் தோற்றமில் காலத் தவராக நின்றாலும், பெருமாட்டியாரின் பெருந்தவத்தால் ஆய வரம் தானோ பிறிதோ அறியோம்; உலகம் யாவற்றையும் உளவாக்கிய அம்மையார் தம் உடலின் பயனைக் கொடுப்பவே அதனைக் கொண்டு, அப் பெருமாட்டியாரின் அடையாளங்களாகிய வளைத் தழும்புடன் முலைச் சுவடும் அணிந்து கொண்டார் பெருமான்.

தேவியார் விரும்பிய வண்ணம் சிவபெருமான் அவரது பூசையை ஏற்றக் கொண்டார், காஞ்சியில் வாழ்பவர்கள் எத்தன்மையராயினும் அவர்கள் செய்யும் தீவினையும் மெய்நெறியினை அடைவதற்கு அவற்றையே மாதவங்களாக மாறும் படியும் வரம் கொடுத்தருளினார் எம்பெருமான்.

திருச்சிற்றம்பலம்

Standard

வழிபடும் முறை (சாதனஇயல்)

 

இறைவனை வழிபடுவதற்கான வழிமுறைகள் யாவை?

 

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்குமே இறைவனை வழிபடுவதற்கான நெறிகள் ஆகும்.

இவற்றுள் சரியை என்பது, உடலால் வழிபடுவது. அ•தாவது திருக்கோயிலை வலம் வருவது, திருக்கோயிலுக்குப் பூ மாலைகொடுப்பது, திருக்கோயிலில் துப்புரவுப் பணி செய்வது முதலியன உடலால் வழிபடுவது ஆகும்.

கிரியை என்பது வாயினால் வழிபடுவது. அதாவது அஞ்செழுத்து மந்திரங்களை ஓதுவது, திருமுறைகளை நாள்தவறாமல் படனம் செய்வது, சாத்திர தோத்திரக் கருத்துக்களைப் பிறர்க்கு எடுத்துரைப்பது முதலியன வாயினால் செய்யும் வழிபாடு ஆகும்.

யோகம் என்பது மனத்தினால் வழிபடுவது. அதாவது வழிபடு தெய்வத்தின் வடிவத்தை மனத்தில் வைத்து தியானிப்பது. அந்தரியாக பூசை செய்வது, அஞ்செழுத்து மந்திரத்தை உள்ளத்தால் அக்குமாலை கொண்டு எண்ணுவது முதலியன மனத்தினால் செய்யும் வழிபாடு ஆகும்.

இம்மூவகை வழிபாடுகளையும் தவறாமல் செய்து வந்தல், இறைவன் நமக்கு ஞானத்தை உணர்த்துவான். அவ்வாறு உணர்த்தும்போது, சீவன்முத்தர்களை அதிட்டித்து நின்றோ, குருநாதனாக வந்தோ, மானுடச் சட்டை போத்தியோ வந்து உணர்த்துவான். எனவே, குருபீடத்தில் அமர்ந்துள்ள ஞானிகளை வழிபடுவது ஞானநெறியில் செய்யும் வழிபாடாகும்.

மனம், வாக்கு, காயங்களால் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பதற்காகவே இந்த மனிதப் பிறவி நமக்கு வழங்கப்பட்டது. இவ்வுண்மையைத் தெளிவுபடுத்திச் சிவஞானசித்தியாரில்,

“மானுடப்பிறவி தானும் வகுத்தது மனம் வாக்குக் காயம்

ஆன இடத்து ஐந்து ஆகும் அரன்பணிக் காக அன்றோ” (182)

என்று அருணந்திசிவம் அருளிச்செய்துள்ளார்.

 

தெய்வ வழிபாடு என்பது யாது?

 

ஒவ்வொருவரும் தாம் வழிபடுவதற்கு என ஒரு தெய்வவடிவத்தை மேற்கொள்ள வேண்டும். அத்தகு தெய்வ வடிவம், மகேசுவர மூர்த்தங்கள் இருபத்தைந்தனுள் ஒன்றாகவோ, சதாசிவ வடிவமாகிய சிவலிங்க வடிவாகவோ இருக்க வேண்டும். அந்த வடிவத்தையே மனத்தினால் எப்போதும் நினைக்க வேண்டும். அந்த தெய்வத்தைக் குறித்த பாடல்களை வாயினால் ஓத வேண்டும். அத்தெய்வத்திற்குரிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு வழிபட்டு வருவோமானால், சிவபெருமான் அத்தெய்வவடிவில் நின்று, நமக்கு வேண்டுவன யாவற்றையும் செய்தருள்வான்.

இவ்வுண்மையைச் சிவஞானசித்தியார்,

‘‘மனமது  நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல

இனமலர் கையில் கொண்டு அங்கு, இச்சித்த தெய்வம் போற்றிச்

சினம் முதல் அகற்றி வாழும் செயல் அறம் ஆனால் யார்க்கும்

மனம் ஒரு தெய்வம் எங்கும் செய்தற்கு முன் நிலையாம் அன்றே”(114)

என்று தெளிவுபடுத்தியுள்ளது.

‘இச்சித்த தெய்வம்’ என்பது வழிபடுவதற்குத் தேர்ந்து எடுத்துக்கொண்ட வடிவம் என்பதாகும். ‘செயல் அறம்’ என்பது, (122) ஆம் தடைக்குள்ள விடையில் கூறியுள்ள பதினாறு சைவ ஒழுக்கங்கள் ஆகும்.

 

மகேசுவர வடிவங்கள் இருபத்தைந்தையும் சிவலிங்க வடிவத்தையும் மட்டுமே, வழிபடு தெய்வமாகக் கொள்ள வேண்டும் என்பதற்கு என்ன காரணம்?

 

இறைவன் பிறப்பு இறப்பு

இல்லாதவன்; உயிர்கள் அனைத்தும் பிறப்புக்கு உட்படுவன. பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு வழிபடுகின்ற நாம், பிறப்பு இறப்புக்கு உட்படாத இறைவனின் வடிவங்களையே வழிபடவேண்டும். அவ்வடிவங்களில் மட்டுமே இறைவன் முனைந்து நின்று நமக்கு அருள் பாலிக்கிறான். இவற்றைத்தவிர, பிற தெய்வ வடிவங்கள் வழிபாட்டுக்கு உரியனவல்ல. இதற்குக் காரணம், அவ்வடிவங்களை உடைய தெய்வங்கள் உயிர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள், ஒவ்வொரு பிறப்பிலும் துன்பப்படுகிறார்கள்; அடுத்துப் பிறப்பதற்குரிய வினைகளைச் செய்கிறார்கள். எனவே அத்தெய்வங்களால் நமக்கு அருளை வழங்க முடியாது. எனவே மகேசுவர வடிவங்கள் இருபத்தைந்தையும் சதாசிவ வடிவத்தையும் மட்டுமே வழிபட வேண்டும் என்பது தெளிவாகிறது.

இவ்வுண்மையைச் சிவஞானசித்தியாரில்,

“யாதொரு தெய்வம் கொண்டிர் அத்தெய்வம் ஆகி ஆங்கே

மாதொரு பாகனார்தாம் வருவர்; மற்றத் தெய்வங்கள்

வேதனைப்படும்; பிறக்கும்; மேல்வினையும் செய்யும்;

ஆதலால் இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே”(115)

என்று அருணந்திசிவம் அருளிச் செய்துள்ளார்.

இன்னும், அந்தத் தெய்வங்கள் அவரவர் நிலையில் நின்று பயன் தருவார்களே அல்லாமல், நமக்கு வேண்டுவனவற்றை எல்லாம் வழங்க, அவற்றால், இயலாது. இதற்கு, “அத்தெய்வம் அத்தனைக் காண்” என்னும் பிரமாணம் தெளிவாக உள்ளது.

 

அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகளின்படி நடந்துகொண்டால் போதாதா? இறைவழிபாடு வேறு செய்ய வேண்டுமா?

 

அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகள் அனைத்தும் இறைவனால் வேதாகமங்களில் கூறப்பட்டவையே ஆகும். அவ்விதிகளின்படி ஒழுகுபவர்களுக்கு உள்ள பயன்களை இறைவனே வழங்க வேண்டியுள்ளது. அறச் செயல்களில் சிறந்தது, இறைவன் கருணையை நினைந்து அவனை வழிபடுவதே ஆகும். எனவே, இறைவன் திருவருளை மறந்துவிட்டுச் செய்யும் அறச்செயல்கள் அனைத்தும் பயனற்றவையே ஆகும். அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகளின்படி ஒழுகுவதோடு, இறைவழிபாடு செய்வதும் இன்றியமையாதது என்பது இதனால் பெறப்பட்டது.

இவ்வுண்மையைத் தெளிவுபடுத்திச் சிவஞானசித்தியாரில்,

“காண்பவன் சிவனேயானால், அவனடிக்கு அன்பு செய்கை,

மாண்புஅறம்; அரன்தன் பாதம் மறந்துசெய் அறங்கள் எல்லாம்

வீண்செயல்; இறைவன் சொன்ன விதி அறம்; விருப்பு ஒன்று இல்லான்;

பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே”

என்று அருளிச் செய்துள்ளார்.

 

சிவபெருமானை எவ்வாறு வழிபட வேண்டும்?

 

சிவலிங்கம், சிவனடியார் என்னும் இரு திருமேனிகளையும் ஆதாரமாகக் கொண்டு, சிவபெருமான் உயிர்களின் புறப்பூசையினையும் அகப்பூசையினையும் ஏற்று உயிர்களுக்கு அருள் செய்வான்.

இவ்விரு பூசைகளுள் அகப்பூசையினைப் பரிபூரண பூசையாக ஏற்று; உயிர்களின் அகத்தே முன் நின்று அருள் செய்வான். இவ்வாறு, சிவபெருமானை வழிபட வேண்டும்.

இவ்வுண்மையைச் சிவஞானசித்தியாரில்,

“தாபர சங்கமங்கள் என்று இரண்டு உருவில் நின்று

மாபரன் பூசைகொண்டு மன்உணிர்க்கு அருளை வைப்பன்;

நீ, பரன்தன்னை நெஞ்சில் நினைவையேல், நிறைந்த பூசை

ஆய், பரம்பொருளை நாளும் அர்ச்சி; நீ அன்பு செய்தே”

 

ஷோடச உபசாரங்கள் யாவை?

 

ஆவாஹனம், ஆஸனம், பாத்யம், அர்க்யம், ஆசமனம், ஸ்னானம், வஸ்த்ரம், யஞ்யோபவீதம், ஆபரணம், கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம், தாம்பூலம், ப்ரதக்ஷிண நமஸ்காரம்

 

அகப்பூசை செய்யும் முறையும் அதனால் பெறும் பயனும் யாவை?

 

அகப்பூசை செய்யும் முறை வருமாறு :-

நமது இதயத்தை அதற்குரிய இடமாகக் கொள்க. நமது கொப்பூழிலிருந்து எட்டு அங்குல நீளமுள் ஒரு தண்டு இருப்பதாகக் கருதுக. அத்தண்டின் முடிச்சில் எட்டு இதழ்கள் இருப்பதாகக் கொள்க. அந்நிலையில் ஒரு தாமரை மலர் இருப்பதாகக் கருதுக. அந்தத் தாமரை மலரின் நடுவே, வழிபடு தெய்வத்தின் வடிவத்தை நிலைபெறச்செய்க.

அந்த வழிபடு வடிவத்திற்கு வாசனைத் திரவியங்கள், பால், தயிர், நெய், கோசலம், கோமயம், ஆகிய பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்குச் செய்க. பின்னர், உயர்ந்த ஆடை ஆபரணங்களால் அழகு செய்க. அதன் பிறகு மலர்மாலைகள் சூட்டுக, பின்பு விடுமலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்க. அதன்பிறகு திருவமுது படைத்து ஊட்டுக; பின்பு தூபம் காட்டுக. இவற்றை எல்லாம் மனத்தினாலே கருதிக்கொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது ‘அந்தரியாக பூசை’ எனப்படும். இ•தே அகப்பூசை செய்யும் முறையாகும்.

இதனால் பெறும் பயன் வருமாறு :-

கண்ணாடியை விளக்க விளக்க, மாசு நீங்கி மேலிட்டு வரும் ஒளி போன்று ஆன்மா சுத்தி அடைவதால் சிவபெருமான் நம் வழிபடு தெய்வ வடிவில் நின்று விளங்கித் தோன்றுவான். அதன் பயனாக மும்மலங்களும் நீங்கி ஞானம் தோன்றும். இதுவே ஆன்ம முத்திக்குரிய உயர்ந்த சாதனமாகும்.

இதற்குப் பிரமாணம் :-

சிவஞானசித்தியார் (300) மற்றும் (301).

 

சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு நெறிகளில் இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவுமுறை எத்தகையதாக இருக்கும்?

 

சரியை நெறியில், இறைவனுக்கும் நமக்கும் உள்ள உளவு முறை, ஆண்டானுக்கும் அடிமைக்கும் உள்ளது போன்றது. கிரியை நெறியில், தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு முறை போன்றது. யோக நெறியில், தோழனுக்கும் தோழனுக்கும் உள்ள உறவு முறை போன்றது. ஞானநெறியில், குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவுமுறை போன்றது. இந்நெறியில் உள்ள உறவு முறை நாயகனுக்கும் நாயகிக்கும் உள்ளது போன்றதென சிலர் கூறுகிறார்கள்.

இந்நால்வகை நெறிகளில் உள்ள உறவுமுறை பற்றிய உண்மையைச் சிவஞானசித்தியாரில்,

“சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம்,

தாதமார்க்கம் என்றும் சங்கரனை அடையும்

நன்மார்க்கம் நால், அவைதாம் ஞான யோக

நற்கிரியா சரியை என நவிற்றுவதும் செய்வர்”

என்று அருணந்திசிவம் தெளிவுறுத்தியுள்ளார்.

 

சரியை நெறியாகிய உடலால் செய்யும் வழிபாட்டில் என்னென்ன சிவப்பணிகள் செய்ய வேண்டும்?

 

உடலால் செய்யும் வழிபாடு வருமாறு :-

1. திருக்கோயில்களில் உள்ளும் புறமும் பெருக்கித் துப்புரவு செய்தல்

2. திருக்கோயிலில் உள்ள தரையைச் சுத்தமான பசுவின் சாணம் கொண்டு மெழுகுதல்.

3. அதிகாலையில் எழுந்து, குளித்து, வண்டுகள் மொய்வதற்கு முன், கைநகம் படாமல் மலர்களை கொய்து திருக்கோயிலில் கொடுத்தல்.

4. பூமாலை தொடுக்கத் தெரியுமானால், இண்டை, தொடை, கண்ணி, பந்து, தண்டிற் கட்டுமாலை முதலிய பூமாலைகளைத் தொடுத்துத் திருக்கோயிலில் சேர்ப்பித்தல்.

5. பன்னிரு திருமுறைப் பாடல்களை வாயினால் பத்தி பரவசத்துடன் பாடுதல்.

6. பசுவின் நெய், எள் எண்ணெய் முதலியவற்றால் தீபம் ஏற்றுதல்.

7. மலர்தரும் மரங்களை கொண்ட திருநந்தவனம் அமைத்தல்.

8. சிவவேடப் பொலிவு உடையவரைச் சிவனாகவே நினைந்து வழிபடுதல். இதற்குப் பிரமாணம், சிவஞானசித்தியார் (271) ஆகும்.

 

கிரியைநெறி ஆகிய மனமும் உடலும் கொண்டு செய்யும் வழிபாட்டில் (பெரும்பாலும் வாயினால் செய்வது) என்னென்ன சிவப்பணிகள் செய்ய வேண்டும்?

 

இஃது, ஏறத்தாழ நமது இல்லங்களில் செய்யும் வழிபாடு ஆகும். வீட்டிலுள்ளவர்களது உதவியோடு வேண்டிய உபகரணங்களை அமைத்துக்கொண்டு, வழிபடு தெய்வத்தை (உபாசன மூர்த்தம்) வீட்டில் நிறுவி வழிபடுவது. அப்போது திருமுறைகளைக் கலந்த அன்பாகிக் கசிந்துருகிப் பாடவேண்டும்.

வீட்டில் என்னென்ன முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை சிவஞான சித்தியாரில் (272) அருணந்திசிவம் அழகுற அருளிச்செய்துள்ளார்.

 

யோகநெறி ஆகிய மனத்தினால் செய்யும் வழிபாட்டில் என்னென்ன சிவப்பணிகள் செய்ய வேண்டும்?

 

இது சிவயோகம் ஆகும். பொறி புலன்களை ஒடுக்கி, சுவாசத்தை ஒருவழிப்படுத்தி, ஏறத்தாழ அகப்பூசை செய்யும் முறையில் சிவபெருமானோடு ஒன்றிய உணர்வோடு மனத்தைப் பழக்குவதே, யோக நெறியில் செய்யும் பணியாகும். இதற்குப் பிரமாணம் சிவஞானசித்தியார் – (272)

 

ஞானநெறியில் செய்ய வேண்டுவது யாது?

 

இது சைவம் கூறும் சன்மார்க்கம். இந்நெறியில் நிற்பவர்கள், சிவாகமங்களில் கூறப்பட்ட பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் உண்மையையம் இயல்பையும் தெளிவாக அறிதல் வேண்டும். அவ்வறிவின் பயனால், ஞானம் ஏற்படும். அப்போது சிவபெருமானை அறியும் உணர்வு தலைப்படும். அந்நிலையிலும், ஆன்மா தன்னையோ, தனது அறிவையோ, தன்னால் அறியப்படும் சிவனையோ வேறுபடுத்தி உணராமல், சிவனருளில் அழுந்தி நிற்கும் பயிற்சினை மேற்கொள்ள வேண்டும். இதற்குப் பிரமாணம் சிவஞானசித்தியாரி – (274)

திருச்சிற்றம்பலம்

தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

நன்றி ; சைவம் டாட் காம்