பஞ்சாட்சர மந்திரம்

Standard

பஞ்சாட்சர மந்திரம்

( தொடர்ச்சி )


சென்ற கட்டுரையில் பஞ்சாட்சர மந்திரத்தின் பெருமைகளையும் அதன் பலன்களையும் திரு ஞானசம்பந்தர் கூறியதை மட்டும் கண்டோம், இக் கட்டுரையில் திருநாவுக்கரசர், மற்றும் சுந்தரரர் ஆகியோர் கருத்தினைக் காணலாம்


பஞ்சாட்சர மந்திரம் பற்றி திருநாவுக்கரசர் 

“அல்லலாக ஐம்பூதங்கள் ஆட்டினும்

வல்லவாறு சிவாயநம வென்று

நல்லம் மேவியநாதன் அடிதொழ

வெல்ல வந்த வினைப்பைக வீடுமே. நாவுக்கரசர்


ஐம்பூதங்களினால் துன்பங்கள் ஏற்பட்டாலும் ” சிவாயநம ” என்று நல்லம் மேவிய சிவபெருமானுடைய திருவடிகைள வணங்கினால் நம்மைக் தாக்க வரும் தீவினைகள் ஓழியும்.

  நாம் செய்த தீவினைகளினால் நமக்கு துன்பங்கள் பல வகைகளில் வருகின்றன. இதுதான் உண்மை. நோயினால் துன்பங்கள்  வரலாம். ஐம்பூதங்களினால் ( நீர், நெருப்பு, காற்று, மண்,ஆகாயம்) இடி,மின்னல்,பெருமழை, பெருவெள்ளம், பெருங்காற்று  தீப்பற்றுதல், பூமி அதிர்ச்சி, இப்படிப் பலப்பல இன்னல்கள் நேரிடலாம், இவ்வகையான துன்பங்கள் வராமலிருக்க வேண்டுமானால் ” சிவாயநம  ” என்று உச்சரித்தால் போதும் என்பது கடவுள் நிலை அறிந்து அம்மயமான திருநாவுக்கரசு சுவாமிகள் அனுபவ வாக்கு ஆகும்.

  போலிச்சாமியார்களை நாட வேண்டாம், வெற்றுச் சடங்குகளில் பொருள் விரயம் செய்யவேண்டாம், காலையில் 108 முறையும், மாலையில் 108 முறையும், இரவில் தூங்கச் செல்வதற்கு முன் 108 முறையும்,”சிவாயநம” என்று சொல்லி வந்தாலே நலம் பயக்கும். பேரிடி இடிக்கும் பொழுது, அல்லது இதுபோன்று திடீரென அதிர்ச்சி ஏற்படும் சமயங்களில் அய்யோ என்று கதருவதற்கு பதிலாக, ” சிவாய நம ” அல்லது ” நமசிவாய என்று சொன்னால் இடியோ, அல்லது மின்னலோ, நம் மீது விழாமல் தடுக்கப்படும். ” சிவாயநம என்று சிந்தித்திரு்பபோருக்கு அபாயம் ஒருகாலும் இல்லை. என்பது ஆன்மிகப் பழமொழி.


  திருநாவுக்கரசர் பெருமானாரை சமணர்களால்  சுண்ணாம்பு காலவாயில் போட்டும்,  யானையினை காலால் மிதிக்க  ஏற்பாடு செய்த போதும், கல்தூணில் கயிற்றால் கட்டி கடலில் வீசு எறியப்பட்டும் இன்னும் பல பல கொடுமைகள் ஏற்பட்ட போது, சற்றும் அஞ்சாது கடலில் தொப்பமாக மிதந்து கரை சேர்ந்தார், அன்னாரை மிதப்பு தொப்பமாக ஆக்கியது இந்த ஐந்தெழுத்து மந்திரமே,


சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமச்சி வாயவே.


பரஞ்சோதியாகிய அழியாத வீட்டுலகினனாய் உள்ள எம்பெருமானுடைய, பொலிவுடைய, தமக்குத்தாமே இணையான சேவடிகளை உள்ளம் பொருந்தக் கைதொழுதலால் கல்லைத் துணையாகச் சேர்த்து அதனோடு இணைத்துக் கடலில் தள்ளிவிட்டாலும் எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தே நமக்குப் பெரிய துணையாகும்.


இருவினையாகிய பாசத்தால், மூன்று மலமாகிய கல்லொடு கட்டியிருத்தலின், மாறி மாறி வருகின்ற பிறவிப் பெருங்கடலில் வீழ்கின்ற அறிவிலுயிர்களும் பேரின்பக் கரை ஏறிட அருளும் அத்தகைய பேராற்றல் உடைய திருவைந்தெழுத்து, திருவைந்தெழுத்து இருவினைக் கயிற்றால் மலங்களாகிய மூன்று கல்லொடு கட்டி வீழ்த்தப் பெற்ற அஞ்ஞானியரைப் பவசாகரத்தினின்று முத்திக் கரையிலேற்றும் ஆற்றல் வாய்ந்தது. அப் பிறவிப் பெருங்கடலிலே மூன்று கல்மேல் ஏறிய அஞ்ஞானத்தரையும் முத்திக் கரை ஏற்ற வல்ல மெய்யெழுத்து, மெய்ஞ்ஞானத்தரசை இச்சிறு கடலிலே ஒரு கல்லின் மேல் ஏற்றி யிடலைச் சொல்லாதே அறியலாம். 


பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை

ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்

கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது

நாவினுக் கருங்கல நமச்சி வாயவே


பூக்களுக்குள் விலைமதிப்பரிய ஆபரணம் இதழ்கள் மிக்க தாமரையாகும் . பசுக்களுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் சிவபெருமான் அபிடேகத்துக்குப் பஞ்சகவ்வியம் உதவுதல் . அரசனுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் செங்கோல் வளையாமல் ஆட்சி செய்வதாம் . நாவினுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் திருவைந்தெழுத்தேயாகும் .


இறைவனால் படைக்கப்பட்ட உலகில் மக்கள் பலகாலும் பழகிச் செய்த பாவத்தை நெருங்கி நின்று போக்குவது திருவைந்தெழுத்தேயாகும் .


எவ்வளவு வறுமைத் துன்பத்தால் நலிவுறினும் எம்பெருமானை விடுத்து வேறுயாரையும் இரந்து ` என் துன்பத்தைப் போக்கினால் நீ எம்பிரானே ` என்று கூறித் துயரத்தைப் போக்கு எனக் கேட்போம் அல்லோம் . மலையின் அடியில் அகப்பட்டுக் கிடந்தாலும் அருளினால் நமக்கு ஏற்படும் நடுக்கத்தை நீக்குவது திருவைந்தெழுத்தேயாகும் 


விரதத்தை மேற்கொண்ட சான்றோர்களுக்குத் திருநீறு சிறந்த அணியாகும் . நான்மறை ஆறங்கம் ஓதுதல் அந்தணர்களுக்குச் சிறந்த அணியாகும் . பிறைக்குச் சிவபெருமானுடைய அழகிய சடை சிறந்த அணியாகும் . எம்மைப் போன்ற அடியார்களுக்குச் சிறந்த அணி திருவைந்தெழுத்தேயாகும் .


அடியவர்கள் கூட அடியேனும் ஓடிச் சென்று எம்பெருமான் திருவுருவத்தை அகக்கண்ணால் கண்டேன் . அங்ஙனம் கண்டவுடன் திருவைந்தெழுத்தை நாடினேன் . நாடிய என்னை அத்திருவைந்தெழுத்தும் நாடியது 


இல்லக விளக்கது விருள்கெ டுப்பது

சொல்லக விளக்கது சோதி யுள்ளது

பல்லக விளக்கது பலருங் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே.


வீட்டில் உள்ள விளக்கு ஆங்குள்ள இருளைப் போக்குவதாம் . சொல்லின் அகத்து நின்று விளக்குவதாய் , ஒளியுடைய தாய் , பல இடங்களையும் விளக்குவதாய்ப் பல சமயத்தாரும் தம்மை அறியாமலே காண நிற்பதாய் ஞானம் நிறைந்த உள்ளத்திற்கு விளக்குப் போல ஒளியை நல்குவது திருவைந்தெழுத்து மந்திரமே 

 வீடுபேற்றிற்கு வழிகாட்டிய முதல்வன் முக்கட்பிரானாவான் . அவன் அருளிய வழியே உறுதியாகப் பற்றுக் கோடாவது . அந்த வழியிலே சென்று அப் பெருமானுடைய திருவடிகளை அடைபவருக்கு எல்லாம் , சிறந்த வழியாக உதவுவது திருவைந்தெழுத்து மந்திரமே .


மான்குட்டியைக் கையிலேந்திய , பார்வதி பாகனுடைய பூமாலைகள் சார்த்தப்பெற்ற திருவடிகளை உள்ளம் பொருந்தக் கைதொழுவதற்கு நாவை இணைந்து தழுவிய திருவைந்தெழுத்தைப் பற்றிய இப்பத்துப்பாடல்களை வழிபட வல்ல அடியவர்களுக்கு எத்தகைய துயரங்களும் ஏற்படமாட்டா .


திருநாவுக்கரசர் பெருமானார், இன்னொரு பதிகத்தில் திருஐந்தெழுத்தை சொல்லதவர்கள் பெருநோய் வந்து துன்பப்பட்டு, செத்து செத்து பிழைக்கும் தொழிலாகி இருப்பவர்கள் என்கிறார்,

  ” திருநாமம் ஐந்தெழுத்தை செப்பாராகில்

 தீவண்ணர் திறம் ஒருகாலும் பேசாராகில்

……………

அருநோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில்

பெருநோய்கள் மிகநலிய பெயர்த்தும் செத்தும் 

பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே” என்கிறார்


” தூயாைனை சுடர்ப்பவன சோதி யானை

……… வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்துவார்க்கு”

 என்ற பாடல் வழியாக  

வஞ்சனையுடைய மனிதர்கள் திருஐந்தெழுத்தை ஓதினாலும் அவர்களை விடடு தொலைவில்  இரு்ப்பவர் அவர் என்று ஐந்தெழுத்து ஓதும் நெறியினையும் கூறுகிறார்,

 வஞ்சனை மாந்தரை மறந்து விடுவார், அப்பெருமானார் வஞ்சனையும் சூதும் வாதும் நிறைந்தவர்கள் ஐந்தெழுத்தை ஓதினாலும், அவர்களை விட்டு விலகிச் செல்வார் இறைவர் என்கிறார், தூயமனதுடன் ஐந்தெழுத்தை ஓதுதல் வேண்டும். தீய குணங்களை விட்டொழிக்க வேண்டும்.. எல்லா தீமைகளையும் ெசய்து கொண்டு ஐந்தெழுத்தை ஓதுவது நல்லதன்று, தூய்மையான உள்ளம் உடையவர்கள் தூயானை எளிதில் உணர்ந்து விடுவார்கள்.


சுந்தரரர் பட்சாட்சர மந்திரம் பற்றி அருளியது


மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்

பாத மேமனம் பாவித்தேன்

பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற

வாத தன்மைவந் தெய்தினேன்

கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை

யூரிற் பாண்டிக் கொடுமுடி

நற்ற வாஉனை நான்ம றக்கினுஞ்

சொல்லும்நா நமச்சி வாயவே.


 திருப்பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , நல்ல தவவடிவினனே , எனக்கு வேறு துணையில்லையாகும்படி , உனது திருவடியையே துணையாக மனத்தில் துணியப்பெற்றேன் ; அவ்வாறு துணியப்பெற்ற பின்பே , நான் மனிதனாய்ப்பிறந்தவனாயினேன் ; அதுவன்றி , இனியொரு பிறப்பிற் சென்று பிறவாத தன்மையும் என்னை வந்து அடையப்பெற்றேன் ; இனி உன்னை நான் மறந்தாலும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை , இடையறாது சொல்லும் 


 திருப்பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , தோழமை கொண்டவனே , உன்னால் விரும்பப்பெற்றவனாகிய யான் , உன் திருவடியைத் துதிக்கின்ற அடியவர்களால் ` இவன் நிலையில்லாத மனத்தை யுடையவன் ` என்று இகழப்பட்ட நாள்களும் , அங்ஙனம் அவர்கள் இகழ்தற்கு ஏதுவாக நான் உன்னை மறந்துவிட்ட நாள்களும் ஆகிய இவைகளை , அடியேன் அழிந்த நாள் என்று கருதுவதன்றி வேறாகக் கருதமாட்டேன் ; ஆதலின் , நான் உன்னை மறக்கினும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை , இடையறாது சொல்லும் .


 திருப் பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , நா வன்மை யுடையவனே , அடியேன் உன்னை நினையா தொழிந்த நாள்களை , என் உணர்வு அழிந்த நாள்களும் , உயிர்போன நாள்களும் , உயரத்தோன்றும் பாடையின்மேல் வைத்துச் சுமக்கப்படும் நாள்களும் என்னும் இவைகளாகக் கருதுதல் அன்றி , வேறு நல்ல நாளாகக் கருதமாட்டேன் ; ஆதலின் , உன்னை நான் மறந்தாலும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை , இடையறாது சொல்லும் .


நீ அச்சமுற்று வந்து அடைந்தவர்க்குப் பாதுகாப்பாவாய் என்று அறிந்து , அடியேனாகிய யானும் மிகவும் அச்சமுற்று வந்து உன்னை அடைந்தேன் ; அதனையறிந்து நீ அவ்வண்ணமே ` அஞ்சேல் ` என்று சொல்லி அணைத்து , அடித்தொண்டனாகிய எனக்கு உன் திருவருளை அளித்தாய் ; அதனால் உனக்குக் கெடுகின்றது ஒன்றின்மையைக் கண்டேன் ; இன்ன பெருமையும் முதன்மையும் உடைய உன்னை நான் மறந்தாலும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை , இடையறாது சொல்லும் .


அடியேன் , உனது மலர் போலும் திருவடிகளையே விரும்பி நினைந்தேன் ; அதனால் , நீங்குதற் கரிய வினைகளும் நீங்கின ; இனி , உன்னை நான் மறந்தாலும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை , இடையறாது சொல்லும் .


செம்பொன்போலும் சடையையுடையவனே , திரி புரத்தில் தீ உண்டாகும்படி வில்லை வளைத்தவனே , மணம் வீசுகின்ற கூந்தலையுடைய இறைவியை ஒருபாகத்தில் விரும்பி வைத்து , காவிரி யாற்றினது கரையின்கண் உள்ள , சோலைகளில் கிளைகளின்மேற் குயில்கள் கூவ , சிறந்த மயில்கள் ஆடுகின்ற , ` திருப்பாண்டிக்கொடு முடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற நம்பனே , உன்னை நான் மறந்தாலும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை , இடையறாது சொல்லும் .


என்றவாறு தன்னையும் அறியாது தனது வாய்யானது நமச்சிவாயவே என்று கூறி்க்கொண்டே இருக்குமாம்.


திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய

தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

Advertisements